கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த போதும், பொருளாதாரத்தின் அனைத்து பிரிவுகளும் லாக்டவுன் என்ற பெயரில் முடக்கப்பட்டு செயலிழந்து நின்ற போதும், இந்தியாவின் மென்பொருள் உற்பத்தித் துறை (ஐ.டி மற்றும் ஐ.டி.இ.எஸ்) மட்டும் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இன்றி எப்போதும் போல இயங்கிக் கொண்டிருந்தது. இரவு பகல் பாராது அயராது உழைத்த ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களது அர்பணிப்பே இதனைச் சாத்தியமாக்கியது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்று நிலைமைகள் சற்று சீரடைந்தவுடன், பல மென்பொருள் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டுதுறை அதிகாரிகள், ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பும் தங்களது வழக்கமான பணியைத் துவங்கிவிட்டனர்.
காக்னிசான்ட் (சி.டி.எஸ்.) நிறுவனம் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு முனைப்புடன் செயல்படுவதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் சி.டி.எஸ் நிர்வாகத்தின் மனிதவள அதிகாரிகள், வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிடும்படி தங்களை மின்னஞ்சல் மூலமாகவும், அலைபேசி வாயிலாகவும், தொடர்ந்து பிரட்டி வருவதாகப் புகாரளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உருவாக்கியுள்ள சூழ்நிலையைக் காரணமாகக் காட்டி பல ஊழியர்கள் தாங்கள் வேலை செய்துவந்த புரோஜக்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, வேலை எதுவும் கொடுக்கப்படாமல், காத்திருப்புப் பட்டியலில் (பென்ச்சில்) வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்குத் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள 35 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அவர்களுக்கு புதிய புரோஜக்ட்களுக்கு மாறிச் செல்லும் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. அதேசமயம் 35 நாட்களுக்குப் பிறகு புதிய புரோஜக்ட்களுக்கு மாறிக்கொள்ள ஊழியர்களுக்கு 6 நாள் நீட்டிப்புக் கொடுக்கப்படுகிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படாத சூழலில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதும், புதிய புரோஜக்ட்களுக்கு மாறிச் செல்வதும் எந்தவொரு ஊழியருக்கும் இயலாத காரியம்.
41 நாள் கெடு முடிந்த பிறகு, ஊழியர்கள் தாமாக தமது பணியை ராஜினாம செய்துவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்று நிர்வாகத்தினர் நிர்பந்திக்கின்றனர். ராஜினாமா செய்ய மறுக்கும் ஊழியர்களை தாங்களாகவே வேலை நீக்கம் செய்துவிடுவோம் என்று தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இவர்கள் இதே முறையில் ஏற்கெனவே பல ஊழியர்களைக் கடந்த மாத இறுதியில் வேலை நீக்கம் செய்துள்ளனர்.
சி.டி.எஸ். நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத, நெறியற்ற வேலைநீக்கத்தை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு வன்மையாகக் கண்டிக்கிறது. ராஜினாமா செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதையும், சட்டவிரோதமாக வேலைநீக்கம் செய்வதையும் சி.டி.எஸ். நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதுவரை இதுபோல் வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான அளவு நேரமும், வசதிகளும் ஏற்படுத்தித்தர வேண்டும்.
தங்கள் மீது திணிக்கப்படும் கட்டாய ராஜினாமவை எதிர்த்து அனைத்து ஐ.டி. ஊழியர்களும் போராட முன்வர வேண்டும் எனக் கோருகிறோம். ஐ.டி. நிறுவனங்கள் பயன்படுத்தும் திறனாய்வு முறை (அப்ரைசல்) மற்றும் கட்டாய பணிநீக்கம் இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு முரணானது. ஐ.டி. நிறுவனங்கள் போதுமான காரணங்கள் இன்றி ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடியாது. அதனால்தான் அவர்கள் ராஜினாமா செய்யும்படி ஊழியர்களை நிர்பந்திக்கிறார்கள்.
பாதிக்கப்படும் ஊழியர்கள் நிர்வாகத்தின் நிர்பந்தத்திற்கு பணிவதற்கு முன்பு எங்களது சங்கத்தையும், சங்க வழக்கறிஞர்களையும் தொடர்பு கொண்டு பேசும்படி கேட்டுக் கொள்கிறோம். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவில் இணைந்து ஒற்றுமையுடனும் பலத்துடனும் போராடுவோம் வாருங்கள்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
Contacts:
Mobile :+91-9003009641
Email: NDLFITUNION@GMAIL.COM