சி.எஸ்.ஆர் (CSR) என்ற கார்ப்பரேட் மோசடி – ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

.டி நிறுவனங்களில் நடக்கக் கூடிய சி.எஸ்.ஆர் (csr) பற்றிய பதிவு இது. சி.எஸ்.ஆர் என்பது கார்ப்பரேட்டுகள் ‘நாங்களும் சமூக நோக்கத்தோடு சேவை செய்கிறோம்’ என்ற முகத்தை காட்டுவதற்காக வைத்திருக்கும் முறை. ரூ 5 கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் லாபத்தில் 2%-ஐ சமூக சேவைக்கு செலவிட வேண்டும் என்ற சட்டம் வருவதற்கு முன்பே சமூக அக்கறைக்கான கார்ப்பரேட் நடவடிக்கை என்ற பெயரில் நிறைய விஷயங்கள் ஐ.டி நிறுவனங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊழியர்களுக்கு டான்ஸ், பாடல், ஃபோட்டோகிராஃபி கற்றுக் கொடுப்பது என்றும், ரத்த தானம் கொடுப்பது, பள்ளிகளுக்கு போய் பாடம் சொல்லிக் கொடுப்பது, ஏரிகளை சுத்தம் செய்வது என்பது போன்ற நடவடிக்கைகளும், இயற்கை பேரிடர் நேரத்தில் இறங்கி உதவி செய்வது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று சி.எஸ்.ஆர் பெயரில் கீழே பல்வேறு குழுக்களை வைத்திருக்கிறார்கள். யார் யாருக்கு எதில் ஆர்வமோ அதில் சேர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள எச்.ஆர் அதிகாரிகள் இதை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் இது போன்ற நடவடிக்கைகளை நடத்துவார்கள். அவர்கள் சமூக சேவை தொடர்பான என்.ஜி.ஓக்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள். என்.ஜி.ஓ நடத்தும் நிகழ்வுகளில் இவர்களும் இணைந்து கொள்வார்கள். அதை ஆவணப்படுத்தி நிறுவனத்தின் மாதப் பத்திரிகையில் புகைப்படத்தோடு வெளியிடுவார்கள்.

ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் எச்.ஆர் சிலரே தனியாக என்.ஜி.ஓ நடத்துகிறார்கள். சில எச்.ஆர் முழு நேர என்.ஜி.ஓ, சமூக செயல்பாட்டாளர்களாக மாறியதும் நடந்திருக்கிறது.

இத்தகைய சமூக அக்கறை செயல்பாடுகள் எச்.ஆர் அதிகாரியின் செயல்பாட்டை அளவிடுவதற்கான அப்ரைசல் காரணிகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வும் பிரச்சனை பற்றிய புரிதல் இல்லாமல், மாதம் 100 மணி நேரம், 1000 மணி நேரம் சமூக நடவடிக்கைகளில் அக்கவுண்டை ஈடுபடுத்த வேண்டும் என்ற எச்.ஆர் இலக்கை நிறைவேற்றுவதற்காகவே நடக்கிறது.
செலவுகளை நிறுவனத்தின் பொதுவான நிதியிலிருந்து ஒதுக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால், அப்படி நடப்பதில்லை.

“This forms part of our corporate social responsibility plan.”

ஊழியர்கள் ஆளுக்கு ஒரு தொகையை போட்டு நிகழ்ச்சியை நடத்துவார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு புகைப்படம் எடுத்து “நிறுவனத்தின்” நிகழ்வு அல்லது நிறுவனத்தின் ABC பிரிவு நடத்தியது என்று செய்தி வரும். நாம் செலவு செய்யும் பில்லையும் அவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

  1.  ஒருமுறை எனது சொந்த முயற்சியில் ஒரு அநாதை இல்லத்திற்கு போய் இரண்டு குழந்தைகளின் 1 ஆண்டு செலவை ஏற்றுக் கொண்டு நன்கொடை அளித்தேன். அங்கு போகும் போது கூட வேலை செய்யும் சக ஊழியர்களை அழைத்துச் சென்றிருந்தேன். புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.
    திரும்பி வந்த பிறகு “இது போல நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், உதவி செய்வோம்” என்று என்னுடைய அலுவலக மின்னஞ்சலில் சக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பினேன். 3 மாதங்களுக்குப் பிறகு எச்.ஆர் என்னிடம் அது தொடர்பான புகைப்படத்தை கேட்டு வாங்கிக் கொண்டார். நான் தனிப்பட்ட முறையில் செய்ததை நிறுவனத்தின் அந்த பிரிவு சார்பாக செய்ததாக காட்டிக் கொண்டார்கள்.
  2. சென்னை வெள்ளத்தின் போது நிவாரணமாக வழங்குவதற்கு நிவாரண பொதி (family kit) தயாரித்தார்கள். ஒரு குடும்பத்துக்கு குறிப்பிட்ட தொகை என்று கணக்கு. ஒவ்வொரு புராஜக்ட் ஊழியர்களும் ஒவ்வொரு 50, 40, 30 குடும்பங்களுக்குத் தர வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தார்கள். அதை மொத்தமாக லாரியில் ஏற்றிக் கொண்டு பாதிக்கப்பட்ட இடத்துக்கு போய் வினியோகித்து விட்டு வந்தார்கள். வாங்கிக் கொடுத்தது ஊழியர்களின் கணக்கில். அங்கு உழைப்பும் சரி, அதற்கான பொருளும் சரி, முதலீடும் சரி, அதைச் செய்வது ஊழியர்களின் கணக்கிலிருந்து, அதை தனது பேனர் கீழே வாங்கி வைத்து, சமூகத்தையும், ஊழியர்களையும் ஏமாற்றியது நிறுவனம்.
  3. கீழ்க்கட்டளை ஏரி சுத்திகரிப்புக்கு சென்ற போது செலவை அந்த பிரிவின் செலவில் சேர்த்து விட்டார்கள் ஊராட்சியுடன் சேர்ந்து அந்த கவுன்சிலர் பேரையும் சேர்த்து பேனர் தயாரித்து வைத்திருந்தார்கள். . இது நடந்த விஷயம் இது. சி.எஸ்.ஆர்-ல் வேலை செய்த ஊழியர்களின் உழைப்பும் சரி, பணமும் சரி தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறது.
  4. சிறுசேரிக்கு பக்கத்தில், காரம்பாக்கம் பக்கத்தில் ஒரு பள்ளிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க போக வேண்டும் என்று சொல்வார்கள். “வாங்க, கம்பெனி பஸ்-ல் கூட்டிக் கொண்டு போகிறோம்” என்று சொல்வாங்களா, கிடையாது. சிறுசேரியில் இருந்து திருவான்மியூர் பள்ளிக்கு போக வேண்டுமானாலும் சரி, பள்ளிக்கரணை பள்ளிக்கு போக வேண்டுமானாலும் சரி சொந்த செலவில்தான் போக்குவரத்து வசதி செய்து கொண்டுதான் போக வேண்டும்.
  5. கொச்சி மாரத்தான், டெல்லி மாரத்தான் , பெங்களூர் மாரத்தான் என்று எல்லா மாரத்தானும் நடத்துவார்கள். ஒவ்வொரு பிரிவும் தமது சொந்த பணத்திலிருந்து இந்த நேரத்தில் வரும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இது போன்று மாரத்தான் நடத்தினோம், இது புகைப்படம், 500 பேர் கலந்து கொண்டார்கள் என்று வீடியோ எடுத்து அதை ஒரு விளம்பர பொருள் ஆக்கிக் கொள்வார்கள்.

