பட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்!

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது, இது மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, காற்று மாசுபாட்டில் உலகின் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி சமயங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் வரம்புகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளி நெருங்கிய சமயத்தில், சென்ற அக்டோபர் மாதம் 23-ம் தேதி உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரண்டு மணி நேரம், இரவு எட்டு முதல் பத்து மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி என்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை டெல்லிக்கு மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டது.

இதன் பின்பு தமிழக அரசு முறையிட்டதன் பேரில் எந்த இரண்டு மணி நேரம் என்று அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியது. தமிழகத்தில் காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்றும் இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. தீபாவளி முடிந்த அடுத்த நாள் தமிழகத்தில் மட்டும் 900-க்கும் அதிகமானோர் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்கு பதிவு செய்தது தமிழக காவல்துறை, வடமாநிலங்களிலும் சில நூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பெருகியிருக்கும் கார், பைக் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும், ஏ.சி, பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் வெளியேற்றும் வாயுக்களும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்களும், வகை தொகையின்றி நடக்கும் நகர விரிவாக்கமும் நிலம், நீர், காற்று அத்தனையையும் அசுத்தப்படுத்துகின்றன. அமெரிக்க பெட்கோக் எனப்படும் ஒரு வகை நிலக்கரியை இறக்குமதி செய்வதில் உலகின் முன்னணி சந்தையாக இந்தியா திகழ்வது உலகின் மாசுபட்ட நகரங்களில் முதன்மையான ஒன்றாக தலைநகர் டெல்லி இருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமையும் மத்திய அரசின் தாராளவாத பொருளாதார கொள்கைகளை நோக்கி கேள்வி எழுப்பாமல், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் மேல் பழியைப் போடுகின்றது உச்சநீதிமன்றம். இதன் மூலம் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் டெல்லி மக்களுக்கு ஏதோ தீர்வு வழங்குவது போல போக்கு காட்டியிருக்கிறது.

தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன.

இவ்வாறு, இரண்டு நாட்கள் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபட்டு மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது என்று உதார் காட்டும் நீதிமன்றம், தீபாவளிக்கு முந்தைய மாதங்களில் கிட்டத்தட்ட 24 மணி நேரமும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்பைப் பற்றி கண்டு கொள்வதில்லை. அந்த தொழிற்சாலைகளில் நடக்கும் உழைப்புச் சுரண்டலையும், விபத்துக்களையும் கருத்தில் கொண்டு பணி நிலைமையை ஒழுங்குபடுத்த முன்வரவில்லை.

கடந்த ஓரிரு ஆண்டுகளாக சீனாவில் இருந்து பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டாலும், இந்தியாவின் 90 சதவீத பட்டாசுத் தேவையை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள “குட்டி ஜப்பான்” சிவகாசி மற்றும் அதனை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருக்கும் 1500-க்கும் மேற்பட்ட சிறு, குறு பட்டாசு ஆலைகள்தான் நிறைவு செய்கின்றன.

வறண்ட பகுதியான விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் பொய்த்துப் போக, அரசும் கைவிட்ட நிலையில், கடன், வறுமை, படிப்பு, கல்யாணம் என்று வாழ்க்கையை ஓட்ட மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் தான். வருடத்திற்கு 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி தயாரிப்பு, விற்பனை சம்பந்தமான தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெண்களும், குழந்தைகளும் வேலை செய்கின்றனர்.

உயிருக்கு உத்திரவாதமின்றி வேலை செய்யும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள்

தீபாவளிக்கு முந்தைய இரண்டு மாதங்களில் உற்பத்தி அதிக வேகத்தில் முடுக்கி விடப்படுகிறது. அந்த சமயங்களில் காலை 4 மணிக்கு ஊருக்குள் வரும் பட்டாசு ஆலை வேன்களில் ஏறும் சிறுவர்கள் இரவு எட்டு மணிக்கு வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கப்படுகின்றனர். நாள் முழுவதும் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்தால் ஒரு நாளைக்கு குழந்தைகளுக்கு 200 ரூபாய் வரையும், பெரியவர்களுக்கு 500 ரூபாய் வரையும் கூலியாகக் கிடைக்கும். வெடிமருந்து சுருட்டுவது, பட்டாசுத் தாள் ஒட்டுவது, ரசாயனம் கலப்பது என்று வேலைக்கேற்ப கூலி வேறுபடுகிறது. ஆனால் ஆலை முதலாளிகளோ கோடிகளில் லாபமீட்டுகின்றனர்.

