கம்பளிப் புழுவா காண்ட்ராக்ட் தொழிலாளி?

This entry is part 1 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

டந்த மேதினத்தன்று பிரதமர் மோடி இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்து வருகின்ற எண்ணற்ற தொழிலாளர்களை வணங்குவதாக மெய்யுருகியுள்ளார். அதே தினத்தில் மோடியின் மூத்த சகாவான நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான “நிதி ஆயோக்” என்கிற அமைப்பானது இந்தியாவில் இருக்கின்ற 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக்கட்டுகின்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் தாமதமாகி வருவதற்கு கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஒருபுறத்தில் பாராட்டு; மறுபுறத்தில் குழிபறிப்பு. இதுதான் பார்ப்பன நரித்தனம்.

பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் தொழிலாளர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் தொழிலாளர்களை மீது அக்கறை காட்ட வேண்டும் என்று யாராவது நம்பிக் கொண்டிருந்தால் அவர்கள் ஒன்றுமறியா அப்பாவிகளாகவோ திட்டமிட்ட பித்தலாட்டக்காரர்களாவோ இருக்க வேண்டும். ஏனென்றால் மோடி கும்பல் ஆட்சியதிகாரத்துக்கு வந்த கடந்த 3 ஆண்டுகளில் தொழிலாளர் நலச்சட்டங்களை குறிவைத்து ஒழித்து வருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மோடி தலைமையிலான மத்திய அரசு மட்டுமல்ல; பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்கள் அனைத்திலும் தொழிலாளர்கள் நலச்சட்டங்களை மீதான தாக்குதல் தீவிரமடைவதும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி-ல் பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஓட்டு எந்திரங்களில் கோல்மால் செய்துதான் இந்த வெற்றியைப் பெற்றதாக ஊடகங்கள் காரித்துப்பி வருவது ஒருபுறமிருக்கட்டும். பா.ஜ.க வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் பா.ஜ.க –காரனைவிட கார்ப்பரேட் முதலாளிகளே அதிகமான கொண்டாடினார்கள். நாட்டின் 63% மாநிலங்களில் பா.ஜ.க அதிகாரத்தில் இருப்பதால், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதில் எந்த தடையும் இருக்காது என்று குதூகலித்துள்ளனர்.

இந்த குதூகலம் அர்த்தமற்றதல்ல. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களில் என்ன செய்து வருகின்றனர் என்பதைப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். ராஜஸ்தானில் தொழிற்தகராறுகள் சட்டம், தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் காண்ட்ராக்ட் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றை திருத்தி இருக்கின்றனர். இதன் காரணமாக உற்பத்தி சார்ந்த எந்த வேலையிலும் காண்ட்ராக்ட் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. 40 பேருக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட ஆலைகள் இனிமேல் தொழிற்சாலைகளாக கருதப்படாது. 39 நிரந்தரத் தொழிலாளர்களோடு, 1000 காண்ட்ராக்ட் தொழிலாளர்களை வைத்துக் கொண்டாலும் அவையெல்லாம் ஆலைகள் கிடையாது. அவையெல்லாம் சிறுதொழில்களாக கருதப்படும். இந்த ஆலைகளை முதலாளி நினைக்கின்ற விதத்தில் நடத்திக்கொள்ளலாம்.

மத்தியப் பிரதேசத்திலோ ஒரே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, நடைமுறையில் இருக்கின்ற 15 முக்கிய சட்டங்களை காலி செய்திருக்கிறது, பா.ஜ.க அரசு. காண்ட்ராக்ட் முறையை தீவிரப்படுத்துதல், ஆட்குறைப்பு செய்வதை எளிமையாக்குவது, இரவுப் பணிகள் எல்லாவற்றிலும் பெண்களை தடையின்றி ஈடுபடுத்துவது ஆகியவை இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள். இதே போல குஜராத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சட்டங்கள் (குஜராத் சட்டத்திருத்த மசோதா) ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுள்ளன.

