கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3

This entry is part 3 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

வெளிமாநிலத் தொழிலாளர் மீது நடத்தப்படுகின்ற மற்றொரு கொடுந்தாக்குதல், “பொழைக்க வந்த இடத்துல என்ன திமிரு…..” என்கிற இனவெறிப் பேச்சுகள். “வேறு மாநிலத்திலிருந்து பிழைக்க வந்தால் தப்பா” என்று நம்மைப் பார்த்து கேட்கின்றனர், ஒடிசா மாநிலத் தொழிலாளர்கள்.

தாஸ் என்கிற ஒடிசா தொழிலாளி கொந்தளித்து பேசியவை:

“நாங்கள் விரும்பியா இங்கு வேலைத் தேடி வருகிறோம்? எங்களது விவசாயம், பாரம்பரிய நிலம், வாழ்வுரிமை ஆகிய அனைத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகள் பறித்துக்கொண்டன. ஒடிசாவின் கனிமவளம் மிகுந்த நியாம்கிரி மலை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்து தரப்பட்டுவிட்டது. அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து துரத்தப்பட்டனர். எதிர்த்துப் போராடியவர்களை நக்சலைட்டுகள் – மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தி வேட்டையாடியது, அரசு. இது பழங்குடி மக்களுக்கு மட்டுமல்லாமல், நிலப்பகுதியில் விவசாயம் செய்துவந்த மக்களுக்கும் நேர்ந்தது. இன்றைக்கு நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் போராடுவதைப் போலவே, எமது மக்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் போராடினர். ஒடிசாவின் உருக்காலைத் தொழில் மையமாக கலிங்காநகர் அறிவிக்கப்பட்டு, பாரம்பரிய வாழ்விடமும், விவசாய பூமியும் அரசால் கையகப்படுத்தப்பட்டது. டாடா ஸ்டீல் உள்ளிட்ட உருக்காலை பூதங்களுக்கு எங்களது பூமி தானமாக தரப்பட்டபோது அதை எதிர்த்து எமது மக்கள் போராடினர். போராடிய மக்கள் மீது (ஜனவரி 2016-ல்) போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 12 பழங்குடி மக்கள் கொல்லப்பட்டனர். இதே போல போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கெதிராக நடந்த போராட்டங்களும் அடக்கப்பட்டன.

எமது சொந்த மண்ணில் பிழைப்பு நடந்த முடியவில்லை. எமது மண்ணில் துவங்கப்பட்டுள்ள ஆலைகளில் எங்களுக்கு வேலை கிடையாது. ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவிலிருந்து வருபவர்களுக்கே வேலை. மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வேலைதேடி வருகிறோம். வேலைக்கு வந்த இடத்திலும் அடக்குமுறைக்கு ஆளாகிறோம். ஒடிசா தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டு தொழிலாளர் மும்பை, பெங்களூர், டெல்லி போன்ற நகரங்களுக்கும், உ.பி., அரியானா போன்ற வடமாநிலங்களுக்கும் போகின்றனர். பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் போவதும், போகின்ற இடத்தில் வெளியூர்க்காரன் என்கிற அடக்குமுறையை சந்திப்பதும் தமிழனுக்கும், ஒடிசாக்காரனுக்கும் ஒன்றாகவே நடக்கிறது. நாமெல்லாம் தொழிலாளர்கள்; ஒரே வர்க்கம் என்று புரிந்துகொள்ளாமல் இருக்கிறோமே!”

என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

உண்மைதான். நேற்று கலிங்கா நகர்; இன்று மத்தியப் பிரதேசத்தின் மண்டாசார். நெடுவாசல் – கதிராமங்கலம்… நாளை கடலூரோ, நாகப்பட்டினமோ… எது வேண்டுமானாலும் இருக்கலாம். அரசு பயங்கரவாதத்தின் இடங்களும், காலகட்டமும் வேறுபட்டாலும், அடக்குமுறையால் ஏற்படும் தவிப்புகள், இழப்புகள் ஒன்றுதானே?

ஆனால், ‘வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்’ என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம் போட்டு கொழுக்க வைக்கிறது.

