விவசாயம், உணவு, சுற்றுச் சூழலை நச்சாக்கும் வேளாண் கார்ப்பரேட்டுகள்

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை

ந்தக் கட்டுரை சில அதிரவைக்கும் உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும், நிலைமையை சரிசெய்ய இப்போதைய அரசமைப்பிடமே கோரிக்கை வைக்கிறது.

ஏகபோக கார்ப்பரேட்டுகள் உணவுச் சங்கிலி (விளைநிலம், விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரம், இன்னபிற வேளாண் தொழில் நுட்பங்கள், விளைபொருட்களின் சந்தை) முழுவதையும் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்துவது பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது.
பின் தங்கிய நாடுகளின் வளங்களை சூறையாடி அழிப்பதோடு, வளர்ந்த நாடுகளிலும் விவசாயத்தை தன் வசமாக்கி விவசாயிகளை தங்கள் நிலங்களை விட்டு விரட்டுகிறது, கார்ப்பரேட் முதலாளித்துவம்.

இவ்வாறு உலக விவசாயம் ஒரு சில நிறுவனங்களின் கைகளில் சென்றடையும் இந்தச் சூழலோடுதான் நாம் நெடுவாசல்-கதிராமங்கலம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் ஆகியவற்றைப் பொருத்திப் பார்க்க வேண்டும். இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் லாபவேட்டைக்கான திட்டங்களே!

உணவு உற்பத்தியில் ஒரு நாட்டின் சுயசார்பை அழிப்பதன் மூலம் அடிமையாக்குவது, தனது ஏகபோக வலைப்பின்னலை விரிவாக்கி உறுதிப்படுத்துவது என்று… அன்று ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனி, இன்று பல பன்னாட்டு தொழிற்கழகங்கள்! நம் அடிமை நிலையில் மாற்றம் ஏதுமில்லை…

2017-ல் நாடெங்கிலும் நடந்த விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களும், 1990 களில் தொடங்கி இன்றுவரை தொடர்ந்துவரும் விவசாயிகளின் தற்கொலைகளும் இந்த ஏகபோக அபாயம் ஏற்படுத்தும் விளைவுகளை நம் முன்னால் கொண்டு வந்தன. இந்நிலையில்தான் 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக கூறுகிறார், மோடி. எப்படி? தங்களது இழப்புகளுக்கு ஈடு கேட்டு விவசாயிகள் போராடிவரும் நிலையிலும் கடன் தருவதாகவும், காப்பீடு தருவதாகவும் கூறி விவசாயிகளின் துயரத்தை நிதித்துறை கார்ப்பரேட்டுகளின் லாபவேட்டையாக மாற்றுகிறார்.

இன்னொரு பக்கம் தமிழின வாதம், சாதியம் பேசும் அரசியல்வாதிகள், திடீர் அரசியல்வாதியான சினிமா நட்சத்திரங்கள்.

உலகின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய 3-4 நிறுவனங்கள் ஆதிக்கம் செய்யும்போது தமிழகத்தில் மட்டும் இயற்கை விவசாயம், விவசாயப் பணியை அரசு வேலையாக்குவது என்றெல்லாம் சீமான் விடும் சவடால்கள் எப்படி சாத்தியம் என்பது அவரது “தம்பி”களுக்கே வெளிச்சம்! இது தொடர்பாகப் போடப்பட்ட ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறுவது குறித்து “அண்ணன்” என்ன திட்டம் வைத்திருக்கிறார்? தமிழன் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். தெலுங்கு, பீகார் வந்தேறிகளாலா அய்யாகண்ணு நிர்வாணப் போராட்டம் நடத்தும் நிலை வந்தது? இப்போது தமிழ்நாட்டை ஆளும் ஈ.பி.எஸ்/ஓ.பி.எஸ் தமிழர்களா இல்லையா?

மாற்றம், முன்னேற்றம் என்று பேசும் மருத்துவர் விவசாயிகள் பிரச்சனைக்கு என்ன தீர்வை முன்வைக்கிறார்? டாஸ்மாக்கை மூடுவதற்கே தன்னை முதல்வராக்குங்கள் என்றவர், மான்சாண்டோவோடு மோத அமெரிக்க அதிபர் ஆக விழைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

உணவு ஏகபோகத்தின் ஆபத்தை சமாளிக்க, கமல்ஹாசனின் ‘பகுத்தறிவு’ அரசியலும் / ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியலும் முன்வைக்கும் திட்டமும், தீர்வும் என்ன?

