ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்

This entry is part 3 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

ன்பார்ந்த விவசாய பெருமக்களே, உழைக்கும் மக்களே,

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மோடி அறிவித்ததைத் தொடர்ந்து அரசு சார்பிலும், பத்திரிகைகளிலும், கட்சிகள் சார்பிலும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன. உழைத்து சம்பாதித்த கூலிப்பணத்தை வைத்து தேவையான பொருட்களை வாங்க முடியவில்லை; சேர்த்து வைத்த பணத்தை மாற்ற ஒரு நாள் கூலியை இழந்து வங்கியில் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது; பணப் புழக்க நெருக்கடி காரணமாக கூலித் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாகியிருக்கிறது; தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைக்க வேண்டி நேர்ந்திருக்கிறது; விவசாயிகள் விவசாய விளைபொருட்களை விற்க முடியவில்லை; விவசாய வேலைகளை செய்ய முடியவில்லை என்று உழைப்பாளர்கள், விவசாயிகள் வாழ்க்கை கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

கருப்புப் பணத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?
யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்கள்?
சம்பாதிக்கும் பணம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகப் போகும் நமக்கு கருப்புப் பணத்தின் மீது என்ன அக்கறை?

கோடிக்கணக்கான மக்கள் அரை வயித்துக் கஞ்சிக்கும், குழந்தைகளை படிக்க வைக்கவும், குடும்பத்தின் மருத்துவத் தேவைகளுக்காகவும் அல்லாடிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் அம்பானி, அதானி ஆரம்பித்து நம் ஊரில் இருக்கும் காண்டிராக்டர், ரியல் எஸ்டேட் முதலாளி, எஞ்சினியரிங் காலேஜ் முதலாளி போன்ற பணக்காரர்கள் எல்லாம் லட்சங்களிலும், கோடிகளிலும் புரள்கிறார்கள் என்பதுதான் கருப்புப் பணத்தின் (திருட்டுச் சொத்தின்) அடிநாதம்.

இந்தப் பிரச்சனை குறித்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் கண்டறிந்த சில உண்மைகளையும், விபரங்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகிறோம். கண்ணால் பார்ப்பதையும், காதால் கேட்பதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், இதற்கு பின்னால் இருக்கும் விபரங்களையும், கருத்துக்களையும் சேர்த்து சிந்திப்பதன் மூலம் ஒரு சரியான புரிதலுக்கு வந்து சேர இந்தப் பிரசுரம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கருப்புப் பணம் (திருட்டுச் சொத்து) என்றால் என்ன?

கருப்புப் பணம் என்றால் கருப்பாக இருக்கும் பணம் இல்லை என்று நம் எல்லோருக்கும் தெரியும். பொதுவாக, முதலாளிகளும், பெரிய கம்பெனிகளும் தாம் விற்றதை, வாங்கியதை கணக்கில் காட்டாமல் அதன் மூலம் சம்பாதித்ததை மறைத்து வைப்பதை கணக்கில் வராத வியாபாரம் என்று சொல்லலாம். அதன் மூலம் சட்டப்படி தான் கட்ட வேண்டிய வரிப்பணத்தை கட்டாமல் தவிர்க்கும் போது அந்த வியாபாரம் கருப்பு வியாபாரம் என்று அழைக்கப்படுகிறது. அதைத் திருட்டு வியாபாரம் என்று சொன்னால் அதன் பொருள் இன்னும் தெளிவாக வெளிப்படும், அதாவது வரி கொடுக்காமல் ஏமாற்றிச் செய்யும் வியாபாரம்.

இது போக, ஆர்.டி.ஓ அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆரம்பித்து போக்குவரத்து காவலர் வரை அரசு அதிகாரிகள் வாங்கும் லஞ்சம் இயல்பாகவே எந்தக் கணக்கிலும் வராது. அப்படி முறைகேடாக லஞ்சம் வாங்குவதே சட்ட விரோதமானது. அதையும் கருப்புப் பணம் (திருட்டுச் சொத்து) என்று புரிந்து கொள்கிறோம்.