“உள்ளூர் தொழிலாளர்கள் தமக்கு துணையாக இல்லாததால், தாங்கள் ஒரே கும்பலாக வாழ்வது தவிர்க்க முடியாதது”, என்கின்றனர், அம்பத்தூர் தொழிற்பேட்டையை ஒட்டியுள்ள அத்திப்பட்டு போன்ற பகுதிகளில் வாழ்கின்ற ஒடிசாக்காரர்கள். “தங்கள் வீட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், அவர்களை ஊரிலேயே விட்டு விட்டு, வருடத்துக்கொரு முறை நேரில் போய் வருவேன்” என்று தங்களது வாழ்வின் அவலத்தைச் சொல்லுகிறார்கள்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப் போய் வருவது அத்தனை சுலபமல்ல. ஊருக்குப் போவதற்கு முன்னால், விடுமுறை, ஒய்வு எதுவும் இல்லாமல் எந்திரத்தோடு எந்திரமாக வேலைசெய்து சேமித்து வைத்துக் கொண்டு பயணிப்பார்கள். அந்தப் பயணம் எப்படி இருக்கும் என்பதை சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுகின்ற கோரமண்டல் விரைவு இரயிலில் சென்று பார்த்தால் புரியும். கழிப்பறையில் கூட பயணிக்கின்ற அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகின்ற இரயிலில், இரண்டு நாட்களுக்குத் தேவையான சப்பாத்தியையும், பச்சை மிளகாயையும் வைத்துக்கொண்டு ஊர்போய் சேர்கின்றனர்.

ஆண்டு முழுவதும், ஓய்வே இல்லாமல் உழைப்பவனுக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு கிடைக்கிறது என்று தப்பாக நினைத்துவிடக் கூடாது. இந்த லீவெல்லாம் தானாகவே போட்டுக்கொள்வது. லீவு முடிந்த பின்னர் பழைய இடத்திலேயே வேலை கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அப்படி பழைய இடத்திலேயே வேலை கிடைக்க வேண்டும் என்றால் , அங்கு அவர் நல்ல பெயர் எடுத்திருக்க வேண்டும். நல்ல பெயர் எடுப்பது என்றால் என்ன? எப்போது சொன்னாலும் வேலைக்கு வந்திருக்க வேண்டும். வாரத்தின் ஏழு நாட்களும் வேலைக்கு வந்திருக்க வேண்டும். ஓவர்டைம் என்கிற மிகைநேரப் பணிக்கு சட்டப்பட்டி இரண்டு சம்பளம் கேட்கக் கூடாது. கூடுதலாக, தொழிற்சங்கம் என்கிற வார்த்தையை பேசவோ, கேட்கவோ கூடாது.

இப்படி நல்ல பெயர் எடுக்க வேண்டும். இப்படி எடுக்காத தொழிலாளிக்கு லீவு முடிந்து வந்தவுடன் வேலை கிடைக்காது. தினமும் கம்பெனி வாசலில் நிற்க வேண்டும். வேலை கிடையாது என்று காலையில் சொல்லிவிட்டால், உடனடியாக தங்குமிடத்துக்கு போய்விடக் கூடாது. மதியம் வரையோ, அடுத்த ஷிப்ட் துவங்கும் வரையோ கேட் பக்கத்தில் நிற்க வேண்டும். ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலை கிடைக்கும். பழைய சம்பளமே கிடைக்கும் என்பதற்கும் உத்திரவாதமில்லை. “ஒரு மாசம் லீவு போட்டதால் உன்னுடைய வேலைத்திறன் மங்கிப் போய்விட்டது” என்றெல்லாம் காரணம் சொல்லுவார்கள், காண்டிராக்ட் சூப்பர்வைசர்கள். காரணம் கேட்கிற மனநிலையில் இல்லாத தொழிலாளியோ வேலை கிடைத்தால் போது என்று அடங்கிப் போகிறார். இன்னும் சொல்லப்போனால், முன்பிருந்ததை விட வேலைச்சுமையை அதிகரித்து விடுவார்கள்.

