“ஜனநாயக அரசியல் இல்லாமல் சட்ட உரிமைகள் சாத்தியமா?” – ஐ.டி சங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அரங்குக் கூட்டம் 17-06-2017 அன்று மாலை 4 மணி முதல் 7 மணி வரை திருவான்மியூரில் நடைபெற்றது.
சங்க உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் “தொழிற்சங்க வரலாறும், அரசியலும்” என்ற தலைப்பில் உரையும், “மாட்டு அரசியல்” பற்றிய விவாதமும், சங்க பொறுப்பாளர்கள் தேர்வும் நடத்தப்பட்டன. ஆட்குறைப்பு தொடர்பான சட்ட சந்தேகங்களுக்கு சங்கத்தின் சட்ட ஆலோசகர் பதில் அளித்தார்.

முதலில் தொழிற்சங்க வரலாறும் அரசியலும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

சார்டடிஸ்ட் இயக்கத்தின் ஆர்பபாட்ட அறிவிப்பு

சார்டடிஸ்ட் இயக்கத்தின் ஆர்பபாட்ட அறிவிப்பு

“இன்றைக்கு ஐ.டி துறையில் பணி நீக்கம் செய்யப்படுபவர்கள் தொழில் தகராறு சட்டத்தின் பிரிவு 2A-ன் கீழ் தொழில் தாவா தாக்கல் செய்கிறோம். அவ்வாறு தாக்கல் செய்வதற்கான தொழிலாளர் துறை அலுவலகங்கள் நாடெங்கும் செயல்படுகின்றன. இந்திய தொழிற்சங்க சட்டம் 1926-ன்படி தொழிற்சங்கம் அமைக்கிறோம். ஒவ்வொரு வட்டாரத்திலும் அதற்கான பதிவாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது போல தொழிலாளர் உரிமைகள் தொடர்பான 44 மத்திய சட்டங்களும் வெவ்வேறு மாநில சட்டங்களும் சட்ட புத்தகத்தில் உள்ளன.

இவை எல்லாம் எப்படி வந்தன? இந்த சட்டங்கள் அனைத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்களின் மூலம் வென்றெடுக்கப்பட்ட அரசியல் உரிமைகள்.

ஐரோப்பிய தொழிலாளர் இயக்கம்

தொழிற்சங்க உரிமை முதலாளித்துவ உற்பத்தி முறை முதல் முதலில் தோன்றிய ஐரோப்பாவில் 19-ம் நூற்றாண்டில் தொடங்கிய போராட்டங்களில் வேர் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய நிலப்பிரபுத்துவ சமூகங்களில் உழைப்பாளர்கள் அடிமையாக இருந்த நிலை மாறி, ‘கூலித் தொழிலாளர்கள் சுதந்திரமானவர்கள்’ என்று முதலாளித்துவம் அறிவித்தாலும், நடைமுறையில் அவர்கள் கூலி அடிமைகளாக ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டனர். பெண்களும், குழந்தைகளும், பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய வைக்கப்பட்டனர்.

உடல் உறுப்புகள் இழப்பு, உயிர் இழப்பு, போதுமான உணவு, உறக்கம் இன்மை, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி மறுப்பு என இந்த உற்பத்தி முறை தோற்றுவித்த அவலங்களை எதிர்த்த குரல்கள் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு இட்டுச் சென்றன.

ராபர்ட் ஓவன் என்ற இங்கிலாந்தின் மகத்தான கற்பனாவாத சோசலிஸ்டுகளில் ஒருவர் தொழிலாளர்களை சங்கமாக திரட்டுவதில் பங்காற்றிய முன்னோடிகளில் ஒருவர். இங்கிலாந்தின் சார்டிஸ்ட் இயக்கம், 1840-களில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிட்ட ஐரோப்பிய நாடுகளின் கம்யூனிஸ்ட் லீக், 1860-களில் செயல்பட்ட காரல் மார்க்ஸ் வழிநடத்திய சர்வதேச உழைப்பாளர் சங்கம் போன்றவை ஐரோப்பிய தொழிலாளர்கள் தமது அரசியல் உரிமைகளுக்காக போராடுவதற்காக செயல்பட்ட அமைப்புகள்.