இன்னொரு பக்கம், நிலம், வீடு வாங்கி விற்றல், எஞ்சினியரிங், மருத்துவப் படிப்புக்கு நன்கொடை போன்ற வியாபாரங்களில் கணக்கில் காட்டாமல் ரொக்கமாக வாங்கும் பணம் சட்ட விரோதமானது. இதன் மூலம் கொழுத்த கல்வி முதலாளிகளையும், ரியல் எஸ்டேட் பெருந்தலைகளையும், ஆள் சப்ளை காண்டிராக்டர்களையும் நாம் பார்த்திருப்போம்.

கடைசியாக, போதை மருந்து விற்பது, கள்ளச் சாராயம் விற்பது, விபச்சாரம் செய்வது இவற்றின் மூலம் சம்பாதிக்கும் சட்ட விரோத பணமும் கருப்புப் பணத்தில் (திருட்டுச் சொத்தில்) சேர்க்கப்படுகிறது.

கருப்பும் வெள்ளையும் பின்னிப் பிணைந்தவை

ஆனால், பணத்துக்கு நிறமும் இல்லை, மணமும் இல்லை. ‘நாய் விற்ற காசு குரைக்காது, கருவாடு விற்ற காசு மணக்காது’ என்றுதான் சொல்கிறோம். எனவே, இது போன்ற மக்கள் விரோத, ஒழுக்க விரோத செயல்களும், ரியல் எஸ்டேட், தனியார் கட்டணக் கொள்ளைகளும், லஞ்ச ஊழல்களும், வரி கொடுக்காத வியாபாரங்களும் அக்கம் பக்கமாகவே நடக்கின்றன. வரி கொடுத்து முறையாக பதிவு செய்து நடத்தப்படும் வியாபாரமும் இவற்றுடன் கலந்து பின்னிப் பிணைந்துதான் நடக்கிறது.

அதாவது, ஒரே 100 ரூபாய் நோட்டு அடுத்தடுத்து கைமாறி, உழைத்ததற்கு கூலியாக பெற்றுக் கொள்ளப்பட்டு, மளிகைக் கடையில் பொருள் வாங்க பயன்படுத்தப்பட்டு, மளிகைக் கடைக்காரரை ரோட்டில் மடக்கிய போக்குவரத்து காவலருக்கு லஞ்சம் கொடுக்கவும், அதைச் சேர்த்து வைத்து நிலம் வாங்குவதற்கான ரொக்கமாக ரியல் எஸ்டேட் ஏஜென்டுக்குப் போய்ச் சேர்ந்து, அவர் மாலையில் தண்ணி அடிப்பதற்கு டாஸ்மாக் கடைக்குப் போய்ச் சேரலாம். அது மீண்டும் அரசின் கையிலிருந்து சம்பளப் பணமாக ஒரு உழைப்பாளிக்கு போய்ச் சேர்ந்து விடலாம்.

இதில் எந்த இடத்திலும் பணத்தின் நிறமோ, குணமோ மாறவில்லை. பணம் எங்கு பயன்படுகிறது, எதற்கு பயன்படுகிறது என்பதுதான் மாறிக் கொண்டே இருக்கிறது.

ரூபாய் நோட்டை தாக்கினால் கருப்புப் பணம் (திருட்டுச் சொத்து) ஒழியுமா?

இது தெளிவாகி விட்டால், 500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று சொல்வதன் மூலம் திருட்டுச் சொத்தை (கருப்புப் பணத்தை) எந்த அளவு ஒழித்து விட முடியும் என்ற கேள்வி எழுகிறது? சாராய வியாபாரியோ, லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியோ, கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்த முதலாளியோ, ஒழுக்கக் கேடாக சம்பாதிக்கும் நபர்களோ வருமானத்தை ரூபாய் நோட்டுகளாக பெட்டிக்குள் பதுக்கி வைப்பதில்லை. அதை எடுத்து உடனேயே செலவு செய்து விடுகிறார்கள், அல்லது சொத்து வாங்குகிறார்கள். அது இன்னொரு நபரிடம் சட்ட ரீதியாக, அல்லது சட்ட விரோதமாக பெறப்பட்ட வருமானமாக போய் விடுகிறது.

