புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அமைப்பாளர் தோழர் கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சக்தி சுரேஷ், பணி நீக்கப்பட்ட ஐ.டி ஊழியர் ஆகியோர் பங்குபெற்ற நியூஸ் கிளிட்ஸ் நிறுவனம் தயாரித்த செய்தி தொகுப்பு
செய்தியின் சுருக்கம் கீழே :
1. ஐ.டி துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணங்கள் என்ன?
ஆட்ட மேஷன், செயற்கை அறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களா? இது ஒருவகையில் இருந்தாலும், உலகம் முழுவதும் பொருளாதார பாதுகாப்புக் கொள்கை பரவி வருகிறது. டிரம்ப் அதிகாரத்துக்கு வந்த பிறகு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்ற முழக்கம் எழுந்துள்ளது.
அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை அமர்த்தி லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பங்குகளை வாங்கிய நிதிமூலதன நிறுவனம் லாபத்தை அதிகரிக்கும்படி கொடுக்கும் அழுத்தம் இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது
2. வேலை நீக்கம் எப்படி நடைபெறுகிறது?
ரேட்டிங் குறைத்து கொடுத்து, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்குவது, மறுத்தால் தாமாகவே சிஸ்டத்தில் ராஜினாமா வேண்டுகோளை மோசடியாகவும் சட்ட விரோதமாகவும் உருவாக்குவது போன்ற விஷயங்கள் நடக்கின்றன.
3. இது திட்டமிட்ட ஆட்குறைப்பாக இருந்தும் ஏன் அப்படி சொல்வதில்லை?
ஆட்குறைப்பு, பணி நீக்கம் போன்றவற்றுக்கு சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதையும் நீதிமன்றங்களில் முறையீடு செய்ய முடியும். எனவேதான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
4. எந்தெந்த நிறுவனங்களில் அதிகமாக இது நடைபெறுகிறது?
சி.டி.எஸ் – 10,000 முதல் 15,000 வரை
விப்ரோ – 6,000 பேர்
டெக் மகிந்த்ரா – 9,000 பேர்
மொத்தம் 56,000 பேர் என்று பத்திரிகை செய்தி
5. அப்ரைசல் ரேட்டிங் என்பதே ஒரு மோசடிதான்
வாடிக்கையாளர் பாராட்டு, சிறந்த ஊழியர் விருதுகள், வெளிநாட்டில் வேலை செய்வது என்று பணியாற்றியவரை எந்த தொடர்பும் இல்லாமல் குறைந்த ரேட்டிங் கொடுக்கின்றனர். எந்த வகையில் 4-வது ரேட்டிங் கொடுக்கிறார்கள் என்பது பற்றிய வெளிப்படையான நடைமுறை இல்லை. இது அறிவியல் பூர்வமானது இல்லை.
6. ஆட்குறைப்பால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அனுபவம் அதிகமான, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவருக்கு ரூ 1.5 லட்சம் சம்பளத்துக்கு பதிலாக ஆளுக்கு ரூ 15,000 சம்பளத்தில் 2 பேரை வேலைக்கு அமர்த்தலாம் என்று கணக்கிடுகிறார்கள்.
வேறு நிறுவனங்களில் வேலை கிடைப்பதும் இன்றைய சூழலில் சாத்தியம் குறைவாக உள்ளது.
7. நாஸ்காம் கருப்புப் பட்டியல் பற்றிய பயம்.
நாஸ்காம் National Skill Registry என்ற பட்டியலை பராமரிக்கிறார்கள். இதில் ஐ.டி ஊழியர் தொடர்பாக எதிர்மறையான குறிப்பு சேர்க்கப்பட்டால் நமக்கு எதிர்காலத்தில் வேலை கிடைக்காது என்று ஐ.டி ஊழியர்கள் பயப்படுகிறார்கள்.
8. ஐ.டி ஊழியர்களுக்கு எந்த உரிமையும் இல்லையா?
உரிமை இல்லை, சங்கம் வைத்துக் கொள்ள முடியாது என்று பொய் கருத்தை நிறுவனங்களே பரப்பி பயமுறுத்தி வைத்திருக்கின்றனர். அனைத்து உரிமைகளும் இருக்கின்றன என்று நிறுவியிருக்கிறோம்.
இந்திய தொழில் தகராறு சட்டத்தின் கீழ் ஐ.டி துறையும் வரும் என்று பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு தொடர்ந்த வழக்குக்கு பதில் அளித்த தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தொழிற்சங்கம் அமைக்கவும் உரிமை இருக்கிறது என்று தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.
தொழில் தகராறு சட்டத்தின் கீழ் பிரிவு 2A-ன் கீழ் தொழிலாளர் நலத்துறையை அணுகி அதன் மூலமாக தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகலாம். 2K பிரிவில் தொழிற்சங்கமாக தொழிலாளர் துறையை அணுகலாம்.
10. நம்முடைய கோரிக்கைகள் என்னென்ன?
பெருந்திரள் ஆட்குறைப்பை அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறுவனங்கள், அரசு, யூனியன்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
11. ஐ.டி துறையின் வளர்ச்சி எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?
இப்போது ஒரு உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கு உருவாகி உள்ளது. அதன் பலனை அறுவடை செய்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் போன்ற அரசியல்வாதிகள் அதற்கு எதிர்நிலை எடுக்கின்றனர்.
நம் நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்களுக்கு ஐ.டி துறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு அரசிடம் பொருத்தமான கொள்கை இருக்க வேண்டும். இந்த மோடி அரசுக்கு அப்படிப்பட்ட கண்ணோட்டம் இல்லை என்று கருதுகிறோம். வெளிநாட்டுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இந்த அரசு இயங்குகிறது.
12. நிறுவனம் தேவைப்படும் போது ஆள் எடுத்துக் கொண்டு தேவை முடிந்ததும் வேலையை விட்டு துரத்தி விட முடியுமா?
ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனம் சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். தொழில் நடத்துவதற்கு, நிலம், மின்சாரம், குடிநீர், உள்கட்டமைப்பு அனைத்தையும் அரசிடமிருந்து பெறும் நிறுவனங்கள் சட்டங்களை பின்பற்ற வேண்டும். அதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
நன்றி : நியூஸ் கிளிட்ஸ்