மகாராஷ்டிரா: நெசவுத்துறையின் முதுகெலும்பை உடைத்த மோடியின் பணமதிப்பு நீக்கம்

சியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட அந்த நகரம் இன்று நூற்கழிவுகள், குப்பை மற்றும் கழிவுநீர் நாற்றம் வீசும் பாழடைந்து சிதைக்கப்பட்ட நகரமாக தோற்றமளிக்கிறது.

ஆறு மாதங்களாக முடங்கியுள்ள பிவண்டி ஜவுளி ஆலைகள்

இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதலே, மும்பையிலிருந்து 30 கி.மீ. வடக்கேயுள்ள பிவாண்டி நகரம், வங்காளம் மற்றும் வியட்நாமுடனான போட்டியில் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 2015-ம் ஆண்டு அரசு அறிக்கையின்படி இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து 2.5 கோடி வேலைவாய்ப்புகளை தருகின்ற இந்திய நெசவுத்துறையின் முக்கியமான கண்ணியாக விளங்கும் பிவாண்டி, இந்தியாவின் 65 லட்சம் விசைத்தறிகளில் ஆறில் ஒரு பங்கை தன்னகத்தே கொண்ட 15 லட்சம் மக்கள் வாழும் நகரம். ஏற்றுமதி சரிவு, உற்பத்தி வீழ்ச்சி மற்றும் மூலப்பொருள் விலை உயர்வால் இந்திய ஜவுளித் துறை ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் சென்ற நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பின் வாயிலாக 86% நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்ததன் மூலம் அது மேலும் நெருக்கப்பட்டிருக்கிறது.

அகமதாபாதில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கடி என்ற இடத்தில் ஏற்றுமதி துணிகள் உற்பத்தி ஆலையின் ஸ்பின்னிங் எந்திரம்

30 ஆண்டுகளாக தொழிலாளர் ஒப்பந்த வேலைகளை செய்து வரும், 100-க்கும் அதிகமான விசைத்தறிகளை வைத்துள்ள 65 வயது நிரம்பிய ஆசாத் “பண மதிப்பு நீக்கம் எங்களை ஐந்து ஆண்டுகளுக்கு பின்னால் தூக்கி வீசியிருக்கிறது” என்கிறார். தந்தையின் தொழிலை தொடரும் இந்தத் துறையில், ஆசாத்தின் மகன் அப்தாப் (34) தன்னுடைய குழந்தைப் பருவத்தில் வளமாக இருந்ததையும் அன்று ஒரு லோடுக்கு 20000 ரூபாய் ஈட்டுவது இயல்பாக இருந்ததையும் நினைவுகூர்கிறார். “கடந்த மாதம், எங்களுக்கு தறிகளில் இருந்து ரூ 17,000 கிடைத்தது” என்கிறார் அப்தாப், ஒரு வறண்ட புன்னகையுடன். சராசரி பணவீக்கம் 6.5% என்ற காரணியை கணக்கில் கொண்டால் 1996-97 காலகட்ட ரூ 20,000 இன்று ரூ 70,000 என்ற அளவில் உயர்ந்திருக்க வேண்டும்.

இந்திய நெசவுத்துறையின் மின் தறிகள் மற்றும் அதன் பரவலாக்கப்பட்ட பின்னல் கூறுகள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பங்களிக்கிறது. 11 லட்சத்துக்கும் அதிகமான மின் தறிகள் இயங்கும் மகாராஷ்டிரா, இந்தியாவின் மிகப் பெரிய விசைத்தறி மையங்களில் ஒன்றாக, பிவாண்டி, மாலேகான், துலே, சாங்லி மற்றும் சோலாப்பூர் நகரங்களில் 10 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குகிறது. “பிவாண்டியின் விசைத்தறிகளில் 20% மட்டுமே இன்று இயங்குகிறது” என்கிறார் 20 வருடங்களுக்கு மேலாக பிவாண்டியின் விசைத்தறி தொழிலை மீட்டெடுக்க முயற்சி செய்து வரும் பிவாண்டி ஜவுளி ஆலைகள் சங்கத்தலைவர் மன்னன் சித்திக்.

மும்பையின் வடகிழக்கில் 270 கி.மீ தொலைவில் உள்ள மாலேகான், இதேபோல் போராடி வருவதை, IndiaSpend டிசம்பர் 2016 அறிக்கை காட்டுகிறது. இந்திய நெசவுத் தொழிற்துறையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் பிவாண்டி பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்று IndiaSpend ஆய்வு செய்துள்ளது. தொகுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் இல்லையென்றாலும் ஏற்கனவே வீழ்ச்சியடைந்து வரும் துறையில் உற்பத்தி வெட்டுக்கள், வேலை இழப்புக்கள் மற்றும் வருவாய் வீழ்ச்சிகளை நாம் காண முடிகிறது.

