சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

பிரபல ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான சி.டி.எஸ்-ன் சில இந்திய அலுவலகங்கள் இந்தியாவில் லஞ்சம் கொடுத்திருக்கின்றன என்று கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30, 2016) அன்று தகவல் வெளியானது. சி.டி.எஸ்.-க்கு இந்தியாவில் 12 சொந்த அலுவலகங்கள் உட்பட 45 அலுவலகங்கள்  உள்ளன.

cognizantகார்ப்பரேட்டுகள் அரசு அதிகாரிகளுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ லஞ்சம் கொடுப்பதெல்லாம் ஒரு செய்தியா? இதற்கு பின்னால் என்ன இருக்கிறது?

இந்த விஷயம் சி.டி.எஸ் அமெரிக்க அரசுக்கு கொடுத்த ஒழுங்குமுறை ஆவணம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. வெளிநாடுகளில லஞ்சம் கொடுப்பது குறித்த அமெரிக்க சட்டத்தின்படி, அச்சட்டத்தை மீறுபவர்கள் தாமாக முன்வந்து ஒத்துக் கொண்டால், விதிக்கப்படும் அபராதம் குறையும். இதிலிருந்து, சி.டி.எஸ்-ன் லஞ்ச லாவணியங்கள் தொடர்பான தகவல்களை யாரோ தோண்டி வெளியில் எடுத்து விட, தாமாக ஏற்றுக் கொள்வது அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வதை விட சிறந்தது என்று சி.டி.எஸ் தலைமை முடிவு செய்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனால், ஊழல் நடந்த இந்தியாவின் அரசுகளுக்கோ, பொதுமக்களுக்கோ தகவல் சொல்ல வேண்டும் என்று சி.டி.எஸ்-க்கு எந்த கட்டாயமும் இல்லை. இந்தியாவில் கார்ப்பரேட்டுகளை கட்டுப்படுத்தும் சட்டத்தின் ஆட்சியின் லட்சணம் இவ்வளவுதான்.

என்ன மாதிரியான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன?

1. மென்பொருள் அலுவலகங்கள் கட்டுவதற்காக நிலம் வாங்கும் விவகாரங்கள் பலவற்றில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு சி.டி.எஸ் லஞ்சம் கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் ஒரு விஷயமா? தாசில்தார் அலுவலகத்துக்கு பட்டா பதிய போகும் யாருக்கும் அங்கு வேலை நடப்பது எப்படி என்று தெரியும். ஏதோ ஒரு புத்திசாலி சி.டி.எஸ் நிலம் வாங்குவதற்கு லஞ்சம் கொடுத்திருக்கிறது என்று ‘கண்டுபிடித்திருக்கிறார்’. அவ்வளவுதான்! வெளியில் தெரிவதற்கு மேல் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது என்பது தெளிவு.

2. சி.டி.எஸ்-ன் எச்.ஆர் பிரிவுக்கும் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல பொறியியல் கல்லூரிகளுக்கும் இடையே கள்ளக் கூட்டு இருந்திருக்கிறது. எனவே, அந்நிறுவனத்தின் ஆள் எடுப்பு நடைமுறையையும் விசாரிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே ஒரு மூத்த எச்.ஆர் அதிகாரி பதவி விலகியிருக்கிறார்.

CTS CEO Frank D’Souza

சி.டி.எஸ் தலைமை நிர்வாக அலுவலர் ஃபிராங்க் டி சௌசா

‘தனியார் நிறுவனங்கள் எல்லாம் நேர்மையாக, ஊழல் இல்லாமல் நடக்கின்றன’ என்று அப்பாவியாக நம்புபவர்களுக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம். ஆனால், ஐ.டி துறையோடு தொடர்புடைய யாருக்கும், எச்.ஆர் மேலாளார்கள் கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி தமது பைகளை நிரப்புவதில் கெட்டிக்காரர்கள் என்பது தெரியும். நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டோ (உதாரணமாக, ஊழியர்களை கசக்கி பிழிந்து செலவை குறைப்பது மூலம் தனது ஊதியத்தை உயர்த்திக் கொள்வது), நிறுவன விதிகளுக்கு விரோதமாகவோ (உதாரணமாக தானே ஆள் எடுப்பவராகவும், ஆள் தேடிக் கொடுக்கும் முகவராகவும் செயல்பட்டு நிறுவன பணத்தை ஒதுக்கிக் கொள்வது) பணம் பார்ப்பதில் அவர்கள் கில்லாடிகள்.