இவ்வளவு ஆபத்து நிறைந்த உற்பத்தி ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உத்திரவாதப்படுத்துவதில்லை. மாறாக, அலட்சியப்படுத்தப்படுகின்றன. 2009-ல் உசிலம்பட்டி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டு சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர். 2012-ம் ஆண்டு சிவகாசி ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் உயிரிழந்தனர், 70-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 2000-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை தீவிபத்துகளில் 237 பேர் இறந்துள்ளனர்.  2016-ம் ஆண்டு சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் நடந்த தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்துகளில் உடல் உறுப்புகள் சேதமடைதல் மற்றும் இழப்பு, உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு பெறுவது என்பது பெரும்பாலும் முதலாளியைப் பொறுத்தே இருக்கிறது. கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் இல்லை.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி வெடிமருந்தை சேமித்தல், 10-க்கு 10 அடி கொண்ட குறுகிய அறைகளில் பத்து பேருக்கும் மேல் வைத்து வேலை வாங்குவது, அவசர சிகிச்சைக்கான உபகரணங்களை வைக்காதது, உரிய அனுமதி பெறாமல் பட்டாசு ஆலை நடத்துவது என்று விதிமுறைகளை மீறி நடக்கும் இந்த ஆலைகளில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும், உரிய பயிற்சிகளுமின்றி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் பெண்களும் ஆபத்தான வெடிமருந்துகளைக் கையாளுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெடிவிபத்துகளில் போகும் உயிர்களோடு, உடலுக்கு கேடுவிளைவிக்கும் வேதிப்பொருட்களை நேரடியாகக் (கைகள், மூக்கு, கண்கள்) கையாளும்போது ஏற்படும் நோய்களால் பல மடங்கு இழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வளவு இழப்புகளையும் தாங்கி, கடுமையாக உழைத்து அரசுக்கு வரி வருவாயும், முதலாளிக்கு லாபத்தையும் ஈட்டித்தரும் தொழிலாளர்களைப் பற்றி கவலைப்படாத அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தமக்கு கிடைக்க வேண்டிய லஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு பட்டாசு ஆலை முதலாளிகளின் பக்கம் நிற்கின்றனர்.

பட்டாசு ஆலை என்றில்லை, ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் உயிரிழப்புகளுக்கு எதிராக திரண்டு போராடிய போது வாய்திறக்காத நீதிமன்றம், மானேசர் மாருதி, பிரிக்கால், யமஹா தொழிற்சாலைகளில் பணியிட பாதுகாப்பு உரிமைகளுக்காக நடந்த தொழிலாளர் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் தீவிரம் காட்டிய நீதிமன்றம், தொழிலாளர் சட்டங்களை மேலும் மேலும் நீர்த்துப் போகச் செய்வதை வேடிக்கை பார்க்கும் நீதிமன்றம் மக்களை சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து காப்பாற்றவே பட்டாசு வெடிக்கத்தடை என்று சொன்னால் நம்புவதற்கு நாம் என்ன கேணைகளா?

உழைக்கும் மக்களின் நலனைக் காப்பதிலோ, சுற்றுச்சூழலைக் காப்பதிலோ அதிகார வர்க்கமும் நீதிமன்றங்களும் ஒருபோதும் மக்களின் பக்கம் நிற்பதில்லை. அவை முதலாளிகளின் நிர்வாக கமிட்டியாகத்தான் செயல்படுகின்றன என்பதற்கு மேற்கண்ட சம்பவங்களே சான்று.

– செல்வம்

புதிய தொழிலாளி (நவம்பர்-டிசம்பர்’18)

Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது.

ஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல் சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்? முகநூல், ஆதார் - பீரோ புல்லிங் திருடர்கள் வருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின்...

Close