- கம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி?
- கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2
- கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3
எந்த இலக்கும் இல்லாமல் புழுவாக இருப்பதற்காகவே நூல் நூற்றுக் கொண்டிருக்கும் கம்பளிப்புழுவைப் போல எந்த இலக்கும் இல்லாமல் தொழிலாளியாக இருப்பதற்காக மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற காண்டிராக்ட் தொழிலாளர்களது அவல வாழ்வானது, 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் அடிமைத் தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளையும் விஞ்சக்கூடியதாக இருக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியத் தொழிலாளி வர்க்கமும் அடக்குமுறை- சுரண்டலுக்கு ஆளாகி நிற்பதோடு, பெயரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிக்கப்படுகின்ற இந்த தருணத்தில் காண்டிராக்ட் தொழிலாளர்கள் கூடுதலான இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்கிற புரிதலில் இருந்து இந்த பிரச்சினையைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பார்ப்பன இந்து மதம் கட்டமைத்துள்ள சாதிப் படிநிலை சமூகத்தில் கடைசிப்படியில் இருக்கின்ற தீண்டாமைச் சாதியினர் எந்த அளவுக்கு கொடுமைகளை அனுபவிக்கின்றனரோ அதை ஒத்ததாகத்தான் இருக்கிறது, காண்டிராக்ட் தொழிலாளர்களது நிலைமை.
கட்டுரையின் முதல் பகுதியில் சொல்லப்பட்டதைப்போல வேலைநேரம், வேலைச்சுமை, பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளைப் போலவே ஏனைய பிரச்சினைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். 8 மணிநேர வேலைக்கு மேல் செய்யப்படுகின்ற வேலைக்கு மிகை நேரப்பணி (ஓவர்டைம்) அடிப்படையில் இரட்டிப்பு சம்பளம் தரவேண்டும். ஆனால் இந்த மிகை நேரப்பணியில் பாதி நாட்கள் பதிவு செய்யப்படாமல் திருடப்படுகின்றன. பதிவு செய்யப்படுகின்ற நாட்களுக்கு இரட்டிப்பு சம்பளம் தராமல் களவாடுகின்ற காண்டிராக்ட் முதலாளிகள் ஏராளம்…ஏராளம். தமது உழைப்புச்சக்தியை கொள்ளையடிக்கிறார்கள் என்று தெரிந்தாலும், தட்டிக்கேட்டால் வேலை பறிபோய்விடும் என்கிற பயத்தில் மவுனமாக அழுகின்றனர், தொழிலாளர்கள்.
வேலைக்கு வருவதே வயிற்றுப் பிழைப்புக்குத்தான். வயிறு நிறைய சாப்பிட முடிகிறதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான். நிரந்த தொழிலாளிக்கு ஒரு கேண்டீன், காண்டிராக்ட் தொழிலாளிக்கொரு கேண்டீன் என்று ரகம் பிரிப்பது இடத்தில் மட்டுமல்ல போடப்படுகின்ற உணவிலும்தான். புளித்த மோர், பூச்சி விழுந்த சாம்பார் என்பதெல்லாம் சாதாரணம். சாம்பாரில் கிடக்கின்ற புழுவைக்காட்டினால் பாய்லரில் வெந்து குழைந்த பின்னர் முழுதாக எப்படி இருக்கும் என்று காண்டிராக்ட் முதலாளிகள் எதிர்க்கேள்வி கேட்பது சாதாரணம். தொழிலாளர்கள் காட்டுகின்ற புழு எங்களது கேண்டீன் புழுவல்ல என்று அடம்பிடிப்பதுடன், சாப்பிடாததற்கு தண்டனையாக தொழிலாளர்களுக்கு அபராதம் விதிக்கின்ற நிர்வாகங்கள் ஏராளம். காண்டிராக்ட் தொழிலாளி என்றால் சாப்பாட்டில் கிடக்கின்ற புழு-பூச்சியையும் சகித்துக் கொள்ள வேண்டும்.
25 தொழிலாளர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், நூறு தொழிலாளர்களுக்கு ஒரு கழிப்பறை என்கிற வீதத்தில் கூட கழிப்பறை இல்லாமல், கியூவில் காத்துக்கிடப்பது ஒரு துயரம் என்றால், அந்த கழிப்பறையில் பெயிண்ட் டப்பாவையே தண்ணீர் பிடிக்கும் பாத்திரமாக வைத்திருப்பதும் , அந்த டப்பாவும் ஓட்டையாக இருப்பதும் அவலத்திலும் அவலம்.