காண்டிராக்ட் முறையில் இத்தனை கொடூரங்கள் இருக்கிறதே, உள்நாட்டிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வேலைக்கு வந்தால் சொல்ல முடியாத துயரங்களை சந்திக்க வேண்டியிருக்கிறதே, இதையெல்லாம் தொழிலாளர் நலச்சட்டங்கள் தடுக்கவில்லையா? காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல் என்கிற பெயரில் 1970-ம் ஆண்டில் ஒரு சட்டமும், உள்நாட்டில் புலம்பெயர்கின்ற தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாக்க 1975-ல் ஒரு சட்டமும் போடப்பட்டன.

இந்த சட்டங்களை அமல்படுத்த வேண்டிய மத்திய – மாநில அரசுகளே தங்களது அரசுத் துறைகளிலும், அவைகள் நடத்துகின்ற பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களிலும், நடைமுறைப்படுத்துவது இல்லை. இவற்றில்தான் காண்டிராக்ட் தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர்.

  • ரயில்வே துறையில் இருப்புப்பாதை பராமரிப்புப் பணியில் ஆகப்பெரும்பான்மையினர் காண்டிராக்ட் தொழிலாளர்கள்தான். தனியொரு தொழிலாளியாக இல்லாமல், குடும்பம், குடும்பமாக இந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். கைக்குழந்தையை ரயில் பாதை ஓரத்தில் படுக்கவைத்துவிட்டு தாயும், தந்தையும் இருப்புப்பாதை ஜல்லிகளை வாரிக்கொண்டிருப்பதை பலரும் பார்த்திருப்பீர்கள்.
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் சரிபாதி பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள்தான்.  காண்டிராக்ட் தொழிலாளர்களை வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவை முழுமையாக அமல்படுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன;
  • நவரத்னா அந்தஸ்து பெற்ற என்.எல்.சி.யிலும் மினசார வாரியத்திலும் இதுதான் நிலைமை. தான் போட்ட சட்டத்தை தானே மீறுகின்ற அரசு எந்திரம் கார்ப்பரேட்டுகளது காண்டிராக்ட சுரண்டலை எப்படித் தடுக்கும்?

ஒருவேளை தொழிலாளர் துறை அதிகாரிகள் மேற்படி சட்டங்களை அமல்படுத்துவார்களோ என்கிற நப்பாசையுடன்தான் பலரும் தொழிலாளர்துறையை அணுகுகின்றனர்.

“காண்டிராக்ட் தொழிலாளிகளை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதால், நிரந்தத் தொழிலாளிக்கு தருகின்ற சம்பளம், பணிபாதுகாப்பு மற்றும் இதர சலுகைகளை தரவேண்டும்” என்று கேட்டால், “தொழிலாளர்கள் தனித்தனியாக இப்படி கோரிக்கை வைக்க முடியாது” என்கிறது, தொழிலாளர் துறை. அப்படியெனில் “சங்கம் அமைத்து கோரிக்கைக்காக போராடலாம்” என்றால், எந்தத் தனியார் துறை நிறுவனத்திலும் அங்கீகரிப்பது இல்லை.

அதனால்தான் அரசுத்துறை – பொதுத் துறைகளில் காண்டிராக்ட் நிறுவனங்களில் சங்கமாக திரட்டியுள்ள சி.ஐ.டி.யு போன்ற மைய சங்கங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வதைபடுகின்ற காண்டிராக்ட் தொழிலாளிகளை அலட்சியப்படுத்துகின்றன.

இருப்பினும், பு.ஜ.தொ,மு சில இடங்களில் காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றது. இதன் மூலம் “தாங்கள் காண்டிராக்ட் தொழிலாளர்கள் அல்ல; நிரந்தரம் மறுக்கப்படும் தொழிலாளர்கள். எனவே, வேலைநிரந்தரம் கேட்பதும், சமவேலைக்கு சம ஊதியம் கேட்பதும் எமது உரிமை” என்கிற முழக்கத்துடன் காண்டிராக்ட் முகமூடியால் நடத்தப்படும் சுரண்டலுக்கெதிராக சமரசமற்ற சமரைத் துவங்கியுள்ளது, பு.ஜ.தொ.மு.

(முற்றும்)

– உமர்

புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2017

Series Navigation<< கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு...

டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள்

Close