44 தொழிலாளர் நலச்சட்டங்களை மூன்று சட்டத்தொகுப்புகளாக ஆக்குவது மத்திய அரசின் நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். தொழிலுறவு சட்டத்தொகுப்பு (Industrial­ Relations­ Code Bill 2016), ஊதிய சட்டத்தொகுப்பு (Wage­ Code Bill­ 2016), சமூகப் பாதுகாப்பு சட்டத்தொகுப்பு (Social­ Security­ Code­ Bill­ 2016) ஆகிய மூன்று மசோதாக்களை கடந்த ஓராண்டுக்கு முன்னர் தயார் செய்து வைத்திருக்கிறது, மோடி அரசு. இவற்றை சட்டமாக்குவதில் தான் தாமதம் என்று கோபித்துக் கொள்கிறார், அருண் ஜேட்லி.

எதற்காக இத்தனை துடிப்பு, மிஸ்டர் அருண் ஜேட்லி? தற்போதுள்ள சட்டங்களால் முதலாளிகள் நிம்மதியாக தொழில் நடத்த முடியவில்லை என்று பதறுகிறார், ஜேட்லி நிம்மதியாக தொழில் நடத்தவது என்று அர்த்தம். குறைந்த கூலியில், அதிக உற்பத்தித் திறனுள்ள தொழிலாளர்கள் இருக்க வேண்டும். அவர்கள் சங்கம் அமைக்கக் கூடாது. சம்பள உயர்வு கேட்கக்கூடாது. வேலைநிரந்தரம் கேட்கக்கூடாது. வேலை நிறுத்தம் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது. இதுதான் மோடி ஜேட்லி திட்டம். இதன் பொருட்டுதான் காண்ட்ராக்ட் முறை தீவிரப்படுத்தப்படுகிறது. காண்ட்ராக்ட் தொழிலாளியாக இருந்தால் அமர்த்து & துரத்து(hire­ &­ fire) என்கிற கொள்கைப்படி இஷ்டம் இருந்தால் கொடுக்கின்ற சம்பளத்துக்கு வேலை செய்; இல்லையென்றால் ஓடிப்போ என்று துரத்திவிட முடியும். அதனால்தான் காண்ட்க்ராட் முறையை அரசே தீவிரப்படுத்துகிறது. முதலாளியைவிட கொடூரமாக சிந்திக்கிறது, அரசு!

காண்ட்ராக்ட் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக்கூடாது என்று 1970-ம் வருடத்தில் போடப்பட்ட காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம் சொல்லுகிறது. ஆனால், தனியார்மயம்- தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் எந்தத் தொழிலிலும் எந்த வேலையிலும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள்தான் பெரும்பகுதியினர். காண்ட்ராக்ட் தொழிலாளி இல்லையென்றால் எந்தத் தொழிற்சாலையும் கிடையாது என்கிற அளவுக்கு காண்ட்ராக்ட்மயமாகியுள்ளது. அவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டாலும், அந்த நிறுவனத்தில் எந்த உரிமையும் கேட்க முடியாது. கம்பெனியில் நுழைவதற்கென்றே தனியாக வாசல் வைத்திருக்கின்ற கம்பெனிகள் ஏராளம். கேண்டீன் முதல் கக்கூஸ் வரை நிரந்தரத் தொழிலாளிக்கும், காண்ட்ராக்ட் தொழிலாளிக்கும் துல்லிய வேறுபாடு காட்டுகின்ற முதலாளிகள், உற்பத்தி இலக்கை எட்டுவதில் மட்டும் காண்ட்ராக்ட் தொழிலாளியை முதன்மைப்படுத்துகின்றனர்.

