படம் : சிவபாலன்
அன்பார்ந்த ஐ.டி துறை நண்பர்களே!
நாம் எல்லோரும் கிராமத்துடன் தொடர்பு உடையவர்களே. இதோ விவசாயிகளான நமது அப்பா , சித்தப்பா, மாமா என நம் உறவினர்கள் அனைவரும் விவசாயத்தின் அழிவில் சிக்கி தவிக்கின்றனர்.
இன்று விவசாயம் அழிவது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது இல்லை. பல வருடமாக, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிட்டே இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்) விவசாயத்தை புறக்கணித்து உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக விவசாயிகளை கொள்ளை அடிக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.
- பசுமைப் புரட்சி என்ற பெயரில் இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டது.
- உரம், பூச்சி மருந்து விற்று ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு லாபம், மறு பக்கம் நிலமும், சுற்றுச் சூழலும் நஞ்சாக்கப்பட்டது.
- விவசாயிகள் பாரம்பரியமாக சேகரித்து பாதுகாத்து வந்த விதை வளங்களை அழித்து, கடையில் வாங்கி ஒருமுறை மட்டுமே விதைக்க பயன்படும் விதைகளை புகுத்தினார்கள்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை திணிக்கிறார்கள். - விவசாய பாசன கால்வாய்களையும், குளங்களையும், ஏரிகளையும் பராமரிக்காமல் புறக்கணித்தார்கள், ஆக்கிரமித்து இல்லாமல் செய்தார்கள்.
ஆற்று மணலை கொள்ளை அடித்து, ஆற்றையும், நிலத்தடி நீரையும் ஒட்டச் சுரண்டினார்கள். - காவிரி, முல்லை பெரியாறு போன்ற ஆறுகளில் கர்நாடக, கேரள அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் நீர் உரிமையை பலி கொடுத்தார்கள்.
- அவ்வாறு விவசாயம் நலிந்த தஞ்சை மண்ணில், விவசாயிகளை நிரந்தரமாக துரத்தி விட மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை புகுத்துகிறார்கள்.
- அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை, அரசு கொள்முதல் இவற்றை புறக்கணித்து விவசாயிகள் விளைபொருட்களை விற்க சந்தையின் தயவில் விட்டார்கள்.
- விவசாய விளைபொருள் சந்தையை சர்வதேச ஊக வணிகத்துடன் இணைத்து விவசாய வருமானத்தையும் விவசாயிகளின் வாழ்வையும் சூதாட்டமாக மாற்றினார்கள்.
- வங்கிக் கடன், கூட்டுறவுக் கடன், கந்து வட்டிக் கடன், நுண்கடன் என்று விவசாயிகளை கடனில் மூழ்கடித்தார்கள்.
- லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளினார்கள்.
கோட்டு சூட்டு போட்ட கார்ப்பரேட்டுகளின் ஆட்சியில் நாட்டு மக்கள் அனைவரும் அத்துக் கூலிகளாக மாறும் வகையில் கொள்கைகள் வகுத்து அமல்படுத்துகிறார்கள்.
இவற்றை எல்லாம் எதிர்த்து, தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள், போலீசை குவித்து அச்சுறுத்துகிறார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் கோரிக்கை வைத்தும், மனு கொடுத்தும் எதையும் மாற்ற முடியுமா?
எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்கள? மாற்றை முன் வைக்கிறார்களா?
இவர்களது அதிகாரம் மக்களை வாழ முடியாத அளவுக்கு அவதிக்குள்ளாக்குகிறது. இதை கேள்விக்குள்ளாக்க வேண்டும்
விவசாயிகள் மட்டும் அல்ல, தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும், அரசு ஊழியர்களும் அனைவரும் உண்மையான ஜனநாயகத்துக்கு போராடுவதே தீர்வு.
எழுத்தாக்கம் – பிரசாந்த்