எனவே, ஏதாவது ஒரு நாளில் நாட்டில் எல்லோர் கையிலும் இருக்கும் ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டால் அதில் திருட்டுத்தனமாக ஈட்டிய பணத்தின் பங்கு மிகக் குறைவாகத்தான் இருக்கும். மொத்த ரூபாய் நோட்டுகளில் சுமார் 5-ல் 1 பங்கு திருட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

சரி, திருட்டுத்தனமான வியாபாரம், லஞ்ச ஊழல், மக்களை கெடுக்கும் பொருட்களை விற்கும் நபர்கள் சம்பாதித்த சொத்து ரூபாய் நோட்டாக மட்டும்தான் இருக்குமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. அவர்கள் கையில் புரளும் செல்வத்தில் 95% நிலமாக, தங்கமாக, பெரிய நிறுவனங்களின் பங்குகளாக, வெளிநாட்டில் சொத்துக்களாக இருக்கின்றன, 20-ல் 1 பகுதிதான் ரொக்கமாக இருக்கிறது என்று பல முறை ரெய்டுகள் நடத்தியதில் தெரிய வந்திருக்கிறது.

இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும் போது திருட்டுச் சொத்தை (கருப்புப் பணத்தை) ஒழிக்கிறோம் என்ற பெயரில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டை செல்லாமல் ஆக்கியது திருட்டுச் சொத்தில் பெரும்பகுதியை தொடவே போவதில்லை என்பதோடு, நியாயமான வழியில் உழைத்து சம்பாதித்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாமல் செய்து கஷ்டங்களைக் கொடுப்பதாகத்தான் முடிந்திருக்கிறது.

மேலே சொன்ன கணக்குப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். ஒரு தனியார் கல்லூரி நடத்தும் முதலாளி ரூ 100 கோடிக்கு திருட்டுச் சொத்து சேர்த்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் ரூ 5 கோடி ரொக்கமாகவும், எஞ்சிய 95 கோடி நிலம், கட்டிடம், சினிமா நிறுவனம், தங்கம், வெளிநாட்டு முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகள் என்று இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம்.

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைவசம் இருக்கும் ரூ 5 கோடியை மாற்றுவதில் அவருக்கும் சிரமம் ஏற்படும். ஆனால், அதை மாற்றுவதற்கான வாய்ப்புகளும், வழிமுறைகளும் அவருக்கு அதிகம். தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளமும், முன்பணமும் கொடுப்பது, திருட்டுச் சந்தையில் கமிஷனுக்கு நோட்டை மாற்றிக் கொள்வது, வங்கி ஊழியர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மாற்றிக் கொள்வது என்று பல வழிகளில் அவர் அதை கையாளலாம். அப்படியே மாற்ற முடியாமல் போனாலும் 5 கோடி ரூபாய்க்கு நோட்டுகளை எரித்தே அழித்து விட்டாலும், அவருக்கு அது கொசுக்கடி போலத்தான். அடுத்த நாளிலிருந்து புதிதாக திருட்டுப் பணத்தை சேர்க்க ஆரம்பித்து விடலாம், புதிதாக கைக்கடக்கமாக வெளிவந்திருக்கும் ரூ 2000 நோட்டுகளை பயன்படுத்தி. அதற்குத் தேவையான சொத்துக்கள், பொருளாதார பலம் அவரிடம் இருக்கிறது.

உழைப்பாளர்களும், பணக்காரர்களும்

நம்மைப் பொறுத்தவரை ஓய்வு இல்லாமல் ஆண்டு முழுவதும் உழைத்தாலும், வெளியூருக்குப் போய் வேலை செய்து, வெளி மாநிலத்துக்குப் போய் வேலை செய்து சம்பாதித்தாலும், குடும்பச் செலவுகளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. எதிர்காலத்துக்கு சேர்த்து வைப்பதை விடுவோம், கடன் வாங்கினால்தான் கல்விக் கட்டணம், அவசர மருத்துவச் செலவுகள் போன்றவற்றை சமாளிக்க முடியும் என்ற நிலைமைதான் இருக்கிறது.

இன்னொரு பக்கம், மாளிகையில் வாழ்ந்து கொண்டு காரில் பறக்கிறவர்களுக்கு பணத்தைப் பற்றி கவலையே இல்லை போலத் தோன்றுகிறது. பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்குகிறார்கள், ஆடம்பரமாக உடுத்துகிறார்கள், வகைவகையாக சாப்பிடுகிறார்கள், வெளிநாட்டு பொருட்களை எல்லாம் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக் கணக்கில் செலவழிப்பதைப் பற்றி கவலையே படுவதில்லை.