தனியார் கல்வி நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்கள் உற்பத்தி செய்யும் பட்டதாரிகளுக்கு, “பிளேஸ்மென்ட்” (வேலை) கொடுப்பதும் பரவலாகி விட்ட ஒரு எச்.ஆர் நடைமுறை. தனியார் கல்லூரிகளுக்கு “கேம்பஸ் பிளேஸ்மன்ட்” சாதனை, ஐ.டி நிறுவனத்துக்கு ‘திறமை’யான ஊழியர் சேர்க்கை என்ற கணக்கு, பொறியியல் பட்டதாரிக்கு போட்ட பணத்துக்கு (படிப்பு) பலன் (வேலை). கட்டற்ற இந்த கார்ப்பரேட் “ஜனநாயகத்தில்” பணத்தைக் கொட்ட முடியும் எல்லோருக்கும் ஆதாயம்தான்!

சி.டி.எஸ்-லிருந்து வேறு என்ன செய்திகள் கசிகின்றன?

1. நிறுவனத்தின் தலைமை மேலாளர் கார்டன் கோபன் பதவி விலகியிருக்கிறார். அவரது இடத்தில் ஐ.டி சேவைகள் துறையின் தலைமை செயல்பாட்டு அலுவலர் ராஜ் மேத்தா அமர்த்தப்பட்டிருக்கிறார். இந்தக் களேபரத்துக்கு மத்தியில் தலைமைப் பொறுப்பை ஏற்பது ராஜ் மேத்தாவுக்கு பெரிய சுமை என்று நினைத்து விடாதீர்கள். அவரது சம்பளம் $6.3 லட்சம் (சுமார் ரூ 4.22 கோடி) + 85% ஊக்கத் தொகை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் அவருக்காக யாரும் வருத்தப்படத் தேவையில்லை.

2. ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த காலாண்டில் காக்னிசன்டின் லாபம் முந்தைய ஆண்டில் இருந்ததை ($42.01 கோடி – ரூ 2,814 கோடி) விட 40% குறைந்து $25.24 கோடி (சுமார் ரூ 1,691 கோடி)-ஆக வீழ்ச்சியடைந்தது.

3. இந்த ஆண்டில் பல புராஜக்ட்டுகள் ரத்து செய்யப்பட்டு, நிதித்துறையிலும் மருத்துவத் துறையிலும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்துள்ளன. அதனால். இந்த ஆண்டு வருமான முன்னறிவிப்பை சென்ற ஆண்டின் $1365-$1400 கோடியிலிருந்து $1347-1360 கோடியாக குறைத்திருக்கிறது சி.டி.எஸ்.

Cognizant in Coimbatore

கோவையில் காக்னிசன்ட் அலுவலகம்

ஊழல் தொடர்பான தகவல்கள் வெளியானது என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?

1. லஞ்சம் கொடுத்தது பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து நாஸ்டாக் பங்குச் சந்தையின் சந்தைக்கு வெளியேயான வர்த்தகத்தில் சி.டி.எஸ்-ன் பங்கு விலை 15% சரிவடைந்தது.

2. அக்டோபர் 4-ம் தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், கோயம்புத்தூர், கீராநத்தத்தில் உள்ள மென்பொருள் மையத்தில் கட்டிடம் கட்டுவதில் சி.டி.எஸ் முறைகேடு செய்துள்ளதாக செய்து வெளியாகியுள்ளது. முறையான ஒப்புதல்கள் இல்லாமல் கூடுதலாக இரண்டு தளங்களை சி.டி.எஸ் கட்டியிருக்கிறது. 2014 ஜூன் மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து 61 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சி.டி.எஸ் கட்டிடம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதியிட்ட ஒரு கடிதத்தில் சுற்றுச் சூழல் அனுமதியையும், தீயணைப்புத் துறையிடமிருந்து புதுப்பிக்கப்பட்ட அனுமதியையும் சமர்ப்பிக்குமாறு நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை சி.டி.எஸ்-க்கு உத்தரவிட்டுள்ளது.

சி.டி.எஸ்-ன் பல்வேறு சட்டமீறல்கள் பற்றிய இது போன்ற செய்திகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஆனால், சி.டி.எஸ்-ன் கட்டிட விதிமீறல்கள் பற்றிய செய்தியை ஆகஸ்ட் மாதமே ஏன் வெளியிடவில்லை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் பிற ஊடகங்களும் விளக்க வேண்டும். இது போன்று கார்ப்பரேட் முறைகேடுகள் தொடர்பாக அனுப்பப்பட்ட எத்தனை கடிதங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன?

