சுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை

நமது நாட்டில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டப்பாவில் அடைக்கப்பட்ட காற்றை விலைக்கு வாங்கி சுவாசிக்கும் அளவிற்கு டெல்லி சீரழிந்துள்ளது. இதை சரி செய்வதற்காக மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளது. அதற்காக அடுத்த மூன்று ஆண்டிற்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 1500 கோடி ரூபாயும் இரண்டாவது கட்டமாக 5,000 கோடி ரூபாயும் மூன்றாம் கட்டமாக 3,500 கோடி ரூபாயும் என்று ஒவ்வொரு ஆண்டிற்கும் பிரித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர், என்ஜிஓக்கள் பல ஆய்வுகளை செய்து நீண்ட நாட்களாக பல கட்டுரைகள், செய்திகள் வெளியிட்டுள்ளன. அந்த அடிப்படையில் காற்று மாசுபாடிற்கான காரணங்களைப் பற்றி பேசிவிட்டு களைவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முயற்சி பயனளிக்குமா இல்லையா என்பதை பார்க்கலாம்.

புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு நம்நாடு உற்பத்தி செய்வதற்கான பூமியாகவும், இரும்பு போன்ற பல்வேறு மூலப்பொருட்களை வெட்டி எடுப்பதற்கான மையமாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கு போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை செய்ய வேண்டிய தேவையையும் ஒட்டி நிகழ்ந்துள்ள மாற்றங்கள் தான் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு முக்கியமானவை.
உதாரணமாக திண்டுக்கல் ஆம்பூர் போன்ற பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகள் எடுத்துக்கொள்ளலாம். இந்த பகுதிகளில் காற்று பெருமளவில் மாசுபட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்ல நிலத்தடி நீரும் மண்ணும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர்களும் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் சென்னையின் வளர்ச்சி நம்மை பிரமிக்க செய்துள்ளது. இந்த வளர்ச்சிகள் அனைத்தும் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஈசிஆர் ஓஎம்ஆர் போன்ற பகுதிகளில் வந்துள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை சுற்றியே நிகழ்ந்துள்ளன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், தேவையான நீர் எடுப்பது, அதற்கான மூலப்பொருட்கள் கொண்டு வந்து குவிப்பது, மூலப்பொருட்கள் இருக்கும் இடத்தில் வெட்டி எடுப்பது என்பது மட்டுமல்ல இந்த ஆலைகள் அனைத்தும் அமைந்துள்ள இடங்களே நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் நீர் வழித்தடங்களை மறித்தும் கட்டப்பட்டவைதான் என்பது கண்கூடாக பார்க்கிறோம்.

மற்றொரு பக்கம் இந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல். ஆனால், மத்திய அரசு காற்று மாசுபாடு என்று மட்டும் தனியாக பிரித்து அதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் என்று திட்டமிட்டுள்ளது. அதையும் எப்படி திட்டமிட்டுள்ளது என்பதை பாருங்கள் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக எலக்ட்ரானிக் பைக் கார் ஆட்டோ பேருந்து போன்றவற்றை ஊக்குவிக்க மானிய தொகைக்காக என்று இந்த 10,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

அதாவது, இதுநாள் வரை பைக் கார் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தேவைக்காக பொதுப் போக்குவரத்தை சீரழித்து இந்தச் சந்தையை ஊக்குவித்த அரசு, தற்போது தனியார் முதலாளிகள் புதிதாக உற்பத்தி செய்யவிருக்கும் எலக்ட்ரானிக் வாகனங்களை விற்பதற்காகவும், அதன் லாபத்தை உத்தரவாதப் படுத்துவதற்காகவும் இந்த 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டைக்காக நமது சொந்த நாட்டு விவசாயிகளை பறிகொடுத்துள்ளது, நமது நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடியுள்ளது. மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்கியுள்ளது. இதுவும் போதாதென்று மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வரியாக வசூலித்து அதையும் தாரை வார்க்க திட்டமிட்டுள்ளது.

இந்த பணத்தை அரசு மக்களிடமிருந்தே வசூலித்து முதலாளிகள் கையில் கொடுக்கப்போகிறது. இனிமேல் மக்கள் வாங்கும் ஒவ்வொரு வாகனத்தின் மீதும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரி விதித்து இந்த நிதியைத் திரட்டி முதலாளிகளிடம் கொடுக்க போகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு மக்களின் இயலாமை ஏழ்மை போன்றவற்றை கூட தனியார் முதலாளிகளின் லாபம் பார்க்கும் திட்டமாக மாற்றும் இந்த அயோக்கியத்தனத்தை ஆதரிக்க முடியுமா அல்லது வேடிக்கைதான் பார்க்க முடியுமா? ஆனால், இதுதான் அரசு என்று புரிந்துகொள்ள உதவும். நாட்டின் விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச விலையை உத்திரவாதப்படுத்தவும், இடுபொருட்களை முறைப்படுத்துவதை செய்தாலே போதும் விவசாயிகள் பட்டினி, கடனின்றி வாழ முடியும். அதற்காக எந்த முயற்சியும் எடுக்காததன் காரணம் தற்போது புரிந்திருக்கும்.
தொழிற்சங்கமாக நமக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் இத்தோடு இணைத்துப் பாருங்கள். யாருக்காக நமது உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, அவர்களுக்காகத்தான் விவசாயிகள் உடைமையும் உரிமையும் பறிக்கப்படுகிறது

-பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-loot-in-the-name-of-environment-safety/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை...

கஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்? – பு.ஜ.தொ.மு

கஜா புயல் நிவாரணப் பணியில் இறங்குவோம்! துயர் துடைப்போம்! மக்களை பாதுகாப்போம்! மாற்று அதிகாரங்களை கட்டியமைப்போம்!

Close