கஷ்டப்பட்டு உழைக்கும் பாட்டாளி வர்க்கமான நமக்கு உரிய வருமானம் கிடைப்பதில்லை. நமது உழைப்பின் பலனில் பெருமளவு முதலாளிகள் கையில் போய்ச் சேர்ந்து விடுகிறது என்பது பார்த்தாலே தெரிகிறது. குழந்தைகளைப் படிக்க வைக்க தனியார் பள்ளிக்குக் கட்டணம், உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவமனைக்குக் கட்டணம் என்று அடுத்தடுத்து வேலை பார்க்கும் முதலாளிக்கு மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் முதலாளிகள் நம்மிடமிருந்து ரத்தத்தை உறிஞ்சி கொண்டே இருக்கிறார்கள்.

அரசின் செலவுகளுக்கு வரி வசூலும், திருட்டுச் சொத்தும்

எனவே, அரசின் செலவுகளுக்கு முதலாளிகளிடமிருந்தும், பணக்காரர்களிடமிருந்தும் வரி வசூலித்துக் கொள்வதுதான் நியாயமானதாக இருக்கும். ரோடு போட, பஸ் விடுவதற்கு, பள்ளிக் கூடம் நடத்துவதற்கு, அரசு மருத்துவமனைகள் நடத்துவதற்கு, அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுப்பதற்கு, பாதுகாப்புப் படைகள், போலீசுக்கு செலவழிப்பதற்கு அரசுக்கு காசு தேவைப்படுகிறது. ஆனால், நம் நாட்டைப் பொறுத்தவரை முதலாளிகளும், பணக்காரர்களும் முடிந்தவரை வரி கட்டாமல் ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை செய்கிறார்கள். அதற்கு உதவுவதற்கு பெரிய படிப்பு படித்த கணக்கு பார்ப்பவர்கள், ஆடிட்டர்கள், வக்கீல்களை நிறைய சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் என்னென்ன என்றும், சட்டத்தின் கண்ணில் படாமல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வருமானத்தை எப்படி மறைத்து வைக்கலாம் என்றும் புதுப் புது திட்டங்களை போட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் இந்த கணக்கு பார்ப்பவர்களும், ஆடிட்டர்களும், வக்கீல்களும்தான் நிறைவேற்றப்படும் சட்டங்களை எழுதிக் கொடுக்கிறார்கள். அவை முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். மேலும் அவற்றை ஏய்ப்பதிலும் அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்துதான் வரி கட்டாமல் ஏய்க்கும் கருப்புப் பணம் அல்லது திருட்டுப் பணம் உருவாகிறது.

எனவே, முதலாளிகள் கோடி கோடியாக சம்பாதிக்கும் வருமானத்தின் மீது கட்டும் வரிப்பணத்தின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ‘எங்களிடம் கறாராக நடந்து கொண்டால் நாங்கள் வேறு நாட்டுக்கு பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விடுவோம், அதிகமாக வரி போட்டால் கட்டாமல் வெளிநாட்டில் பணத்தை பதுக்கி விடுவோம்’ என்று மிரட்டியே அவர்கள் ஈட்டும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானங்களின் மீது வரிகளை பெருமளவு குறைத்துக் கொண்டார்கள். அதன் பிறகும் ஒழுங்காக வரி காட்ட மறுக்கிறார்கள்.

இதன் விளைவாக, அன்றாட தேவைகளுக்கே போதுமான கூலி கிடைக்காத உழைக்கும் மக்களிடமிருந்தும் வரிகள் வசூலிக்கப்படுகின்றன, ஒரு தீப்பெட்டி வாங்கினால், ஒரு செல்ஃபோன் ரீசார்ஜ் போட்டால், ஒரு சினிமா பார்த்தால் அதற்கு நாம் வரி கட்டுகிறோம். அரசாங்கம் வருமானத்துக்காக டாஸ்மாக் மூலம் தானே சாராயம் விற்று உழைக்கும் மக்களின் வருமானத்தை லாபமாகவும், வரிகளாகவும் பிடுங்கிக் கொள்கிறது. இதற்கு மேல் கல்விக்கு தனியார், மருத்துவத்துக்கு தனியார், குடிநீருக்கு தனியார் என்று அத்தியாவசியத் தேவைகளை கூட அரசு வாங்காமல் நாம் தனியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. அரசு திரட்டும் வரிப் பணம் எல்லாம் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கவும், உழைக்கும் மக்களை ஒடுக்கப் பயன்படும் போலீஸ், இராணுவத்துக்கும்தான் செலவாகிறது.

