ஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன?

ண்பர்களே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒட்டி கடந்த 4 நாட்களாக நாம் பார்த்து வரும் அசாதாரணமான சம்பவங்கள் சில உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.

  • அரசு யாருக்காக செயல்படுகிறது, ஓட்டுக் கட்சிகள் யாரை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதை புரிய வைத்திருக்கின்றன.
  • பா.ஜ.க/ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தினமலர் தொடங்கி, அவர்களது இணையப் படை வரை எவ்வளவு கொச்சையாகவும், மக்கள் விரோதமாகவும் பேசுகின்றனர் என்பது அம்பலமானது.
  • ஊடகங்கள் மீது கவிந்திருக்கும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் அதை முறியடிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் மூலம் உழைக்கும் மக்கள் உண்மையை வெளிக் கொண்டு வந்த போராட்டத்தையும் நாம் பார்த்தோம்.

பிரச்சனை என்ன, அதற்கு தீர்வு என்ன என்பதற்கும் இதற்குள் விடை உள்ளது. அந்த வகையில் ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிய விபரங்களை தொகுத்து தருகிறோம்.

ஸ்டெர்லைட் போராட்ட பின்னணி

குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தமிழ்நாட்டில் 1996 முதல், தூத்துக்குடியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை. இந்த தாமிர உருக்கு ஆலை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தி வரும் பாதிப்புகளை எதிர்த்தும், சட்ட விதிமுறைகளை மீறி அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப்புகை மற்றும் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை எதிர்த்தும் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.

சொல்லப் போனால் ஸ்டெர்லைட் ஆலை அங்கு இயங்கி வருவதே சட்ட விரோதமானது என்கின்றன சுற்றுச்சூழல் விதிகள். சென்னை உயர்நீதிமன்றத்திலும், தமிழ்நாட்டு பசுமை தீர்ப்பாயத்திலும் இந்த ஆலையை இழுத்து மூடும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது உச்சநீதிமன்றம் செய்த அழிவுகளுக்கு அபராதம் விதித்து விட்டு ஆலையை இயங்க அனுமதித்து தீர்ப்பு அளித்தது.

இந்நிலையில் மக்களின் போராட்ட உணர்வுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் சில மாதங்களுக்கு முன்பு ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்காக (2-வது யூனிட்) சிப்காட் வளாகத்தில் இடம் ஒதுக்கி தருகிறது தமிழக அரசு.

கொதித்தெழுந்த தூத்துக்குடி மக்கள், குறிப்பாக குமாரரெட்டியாபுரம் கிராம மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் நின்றனர். 3 மாதங்களுக்கும் மேலாக அமைதியான முறையில் நடந்த போராட்டத்தின்போது ஒருமுறை கூட போராட்டக்காரர்களை அழைத்து, அரசோ அல்லது ஸ்டெர்லைட் நிர்வாகமோ பேசவில்லை. மாறாக போராட்டத்தை கலைப்பதற்கான அத்தனை வேலைகளையும் (பொய் வாக்குறுதிகள், சாதி பிரச்சினைகளை தூண்டுவது உட்பட) செய்தன.

மே 22-ம் தேதி – மக்களின் உறுதியும், கார்ப்பரேட் அரசின் சதித் திட்டமும்

மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் 100-வது நாள் அன்று மக்களை அணிதிரட்டி ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான தூத்துக்குடி மக்களின் கூட்டமைப்பு சார்பாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மக்கள் அமைதியான முறையில் போராடியபோது கண்டுகொள்ளாத அரசு, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை என்றவுடன் தூத்துக்குடி முழுவதும் 144 தடை உத்தரவைப் பிறப்பிக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர்களை வீடு தேடி கைது செய்கிறது, அவர்களின் வீட்டில் இருப்பவர்களை மிரட்டுகிறது.

ஊர்வலம் அமைதியான முறையில் காலை 10 மணிக்கு துவங்கி சுமார் 5000 மக்கள் பேரணியாக செல்கின்றனர். வி.வி.டி சிக்னல் அருகில் அவர்களை தடுத்தி நிறுத்தி தடியடி நடத்துகிறது போலீசு. இதைத் தாண்டி பெருமளவில் பெண்கள், குழந்தைகள் என்று பல்வேறு மக்களின் ஆதரவுடன் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் அதிகமாக ஊர்வலம் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முன்னேறுகிறது.