உண்மையில் கமல்ஹாசன் ஊழலை ஒழிக்கும் முழக்கத்துடன் வலம் வரும் தமிழக அன்னா ஹசாரே. அவரது சவடால் ஊடகங்களின் வெளிச்சம் இருக்கும் வரை அல்லது வாங்க முடியும் வரை மட்டும்தான்.

சரியில்லாத இந்த சிஸ்டத்தை சரி செய்ய வந்த ரஜினிக்கோ கொள்கை என்னவென்று கேட்டாலே தலை சுற்றுகிறது. விவசாயிகள் பிரச்சனை என்றால் இமயமலைக்கு கிளம்பி போய் விடுவார்.

அரசியல், பொருளாதாரத் தீர்வுகளை முன்வைக்க இலாயக்கற்ற இந்த ஓட்டுக் கட்சிகள் நம்மைப் பிளவுபடுத்தி, திசைதிருப்பும் வேலைகளில் முனைப்பாக உள்ளன.

யாருக்கு ஓட்டுப் போட்டாலும் இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களிடமிருந்து நம் நாட்டை காப்பாற்ற முடியாது. மக்கள்திரள் வழியிலான புரட்சிகர அரசியல் மூலமாகவே, இந்த இரத்தக் காட்டேறிகளை விரட்டியடித்து நம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் விடுதலை பெற முடியும்.

மான்சாண்டோ-பாயர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனம், விதை / பூச்சிக்கொல்லிகளின் வர்த்தகத்தில் உலகளாவிய விநியோகத்தில் 25%-க்கும் மேல் கட்டுப்படுத்தும். மான்சாண்டோ 2011-ம் ஆண்டில் விதைச் சந்தையில் 26% பங்கைக் கொண்டிருந்தது. உலகின் மொத்த வேளாண் இரசாயனப் பொருட்களில் 17% விற்கும் பாயர் நிறுவனமும் ஒரு விதை பிரிவை சொந்தமாக கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இணைக்கப்பட்ட நிறுவனம் விதை – வேளாண் வேதிப்பொருட்கள் விற்பனையில் உலகளவில் மிகப்பெரிய விற்பனையாளராக விளங்கும்.

இதற்கு முன்னதாக டவ் – டூபாண்ட் இணைவு, சுவிஸ் விதை / பூச்சிக்கொல்லி நிறுவனம் சின்ஜெண்டா – கெம் சைனா இணைவு போன்றவற்றையும் சேர்த்துப் பார்த்தால் 3 பெரு நிறுவனங்கள் வேளாண் விதைகள் மற்றும் பயிர் வேதித் துறையில் ஆதிக்கம் செலுத்துவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2016-ல் அறிவிக்கப்பட்ட மான்சாண்டோ-பேயர் இணைப்பு குறித்து அமெரிக்க தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ரோஜர் ஜான்சன் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்:

“விவசாயத் துறையில் இந்த அளவிலான ஒன்று குவிப்புகள் விரும்பத்தக்கவை அல்ல. நமது எதிர்கால வாழ்க்கையை அவை தீர்மானிப்பதும் கூடாது. இந்த ஒப்பந்தங்கள், குடும்ப விவசாயிகள், பண்ணையாளர்கள், நுகர்வோர் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களை அழித்து கார்ப்பரேட் லாபத்தை உறுதி செய்வதை நாங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். விவசாயத்தில் இந்த ஆபத்தான போக்கு, நிறுவனங்களுக்கிடையே போட்டியை குறைத்து, புதிய தொழில்நுட்பங்களை முடக்கி, விலைவாசி ஏற்றம், கிராமப்புற அமெரிக்காவில் வேலை இழப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.”

