தனது ஊழியர்களில் 10% பேரை கட்டாயமாக 4-வது பக்கெட்டில் சேர்க்க வைத்து, அவர்களை பணிநீக்கம் செய்யும் சி.டி.எஸ்-ன் சதித் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிலரைப் பற்றிய விபரங்கள் வரப் பெற்றுள்ளன.
பொதுவாக ஒரு புராஜக்ட்-ல் இருந்து விடுவிக்கப்படுபவர்கள் முதலில் potential deployable pool-ல் வைத்திருந்து பின்னர், common deployable pool-ல் நாடெங்கும் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்தில் வாய்ப்பை தேடிக் கொள்வது என்ற நடைமுறையில் மாறுதல் செய்து, புராஜக்ட்-ல் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை pdp-ல் சேர்த்து விட்டு அதன் பிறகு 2 வாரங்களில் associate deployable pool என்று வகைப்படுத்துகின்றனர். adp-ல் சேர்க்கப்பட்ட பிறகு 2 வாரங்களில் அவர்கள் வேலையை விட்டு விலகி விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கின்றனர்.
அதாவது, புராஜக்ட்-ல் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் 4 வாரங்களுக்குள் வெளியேற்றப்பட்டு விடுவார்.
சி.டி.எஸ் ஊழியர் ஒருவர் (ராம் என்று வைத்துக் கொள்வோம்) 12 ஆண்டுகளாக நிறுவனத்திற்கு உழைத்து வருபவர். அவரை 4-வது பக்கெட்டில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் பணி உயர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்குள் அவரை “under performer” என்று முத்திரை குத்தி இலக்கு குறித்திருக்கிறார்கள். தனது பணி வாழ்க்கையில் இதுவரை இது போன்ற ஒரு சாயல் கூட ஏற்பட்டதில்லை என்று ஆத்திரத்துடனும் இயலாமையுடனும் பேசுகிறார் ராம். இது தொடர்பான அனைத்து விபரங்களையும் திரட்டி மேனேஜரிடமும் எச்.ஆரிடமும் முறையிட்டு வருகிறார். குடும்பம், குழந்தை என்ற பொறுப்பை சுமந்திருக்கும் ராம்-ன் வாழ்க்கையை நெருக்கடியில் தள்ளி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது சி.டி.எஸ்.
இன்னொரு சி.டி.எஸ் ஊழியர் (ஊர்மிளா என்று வைத்துக் கொள்வோம்) ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் தற்போதைய புராஜக்ட்-ல் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர்தான் கடைசியாக இணைந்தவர் என்பதால் 4-வது பக்கெட்டில் போடுகிறோம் என்று நியாயம் பேசிய மேலாளர்கள், இன்று அவரை அழைத்து வலுக்கட்டாயமாக பணி விலகல் கடிதம் வாங்கி விட்டு அனுப்பியிருக்கின்றனர். அவர் மனம் உடைந்து அழுது கொண்டே நமது சங்கத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.
சி.டி.எஸ்-ன் இந்த செயல்கள் – பொய்யாக “underperformer” என்று முத்திரை குத்துவது, மிரட்டி ஏமாற்றி பதவி விலகல் கடிதம் வாங்குவது இவை இரண்டுமே சட்ட விரோத நடவடிக்கைகள். அதுவும் மிரட்டி கடிதம் வாங்குவது தொழிற்தகராறு என்ற எல்லையைத் தாண்டி கிரிமினல் புகாருக்கு உட்பட்டவை.
இது குறித்து சங்கத்தின் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1 ping