கோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்

டகங்கள் பணத்திற்காக செய்திகளைப் போன்று விளம்பரங்களைப் போடுவது நமக்கு புதியதல்ல. அவர்கள் இதில் புதிய சிகரங்களை எட்டியிருக்கிறார்கள் என்பது தான் புதிது.

நாட்டு மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் புனித திருப்பணியில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படும் கார்ப்பரேட் ஊடகங்களின் உண்மை முகத்தை சமீபத்தில் வெளியிடப்பட்ட கோப்ராபோஸ்ட் (Cobrapost.com) டின் ஸ்டிங் ஆபரேசன் தான் இதை வெளிக் கொண்டுவந்திருக்கிறது. கோப்ராபோஸ்ட் தூண்டிலில் இரையாக பல நூறு கோடிகளை வைத்திருந்தது. அணுகப்பட்ட 27 ஊடகங்களில் 25 தூண்டிலில் மாட்டியிருக்கின்றன. கரும்பு தின்ன கூலி கிடைக்கும் வாய்ப்பை தவறவிடக் கூடாதென்று கேட்டதற்கெல்லாம் தலையை ஆட்டியிருக்கிறார்கள்.

இந்த ஸ்டிங் ஆபரேசனின் சங்கேதப் பெயர் ஆபரேசன் 136. ஊடக சுதந்திரத்தில் உலக நாடுகளின் பட்டியலில் 2017-ம் ஆண்டில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம்தான் இந்த 136. இங்கிலாந்து வாழ் இந்தியர் என்றும் சங்க பரிவாரத்தின் ஒரு கிளை அமைப்பு என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டு இந்த ஸ்டிங்கை செய்திருக்கிறார்கள்.

‘ஊடகப் படைப்புகள் கிருஷ்ணனை மற்றும் கீதையைப் பற்றியதைப் போலத் தோன்றினாலும் அவை சங்க பரிவாரத்தின் இந்துத்துவ கொள்கைகளை பரப்புவது மற்றும் தேர்தலில் பா.ஜ.கவுக்கு செல்வாக்கு கூடும் விதத்தில் சமூகத்தை பிளவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.’

‘பணமாகத்தான், அதாவது கருப்புப் பணமாகத்தான், கொடுக்க முடியும்’ என்று கூறினாலும் அதற்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைம்ஸ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் வினீத் ஜெயின். இவர்களின் “டைம்ஸ் நவ்” தான் “பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க உதவும்” என்று ஓயாமல் கூவியது.

“தேர்தலில் பலனை அடைவதற்காக சமூகத்தை பிளவுபடுத்துவது தவிர்க்க முடியாதது” என்று மாறுவேடப் பிரதிநிதி கூறும்போது இண்டியா டுடே குழுமத்தின் துணை சேர்பர்சன் கல்லி பூரி (Kalli Purie) அதை நிராகரிக்க வில்லை. இவரை பார்ப்பதற்கு முன்னர் குழுமத்தின் முதன்மை வருவாய் அதிகாரி (CRO) ராகுல் குமார் ஷா “தான் அரசுக்கு மிக மிக பலமான ஆதரவாளர்” என்று கூறுகிறார். விரைவிலேயே இந்த ஷா 275 கோடிக்கு ஒரு கொட்டேசன் அனுப்புகிறார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸின் அசோசியேட் வைஸ் பிரசிடென்ட் அவ்நீஷ் பன்சல், “பொதுவாக தங்களுக்கு சில கோடிகளை கட்டணமாக கொடுப்பவர்களின் எதிர்மறை விசயங்களை கிளறுவதில்லை” என்று போட்டுடைக்கிறார்.

பணத்திற்காக இந்த ஈனச்செயல்களை செய்ய ஒத்துக் கொண்ட பெரிய ஊடகங்களில் சில Times of India, India Today, Hindustan Times, Dainik Bhaskar, Zee News, Star India, Dainik Jagran, Radio One, Andhra Jyothy, தினமலர், Big FM, Prabhat Khabar, the New Indian Express ஆகியவை ஆகும். வங்காள பத்திரிக்கைகள் பர்தமான் மற்றும் தைனிக் சம்பத் ஆகிய இரண்டு மட்டுமே மறுத்திருக்கிறார்கள்.

