தூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்?

தூத்துக்குடி, நம் சமகால போராட்ட வரலாற்றில் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது. 1970-களின் இறுதியில் நக்சல்பாரி கிராமத்திலிருந்து உருவான உழவர் எழுச்சிக்கு நிகரான, போர்க்குணமிக்க ஒரு மக்கள் போராட்டத்தை இங்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சிறு வித்தியாசம், நக்சல்பாரி எழுச்சியானது மேற்கு வங்கம் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. ஆனால், ஸ்டெர்லைட் என்ற பன்னாட்டு கார்ப்பரேட் பயங்கரவாதிக்கு எதிரான இந்தப் போராட்டம் தூத்துக்குடிக்குள் வைத்தே கருவறுக்கப்படுகிறது. பிற மாவட்டங்களில் இந்த போராட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள், ஒரு சில புரட்சிகர அமைப்புகள் சில இடங்களில் நடத்தியதை தவிர, வேறு எங்கும் நடக்கவில்லையே, ஏன்?

மக்களை தடியடி கொண்டு ஒடுக்கியும், துப்பாக்கிகளால் சுட்டும் கொன்றவர்கள் வன்முறையாளர்களா? தங்களால் சுவாசிக்கக் கூட இவ்வூரில் மிகவும் சிரமமாக இருக்கிறது, அதனால் அந்த நாசகார ஆலையை மூடுங்கள் என்று போராடியவர்கள் வன்முறையாளர்களா? ஆனால், முக்கால்வாசி ஊடங்கள் குறிப்பாக பார்ப்பன புறம்போக்கு பத்திரிகை தினமலரும் பா.ஜ.க-வின் பிரச்சார ஊதுகுழல்களும் போராடியவர்களைத்தான் வன்முறையாளர்களாக சித்தரித்து செய்தி பரப்புகின்றன. .

சம்பவத்திற்கு எதிர்வினையாகத் தான் பலர் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள், அதாவது “ஜனநாயக(?) இந்தியத் திருநாட்டில் கவர்மென்டும் காவல்துறையும் மிகவும் குரூரமாக மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறதே, இவர்களுக்கு மனசாட்சி இல்லையா!!” என்று கோபம் கலந்த அதிர்ச்சியுடன் கேட்கிறார்கள்.

“சுடச்சொல்லி போலீசுக்கு உத்தரவிட்டது யார்” என்று கேட்கிறார்கள். யார் என்று கண்டுபிடித்து??? அதன் பிறகு என்ன? ஒரு மயிரும் புடுங்க முடியாது.

முதலாளித்துவதால் உருவாக்கப்பட்ட அரசானது, முதலாளிகளுக்கு சாதகமாத்தானே இருக்க முடியும், பிறகு என்ன பேச வேண்டியிருக்கு. தன் லாப வேட்கைக்காக, உலகெங்கும் பல்வேறு போர்களை நடத்தி மக்களை கொன்று குவித்த, இன்றும் கொன்று குவித்து தன் இருப்பை பலப்படுத்திக் கொள்ளும் ஒரு வர்க்கம்; அந்த வர்க்கத்திற்கு ஏற்றாற்போல் உருக்கொண்ட அரசானது எப்படியய்யா மனசாட்சியுடன் நடந்து கொள்ளும்.

அட அஹிம்சா மூர்த்திகளே, ஆகஸ்ட் 15 1947 என்பது போராடிய மக்கள் வென்றெடுத்த சுதந்திரம் அல்ல, அது பிரிட்டானிய ஏகாதிபத்தியம் அதிகாரத்தை, தனது அல்லக்கைகளிடம் ‘கை மாற்றி’ விட்டு சென்ற நாள். தான் மட்டுமல்ல பிற ஏகாதிபத்தியங்களும் எப்பொழுதுமே இங்கு வந்து சுரண்ட, கொள்ளையடிக்க தோதுவான அரசியல் நிலைமையை தான் விட்டுவிட்டு சென்றது. அந்த நிலைமைதான் இன்றைக்கு ஸ்டெர்லைட் முதல் வால்மார்ட் வரை நமது கழுத்தை அறுப்பதற்கு நாட்டின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறது.

