கஜா புயல் : வீடுகளை கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை!

ஜா புயல் சம்பந்தமாக நாங்க இரண்டு மூன்று நண்பர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றிருந்தோம். நான் அதுவரை சென்னையில் இருந்தேன். ஒரு வாரம் கழித்துதான் எப்படி உள்ளது என்று பார்க்கப் போனேன். ஒரு 500 பேருக்கு சாப்பாடு செய்து கொடுக்க வேண்டும் எனவே யாருக்கு தேவை உள்ளது என்று பார்ப்பதற்காகவே சென்றிருந்தோம். அதுமட்டுமில்லாமல் வழியிலேயே சாப்பாடு, பொருட்களெல்லாம் கிடைக்காதவர்கள் வேறுவழியில்லாமல் பறித்துக் கொள்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அப்போ எப்படி சரியான நபர்களுக்கு எடுத்துச் செல்வது என்பதும் தான் காரணம்.

எல்லா போஸ்ட் கம்பங்களும் ஏதோ ஆள்வைத்து சிதைச்சதுபோல சாய்ந்து உடைந்து கிடந்தன.

நாங்கள் சென்றிருந்தது வேளாங்கண்ணி தாண்டி வேட்டைக்காரன் நெருப்பு, வில்லங்கம் ஆவடி போன்ற ஊர்கள். கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர்கள் உள்ளன. நாங்க பார்த்தவரை இந்த ஊர்களில் எல்லாமே சேதாரம் ஆகியுள்ளது. வீடுகள் எல்லாமே சரிந்து கிடைக்கின்றன, வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகியுள்ளது. கட்டில்,பீரோ, மிக்சி, கிரைண்டர், டிவி என்று எந்தப் பொருளும் இல்லை. தற்போது வீடுகளே கட்டிக் கொடுத்தாலும் கூட வாழ்வதற்கு எந்த பொருட்களும் இல்லை. தற்போது சென்றால் கூட அந்த காட்சிகளை காண முடியும் அது சம்பந்தமாக சில புகைப்படங்களை அனுப்புகிறேன்.

அந்த ஊரில் உள்ள ஒரே ஒரு கான்கிரீட் கட்டிடம் என்றால் அங்குள்ள அங்கன்வாடி கட்டிடம் மட்டும் தான். தற்போது அங்குதான் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு அரசாங்கம் ஒரு வேளை உணவு வழங்குவதாகவும் மீதமுள்ள இரண்டு வேளைகள் வெளியில் இருந்து வருபவர்கள் யாராவது தந்தால்தான் உண்டு என்றும் கூறுகிறார்கள். இந்த ஊர் மெயின்ரோட்டில் இருப்பதால் பலரும் உள்ளே உள்ள கிராமங்களில் தான் அதிக பாதிப்பு என்று நேராக அங்கு சென்று விடுகிறார்கள். எங்களுக்கு தருவதில்லை என்று கூறுகிறார்கள். எங்களுக்கு போதுமானதாக இல்லை.

மின்வாரிய தொழிலாளிகள் தான் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள்

23 வயது மதிக்கத்தக்க பூபதி என்ற இளைஞன் வந்தார். அங்கிருந்தவர்களைப் பார்த்து சாலையில் செல்லும் வாகனங்களை மறியுங்கள் அப்போதுதான் ஏதாவது கிடைக்கும், பக்கத்து ஊரிலெல்லாம் அவ்வாறுதான் செய்கிறார்கள் என்றார். நான் உடனே ஏம்பா அவங்களும் பாவம் கஷ்டப்பட்டுத்தான் கொண்டுவர்றாங்க என்றேன். வேற என்னாங்க பன்றது என்கிறார்.

இதுபோல சாலைகளை மறைத்தவர்கள் திருப்பூண்டி என்கின்ற பைபாசில் சாலைகளில் அடிபட்டு இரண்டு மூன்று நபர்கள் இறந்துள்ளதாகவும் கூறினார். நீங்கள் போனாலே பார்க்கலாம் சாலைகளின் ஓரம் கூட்டம் கூட்டமாக மக்கள் நின்றிருப்பார்கள். அங்கங்கே பிஸ்கட்லாம் தர்றாங்க என்றால் குறுக்க மறுக்க சிறுவர்கள் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். வாகனங்களில் வருபவர்களும் வண்டியை மறிப்பார்கள், நாம போகவேண்டிய ஊருக்கு போகமுடியாம போயிரும் என்று கொஞ்சம் வேகமாகவே ஓட்டிக்கிட்டும் வர்றாங்க. ஒரு போர்டு வச்சா கூட நல்லதுதான். வாகனம் ஓட்டிட்டு வர்றவங்க கொஞ்சம் பார்த்து வருவாங்க. விபத்துக்களைக் குறைக்கலாம்.

அவர்கள் கூறியது மிகுந்த வேதனை அளித்தது.

இவர்களுக்கு தற்போதைய தேவை குழந்தைகள் இருப்பதால் உடல் நலம் சரியில்லாமல் போகிறது. கடுமையான குளிர் கடற்கரை அருகில் இருப்பதால் போர்வை கூட இல்லை மற்றும் ஒரே கட்டடத்தில் அனைவரும் தங்க முடியாது என்பதால் வீடுகளை தயார் செய்யும் பணியில் இறங்கி விட்டார்கள். வீடுகளுக்கு தார்ப்பாய் போன்றவை உடனடியாக தேவைப்படும் பொருட்களாக பார்க்கிறேன்.

அதன்பிறகு வேட்டைக்காரண் நெருப்பு என்ற ஊருக்குள்ளாக சென்று பார்த்தேன். மக்கள் ஆங்காங்கே வீடுகளைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்கியிருந்தார்கள். நாங்க பார்த்தவரைக்கும் கவர்மென்ட் கொஞ்சம் பரவாயில்லை சாலைகளிலிருக்கும் மரங்களை ஒதுக்கியிருந்தார்கள், மின்வாரிய தொழிலாளிகள் தான் ஓய்வே இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தார்கள். எல்லா போஸ்ட் கம்பங்களும் ஏதோ ஆள்வைத்து சிதைச்சதுபோல சாய்ந்து உடைந்து கிடந்தன. மின்வாரிய தொழிலாளிகள்தான் ரொம்ப உழைச்சிட்டு இருந்தாங்க. இவங்களை கண்டிப்பா பாராட்டியாகனும்.

பிறகு நிறைய நிவாரண வண்டிகள் வந்துகொண்டே உள்ளன. இவ்வளவும் நான் சொல்வதெல்லாம் காரைக்கால் தாண்டி வேளாங்கண்ணி ரூட்டில் ஒரு இருபது கிலோமீட்டர்தான் செல்ல முடிந்தது. அதைத்தாண்டி வேதாரண்யம் நாகப்பட்டினம் போன்ற பகுதிகள்தான் ரொம்ப ரொம்ப பாதிக்கப்பட்ட பகுதி. நான் பேசியதெல்லாம் குறைவுதான். அப்ப பாத்துக்கோங்க நிலமை எப்படியிருக்கும் என்று.

– கமால்

Series Navigation<< கஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்? – பு.ஜ.தொ.முகஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/cyclone-gaja-damage-to-livelihoods/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்

முதலீட்டாளர்கள் கடன் தள்ளுபடிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கும். வேளாண் கடன் தள்ளுபடி...

கலிலியோவின் வாழ்க்கை – பிரெக்ட்

பூமிக்கும் நிலவுக்கும் வெளிச்சம் சூரியனிலிருந்துதான் கிடைக்கிறது. 1600 களில் இதைச் சொன்னால் கொலை அல்லது சிறை!

Close