‘சந்தை’ குறித்தும், பெரிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் தெரிவு செய்யும் வாய்ப்பை அளிப்பது பற்றியும் நாம் அடிக்கடி கேட்கும் சொல்லாடல்கள் ஒரு புறம் இருக்க ஏகபோகங்கள் உருவான பிறகு அவை தேர்வு செய்யும் வாய்ப்பினை குறுக்கியும், போட்டியாளர்களை ஒழித்துக் கட்டியும் லாபத்தை குவிக்கின்றன. உதாரணமாக, கடந்த ஆண்டுகளில், மான்சாண்டோ பல போட்டியாளர்களை விலைக்கு வாங்கிப் போட்டியை அழித்து, விதை விலைகளை உயர்த்தியது. மேலும், மரபணு மாற்ற விதை உற்பத்தியில் ஏகபோகத்தை நிலைநாட்டியது.

எந்தவொரு பிரிவிலும் ஒருங்கிணைப்பும், ஏகபோகமும் அனைவருக்கும் கவலை அளிக்கக் கூடியவையே. ஆனால், வேளாண் வணிக குழும நிறுவனங்கள் உலகமயமாக்கப்பட்ட, தொழில்துறை அளவிலான, வேதியியல் தீவிரமான விவசாய பாணியை புகுத்துகின்றன என்பது நம் அனைவரின் கவலையாக இருக்க வேண்டும். மரபணு மாற்றப்படாத கலப்பின விதைகள் அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கும் அவற்றுடன் பயன்படுத்தக்கூடிய இரசாயன உள்ளீடுகள்-உரங்கள் ஆகியவற்றுக்கும் காப்புரிமை பெற்ற பெருநிறுவனங்களையே விவசாயிகள் சார்ந்துள்ளனர். அமெரிக்காவில் 80% சோளம் – 90% சோயாபீன் மான்சாண்டோ விதையினைக் கொண்டே பயிரிடப்படுகின்றன.

இந்தப் பெருநிறுவன வேளாண் பொருளாதார வடிவம் அதன் தன்மையிலேயே, விரிவாக்கம், சந்தை பிடிப்பு, இலாப வளர்ச்சி ஆகியவற்றைக் கோருகிறது. விவசாயத்தில் தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியும் விவசாயிகளுக்கு இது சில நன்மைகளை கொண்டு வரலாம். தேசிய வேளாண் புள்ளிவிவர சேவை நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின்படி, ஒவ்வொரு வாரமும் தங்கள் நிலத்தை கைவிட்டு விவசாயத்திலிருந்து வெளியேறும் 330 அமெரிக்க விவசாயிகளுக்கு இதனால் எந்தப் பயனும் இல்லை.
கார்ப்பரேட் வேளாண் தொழிலின் இலாபப் பராமரிப்பும், அமெரிக்காவின் வேளாண் “வெற்றியும்” கடந்த 10 ஆண்டுகளாக வரிப்பணத்தின் மூலமே சாத்தியப்பட்டது. இந்த “வெற்றி” சமூக, சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சுமைகளை கருத்தில் கொள்ளவில்லை. காரணிகளை குறுகலாக வரையறுத்துக் கொண்டால், தோல்வியையே வெற்றியாக சித்தரித்து விட முடியும்.
மேலும், உலகெங்கும் பசுமைப் புரட்சி சித்தாந்தமும் தொழில்நுட்ப ஏற்றுமதியும் பன்னாட்டு விதை – வேளாண் இரசாயன உற்பத்தியாளர்களுக்கு ஒரு வரமாக அமைந்தது. இது ஆரோக்கியமான, நிலையான உள்நாட்டு விவசாய முறைகளை சீர்குலைத்து ஆதாயம் ஈட்டியது.

உலகளாவிய வேளாண் வணிக துறையின் முக்கிய நிறுவனங்கள் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் முன்னணி 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடிக்கின்றன. இந்த நிறுவனங்கள் புவிசார் அரசியல்மயமாக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதன்மூலம் பெரும் நிறுவனங்களின் இலாப வேட்டை சிறிய பண்ணைகளை (உலகளாவிய உணவு உற்பத்தியின் அடிச்சுவடு) அழித்து, மோசமான உணவு, பாதிக்கப்படும் சுகாதாரம், மோசடியான வணிகம், சுற்றுச்சூழல் பாதிப்பு, கிராமப் புற சமூகங்களின் அழிவு, சீரழிந்த மண், நீர் பற்றாக்குறை-வறட்சி போன்றவற்றை உண்டாக்குகின்றன. கத்தி-விளிம்பில் வாழும் விவசாயிகளுக்கு கடன் வாழ்க்கை ஒன்றே கதி என்ற நிலையை இது உருவாக்கியுள்ளது.