மக்களுடைய திட்டம் அமைதியான முறையில் ஊர்வலம் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது தான். எப்படியாவது இந்த போராட்டத்தைக் கலைத்து சிதைக்க வேண்டும், அதன் மூலம் தமிழ்நாட்டில் மீத்தேன், நியூட்ரினோ, கெயில் உள்ளிட்ட கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிரான எல்லா போராட்டங்களையும் தடுத்து நிறுத்தி மக்களை அச்சமூட்ட வேண்டும் என்று அரசும், அதிகார வர்க்கமும் இணைந்து திட்டமிட்டு போலீசை வைத்து வன்முறையை தூண்டுகின்றன. மெரினா போராட்டத்தின் இறுதி நாளில் நடந்ததை போல போலீசே வாகனங்களை அடித்து நொறுக்குவது, தீ வைத்து எரிப்பது என்று கலவரத்தை ஆரம்பிக்கின்றனர். அவர்களே கலவரத்தை கட்டுபடுத்துகிறோம் என்ற பெயரில் துப்பாக்கிசூடு நடத்துகின்றனர். மக்கள் பின்வாங்கி சிதறி ஓடிய பிறகுதான் ஆட்சியர் அலுவலகத்தில் தீ எரிய ஆரம்பிக்கிறது.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. சுடுவதற்கு முன்னால் அதற்கான விதிமுறைகள் (கண்ணீர்புகை குண்டு, தடியடி, ஒலிபெருக்கி அறிவிப்பு) எதுவும் பின்பற்றப்படவில்லை. எஸ்.எல்.ஆர் எனப்படும் தீவிரவாதிகளை சுடப் பயன்படுத்தும் துப்பாக்கிகளைக் கொண்டு குறிபார்த்து சுடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இப்படி இவர்கள் வகுத்துள்ள அத்தனை சட்டதிட்டங்களையும் மீறி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுகிறது, எதற்காக? “சட்டம் ஒழுங்கை” காப்பதற்காக!

ஊர்வலமாக சென்ற மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை அடையும் முன்பே சாலையிலேயே, ரவுண்டானா அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு சுடப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யாரும் ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபடவில்லை, மாறாக அவர்கள் அங்கு செல்வதற்கு முன்பே ஆட்சியர் அலுவலகம் அடித்து நொறுக்கப்படுகிறது. எனவே பொதுவாக கூட்டத்தை கலைப்பதோ அல்லது “சட்டம் ஒழுங்கை” காப்பற்றுவதோ அல்ல, முன்னணியாளர்களைக் கொல்வதே துப்பாக்கிச் சூட்டின் நோக்கம்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் அனைவரும் போராட்டகளத்தில் உறுதியாக தொடர்ச்சியாக முன்னணியில் நின்று செயல்பட்டவர்கள். அத்தனை பேரும் நெஞ்சு, முகம், தலையில் குறிபார்த்து, சீருடை அணியாத போலீசாரால் சுடப்பட்டு இறந்துள்ளனர் என்பதே, அரசு இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டது என்பதைக் காட்டுகிறது.

சட்ட ஒழுங்கை காப்பாற்ற துப்பாக்கிச் சூடா?

“வன்முறை ஏற்பட்டதுதான் துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்ற அவர்கள் வாதத்தையே எடுத்து வைத்து பேசுவோம்”  – ஆளூர் ஷாநவாஸ்

  • அரியானாவில் பாபா ராம் ரஹீம் என்ற சாமியாருக்கு கற்பழிப்பு வழக்கில் தண்டனை கிடைத்தபோது அவனுடைய ஆதரவாளர்கள் ஆடிய வெறியாட்டத்தில் 30 பேர் இறந்தனர். 50 வாகனங்கள் எரிந்தன. 250 பேர் காயமுற்றார்கள். ஒரு கீழ்த்தரமான காரணத்துக்காக நடந்த அந்தக் கலவரத்தில் காவல் துறையோ துணை ராணுவமோ கூட்டத்தைக் கலைக்க எச்சரிக்கைக்காக மட்டுமே சுட்டது. பெரும்பாலும் தடியடியும் கண்ணீர்புகையும்தான். 500 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருந்தும் ஆட்டம் போட்ட அயோக்கியர்களில் ஒருவன் கூட சுட்டு சாகடிக்கப்படவில்லை. 144 தடையை மீறினால் நெஞ்சில் சுடுவோம் என்ற கடமை வீரர்கள் யாரும் அன்று போகவில்லை போல இருக்கிறது.
  • ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா ஜெயலலிதா கும்பலை தண்டித்து தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தமிழகம் எங்கும் அ.தி.மு.க ரவுடிகள் வன்முறை வெறியாட்டம் நடத்தினர். அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை.
  • கோவையில் இந்து முன்னணி சசிகுமார் கொலையைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் பெரும் கும்பலை திரட்டி கடைகளை அடித்து நொறுக்கின, வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை.
  • தருமபுரியில், சாதி வெறி கும்பல் ஒன்று தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை.

தூத்துக்குடியில் தங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறதென்ற ஒரு நியாயமான காரணத்துக்காகப் போராடுவோரின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை இதே அளவுகோலில் பார்க்கும்போதுதான் வித்தியாசம் விளங்கும்.

