அரசியல் சாகசத்துக்கு சேகுவேரா! அதிகாரத் தாகத்துக்கு ஜெயா-சசி! ‘மார்க்சிஸ்டு’களின் மானங்கெட்ட செயல்!
கடந்த டிசம்பர் 5 அன்று செத்துப் போன ஜெயாவை தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் வஞ்சனையின்றி புகழ்ந்தன.. செத்தவங்களை குறை சொல்லக் கூடாது என்கிற பஞ்சாங்கவாதிகள் இப்படித்தான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார்கள். கம்யூனிஸ்டுகளால் அப்படி துதிபாட முடியாது.
மார்க்சின் பெயரை வைத்துக் கொண்டு மனுதர்ம கட்சி நடத்தி வருகின்ற சி.பி.எம் கட்சி தன்னுடைய ‘ஒரிஜினல்’ முகத்தை மீண்டுமொருமுறை காட்டி விட்டது. இந்தக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்ட இரங்கல் செய்தியில் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் சாமானியர்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கக் கூடிய மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்தபட்டிருக்கின்றன என்று புகழ்ந்திருக்கிறது. தமிழ் மாநிலக்குழுவோ “எண்ணற்ற சவால்களை எதிர்கொண்ட ஆளுமை” என்று போற்றியுள்ளது. மாநிலக் குழுவால் நடத்தப்படுகின்ற தீக்கதிர் நாளிதழ், “மக்கள் மனதில் நிறைந்திட்ட தலைவர்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது. ஆணாதிக்கம் மிக்க அரசியல் சூழலில் ஜெயலலிதா தனது உறுதியாலும், தைரியத்தாலும் அசைக்க முடியாத தலைவராக உயர்ந்தார் என்று அவரை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துள்ளது மேற்படி தலையங்கம்.
சி.பி.எம் ஆளுகிற கேரளத்திலோ ஒரு நாள் அரசு விடுமுறையும், 3 நாட்கள் அரசுமுறை துக்கமும் அறிவிக்கப்பட்டிருந்தது. கேரள அரசின் சார்பில் தமிழகத்தின் அனைத்து நாளிதழ்களிலும் துக்க விளம்பரமும் வெளியிடப்பட்டிருந்தது. கேரளாவின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், கவர்னர் ஆகிய மூவரும் ஒரே விமானத்தில் வந்து, ஒன்றாகவே மலர் வளையம் வைத்து, தங்களது ‘அரசில் நாகரீகத்தை’ பறைசாற்றியுள்ளனர். துக்க புராணத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு விசயத்துக்கு வருவோம்.
ஒரு மாநில அரசின் சார்பில் அரசு விடுமுறையும், அரசுமுறை துக்கமும் அறிவிக்கப்படுகின்ற அளவுக்கு பாட்டாளி வர்க்கத்தின் உற்ற நண்பனாக இருந்தவரா, ஜெயலலிதா? 2001-2006 காலகட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, ஊழியர்களது வீடுகளில் நள்ளிரவு நேரத்தில் புகுந்து கைது செய்தவரல்லவார, ஜெயா? பல்லாயிரக்கணக்கான சாலைப் பணியாளர்களது வேலையைப் பறித்ததுடன் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் அவர்களுக்கு வேலை தராமல் கொன்றவர்தானே, இந்த ஜெயா? இவருக்கா இத்தனை பாராட்டுரைகள்? சாட்டையை வீசிய இந்த வரலாற்றை அவரது வீட்டில் 10 சீட்டுக்காக காத்திருந்த தருணத்தில் குழிதோண்டி புதைத்து விட்டீர்களோ?

கேரள முதல்வர் பினரயி விஜயன் (சி.பி.எம்), எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா (காங்கிரஸ்), முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பும் போது…
ஜெயாவின் அஞ்சலிக்கு நாகரிகம் பேணிய ‘காம்ரேடு’களே, ஜெயலலிதா உங்களை சட்டசபையில் எள்ளி நகையாடிய நாகரிகத்தை சற்று நினைவுபடுத்திப் பாருங்களேன். தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று அந்த அம்மையார் கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்தியது உங்களது நினைவுக்கு வரவில்லையா? ஆணாதிக்கம் மிகுந்த சூழலில் போராடியவராம் ஜெயா. இந்த ‘பெண்ணினப் போராளி’யின் போலீசு, சிதம்பரம் போலீசு நிலையத்தில் பத்மினி என்கிற பெண்ணின் கணவனைக் கொன்று பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியபோது, பத்மினி ஒழுக்கங்கெட்டவர் எனவும், இழப்பீட்டுத் தொகைக்காக நாடகமாடுகிறார் எனவும் ஜெயா அவதூறு செய்ததை மறந்து விட்டீர்களோ?
ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் சாமானியர்களுக்கு உடனடி பலன்களைக் கொடுத்தனவாம்… சாமானியர்கள் என்றால் யார் ‘காம்ரேட்’ஸ்…? மிடாஸ் சாராயக் கம்பெனியா? நலத்திட்டங்கள் என்றால் தெருவுக்கொரு சாராயக் கடையைத் திறந்து வைத்து, தமிழகத்தை குடிநோயாளிகள் மாநிலமாக மாற்றியதா? இந்த டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கெதிராக பச்சையப்பன் கல்லூரி பு.மா.இ.மு மாணவர்கள் போராடியபோது ஜெயாவின் போலீசு அரங்கேற்றிய அடக்குமுறைகளை அறியாதவர்களா, நீங்கள்? மாணவிகளை விபச்சார வழக்கைக் காட்டியும், மாணவர்களை என்கவுண்டர் அச்சுறுத்தல் செய்தும் போலீசு ராஜ்ஜியம் நடத்தியது, தெரியுமா? எப்படித் தெரியாமல் இருக்கும்? சமீபத்தில் கேரளாவில் மாவோயிச அமைப்பினரை கைது செய்து சித்திரவதையோடு கொலையும் செய்த அரசுதானே சி.பி.எம் அரசு! இந்த பச்சைப் படுகொலைக்குப் பின்னர் கொல்லப்பட்டவர்களுடைய பிணத்தைக் கூட பெற்றோருக்கு கொடுக்காமல் விரட்டி வருகின்ற உங்களுக்கு, ஜெயாவின் ‘ஆளுமை’ ரொம்பவும் பிடித்திருக்கும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க.வை பலவீனப்படுத்துவதாகக் கூறி எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டார் வலது (போலி) கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம். தனது பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஒளிவட்டம் போடுகிறது, சி.பி.எம் கட்சி. அடுத்து வருகின்ற சி.பி.எம் கட்சி மாநாட்டில் சேகுவேராவுக்குப் பதிலாக ஜெயலலிதா படம் போட்ட பனியனை எதிர்பார்க்கலாம்.
– விமலா
(புதிய தொழிலாளி, டிசம்பர் 2016)