சாதாரண மக்கள் கட்டும் வரிச் சுமை உயர்ந்து கொண்டே போகையில், வரி கட்டாமல் பெரிய கம்பெனிகள் நடத்தும் வியாபாரம் ஆண்டுக்கு 80 லட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதாவது, டாடாவும், அம்பானியும், அதானியும், விஜய் மல்லையாவும் அவர்களைப் போன்ற சில நூறு பெரும் பணக்காரர்களும் ஒழுங்காக வரி கட்ட ஆரம்பித்து, அவர்கள் குவிக்கும் லாபத்தின் மீது அதிக வரிகளை விதித்தால் உழைக்கும் மக்கள் வாங்கும் பொருட்கள் மீது வரி போட வேண்டிய அவசியமே இருக்காது. நிறைய அரசு பள்ளிகளை திறக்கலாம். அரசு மருத்துவமனைகளை திறக்கலாம். அதில் எல்லோருக்கும் தரமான, சமமான கல்வி, மருத்துவம் வழங்கலாம். எல்லோருக்கும் ரேஷன் கடையின் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களை நியாய விலையில் வழங்கலாம். இதற்கெல்லாம் போதுமான பணம் அரசிடம் போய்ச் சேரும் பணக்காரர்கள் தமது ஆடம்பர செலவுக்கும் விருப்பம் போல சூதாடுவதற்கும் பயன்படுத்துவதற்கான பணத்தின் அளவுதான் குறையும்.

ரூபாய் நோட்டு செல்லாமல் போவதும், விவசாயிகள், சிறு வணிகர் வாழ்க்கையும்

இதைச் செய்யாமல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதன் மூலம், பணக்கார முதலாளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் தமது வரி ஏய்க்கும் திருட்டுப் பண வியாபாரங்களை வங்கிக் கணக்குகள் வழியாகவும், வெளிநாட்டு வர்த்தகம் வழியாகவும் தடையில்லாமல் தொடர்கிறார்கள்.

உழைக்கும் மக்கள் தாம் சம்பாதித்த பணத்தை, சேமித்த பணத்தை எடுத்து பயன்படுத்த முடியாமல் நெருக்கடி ஏற்பட்டதுதான் மிச்சம். விவசாயிகள், மளிகைக் கடை, காய்கறிக் கடை நடத்தும் சிறு வியாபாரிகளுக்கு பெருத்த அடி. இது போன்று சொற்ப அளவு சொந்தமாக சொத்து வைத்திருக்கும் நடுத்தர விவசாயிகளிடமும், மளிகைக் கடை, காய்கறிக் கடை வணிகர்களிடமும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை விட கொஞ்சம் கூடுதல் வசதிகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

காலையில் 3 மணிக்கு எழுந்து கோயம்பேடுக்கு போய் காய்கறி எடுத்து வந்து, 6.30 மணிக்கு கடையைத் திறந்து வருபவர்களுக்கெல்லாம் பொருட்களை விற்று, நடுவில் கிடைத்த நேரத்தில் சாப்பிட்டு, குளித்து தூங்கி, இரவு 10, 11 மணி வரை உழைப்பவர்கள்தான் சிறு வணிகர்கள். விவசாயிகளின் வாழ்க்கையும் விடிந்தது முதல் அடைவது வரை ஓயாத உழைப்பால் நிறைந்திருக்கிறது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்த அறிவிப்பு விவசாயிகள், சிறு வணிகர்கள் அடங்கிய இந்தப் பிரிவினரை கடுமையாக பாதித்திருக்கிறது. அவர்கள் கைவசம் இருக்கும் சேமிப்பையும் புழங்கும் பணத்தையும் புதிய நோட்டுகளாக மாற்றுவதில் சிக்கல், வியாபாரத்துக்குத் தேவையான பணத்தை வங்கிகளிலிருந்து பெறுவதில் கெடுபிடிகள் கட்டுப்பாடுகள், தட்டுப்பாடுகள் என்று அவர்களது பொருளாதாரமே முடங்கி நிற்கிறது. நாட்டின் சுமார் 9 கோடி விவசாய குடும்பங்களும், சில்லறை வணிகத்தை சார்ந்து வாழும் 1 கோடி குடும்பங்களும் தலைக்கு 10,000 ரூபாய் இழந்திருந்தாலும் அவர்களது மொத்த இழப்பு 1 லட்சம் கோடி ரூபாயை எட்டி விடும். இந்த இழப்பை தாங்கிக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியாமல் பலர் நொடித்துப் போக நேரிடலாம்.