தொடரும் கார்ப்பரேட் பயங்கரவாதம்

ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் நலனுக்கு பாதிப்பு வருவதை கண்டதும் அதன் வளர்ப்பு நாயான அரசு சீறிப் பாய்கிறது. சொந்த நாட்டு மக்களை சுட்டு கொல்கிறது. கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக, தனது சொந்த நாட்டு மக்கள் மீது ஏவப்பட்டிருக்கும் இந்த அரசு பயங்கரவாதம் இதுவரையில், 17 வயது மாணவி உட்பட 14-பேரைக் கொன்றிருக்கிறது (ஊடக தகவல்களின்படி), நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 20-க்கும் மேலாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மருத்துவமனையில், ஸ்டெர்லைட்டை மூடாமல் தங்கள் உறவினர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று போராடியவர்களை தடியடி நடத்தி மிரட்டி ஒடுக்குகிறது போலீசு.
மூன்று மாவட்டங்களில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டு இரவு நேரங்களில் ஒவ்வொரு வீடாக சென்று இளைஞர்களையும் சிறுவர்களையும், குறிப்பாக போராட்டக்களத்தில் எதிர்த்து நின்று கேள்வி கேட்டவர்களை அடித்து இழுத்துச் சென்று வன்முறை வெறியாட்டம் போடுகிறது போலீசு. 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை காணவில்லை, அவர்களைப் பிடித்து சென்ற போலீசு அவர்கள் மேல் முறையாக எந்த வழக்கும் போடாமல் கொட்டடியில் அடைத்து வைக்கிறது.

நடக்கின்ற சம்பவங்களை உற்றுக் கவனிக்கும்போது தமிழக மக்களின் மேல் மத்திய மாநில அரசுகள் ஒரு போர் அறிவிப்பு செய்துள்ளது விளங்கும். அதற்கான ஒத்திகைதான் இந்த துப்பாக்கிச்சூடு.

யாருக்கான அரசு?

இன்று மக்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள் அனைத்திலும் இந்த அரசும், நீதிமன்றமும், போலீசும் தாங்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்கள், அதை மக்கள் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் உணர்கிறார்கள். அரசு வெளிப்படையாக தனியார் முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதோடு, இதற்கு எதிராகப் போராடும் மக்களையும் முன்னணியாளர்களையும் ஒடுக்குகின்றது.

இந்த அரசிடமோ நீதிமன்றத்திடமோ மனு கொடுத்தோ, வழக்கு தொடுத்தோ, கோரிக்கை வைத்தோ இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. அவற்றை பயன்படுத்திக் கொண்டு காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதியில் கார்ப்பரேட்டுக்கு ஆதரவாகவே முடிவு எடுக்கின்றன. ஸ்டெர்லைட் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பே இதற்கு சான்று.

பிரச்சினைக்கு காரணமே இன்றைய அரசுக் கட்டமைப்புதான் என்று தெரிந்த பிறகு மீண்டும் மீண்டும் தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுப்போம், கட்சியை மாற்றுவோம் என்று பேசிக் கொண்டிருப்பது பலன் தருமா? கார்ப்பரேட்டுகளிடம் நிதி வாங்காத தேர்தல் அரசியல் கட்சி யாராவது உண்டா?

அரசின் துப்பாக்கிச்சூடு மற்றும் அடக்குமுறையை பார்த்த பிறகு, இந்த அரசும், ஆட்சியரும், போலீசும் ஸ்டெர்லைட்டுக்கானவை, கார்ப்பரேட்டுகளுக்கானவை. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள போராட்டம்தான் தீர்வு என்பதை தூத்துக்குடி மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் அமைப்பாக திரண்டு அதிகாரத்தை கையில் எடுக்க தம்மை தயாரித்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் போன்றவை மூலம் ஜனநாயக ரீதியிலான ஆளும் அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும். அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு பெரும் மக்கள்திரள் எழுச்சியின் மூலம் தான் கார்ப்பரேட்டுகளையும் அவற்றுக்கு சேவை செய்யும் அரசையும் தூக்கி எறிந்து ஒரு உண்மையான ஜனநாயக ஆட்சியை, மக்கள் ஆட்சியை உருவாக்க முடியும்.