பணமே பிரதானமாக புழங்கும் இத்துறையில் (விவசாயி, நூற்பாலை, நூல் வியாபாரி, விசைத்தறி, மொத்த விற்பனையாளர், சில்லறை விற்பனையாளர், வாடிக்கையாளர் வரை) மிகவும் கீழ்நிலையில் உள்ள பாரம் தூங்குபவர்கள், சாயத் தொழிலாளர்கள், மற்றும் தினக்கூலிகளே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் கடன் அட்டை உபயோகம் மற்றும் வங்கி கணக்கு உபயோகத்தை காண முடிந்தாலும் இவை விதிவிலக்கானவையே. இந்தியா உள்ளிட்ட பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய மூன்றாம் உலக நாடுகளில் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்கள் மற்றும் பெருவாரியான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் நெசவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய அமைப்பு-சார் தொழிலார்களில் இந்திய நெசவுத்துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 499.000 புதிய வேலைகளை அளித்துள்ளது (IndiaSpend). அதிக அளவிலான ஏற்றுமதி கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வருமான உயர்வுக்கும் வழிவகுத்துள்ளது.

மும்பையின் மிகப்பெரிய ஜவுளி சந்தைகளில் ஒன்றான மங்கள்தாஸ் சந்தையில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மற்றும் திருமண சீசன் வியாபாரத்தில் 20% குறைந்துள்ளதாக கூறுகிறார் சந்திரகாந்த். அறிவிப்பு வெளியான நவம்பர் முதல் வாரத்தில் வியாபாரமே இல்லை.

“வாடிக்கையாளர்கள் எளிய, சாதரண சட்டைகளையே வாங்குகின்றனர். ஆடம்பர பொருட்களின் தேவை குறைந்து வருகிறது. மக்கள் தேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளனர்” – சந்திரகாந்த்.

“உற்பத்தி பாதிக்கப்படாமல் இருந்தது, ஆனால் ஆயத்த ஆடை நிறைவுப் பணிகள் (ஜிப்,பட்டன் போன்ற வேலைகள்) பாதிக்கப்பட்டன” என்கிறார் இதே சந்தையில் இயங்கி வரும் துணி விற்பனையாளர் க்ருபேஷ் பயானி. இவர் மும்பை புறநகர் இறக்குமதி செய்யப்பட்ட 17 நெசவு இயந்திரங்கள் இயங்கும் ஒரு ஆடைத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். இவர் பொதுவாக ஆடை நிறைவுப் பணிகளை அவுட்சோர்சிங் செய்து விடுகிறார். பொதுவாக ஆடை சந்தையில் கிராக்கி 30 சதவீதமும், மொத்த விற்பனை கிராக்கி 50 சதவீதமும் குறைந்துள்ளதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.

விவசாயிகள் காசோலையை வாங்கிக் கொள்ள மறுப்பதால் அகமதாபாதுக்கு அருகில் உள்ள மூடப்பட்டுள்ள ஜின்னிங் ஆலை ஒன்று.

“நவம்பர்-பிப்ரவரி சீசனில் எங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதும். வாடிக்கையாளர்களை கவனிக்க முடியாமல் கடைக்காரர்கள் திணறுவார்கள். வெறிச்சோடிக் கிடைக்கும் இன்றைய கடைகள் நிலைமையை உங்களுக்கு சொல்லும். 500 ரூபாய் நோட்டுகள் இல்லாதது பெரும் பிரச்சனையாக இருக்கிறது” என்கிறார் மங்கள்தாஸ் மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் சங்க செயலாளர் பரத் தக்கர்.

அஹமதாபாத் நகர புது துணி சந்தையின் வியாபாரம் 80% அளவுக்கு சரிந்துள்ளது என்கிறார் சங்க செயலாளர் ராஜேஷ் அகர்வால். நவம்பர் 8-க்குப் பிறகு விற்பனை குறைய இவரிடம் இருந்த பணம் கரையத் தொடங்கியுள்ளது. தொழிலார்களுக்கு கூலி கொடுக்க கையில் பணம் இல்லாததால் இவரிடம் வேலை செய்த 80 கூலித்தொழிலாளர்களில் 60 பேர் வங்கிக் கணக்கு சிரமங்களை காட்டிலும் சில நாட்கள் வேலை இல்லாமல் இருப்பதே மேல் என்று சொந்த கிராமங்களுக்கு திரும்பி சென்று விட்டனர்.