சமூக சேவையும் ஊழியர் சுரண்டலும்

  1. ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்லி, “தினமும் 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும், 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும்” என்று சொல்வார்கள். “அதற்கான விபரங்களை தினமும் பதிவு செய்ய வேண்டும்” என்பார்கள். ஆனால், நிறுவனத்தின் லாபத்துக்காக ஊழியர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, ஆண்டு சம்பள உயர்வை குறைப்பது என்று அழுத்தத்தை அதிகரிப்பார்கள்.
  2. பாதுகாப்புக்கு முன்னுரிமை என்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால், பெண் ஊழியர்களுக்கு 9.30-க்கு மேல் வாகனம் ஏற்பாடு கிடையாது. ஏதாவது தேவை காரணமாக 9 மணி வரை வேலை செய்து விட்டு போக வேண்டும் என்றால் உடனே வாகனம் கிடைக்காது. “11.30 வரைக்கும் உட்காருங்கள். கடைசி வாகனத்தில்தான் கொடுப்பேன்” என்று சொல்வார்கள். இதுதான் பாதுகாப்புக்கு முன்னுரிமையா?
  3. எச்.ஆர்-டம் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். குறைகளை சுட்டிக் காட்டி, தேவையை சொல்லி மின்னஞ்சல் போட்டால் அதற்கு பதிலே வராது. அதாவது, அரசியல்வாதியிடம் கொடுத்த மனுவும், எச்.ஆருக்கு அனுப்பிய மின்னஞ்சலும் ஒன்றுதான். எந்தவித நடவடிக்கையும் இருக்காது. அடுத்த மட்டத்துக்கு “மெயிலை புஷ் பண்ணியிருக்கேன். பதில் வந்தா அனுப்புகிறேன்” என்று விட்டு விடுவார்கள்.

எது சமூக அக்கறை

ஐ.டி நிறுவன ஊழியர்கள் ஐ.டி நிறுவனத்தை விட்டு வெளியே யோசிக்க விட்டு விடக் கூடாது என்ற நோக்கமும் இதில் இருக்கிறது. ஊழியர்களை நன்கு கவனித்துக் கொள்வது போன்ற மாயையை உருவாக்கி வெளியில் போய் அவர்கள் அரசியல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும் இது பயன்படுகிறது.

நம்மை தனியாக பிரித்து, இதுதான் செய்யணும், அதுதான் செய்யணும் என்று முடக்கி விடுகிறார்கள். இதை அவர்கள் திட்டமிட்டு செய்கிறார்கள். உலகம் தெரியாமல் இதற்குள்ளாகவே இருந்து விடுகிறோம். வெளியில் போய் நிறைய பேர் கிட்ட பேசினால்தான் சமூகத்தின் உண்மை நிலை தெரியவரும்.

எனவே, அடுத்த முறை சி.எஸ்.ஆர் என்று பார்க்கும் போது தெளிவாக யோசித்துக் கொள்ளுங்கள், சேவை உண்மையான நோக்கத்தில் நடக்கிறதா அல்லது நாம் மார்க்கெட்டிங் மெட்டீரியலாக பயன்படுகிறோமா என்று.

புதிய தொழிலாளி – மே 2018 இதழில் வெளியான கட்டுரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/csr-is-a-corporate-fraud-experience-of-an-it-employee/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
காலனிய அரசு எந்திரத்தின் வாரிசுகளாக காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆட்சி

காலனிய அரசுகளின் உறுப்புகளாக விளங்கிய அனைத்து நிறுவனங்கள், அமைப்புகள், அடக்குமுறைக் கருவிகள் அவற்றின் கட்டுக்கோப்பு கலையாமல் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் நேரடி ஆட்சியிலிருந்து அதன் அடிவருடிகளிடம் மாற்றித் தரப்பட்டது.

கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3

'வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்' என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம்...

Close