காண்டிராக்ட் சூப்பர்வைசர் என்கிற பெயரில் வலம் வருகின்ற அடியாளுக்கு தொழிலாளர்கள் நடுங்கித்தான் ஆக வேண்டும். ஆலைக்குள் அடிப்பது மட்டுமல்லாமல், வேலை செய்த அட்டையைக்கூட பிடுங்கிக் கொண்டு அதுவரை செய்த வேலைக்கான கூலியையும் பறித்துக் கொள்வான் அந்த படுபாவி. பெண் தொழிலாளி என்றால் பாலியல் வக்கிரங்கள் அரங்கேறுவதும், ஆண் தொழிலாளர்கள் அவனுக்கு சாராயம் சப்ளை செய்வதும் எழுதப்படாத விதிகள். இந்த அடியாள் படைக்கு பல்வேறு சமூகவிரோதிகளும், போலீசும் இணைபிரியா நண்பர்களாக இருப்பது இயற்கையான விசயமாக இருக்கிறது.
வாராந்திர விடுமுறை என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்ற சூழலில், நல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த ‘எளிய’ தண்டனை. முன்கூட்டியே சொல்லாமல் லீவு போட்டுவிட்டால் கிடைக்கின்ற தண்டனையே வேறு. தினமும் ஆலைவாசலுக்கு வந்து காத்திருக்க வேண்டும். திடீரென உள்ளே கூப்பிடுவார்கள். சில மணிநேரம் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஷிப்ட் இன்சார்ஜ் வருவார். “உன்னை யார் உள்ளே விட்டது.. வெளியே போ…” என்று துரத்துவார். செய்த வேலையை விட்டுவிட்டு வெளியே போய்விட வேண்டும். அப்படி செய்த வேலைக்கு கூலி கிடையாது. மீண்டும் ஆலைவாசலில் காத்துக்கிடக்க வேண்டும். அடுத்து யாராவது ஒரு காண்ட்ராக்ட் தொழிலாளி இதேபோல தப்பு செய்தால் அந்த தண்டனையில் அவர் மாட்டிக்கொள்வார். முதலில் தண்டிக்கப்பட்டவருக்கு விமோசனம் கிடைக்கும். வேலைமறுப்பு என்கிற தண்டனையைக்கூட “ரிலே ரேஸ்” போல அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர், காண்டிராக்ட் தொழிலாளர்கள்.
ஏற்றுக்கொண்ட வேலையில் கண்ணும்கருத்துமான கண்ணபிரான்களா, இந்த காண்டிராக்ட் முதலாளிகள்? ஆகப் பெரும்பான்மையான காண்டிராக்ட் முதலாளிகள் ஆள் சப்ளை செய்வதற்கு வாங்கி இருக்கின்ற லைசென்ஸ் இவர்களது இலட்சணத்தை காரித்துப்பும். ஆட்டோமொபைல் அல்லது இஞ்சினியரிங் தொழிற்சாலையில் சிவில் வேலைக்கு 250 பேர் சப்ளை என்று லைசென்ஸ் வாங்கி வைத்திருப்பான். கனரகத் தொழிலில் சிவில் வேலைக்கு 250 பேர் எதற்குத்தேவை என்று லைசன்ஸ் கொடுக்கின்ற அதிகாரியும் கேட்பதில்லை. இந்த தொழிலாளர்கள் எல்லாம் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்ற பலியாடுகள். மூன்று மாதத்துக்கொருமுறை தொழிற்சாலைகள் ஆய்வாளர் ‘சோதனை’க்கு வரும்போது, இந்த பலியாடுளை மறைக்க வேண்டும் அல்லது ஒரு சில நாட்களுக்கு கட்டாய லீவு கொடுத்து பொய்க் கணக்கு காட்ட வேண்டும். அதிகாரிகள் சோதனைப் பயணத்துக்குப் போவதே இலஞ்ச வேட்டைக்குத்தான் என்பதை ஆலைமுதலாளியும் அறிவார். காண்டிராக்ட் முதலாளியும் அறிவார். எல்லாம் ஒரு கணக்குதான்.