அவற்றைத் தொடர்ந்து இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரசியா, அமெரிக்கா, போலந்து போன்ற நாடுகளில் சமூக ஜனநாயகக் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்துக்காக உருவாக்கப்பட்டு தொழிலாளர் உரிமைகளை அரசியல் களத்தில் எடுத்துச் சென்றன.

8 மணி நேர வேலை நாள் என்ற முழக்கத்தை முன் வைத்து அமெரிக்கா முழுவதும் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக 1886-ல் சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மே 1-ம் தேதி நடந்த பேரணியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு உழைக்கும் வர்க்கம் வென்றெடுத்திருக்கும் வரையறுக்கப்பட்ட வேலை நாள், ஓய்வூதியம், நிரந்தர பணி முதலான ஒவ்வொரு உரிமையும் 150 ஆண்டுகளுக்கு மேற்பட்ட போராட்ட வரலாறு கொண்டது.

கம்யூனிஸ்ட் லீக் கூட்டத்தில் உரையாற்றும் காரல் மார்க்ஸ்

கம்யூனிஸ்ட் லீக் கூட்டத்தில் உரையாற்றும் காரல் மார்க்ஸ்

இந்திய தொழிலாளர் இயக்கம்

இந்தியாவில் தொழிற்சங்க சட்டமும், தொழில் தகராறு சட்டமும் அதன் 2ஏ, 2கே பிரிவுகளும் எப்படி வந்தன?

இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாறு 1910-களில் முதல் உலகப் போரின் போது வெடித்த தொழிலாளர் போராட்டங்களிலிருந்து தொடங்குகிறது. 1917 ரசியப் புரட்சி கொடுத்த உந்துதலைத் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமாயின. சென்னை பின்னி ஆலையில் 6 மாதங்களாக நடந்த வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, 1926-ம் ஆண்டு காலனிய அரசு இந்திய தொழிற்சங்க சட்டத்தை இயற்றியது.

அதன்மூலம் தனது உலக ஆதிக்க தேவைக்கான ஆலை உற்பத்தியை வேலை நிறுத்தங்கள் இல்லாமல் நடத்திக் கொள்ள வழி தேடியது, தொழிலாளர் போராட்டங்களை வரம்புக்குள் வைத்துக் கொள்ள முயற்சித்தது. இந்தச் சட்டம் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வதற்கான உரிமையையும், நிர்வாகத்துடன் கூட்டுத்துவ அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் சட்ட அடிப்படையை உருவாக்கித் தந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் பதிவாளரிடம்தான் நமது தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின் போதும் காலனிய ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ற உற்பத்தி முடுக்கத்தில் தொழிலாளர் போராட்டங்கள் மேலும் வெடித்தன. போர் எதிர்ப்பு உணர்வு பரவியது. இதைத் தொடர்ந்து 1947-ல் தொழில் தகராறு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் பிரிவுகள் 2A, 2K முதலானவற்றின் கீழ்தான் நாம் நமது வழக்குகள் இப்போது தொடுக்கிறோம்.

இது போன்று 44 மத்திய சட்டங்களும், பல்வேறு மாநில சட்டங்களும் தொழிலாளர்களின் போராட்டங்களின் விளைவாக உருவானவை.

தொழிற்சங்கக் கூட்டம் - The Salt of the Earth திரைப்படத்திலிருந்து காட்சி

தொழிற்சங்கக் கூட்டம் – The Salt of the Earth திரைப்படத்திலிருந்து காட்சி

ஐ.டி துறையில் சங்கம்

இவ்வாறு தொழிற்சங்கம் அமைப்பதற்கும், தொழில் தகராறுகளை முறையிடுவதற்கும் சட்ட அடிப்படைகள் இருந்தும், ஐ.டி துறையில் இத்தனை ஆண்டுகளால ஏன் தொழிற்சங்கம் உருவாக்கப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