மொத்த வியாபாரியான கிருபேஷ் பயானி, சிறு வீத உற்பத்தியிலும் இறங்கிய பிறகும் இழப்பை சரிக்கட்ட முடியவில்லை.

வாடிக்கையாளர்கள் செலவைக் குறைக்க முயற்சிப்பதால் உள்நாட்டு சந்தையில் ஆயத்த ஆடைகள் தேவை குறைந்து இருப்பதை The Financial Express டிசம்பர் 3-ம் தேதி அறிக்கையில் குறிப்பிடுகிறது. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் மொத்த வியாபாரிகளிடம் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்கின்றனர். முதன்மையாக பணமே புழங்கும் இந்த சங்கிலியில் விற்பனை குறைவதால் மொத்த வியாபாரிகள் ஆடை தயாரிப்பு நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதை நிறுத்துகின்றனர். “நான் பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறுவது என்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளை சார்ந்தது” என்கிறார் மும்பையை சேர்ந்த மொத்த வியாபாரி பரேக்.

பிவாண்டியின் விசைத்தறி தொழிலாளர்கள் ரஹீல்(40) மற்றும் நாசர் அலி(40) இருவரும் நவம்பர் 8-க்கு முன்பு மாதம் ரூ. 15000 ஈட்டினர். இவர்களின் குடும்பம் சொந்த ஊரான பிரதாப்கர் மாவட்டத்தில் இருக்கிறது. இருவருக்கும் தலா 5 குழந்தைகள் உள்ளனர். நவம்பர் 8க்கு பிறகு மாதம் ரூ 5000 ஈட்டுவதே சிரமமாகி விட்டது.

சுதீர் பரேக் நவம்பர் 8 பண மதிப்பு நீக்கத்துக்கு முன்பு வாங்கிய துணிகள் இன்னும் விற்கப்படாமல் முடங்கியிருக்கின்றன.

பெரும்பாலான நாட்களில் வேலை இருப்பதில்லை. எனவே அவர்கள் உதிரி வேலைகளை தேடி அலைகின்றனர். “எப்பொழுதும் பாக்கெட்டுகளில் ரூ 400-500 வரை வைத்திருந்த நாங்கள் இன்று டீ குடிக்கவே பார்த்து செலவு செய்ய வேண்டி உள்ளது. ரூ 5000 மாத வருமானத்தை வைத்து எப்படி 6 பேர் வாழ்க்கை நடத்த முடியும்”. நவம்பர் 8-க்கு பிறகு தன்னுடைய 60 விசைத்தறிகளை நிறுத்திய அசோக் 2 மாதங்களுக்கு பிறகு மறுபடியும் அவரது தொழிலாளர்கள் திரும்பிய பிறகு இப்போது உற்பத்தியை தொடங்கி இருக்கிறார். நவம்பர் 8 அறிவிப்புக்கு முன்பே நூல் விலை ஏற்றத்தால் கடும் வீழ்ச்சியைக் கண்டிருந்த இத்துறை இப்போது மொத்தமாக முடங்கிப் போயுள்ளது.

ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் பணமதிப்பு நீக்கத்தினால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் இந்நிறுவனங்களின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது. விவசாயிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்க மறுப்பதால் பருத்தியின் வரத்து குறைந்துள்ளது.

ஆலைகளுக்கு பருத்தியை விற்பனை செய்யும் விவசாயிகள் காசோலை வாங்க மறுக்கின்றனர். காசோலை வங்கிக்குச் சென்று பணம் கையில் கிடைக்க ஒரு வாரம் ஆவதால் விவசாயக் கூலிகளுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் முழுவதும் பணத்தையே சார்ந்திருக்கும் பருத்தி விவசாயிகளும், சிறு நிறுவனங்களும், சில்லறை வியாபாரிகளும், கூலித் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

– மணி

News source : Demonetisation breaks the back of Maharashtra’s textile industry

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-breaks-the-back-of-maharashtras-textile-industry-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்!

தொழிலாளி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறாரா, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியிருக்கிறாரா, தனது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் அளக்கும் அதே நேரத்தில் உயர் மேலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு...

சுகாதாரம் – சோசலிச பாணி : மாஸ்கோவில் ஒரு அமெரிக்கரின் அனுபவம்

மாறாக, அது முன்னெடுக்கப்பட்டு, தொடர்ச்சியான பரிணாம வளர்ச்சியில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றப்படுகிறது. சோவியத் யூனியன் விசயத்தைப் போல; அது இறந்துபோகவில்லை, அது வாழ்ந்து,...

Close