காண்டிராக்ட் தொழிலாளர்களை உள்ளுர் தொழிலாளர்கள், வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புத்தேடி வருகின்ற தொழிலாளர்கள் என இரு பிரிவுகளாக பிரித்துக் கொள்ளலாம். உள்ளூர் தொழிலாளிக்கு வேலைநேரம், வேலைச்சுமை, பாகுபாடு, இழிவுபடுத்துதல், உத்திரவாதமின்மை போன்ற அடக்குமுறைகள் மலைபோல அழுத்துகின்றன என்றால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது தூக்கி நிறுத்தப்படும் மற்றொரு பெருமலை வெளியூர்க்காரன் என்கிற முத்திரை. இந்த முத்திரையானது, வெளிமாநிலத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் அடக்கிவைத்துக் கொள்ளலாம் என்கிற கூடுதல் உத்திரவாதத்தைத் தருகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது மாநிலம், மொழி, வட்டாரம் அல்லது சாதி அடிப்படையில் 10-20 பேர் ஒரே வீட்டை வாடகைக்குப் பிடித்து தங்குவது வாடிக்கை. சில சமயம் காண்டிராக்ட் முதலாளிகளே அப்படி தங்க வைப்பார்கள். அப்படி ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களை கண்காணிப்பதும், தேவையான நேரத்தில் வேலைக்கு இழுத்துச் செல்வதும் முதலாளிகளுக்கு சுலபமாகிவிடுகிறது. வேலையில் சேரும்போதே ரேசன் கார்டு,ஆதார் அட்டை போன்றவற்றை காண்டிராக்ட் முதலாளிகள் பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். திடீரென மாத இறுதியில் ஒருநாள் ஒரு தொழிலாளியை வேலையைவிட்டே நிறுத்துவார்கள். அவருக்குப் பரிந்து பேசுபவர்கள் யாரென்று அடையாளம் கண்டுபிடித்து, அவர்களையும் வேலையைவிட்டே துரத்திவிடுகின்றனர். அந்த தொழிலாளர்களது சம்பள பாக்கி, பி.எப் பிடித்தம், இதர சேமிப்புகளை அபகரித்துக் கொள்கின்றனர். இந்த பணத்தைக் கேட்டு அடம்பிடிப்பவர்களது ரேசன் கார்டு, ஆதார் கார்டுகளை திருப்பிக் கொடுப்பதில்லை. ரேசன்கார்டு, ஆதார் கார்டுகள் கிடைத்தால் போதும் என, தனது உழைப்புக்கான பணத்தை விட்டு விட்டு ஓடுகின்றனர். தொழிலாளியின் பணத்தை அபகரித்ததுடன், அவர்களுக்கு பயத்தை உருவாக்கி அடக்கி வைப்பது சாத்தியமாகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையில் மற்றொரு ரகம், அவ்வப்போது ரவுடிகளை ஏவிவிட்டு தாக்குவது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை ஒட்டிய பகுதியில் துவங்குகிற ஆந்திர மாநில எல்லையில் sreecity சிறப்புப் பொருளாதார மண்டலம் இருக்கிறது. இங்கு வேலைசெய்கின்ற வடமாநிலத் தொழிலாளர்களை கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் கும்பல் கும்பலாக தங்க வைத்துள்ளனர் காண்டிராக்ட் முதலாளிகள். இந்த குடியிருப்புகளில் திடீரென நள்ளிரவில் ரவுடிகள் புகுந்து தாக்குதல் நடத்துவார்கள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்ற தொழிலாளிக்கு யார் தம்மை அடிக்கிறார்கள் என்பதோ, எதற்காக அடிக்கிறார்கள் என்பதோ தெரியாது. நள்ளிரவில், மொழி தெரியாத ஊரில், உறவோ, பாதுகாப்போ அற்ற நிலையில் உயிருக்கு பயந்து ஓடுகின்ற தொழிலாளிக்கு, முதலாளிகள் போதிக்கின்ற பாடம் ஒன்றே ஒன்றுதான்: “சொல்லுகிற வேலையை செய்துவிட்டு, கொடுப்பதை வாங்கிக்கொண்டு அடங்கிக் கிட!”
வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படுகின்ற மற்றொரு கொடுந்தாக்குதல், “பொழைக்க வந்த இடத்துல என்ன திமிரு..” என்கிற இனவெறிப் பேச்சுகள். இதனால் தொழிலாளி வர்க்கம் அனுபவிக்கின்ற இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல..
-உமர்