“காக்னிசண்ட்(CTS) நிறுவனமே, ஊழியர்களை ஒட்ட சுரண்டுவதற்கான 10 மணி நேர வேலை நேரத்தை திரும்ப பெறு”.
2021, பிப்ரவரி 15 – ம் தேதி முதல் ஊழியர்கள் 10 (9+ 1 மணி நேரம் உணவு இடைவேளை) மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற புதிய Policy -ஐ நடைமுறை படுத்தியுள்ளது காக்னிசன்ட் நிறுவனம்.
எட்டு மணி நேர வேலை சட்டம் அமலில் இருக்கும்போதே ஐ. டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை 10 மணி நேரத்திற்கு மேலாக வேலை செய்ய நிர்பந்தித்து வந்தது, தற்போது அச்சட்டமும் விரைவில் நீக்கப்படவிருப்பதால் ஐ. டி. ஊழியர்கள் மீதான சுரண்டலை மேலும் தீவிரப்படுத்துவதில் முன்னோடியாக செயல்புரிய ஆரம்பித்து விட்டது காக்னிசன்ட்(CTS) நிறுவனம்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கின் போது ஏனைய துறைகள் தங்களது உற்பத்தியை பெரும்பாலும் நிறுத்திக்கொண்டபோது, தகவல் தொழில்நுட்ப/மென்பொருள் துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய வைத்து(Work From Home), வழக்கத்தை விட அதிகமான உற்பத்தி(Productivity) – ஐ பெற்றது. உதாரணமாக அலுவலகத்தில் சென்று வேலை செய்யும்போது காலை 10 மணிக்கு திட்டமிடப்படும் Onsite Status Call – ஐ காலை 8 மணிக்கு மாற்றி, ஊழியர்களை காலை எழுந்ததிலிருந்தே வேலை வாங்கியது. Support Project -களில் வேலை செய்யும் ஊழியர்களை எந்த நேரத்திலும் (on call support ) தொடர்பு கொண்டு அவர்களை வேலை செய்ய வைத்ததன ஐ. டி. நிறுவனங்கள். தொகுப்பாக, அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்போது 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்த ஊழியர்களை, Work From Home -ன் போது குறைந்தது 12 மணி நேரமாவது வேலை செய்ய வைக்கின்றன.
இதில் காக்னிசன்ட்(CTS) நிறுவனமும் அடக்கம் மட்டுமல்ல, இந்நிறுவனம் இன்னும் கூடுதலாக சென்று கடந்த ஜூன் 2020 -ல் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியது.
காக்னிசன்ட்(CTS) நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய Policy-ஐ எதிர்த்தால் இருக்கின்ற வேலையும் பறிபோய்விடுமோ என்று ஊழியர்கள் அஞ்சுகின்றனர், இந்த அச்சமே நிர்வாகத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. அன்பார்ந்த ஊழியர்களே, தற்போது பத்து மணி நேரம் என்பது அடுத்தடுத்த வருடங்களில் 12 மணி நேரம் வேலை என உயர்த்தமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?.
லாபவெறி பிடித்த காக்னிசன்ட்(CTS) மற்றும் ஏனைய ஐ. டி. நிறுவனங்களது ஊழியர்கள் மீதான தாக்குதலை எதிர்கொண்டு முறியடித்தே தீர வேண்டும். வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வாழ வேண்டியதில்லை, இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் நமது வேலை பறிக்கப்படும், அல்லது வேலைச்சுமையால் நமது உயிர் பறிக்கப்படும். ஊழியர்கள் மீதான இந்த தாக்குதலை NDLF ஐ. டி. ஊழியர்கள் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது. இதனை எதிர்த்து போராட ஐ. டி. ஊழியர்களை அழைக்கிறது.
அமைப்பாளர்.