1980-களில் அமெரிக்க, ஐரோப்பிய ஊழியர்களை விட குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்து கொடுக்கலாம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது இந்திய ஐ.டி ஏற்றுமதித் துறை. இந்திய நிலைமைகளுக்கு ஒப்பீட்டளவில் உயர்ந்த சம்பளம், அமெரிக்க சந்தையை இலக்கு வைத்து நடத்தப்பட்டது, தொடர்ந்து வளர்ந்து வந்த வேலை வாய்ப்புகள், ஒரு வேலை போனால் இன்னொரு வேலை, வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகள் என்று நிலவிய சூழலில் தனிநபர் வாதம், அப்ரைசல் முறை, கூட்டுத்துவ பேச்சுவார்த்தையை நிராகரிப்பது போன்ற போக்குகள் வலுப்பெற்றன. தொழிலாளர் சட்டங்களுக்கான தேவையை ஊழியர்கள் உணராமல் இருந்தனர்.

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, 2015-ல் டி.சி.எஸ் ஆட்குறைப்பு, 2017-ல் சி.டி.எஸ் ஆட்குறைப்பு என்ற தொழில்தகராறு சட்டம், தொழிற்சங்க உரிமை ஆகியவற்றின் முக்கியத்துவம் நிகழ்ச்சி நிரலுக்கு வந்திருக்கிறது.

ஜனநாயக உரிமையை எப்படி பாதுகாத்துக் கொள்வது?

இவ்வாறாக இந்த தொழிற்சங்க உரிமையும், தொழிலாளர் சட்டங்களும் ஜனநாயக, அரசியல் உரிமைகளாக வென்றெடுக்கப்பட்டு சட்ட புத்தகத்தில் உள்ளன. இந்தச் சட்டங்களை திருத்தி மழுங்கச் செய்வதற்கான முயற்சிகளில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. தொழிற்சங்க சட்டங்களை 3 தொகுப்பாக மாற்றி, தொழிலாளர் உரிமைகளை பறிக்க திட்டமிட்டு உள்ளது.

இதையும் இது போன்ற பிற நடவடிக்கைகளையும் எப்படி தடுத்து நிறுத்துவது? நமது ஜனநாயக உரிமைகளை எப்படி வலுப்படுத்துவது?

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் அளிக்கும் உரிமைகள் மொத்தம் உள்ள சுமார் 51 கோடி உழைப்பாளர்களில் 10%-க்கும் குறைவானவர்களுக்கே பொருந்துகிறது. சுமார் 4.5 கோடி பேர் மட்டுமே அமைப்புசார் துறைகளில் முறைப்படுத்தப்பட்ட பணியில் உள்ளனர். சுமார் 45 கோடி உழைப்பாளர்கள் முறைப்படுத்தப்படாத வேலைகளில் உள்ளனர். அவர்களுக்கும் கிராமப் புற விவசாயிகளுக்கும் இந்தச் சட்டங்கள் அளிக்கும் உரிமைகள் எதுவும் கிடைப்பதில்லை.

ஒரு சட்டமன்ற தேர்தலில் கூட சாதி, மதம் பார்த்து, ஓட்டு எவ்வளவு தேறும் என்று கணக்கு போட்டு நடக்கும் இந்த நாட்டில் 5%, 10% முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் உரிமைக் குரல் யாரைத்தான் அசைத்து விடும்? இந்த 5%, 10% கூட ஒருவரது பிரச்சனையை மற்றவர் பேசாமல் கடந்து போகும் நிலை உள்ளது.

கால்நடை வர்ததகத் தடை

கால்நடை வர்ததகத் தடை : “பெரும்பான்மை மக்களது பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நமது வாழ்க்கை, நமது பிரச்சனை என்று மட்டும் பார்த்தால் நமது கோரிக்கைகள் கடலில் கரைத்த பெருங்காயமாகி விடும். “

எனவே ஜனநாயக உரிமையான இந்த தொழிற்சங்க உரிமைகளை தக்க வைத்துக் கொள்வதற்கே நாம் அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவாலுக்கும் ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டங்களில் இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பெரும்பான்மை மக்களது பிரச்சனைகளை பொருட்படுத்தாமல் நமது வாழ்க்கை, நமது பிரச்சனை என்று மட்டும் பார்த்தால் நமது கோரிக்கைகள் கடலில் கரைத்த பெருங்காயமாகி விடும். மக்கள் ஒவ்வொருவரும் சார்ந்துதான் வாழ்கிறோம் என்ற உணர்வில் தனித்து நிற்காமல் இணைந்து குரல் கொடுப்பதுதான் சரியானது. ”

என்ற வகையில் பேசப்பட்டது.  இது அனைவரையும் சிந்திக்கத் தூண்டியது.