சரித்திரம் இவ்வாறு இருக்க, ‘காந்திதான் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார், அவர் போதித்த அஹிம்சா வழி தான் தீர்வு’ என்று இன்னும் நாம் ஒன்றாம் வகுப்பில் மனப்பாடம் செய்ததை, நம்பியதை இன்னமும் நம்பிக் கொண்டு இருந்தால் அதுதான் இவ்வுலகத்தின் மிகப்பெரிய மூடநம்பிக்கை. தோழர்களே!!! பகத்சிங்-ஐ தூக்கில் போட தெரிந்த பிரிட்டனுக்கு காந்தி-ஐ கொல்வது எம்மாத்திரம்! காந்தி ஆங்கிலேயர்களால் எப்படி கட்டி உருவாக்கப்பட்டார் என்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் காங்கிரஸ் பெற்ற சுதந்திரத்தின் லட்சணத்தை.

நாம் இருப்பது, வெளிநாட்டு முதலாளிகளுக்கு மாமா வேலை பார்க்கும் தரகர்களை முதலாளிகளாகக் கொண்ட ஒரு நாட்டில்; ஆங்கிலேய ஏகாதிபத்திம் நேரடியாக நம் நாட்டை காலனியாக்கி கொள்ளையிட்டதை காட்டிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் என்று பல்வேறு ஏகாதிபத்தியங்களின் மறைமுக காலனி ஆட்சி காலத்தில் இயற்கை வளக் கொள்ளைகள், உழைப்புச் சுரண்டல்கள், சுற்றுப்புற சீர்கேடுகள், விவசாயிகள் தற்கொலைகள் உக்கிரமடைந்துள்ள ஒரு நாட்டில். அதனால்தான் லண்டனில் உட்கார்ந்து கொண்டு வேதாந்தாவின் அகர்வால் தமிழகத்தில் போராடும் மக்களின் உயிரை காவு வாங்க முடிகிறது.

முதலாளி வர்க்கத்தை எதிர் கொண்டு, எதிர்த்து நிற்பது தன் உழைப்பைத் தவிர வேறு எந்த உடைமையும் இல்லாத பாட்டாளி வர்க்கம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற பாட்டாளி வர்க்கம் மட்டுமே எந்தவித சமரசமும் இன்றி ஜனநாயக உரிமைகளுக்காக போராடும், கிளர்ச்சி செய்யும். தூத்துக்குடி வாழ் மக்கள் கிட்டத்தட்ட பாட்டாளி வர்க்கநிலையான, இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழலில், மனநிலையில்தான் போராடிவருகிறார்கள்.

“தனக்கு 10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும். 20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடும் 50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது. 100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது. 300% லாபம் வரும் என்றால் எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும். தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக்கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்.” (காரல் மார்க்ஸ்: மூலதனம்.)

நண்பர்களே! நடப்பது வர்க்கப் போர். ஒட்டு மொத்த உலகத்தையும் நெருக்கி பேரழிவில் தள்ளிக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக போராடும் உழைக்கும் மக்கள் மீது கார்ப்பரேட் அரசு தொடுத்திருக்கும் போர்.

இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொள்ள நினைப்பவர்களுக்கு : தூத்துக்குடி மக்களை 20 ஆண்டுகளாக வதைத்து வந்த கார்ப்பரேட் முதலாளித்துவம் இன்று துப்பாக்கியால் சுட்டு உயிரை எடுக்கிறது. இதை எதிர்த்து தடுத்து நிறுத்தத் தவறினால், பணியிடத்திலும், சுற்றுச் சூழலிலும், பொருளாதார வாழ்விலும் நம்மை தினம் தினம் வதைத்து வரும் அதே கார்ப்பரேட் முதலாளித்துவம் நம் மீதும் தனது கோர முகத்தை காட்டுவதற்கு தயாராகி விடும்.

விழித்துக் கொள்வோம். உலக மக்களுக்கு எதிரான இந்த நாசகார சக்தியை எதிர்த்து போராடி வீழ்த்துவோம்.

–  பிரசாத்

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-war-on-tuticorin-people/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மே தினப் பேரணியில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு

ஆலைத் தொழிலாளர் என்றாலும் ஐ.டி ஊழியர் என்றாலும் ஆட்குறைப்பும் வேலைபறிப்பும் அன்றாட நிகழ்வாச்சு! தீராது, தீராது தனித்தனியே போராடினால் பிரச்சினைகள் தீராது!

உலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்

” 2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள்...

Close