களம் இறங்குவோம், நாட்டையும் நம் வாழ்வையும் பாதுகாப்போம்

பேச வேண்டிய அரசியல்

  • தூத்துக்குடியை நஞ்சாக்கும் இலண்டனைச் சேர்ந்த அனில் அகர்வாலின் ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிராக மக்கள் போராட்டம்!
  • போராடிய மக்கள் மீது போர் தொடுக்கும் கார்ப்பரேட் அரசு!
  • வன்முறையை நிறுத்த துப்பாக்கிச் சூடு எனற அரசின் பொய் அம்பலமாகி உண்மை பரவுவதைத் தடுக்க இணைய இணைப்பு துண்டிப்பு.
  • தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய இணைப்பு வெட்டு.
    மத்திய துணை ராணுவப்படை குவிப்பு கிராமம் கிராமமாக மக்களை வேட்டையாடும் போலீசு.
  • ஒரிசா கலிங்காநகரில் போஸ்கோ, சத்தீஸ்கரில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, மேற்கு வஙகம் சிஙகூரில் டாடா, நந்தி கிராமில் சலீம் குரூப். கார்ப்பரேட்டுகளை எதிர்க்கும் மக்களுக்கு அரசின் பரிசு துப்பாக்கிக் குண்டு.
  • அரசு என்பது ஒடுக்குமுறை கருவி, ஒரு வர்க்கத்தின் சார்பாக இன்னொரு வர்க்கத்தை ஒடுக்கும் அமைப்பு.
    கார்ப்பரேட்டுகள் சார்பாக தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்களை ஒடுக்குகிறது கார்ப்பரேட் அரசு.
  • கல்விக் கடன் வாங்கிய மதுரை லெனினை கொன்ற கார்ப்பரேட் அரசு
    மருத்துவக் கல்வி படிக்க ஆசைப்பட்ட அனிதாவை கொன்ற கார்ப்பரேட் அரசு.
    நம்மை தினம் தினம் சுரண்டும் தகவல் தொழில்நுட்பக் கார்ப்பரேட்டுகள். வேலைச் சுமை, கடன் சுமை என்று கழுத்தை நெரிக்கும் கார்ப்பரேட்டுகள். இவர்களின் பங்காளிதான் தூத்துக்குடியை சீரழித்து வரும் வேதாந்தா
  • வேதாந்தா என்பது தூத்துக்குடியின் பிரச்சனை மட்டுமல்ல வேதாந்தா போன்ற கார்ப்பரேட்டுகள் நாடு முழுவதும் கால்பரப்பி நிற்கின்றன.
    சென்னையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழித்த கார்ப்பரேட் வளர்ச்சி. தஞ்சையில் மீத்தேன் எடுக்கத் துடிக்கும் கார்ப்பரேட் திட்டம்
  • கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களைத் தாக்க ஆயுதம் ஏந்துகிறது அரசு எந்திரம்.

சங்கமாக இணைவோம், தூத்துக்குடி மக்களை தாக்கும் கார்ப்பரேட்டுகளை முடக்குவோம்

  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு ஆதரவாக கருப்புச் சட்டை அணிவோம்
  • கருப்பு ரிப்பன் குத்துவோம்
  • 1 மணி நேரம் அலுவலகத்துக்கு வெளியில் அணி திரண்டு படுகொலைகளைக் கண்டித்து முழக்கமிடுவோம்.
  • நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அரசியலை கொண்டு செல்வோம்

முழக்கம்

  • கொல்லாதே கொல்லாதே போராடும் மக்களை கொல்லாதே
    வெளியேறு வெளியேறு வேதாந்தாவே வெளியேறு.
    வெளியேறு வெளியேறு ஸ்டெர்லைட்டே வெளியேறு
  • தூத்துக்குடி எங்கள் ஊரு, பேக்டரி நடத்த நீ யாரு
    காப்பர் உங்களுக்கு கேன்சர் எங்களுக்கா?
  • கம்பெனி நடத்தி கொல்றான் முதலாளி, குறிவச்சு கொல்லுது கார்ப்பரேட் அரசு.
    கட்டளையிடுறான் வேதாந்தா, சுட்டுப் பொசுக்குறான் போலீசு.
  • தூத்துகுடி மக்கள் எங்கள் மக்கள், சிந்திய ரத்தம் எங்கள் ரத்தம். விடமாட்டோம் விடமாட்டோம் வேதாந்தாவை விரட்டாமல் விடமாட்டோம்.

#GetOutVedanta
#KickOutSterlite

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-state-kills-what-is-solution/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் : இன்னும் ஒரு கண் துடைப்பு

குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்குமா அல்லது விசாரித்துதான் தண்டனை கொடுக்கப்படுமா? இல்லவே இல்லை. படித்துக்கொண்டிருக்கும் பாமரன் உனக்கும் எனக்கும்தான், "சட்டம் அதன் கடமை செய்யும்". அமைச்சர்களுக்கும்...

உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை

“உற்பத்தியை" அளப்பதாக கூறிக் கொண்டாலும், ஜி.டி.பியும், வர்த்தக புள்ளிவிபரங்களும் சந்தையில் நடக்கும் பரிமாற்றங்களையே அளக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றமும், சொத்துடமை பத்திர பரிமாற்றங்களும்...

Close