பா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்

லித்துகளின் கோபம் வட இந்தியாவை, குறிப்பாக பா.ஜ.க ஆளும் குஜராத், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை நேற்று (ஏப்ரல் 3, 2018) சுட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் வழங்கிய புதிய வழிகாட்டல்களை எதிர்த்து தலித் அமைப்புகள் ஏப்ரல் 2-ம் தேதி (தீர்ப்பு வழங்கப்பட்ட 12 நாட்களுக்குப் பிறகு) நாடு தழுவிய பாரத் பந்த் அறிவித்திருந்தன

தலித் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச்) சட்டம் தன்மீது தவறாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மகராஷ்டிராவைச் சேர்ந்த சுபாஷ் மகாஜன் என்ற ஆதிக்க சாதி அரசு அதிகாரி தொடுத்த வழக்கில் மார்ச் 20-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் ஆதர்ஷ் கோயல், யு.யு.தலித் நீதிபதிகள் கொண்ட அமர்வு அச்சட்டம் நீர்த்துப் போகும் வகையில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

  1. அதாவது, அதுவரை நடைமுறையில் இருந்தது போல, தலித் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகார்களில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியதில்லை. காவல்துறை கண்காணிப்பாளர் மட்டத்தில் விசாரணை நடத்தி அதன் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர் அரசு ஊழியராக இருந்தால் அவரது மேலதிகாரியின் அனுமதி பெற்ற பிறகுதான் கைது செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் எழுத்து ரீதியாக அனுமதி கொடுக்க வேண்டும்.
  3. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்ற தடையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

இந்த புதிய வழிகாட்டல்களின்படி தலித்துகள் மீதான வன்கொடுமை தொடர்பாக ஆதிக்க சாதியினர் யார் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே முடியாது, கைது செய்வதைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதாவது, இந்த புதிய வழிகாட்டல்கள் மூலம் ஆதிக்க சாதியினர் நடத்தி வரும் வன்கொடுமைகளுக்கு உச்சநீதிமன்றம் சட்டரீதியான ஒப்புதலை வழங்கியிருக்கின்றது.

ஒவ்வொரு கால் மணி நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

“இந்தத் தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் ‘மேல்’சாதி சார்பை காட்டுகிறது” என்றும், “உச்சநீதிமன்றம் பார்ப்பனர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது” என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்.

மார்ச் 20-ம் தேதி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை. இந்த வழக்கை நடத்திய மகாராஷ்டிரா பா.ஜ.க அரசும், வழக்குக்கு உதவி செய்த மத்திய அரசு வழக்கறிஞரும் உச்சநீதிமன்றம் அறிமுகம் செய்த மாற்றங்களை எதிர்த்து வாதிடவில்லை. தலித்துகள் தமது உரிமைகளுக்காக போராட உதவும் இத்தகைய சட்டங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது பா.ஜ.க-வின் அரசியல் நோக்கம்.

உச்சநீதிமன்றம் வழங்கிய புதிய வழிகாட்டல்களை எதிர்த்து தலித் அமைப்புகள் ஏப்ரல் 2-ம் தேதி (தீர்ப்பு வழங்கப்பட்ட 12 நாட்களுக்குப் பிறகு) நாடு தழுவிய பாரத் பந்த் அறிவித்திருந்தன. இந்த வேலை நிறுத்தத்தில் 1 லட்சம் தலித் குழுக்கள் பங்கேற்றன என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.  இந்தப்போராட்டம் மேற்கே மகாராஷ்டிரா முதல் கிழக்கே பீகார் வரை அனைத்து மாநிலங்களிலும் பரவியது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வன்முறை வெடித்தது. 9 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் வன்முறையிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 6 பேர், உத்தர பிரதேசத்தில் 2 பேர், ராஜஸ்தானில் ஒருவர் கொல்லப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்தம் வட இந்தியா முழுவதும் பலத்த தாக்கம் ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வன்முறை வெடித்தது. 9 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் வன்முறையிலும் கொல்லப்பட்டிருக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 6 பேர், உத்தர பிரதேசத்தில் 2 பேர், ராஜஸ்தானில் ஒருவர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்.
இந்த வன்முறைகளை தூண்டியது பா.ஜ.க-வினர்தான் என்று தலித் செயல்பாட்டாளர் அசோக் பார்த்தி கூறியிருக்கிறார். குவாலியர் நகரில் ராஜா சவுகான் என்ற பா.ஜ.க குண்டர் துப்பாக்கியால் சுடும் வீடியோ பதிவுகள் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பாயின.

பஞ்சாபில் 2-ம் தேதி நடைபெறவிருந்த சி.பி.எஸ்.ஈ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான பேர் கூடிய கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்ட ஒரு 63 வயது பெண் கூறியதாவது,
“இந்தச் சட்டம் இருப்பதால் எங்களை தாக்குவதற்கு ஓரளவுக்காவது பயப்பட்டார்கள். இதை ஒழித்துக் கட்டி விட்டால் மீண்டும் பழைய நிலைமைக்கு போய் விட வேண்டி வரும்” என்றார். “சாதி பெயர் சொல்லி திட்டுவது, மறைமுகமாக இழிவுபடுத்துவது, அடிப்பது போன்ற பழக்கங்களை இந்தச் சட்டம் ஓரளவு தடுத்து நிறுத்தியிருந்தது. ஆனால், பொதுவாக போலீசில் புகார் கொடுத்தால் வாங்க மாட்டார்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மாட்டார்கள். இந்தச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன்” என்கிறார் அவர்.