உலகிற்கு இது தேவைதானா?

பிரிட்டன், தீவிர பெருநிறுவன மேலாதிக்க விவசாயத்தில் முன்னணியில் உள்ளது. ஆனால் இந்த விவசாய முறையை சார்ந்து உலகம் இயங்க முடியுமா?

இந்த மாதிரியின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு விளம்பரதாரரும்/சுற்றுச்சூழல் நிபுணருமான ரோஸ்மேரி மேசன் கூறியதைப் பார்ப்போம். அவர், இங்கிலாந்தின் பிரதான மருத்துவ அதிகாரியும் இங்கிலாந்தின் தலைமை மருத்துவ ஆலோசகருமான பேராசிரியர் சீமாட்டி சேலி டேவிஸ்க்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதியுள்ளார். டேவிஸுக்கு எழுதப்பட்டாலும், இந்த கடிதம் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் அயர்லாந்து பொது சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் நோக்கியதாகவே உள்ளது.

கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
வேளாண்மை / வேளாண் வணிகத் துறை, அதன் அரசியல் சக்தி, சுகாதாரத்தின் மீதான அதன் தாக்கம் பற்றி மேசனின் கடிதம் பேசுகிறது. உணவு உரிமை என்ற ஒரு ஐ.நா அறிக்கையை அவர் குறிப்பிடுகிறார். இந்த அறிக்கை, பாயரின் ரிச்சர்டு வான் டெர் மெர்வே போன்றவர்களின் பூச்சிக்கொல்லிகளும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் உலகத்துக்கு உணவளிக்க மிகவும் அவசியம் என்ற கட்டுக்கதையை மறுக்கிறது.

பூச்சிக்கொல்லிகளை உற்பத்தி செய்யும் உலகளாவிய நிறுவனங்களை இந்த அறிக்கை கடுமையாக விமர்சிக்கிறது. “தீங்கு விளைவிப்பதை தொடர்ந்து மறுப்பது”, “அறமற்ற சந்தைப்படுத்துதல் உத்திகள்”, தமக்கு சாதகமாக அரசுகளை ஊழல்படுத்துவதன் மூலம் “பூச்சிக்கொல்லி இரசாயனத்தில்” சட்டரீதியான வரம்புகள் வராமல் பார்த்துக்கொள்வது, பூச்சிக்கொல்லிகள் மீதான கட்டுப்பாடுகளை முடக்குவது” போன்ற செயல்பாடுகளை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

வேளாண்மையில் ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த ஒரு விரிவான புதிய உலகளாவிய உடன்படிக்கைக்கு இந்த அறிக்கை மூலம் ஆசிரியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள்:

“பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிக ஆபத்தானது. உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறுவது தவறான கருத்து”.

தொடர்ந்து பூச்சிக்கொல்லிகள் நிறைந்த உணவை உட்கொள்வதால் புற்றுநோய், அல்சைமர் / பார்கின்சன், ஹார்மோன் கோளாறுகள், வளர்ச்சி குறைபாடுகள், மலட்டுத்தன்மை ஆகியவை ஏற்படுவதாக மேசன் குறிப்பிடுகிறார். பல பத்தாண்டுகளாக பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலில் தொடர்ந்து நீடித்து, உணவு உற்பத்தி சார்ந்த முழு சுற்றுச் சூழல் அமைப்புக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

அறிக்கை ஆசிரியர்களில் ஒருவரான, டாக்ஸிக்ஸ் பஸ்கூட் டுன்காக் பற்றி ஐ.நா நிபுணர் கார்டியன் பத்திரிகையில் இவ்வாறு எழுதினார்:

“களைக் கொல்லிகள், பூச்சிக்கொல்லி, பூசண நோய்க்கொல்லிகள் ஆகியன கலந்த உணவை உட்கொண்டே எங்கள் பிள்ளைகள் வளர்கிறார்கள். இவை அவர்களின் உணவு, தண்ணீர், அவர்கள் விளையாடும் பூங்காக்கள், மைதானங்கள் என்று எங்கும் நிறைந்துள்ளன. குழந்தைகளின் உரிமைகள் பற்றிய ஐ.நா. மாநாடு, உலகில் மிக உறுதியான சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கையில் (அமெரிக்கா மட்டும் இதில் அங்கத்தினர் இல்லை) சொல்லப்படும் விஷயத்தை தெளிவாக்குகிறது. நச்சு இரசாயனங்கள் கலவாத உணவு, மாசில்லாத நீர், முழுமையான ஆரோக்கியம் குழந்தைகளின் என்று உறுதி செய்ய வேண்டிய கடமை அந்தந்த நாட்டு அரசுகளுக்கு உள்ளது. இவையும் இன்னும் பல்வேறு தாக்குதல்களும் குழந்தைகளின் உரிமைகளை மறுக்கின்றன.

இந்த இரசாயனங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன, அவை கண்ணுக்கு தெரியாதவை. விஞ்ஞானப் பூர்வமான மிக உயர்ந்த தரத்திற்கு இணங்க அரசாங்கங்கள் அவற்றை ஒழுங்குபடுத்துவது மட்டுமே குடிமக்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி. குறிப்பாக இந்த ஆபத்துக்கு அதிகம் ஆளாகி இருப்பவர்களுக்கு இந்த அணுகுமுறை மிக அவசியம்.

மேசன் சாலி டேவிஸ்-க்கும் அவரது சக அதிகாரிகளுக்கும் வழங்கும் ஆதாரங்களின்படி இங்கிலாந்தில், உயர்ந்து வரும் இறப்பு விகிதங்கள் சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாக உண்டாகும் தொற்று நோய்களின் அறிகுறியாகும். இங்கிலாந்தில் வேளாண் வேதிப்பொருட்களின் கூடுதலான பயன்பாடே இதன் முக்கிய காரணம் என்றும், இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (CRUK) அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி வேளாண் தொழிற்துறையைப் பாதுகாப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, புற்றுநோய்க்கு முக்கிய காரணியாக மதுப்பழக்கமும், வாழ்க்கைமுறைத் தேர்வுகளுமே முன்வைக்கப்பட்டு வேளாண் வேதிப்பொருள்கள் உண்டாக்கும் கேடு குறித்த வலுவான ஆதாரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இங்கிலாந்தின் மருத்துவத் துறை தொழிற்துறையுடன் இணைந்து பணியாற்றிவருவதே தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் என்று கூறுகிறார் ரோஸ்மேரி மேசன். மான்சாண்டோ நிறுவனம் கிளைபோசைட் அடிப்படையிலான இரசாயனங்கள் மூலம் கல்லீரல் சேதத்தை ஏற்படுத்துவதை மேசன் குறிப்பிடுகிறார்.

இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை நோய்த்தாக்குதல் விகிதம் அதிகரிப்பு, குறைவான நிதி ஒதுக்கீடு, ஊடுருவும் தனியார்மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. வாழ்க்கை முறை தேர்வு, மது நுகர்வு போன்ற தனிநபர்களின் பழக்கவழக்கங்களால் ஏற்படும் நோயை குணப்படுத்த வேண்டியது அவசியம் எனினும் வேளாண் இரசாயனங்கள் சார்ந்த நோய்த்தாக்குதல் பற்றிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது இன்னும் தேவையாகிறது.

உதாரணமாக, 2016-ல் ‘இங்கிலாந்தில் கேன்சர் குழந்தைகள்’ வெளியிட்ட அறிக்கையின்படி, 1998-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், குறிப்பாக இளம் வயதினரின், எண்ணிக்கை 1,300 அதிகரித்துள்ளது. “தி டெலிகிராஃப்” பத்திரிக்கையின் மருத்துவத் தொடர்பாளர், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறினாலும், CRUK இன் செய்தித் தொடர்பாளர் இந்த விஷயத்தில் சுற்றுச்சூழல் காரணிகளின் பங்களிப்புக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார்.