பட்டியலில் நமது தினமலரும் இருப்பதை கவனிக்கவும். இதன் உரிமையாளர் லக்ஷ்மிபதி ஆதிமூலம், “தினமலர் குடும்பம் பா.ஜ.க.வுடன் ஒரே வேவ்லெங்க்தில் இருப்பதாகவும், உண்மையான இந்து குடும்பம் என்றும், இந்து ஆன்மீகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், எதற்கும் தயார்” என்றும் கூறுகிறார். தாங்கள் ஏமாற்றப் பட்டதை அறிந்தவுடன் கோப்ராபோஸ்ட்டுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்து ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் சமூகத்திற்கு மிகவும் பொறுப்பானவர்கள் என்று காட்டுவதற்காக சில சில்லரை விசயங்களை பட்டியிலிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்று ரஷ்யாவிலும் சீனாவிலும் டாக்டர் படிப்பிற்கான விளம்பரங்களை இவர்கள் போடமாட்டார்களாம்.

பணத்தை வாங்கிக் கொண்டு இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

  • முதல் கட்டத்தில், ஒரு மூன்று மாதத்திற்கு, மதத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி ஒரு சுமுகமான நிலையை உருவாக்குவார்களாம்.
  • பிறகு இந்துத்துவா பீரங்கிகளான விநய் கட்டியார், உமா பாரதி, மோகன் பகவத் போன்றவர்களுக்கு நேரத்தை ஒதுக்குவார்களாம்.
  • மூன்றாவது கட்டமாக, தேர்தல் வரும் போது, எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல், மாயாவதி, அகிலேஷ் போன்றவர்களை முறையே பப்பு, புவா, பபுவா என்ற பெயர்களைப் பயன்படுத்தி கேலிக்குரியவர்களாக சித்தரித்தரிப்பார்களாம். அவர்களைப் பற்றி வாக்காளர்களிடம் மோசமான கருத்தை உருவாக்குவார்களாம்.

இந்த பிரச்சாரத்தை ஊடக நிறுவனங்கள் தங்களின் கட்டுப்பாட்டில் எல்லா ஊடக வடிவங்களிலும் அதாவது ஒலிஒளி, அச்சு, இணையம், சமூக ஊடகம் ஆகியவற்றில் செயல்படுத்துவார்கள். இந்த ஊடகத்தரகர்கள் தங்களுக்கு கொடுக்கப் படும் வேலையை மேலும் சிறப்பாக செய்வதற்கு பல அப்பட்டமான ஸ்கெட்ச்களைப் போட்டுக் கொடுத்து ஸ்டிங் குழுவை அதிரவைத்திருக்கிறார்கள்.

இதில் ஊடக முதலாளிகளாகி விட்ட சில மூத்த ஊடகவியலாளர்கள் கூட தரகர்களாக மாறி பணத்திற்கு முன் மண்டியிடுவதைக் காணலாம்.

தற்போது ஜீ மீடியாவின் தலைமை அதிகாரியாக இருக்கும் புருஷோத்தம் வைஷ்ணவ் “வாடிக்கையாளர்களுக்காக அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வுக் குழுவை ஏவி எதிர்மறை பிரச்சாரத்தை கட்டவிழ்ப்போம்” என்கிறார்.
பிக் எஃப்.எம்.மின் மூத்த பங்குதாரர் அமித் சௌத்ரி நிறுவனத்தின் உரிமையாளரான ரிலையன்ஸ் பா.ஜ.க வுக்கு மிகவும் அணுக்கமானது என்பதை தெள்ளத் தெளிவாக்குகிறார்.

புனாவின் பிராந்திய ஊடகமான எம்.வி. டிவி யின் உரிமையாளரும் பா.ஜ.க எம்.எல்.ஏ.வுமான மந்தா தாய், ஆர்.எஸ்.எஸ் அவரை மசூதிகளை தாக்கச் சொன்னதையும் உளறியிருக்கிறார்.

ஆதாரங்கள்.

– நேசன்

(படம் : வாட்ஸ் ஆப்-லிருந்து)

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-media-make-unrest-for-money/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்!

ஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை...

1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்

இதன் மூலம் முழுக் கடனும் திரும்பி அடைக்கப்படுவதை வரை காத்திருப்பதை விட அவர்கள் அதிகமான சுங்கச் சாலைகளை போடலாம், கூடுதல் மின் வினியோகம் செய்யலாம், அதிகமான வீட்டுக்...

Close