2015-ல் நீதிமன்றத்தை எட்டிய 15,636 வழக்குகளில், 11,519 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 4,119 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது, பதிவு செய்யப்பட்ட 26% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றத்தின் நண்பராக பணியாற்றிய அமரேந்திர சரண் என்ற முன்னாள் அரசு உதவி வழக்கறிஞர் முன் வைத்த அற்பமான காரணத்தை மட்டும் காட்டித்தான் உச்சநீதிமன்றம், இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று முடிவு செய்திருக்கிறது. இதற்கு மேல், வேறு எந்தத் தீவிரமான ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவை உச்சநீதிமன்றம் வந்தடையவில்லை.

பீமா-கோரேகான்

பீமா-கோரேகான் சண்டையின் 200-வது நினைவு நாளில் தலித் மக்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

உண்மையில், புகார் கொடுத்த தலித்துகள் கட்டாயத்தின் பேரிலும், வழக்கை நடத்த முடியாமலும் வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர்.

தேசிய குற்ற அலுவலகம் வெளியிடும் அதிகாரபூர்வ தரவுகளின்படியே ஒவ்வொரு கால் மணி நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை 66% அதிகரித்திருக்கிறது. 2015-ம் ஆண்டில் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் (பதிவானவை மட்டும்) 38,670. 2016-ல் அது 40,801 ஆக அதிகரித்தது. உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மாநிலங்கள் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கின்றன. பதிவாகும் ஒவ்வொரு குற்றத்துக்கும் நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகாமல் போகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பேச்சுக்கு ஒரு வேளை இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு என்ன பொருள்? ‘ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் தன்னை சாதி ரீதியாக இழிவு படுத்தியதாக புகார் கொடுத்து விடுகிறார்.’ இதைக் கண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு பயம் என்றால், “எந்த நேரத்திலும் யார் தன்னை சாதி ரீதியாக திட்டுவார்கள்,  அடிப்பார்கள், இழிவுபடுத்துவார்கள்” என்று வாழும் தலித் மக்களின் அன்றாட பயத்துக்கு என்ன நிவாரணம்?

பா.ஜ.கவில் சென்று ஐக்கியமான தலித் தலைவர்கள் பலர் இப்போது இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறார்கள்.

“இந்தப் போராட்டத்துக்கு வன்முறைக்கும் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியது மட்டும் காரணம் இல்லை. இது வரை இல்லாத அளவில் தலித் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் கடும் கோபமும் நிலவுகிறது” என்கிறார் பா.ஜ.கவின் தலித் எம்.பி உதித் ராஜ்.

  • 2015-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் இட ஒதுக்கீடு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசினார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க-வின் அமைச்சர்களும், பல்வேறு தலைவர்களும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்த் ஹெக்டே கடந்த டிசம்பர் மாதம், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்குத்தான் நாங்கள் அதிகாரத்தில் இருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.
  • இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவில் பீமா-கோரேகான் சண்டையின் 200-வது நினைவு நாளில் தலித் மக்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஆதிக்க சாதியினர் நடத்திய தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.
  • முன்னதாக, 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி குஜராத் ஊனா கிராமத்தில் 4 தலித் இளைஞர்கள் மாட்டுத் தோலை உரித்ததற்காக பிரம்பால் அடிக்கப்பட்டு அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் சுற்றுக்கு விடப்பட்டது.
  • தலித் ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா கல்வி உதவித் தொகை மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடி 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
  • தலித் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையும் மோடி அரசால் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு வருணாசிரம தருமத்தை தூக்கிப் பிடிக்கும் மோடியின் பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் மீதான தாக்குதல்களும், அவர்களது வாழ்வாதாரத்துக்கான குறைந்த பட்ச உதவிகள் மறுக்கப்படுவதும் அதிகரித்துள்ளன.  தலித் மக்களை சமமாக மதிப்பது, சமூகநீதியை உறுதி செய்வது என்பது வருணாசிரம தருமத்தில் இல்லை. சாதிய படிநிலையில் அவரவர் இடத்தை ஏற்றுக் கொண்டு கிடைப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த சாதி வெறியர்களின் அணுகுமுறை.

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய வெளியுறவுத் துணை அமைச்சர் வி.கே.சிங், “பரீதாபாதில் 2 தலித் குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு பொறுப்பாகாது. ஒரு நாயின் மீது யாராவது கல் எறிந்தால் அதற்கு அரசு பொறுப்பில்லை” என்று பேசினார்.

பாரத் பந்த் தொடர்பாக டிசம்பர் 2-ம் தேதி நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஹிதேஷ் ஜெயின், “அவர்களுக்காக போடப்பட்ட திட்டங்கள் பற்றி நாங்கள் கீழே இறங்கி அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது” என்றார். பின்னர் இதை மாற்றிக் கொண்டாலும், இந்த பார்ப்பன மனுவாதிகளின் மூளை முழுவதும் நிரம்பியிருப்பது இந்த சாதிய வெறிதான். தலித் மக்களின் எழுச்சி அனைத்து உழைக்கும் மக்களின் போராட்டங்களோடு இணைந்து மனுவாதி, தலித் விரோதி  மத்திய  அரசை தூக்கி எறியும் நாள் விரைவில் வரும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/dalit-anger-burns-bjp/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்

ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில்...

“நீட்”ஐ ரத்து செய் – போஸ்டர்கள்

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி...

Close