அதைத் தொடர்ந்து Salt of the Earth என்ற அமெரிக்க திரைப்படத்தின் ஜனநாயக முறையில் விவாதம் நடத்துதல், முடிவெடுத்தல், பணியிட பிரச்சனைகளை மட்டுமின்றி பிற சமூக பிரச்சனைகளுக்கும் போராடுதல், சர்வதேச ஒற்றுமை போன்ற அம்சங்கள் வலியுறுத்தும் வகையில் அமைந்த தொழிற்சங்கக் கூட்டம் நடக்கும் காட்சிகள் திரையிடப்பட்டன.

அதைத் தொடர்ந்து கால்நடை வணிகத்துக்கு மோடி அரசு விதித்துள்ள தடைக்குப் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரம் பற்றிய விவாதம் நடத்தப்பட்டது.

முதலில் பேசிய நபர் மாட்டுக்கறிக்கும், கால்நடை வர்த்தகத்துக்கும் தடையை எதிர்த்து ஏன் எதிர்க்கட்சிகள் போராடவில்லை என்று கேள்வி எழுப்பினார். பிறகு ஒரு உறுப்பினர் அவர் கிராமத்தில் எப்படி உழவு மாடு பயன்பட்டது, இப்போது எதனால் அதனை பயன்படுத்தவில்லை என்று கூறினார். ஒரு உறுப்பினர் மாட்டுக்கறி எதனால் தடை செய்யப்பட்டது என்பதைப் பற்றி விளக்கினார்.
பால் தரும் வேலையில் பராமரிப்பதும், பால் வற்றிய மாடுகளை எப்படி பராமரிப்பது என்ற கேள்வியும் உள்ளது. பெரும்பாலான மாடுகள் மரணிப்பது, பராமரிப்பின்றி விடப்படுவது கோசாலைகளில்தான் என்றும் பல்வேறு தகவல்கள் வந்திருந்த உறுப்பினர்கள் மூலம் பகிரப்பட்டன.

தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தின் மீது இந்த மதவெறி கும்பல் நடத்தும் உணவு உரிமைக்கு எதிரான போர் என்ற வகையில் மட்டும் இதை புரிந்து கொள்வது நாணயத்தின் ஒரு பக்கம்தான். சிறு, குறு விவசாயிகள், கூலி விவசாயிகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கை தேவைகளுக்காக குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் வகையில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தற்போதைய தாக்குதல் விவசாயிகளை கால்நடை வளர்ப்பு என்ற வாய்ப்பை பறித்து தெருவில் விட்டு விடும்.

இறுதியில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு பெயர்கள் முன்மொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் 9 பேர் கொண்ட செயல்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஐ.டி சங்கம் தொடர்பான வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ஊழியர்கள் பணியிட பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிற் தகராறு சட்டத்தின் 2A, 2K பிரிவுகளின் கீழ் தொழில்தாவா தாக்கல் செய்வது குறித்தும் சந்தேகங்களை சங்கத்தின் சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகனிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/democratic-politics-and-legal-rights-it-union-meeting-report/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை

“ஏதோ தப்பு செய்வதால்தான் தன்னைப் பற்றிய விபரங்கள் வெளியே தெரியக் கூடாது என்று நினைக்க வேண்டியதில்லை. தனிப்பட்ட விபரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பது உங்கள் வாழ்க்கையை உங்கள்...

பிப்ரவரி மாத சங்கக் கூட்டம்

சங்க உறுப்பினர்களே, நண்பர்களே, நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை 17.02.2018 அன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகின்றது. இன்றைய சூழலில் நமது துறையில் புதிய...

Close