8 மணிநேர வேலை என்கிற கோரிக்கை மேதினத்தின் கோரிக்கை. ஒருநாளைக்கு ஒரு ஷிப்ட்தான் செய்வோம் என்று போராடுவது காண்ட்ராக்ட் தொழிலாளியின் கோரிக்கை. ஆம், நண்பர்களே. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஷிப்டுகள் செய்வது ஏறக்குறைய கட்டாயமாகிவிட்டது. என்னால் முடியவில்லை என்று மறுத்தால் மறுநாள் வேலை கிடையாது என்று துரத்திவிடுவான், காண்ட்ராக்ட் சூப்பர்வைசர். இது ஒரு ரகம். மற்றொரு ரகத்தில் முதல் ஷிப்ட் முடிந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருக்குபோது இன்னொரு ஷிப்ட்டுக்கு வா என்று கதவைத்தட்டுவான் காண்ட்ராக்ட் சூப்பர்வைசர். தூக்கம் வருதுய்யா… அடுத்த ஷிப்டுக்கு வருகிறேன் என்று சொன்னால் இப்போது வரவில்லை என்றால் எப்போதும் வரவேண்டாம் என்று மிரட்டும்போது, பட்டினி கிடக்கின்ற குடும்பத்தினர் கண்முன்னே நிழலாடுவார்கள். தூக்கக்கலக்கத்தில் மெஷினில் அடிபட்டே செத்தாலும், பரவாயில்லை என்று அரைகுறை ஓய்வையும் பறிகொடுக்கிறான், தொழிலாளி.

இப்படி கூடுதல் நேரம் உழைப்பது என்கிற கொடூரத்தின் உச்சகட்டம் வாரத்தின் ஏழுநாட்களும் உழைப்பதாக வளர்ந்து நிற்கிறது. வாரத்தின் ஏழு நாட்களும் நாளொன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் வேலை என்றால் எப்போது தூங்குவது, எப்போது துணி துவைப்பது, இன்னபிற சமூகக்கடமைகளை எப்படிச் செய்வது என்று கேட்டால், வேலை வேண்டுமென்றால் இப்படி செய்துதான் ஆக வேண்டும் என்று மீண்டும், மீண்டும் மிரட்டும்போது வேறென்ன செய்ய முடியும்?

காரல் மார்கஸ் சொல்லுகிறார்…

“…….அதாவது உழைப்பு, தொழிலாளியின் உயிர்ச்செயலாகும். தனக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களுக்காக அவன் உயிர் பிழைக்க முதலாளிக்கு விற்கிறான்… முதலாளியின் உடமையாக, அவனால் மாற்றித் தந்துவிடப்பட்ட பரிவர்த்தனை சரக்கே அது….. அவன் தனக்காக உற்பத்தி செய்வது அவன் நெய்யும் பட்டுத் துணியையோ, சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கும் தங்கமோ, கட்டியெழுப்பும் மாடமாளிகையோ அல்ல. அவன் தனக்கு உற்பத்தி செய்து கொள்வது கூலி உழைப்பைத்தான்… பன்னிரெண்டு மணிநேரம் நெய்தோ, நூற்றோ, துளைத்தோ, கடைந்தோ, கட்டடம் கட்டியோ, மண்வெட்டியோ, கல் உடைத்தோ, சுமை தூக்கியோ, வேறு ஏதோ வேலை செய்தோ வருகிற உழைப்பாளி தனது பன்னிரெண்டு மணி நேர வேலை என்பதை தனது வாழ்வாகக் கருதுகிறானா? இல்லை…. உணவு மேஜை, மதுவிடுதி ஒய்வு ஆகியவற்றுக்கு அவனை இட்டுச்செல்லும் கூலி என்னும் வகையில் மட்டுமே இந்த உழைப்பு அவனுக்கு அர்த்தம் உடையதாகத் தெரிகின்றது. பட்டுப்புழு ஒரு கம்பளிப்புழுவாகத் தொடர்ந்து நீடிக்கும் பொருட்டு நூற்றுக்கொண்டே இருக்குமானால், அதுவும முழுக்க முழுக்கக் கூலித் தொழிலாளியாக ஆகிவிடும்.”

(கூலியுழைப்பும், மூலதனமும் நூலில்)

கம்பளிப்புழுவைப் போல் இருக்கிறதா, தொழிலாளர் வாழ்வு? ஆம்….

(தொடரும்)

– உமர்

புதிய தொழிலாளி, ஜூன் 2017

Series Navigationகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2 >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாய நெருக்கடி, சி.டி.எஸ் ஆட்குறைப்பு, ஆர்.கே நகர் ஜனநாயகம் – கலந்துரையாடல் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- - ஐ.டி ஊழியர்கள் பிரிவு கலந்துரையாடல் கூட்டம் நாள் : ஏப்ரல் 22, 2017 சனிக்கிழமை நேரம் : 11 am...

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே...

Close