3. “சமீபத்திய அறிவிப்பு தொடர்பாக முதலீட்டாளர்களுக்கோ ஊடகங்களுக்கோ ஊழியர்கள் எந்த விதமான தகவல்களையும் கொடுக்கக்கூடாது” என்று சி.டி.எஸ் மின்னஞ்சல் மூலமாக தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஆனால், ஊழியர்கள் மட்டுமே உண்மையை வெளியில் கொண்டு வர முடியும் என்பதே நிதர்சனம். நமக்கு தொடர்பில்லாத போது யார் வேண்டுமானாலும் ஊழலை பொதுவாக எதிர்க்கலாம். குறிப்பாக நமக்கு தெரிந்து நடக்கும் ஊழலை எதிர்ப்பதுதான் உண்மையான சமூக பொறுப்பு. சி.டி.எஸ் ஊழியர்கள் அனைவரும் நிறுவனத்தினுள் நடக்கும் தவறுகள் குறித்து சிறிய தகவல்களைக் கூட வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டும். அத்தகைய சிறு சிறு தகவல்களை தொகுக்கும் போது மட்டுமே நடக்கும் ஊழலின் முழு விபரங்களும் தெளிவாகும்.

இனிமேல் என்ன நடக்கும்?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான் பாதிக்கப்படுவார்கள்.

நிறுவனத்தின் நிர்வாகமோ, இந்திய அதிகாரிகளோ, தணிக்கை அதிகாரிகள் கூட பணமூட்டைகளின் நலன்களை பாதுகாப்பதற்காக முடிந்தவரை தகவல்களை மறைக்க பார்ப்பார்கள். இறுதியில் இந்த ஊழல் நடத்தைகளின் பாதிப்பு ஊழியர்களின் தலையின் மீது லே-ஆஃப், ஆட்குறைப்பு, கூடுதல் வேலைச்சுமை என்று சுமத்தப்படும்.

சத்யம் ராஜூ

சத்யம் ராஜூ

அதே நேரம், சத்யம் ஊழலையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 2008-ல் சத்யம் நிறுவனத்தின் பிரச்சனைகள் வெளியான பிறகு, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைகளை இழந்தனர். புதிய இயக்குநர் குழு நியமிக்கப்பட்டு, நிறுவனம் டெக் மகிந்த்ராவுடன் இணைக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சி அமெரிக்க நிதித்துறை நெருக்கடியைத் தொடர்ந்து நிகழ்ந்தது. ஐ.டி துறையில் வாய்ப்புகள் குறையும் கால கட்டத்தில் சந்தையில் ஓரிரு போட்டி நிறுவனங்கள் இல்லாமல் போவது மற்ற நிறுவனங்களுக்கு ஆதாயம்தான்.

அதே போல, இப்போதும் மேற்கத்திய ஐ.டி புராஜக்ட்கள் குறைந்து கொண்டிருக்கின்றன. இந்திய ஐ.டி நிறுவனங்களின் லாப வீதங்கள் அழுத்தத்துக்குள் உள்ளன. ஊழியர்களை நீக்குவதன் மூலமும், இருக்கும் ஊழியர்கள் மீது கூடுதல் வேலை, கூடுதல் வேலை நேரம், கூடுதல் அழுத்தம் என்று சுமையை ஏற்றுவதன் மூலமும் பிரச்சனையை அவர்கள் மீது கடத்திக் கொண்டிருக்கின்றன ஐ.டி நிறுவனங்கள். ஒருவேளை சி.டி.எஸ் தனது சட்ட மீறல்களின் சுமையால் முழுகி விட நேர்ந்தால், அதை மற்ற ஐ.டி நிறுவனங்கள் விரும்பவே செய்யும். சி.டி.எஸ்-ன் சந்தையை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு கசக்கவா போகிறது. மனிதன் மனிதனை சாப்பிடும் காட்டுமிராண்டி உலகம்தான் இந்த கார்ப்பரேட் உலகம்.

என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

செய்தி ஆதாரங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-in-trouble-what-trouble-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
திருடுவதே வெற்றியின் இரகசியம்!

மொத்தத்தில் நம் நாட்டை ராட்சச மலைப்பாம்பு போல் சுற்றி வளைத்து நெருக்கிக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து...

Close