மேசன் வழங்கும் பல்வேறு புள்ளிவிவரங்களின்படி, 1998-லிருந்து பெருங்குடல் புற்றுநோய் 200% அதிகரித்துள்ளது, தைராய்டு புற்றுநோய் இரட்டிப்பாகிவிட்டது, கருப்பை புற்றுநோயானது 70% அதிகரித்துள்ளது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் 50% அதிகரித்திருக்கிறது.

இப்படிப் பல ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிரிட்டனில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மௌனம் காக்கின்றன. இது இங்கிலாந்தின் அறிவியல் ஊடக மையத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான பொருளாதார நலன் சார்ந்த பிணைப்பின் காரணமாக நிகழ்கிறது. எனவே ஆர்ஸ்டெஜென்கா, கோகோ கோலா, சைங்கெண்டா, பி.பி. மற்றும் மான்சாண்டோ உட்பட எந்த நிறுவனங்களுக்கு எதிரான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தையும் இருட்டடிப்பு செய்ய முடியும்.

மேசன், தனது அறிக்கையில் பல ஆண்டுகளாக வேளாண் வேதிப்பொருள்களின் பாரிய அளவு அதிகரிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுச்சூழல், உணவு, கிராமப்புற விவகாரங்கள் துறையின் தலைமை விஞ்ஞானி, பேராசிரியர் அயன் பாய்ட், ஒரு பூச்சிக்கொல்லி பயன்பாடுக்கு அங்கீகாரம் அளித்த பின் அது மனித உடலிலும் சுற்றுச்சூழலிலும் உண்டாக்கும் தாக்கங்கள் குறித்த கண்காணிக்கும் முறைகள் ஏதுமில்லை என்கிறார். முறையான சோதனைகள் செய்யப்படாமல் இந்த வேளாண் வேதிப்பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன என்பதும் கவனத்திற்குரியது.

மேசனின் கடிதம், அமெரிக்காவுடனான, அமெரிக்க-ஐரோப்பிய ஒப்பந்தங்கள் உணவு, சுற்றுச்சூழல் தரத்தைக் குறைத்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவின்மீதான தாக்கத்தையும் பற்றி விவாதிக்கிறது.

மான்சாண்டோ-பாயர் ஒப்பந்தத்தின் விளைவுகள் பற்றி மேசன், இங்கிலாந்தின் பிரதான மருத்துவ அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள் பனிப்பாறைகளின் விளிம்பு போன்றவைதான். தரமற்ற உணவு, மோசமான ஆரோக்கியம், சுற்றுச்சூழல் சீர்குலைவு, மண் ஆரோக்கியம் பாதித்தல், கடல் மாசுபடுவது உணவில் ரசாயன கலப்பு ஆகியவற்றின் போன்ற நாசங்களை தோற்றுவிக்கும் ஒரு சில சர்வதேசிய உணவுப்பொருள் நிறுவனங்கள்தான் ஒட்டுமொத்த உலகத்தின் உணவுச்சங்கிலியை ஆதிக்கம் செய்கின்றன.
மாற்று அணுகுமுறைகளும், தீர்வுகளும் இருப்பினும் அரசியல் செல்வாக்கும், சர்வதேச பெருநிறுவனங்களின் பண பலமும் ‘எல்லாம் இயல்பாக உள்ளன’ என்று நம்பவைக்கிறது.

மொழிபெயர்ப்பு : பிரியா

Source:-
Corporate Monopolies Poison Agriculture, Food, Health and Environment

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-monopolies-poison-agriculture-food-health-and-environment-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
உழைக்கும் வர்க்கத்தின் உண்மை விடுதலையை வெல்ல உறுதி கொள்வோம்

1947 ஆகஸ்ட் 15 ஆங்கிலேய ஆதிக்கம் பார்ப்பன, பனியா ஆதிக்கத்துக்கு கைமாறிய நாள்.  நமக்கான, ஒட்டு மொத்த நாட்டுக்கான சுதந்திரம் என்பது சாதி மத இழிவுகளிலிருந்தும், பன்னாட்டு கார்ப்பரேட்...

செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்

நம்ம நாட்டை அமெரிக்காவுக்கு நிகரா கேஷ்லெஸ் நாடா கொண்டு வரணும்னு சொல்றாங்க. அது எப்ப நடக்கும். நம்ம நாடு இன்னும் ஏழை நாடுதான். அந்த ஏழை மக்களை...

Close