அதே நேரம், பல 10,000 கோடிகளை குவித்து வைத்திருக்கும் பெரு முதலாளிகளுக்கும், கல்வி வியாபாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் அவர்களது சொத்தில் ஒரு பகுதி இழக்க நேரிட்டாலும் அது ஒரு கொசுக்கடி போல முடிந்து விடும். நொடித்துப் போகும் விவசாயிகள், சிறு வணிகர்களின் இடத்தை பிடித்துக் கொண்டு இன்னும் அதிகமாக லாபத்தை குவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

தேவை வங்கிக் கணக்கா, வர்க்கப் போராட்டமா?

நம் எல்லோரையும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கச் சொல்கிறார்கள். கடன் அட்டை, காசு அட்டை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளச் சொல்கிறார்கள். மாதம் 7,000 ரூபாய் சம்பளம் வாங்கினால் செலவுக்கே போதவில்லை. அதை வங்கிக் கணக்கில் எப்படி போடுவது? 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்ததற்கு பதிலாக குறைந்த பட்ச சம்பளம் எல்லோருக்கும் ரூ 20,000-க்கு குறையாமல் கொடுக்க வேண்டும் என்று சட்டம் போட்டால், பணக்கார முதலாளிகளிடம் குவியும் லாபத்தில் ஒரு பகுதி நம்மிடம் வந்து நாம் செலவுகளை சமாளித்து சேமிக்க முடியும். வங்கிகளையும் பயன்படுத்த முடியும். அதை மோடி அரசோ, வேறு எந்த அரசோ செய்யப் போவதில்லை என்பதுதான் உண்மை.

சரி, அப்படியே வங்கிகளில் நாம் எல்லோரும் பணத்தை போட்டு விட்டால் யாருக்கு பலன்?

அதனால் திருட்டுச் சொத்துக்கள் (கருப்புப் பணம்) ஒழிந்து விடுமா? வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் திருட்டுத் தனமாக சேர்த்து உழைக்கும் மக்களைச் சுரண்ட பயன்படும் நிலம், கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள் திருட்டு முதலாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டு விடுமா? நமது உழைப்புக்குக் கிடைக்கும் வருமானம் அதிகரித்து விடுமா?

எதுவும் நடக்கப் போவதில்லை. மாறாக, ஏற்கனவே நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து காண்டிராக்ட், அப்ரண்டிஸ், பயிற்சி என்ற பெயரில் சொற்ப கூலியில்தான் ஆள் எடுக்கிறார்கள். கல்வி, மருத்துவம், குடிநீர் வரைக்கும் தனித்தனியாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த தனியார் மய கொள்கையை ஒழித்துக் கட்டாமல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துக் கட்டினால் நமக்கு என்ன பலன் கிடைத்து விடும்?

மாறாக, ஏற்கனவே கோடி கோடியாக லாபம் சம்பாதிக்கும் பணக்காரர்களுக்கு கடன் கொடுப்பதற்குத்தான் வங்கிகளில் திரட்டப்படும் பணம் பயன்படும். ஏற்கனவே, 6.5 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்கள் என்று அறிவித்திருக்கின்றனர். இந்தக் கடன்களை வாங்கிய அனில் அம்பானி, விஜய் மல்லையா, பஜாஜ், அதானி போன்ற முதலாளிகள் கட்ட முடியாமல் நொடித்துப் போனதால் இல்லை, அவர்கள் வேண்டுமென்றே கட்ட மறுப்பதால் அவை வாராக் கடன்கள் ஆகியிருக்கின்றன என்கின்றன வங்கிகள். ஆனால், அவர்களது சொத்துக்களை ஜப்தி செய்து கடனை வசூலிக்கும் நடவடிக்கை இல்லை. அதைச் செய்வதற்கு மோடி அரசுக்கு தைரியம் இல்லை. ஏனென்றால், பெரும் பணக்காரர்களை நம்பி, அவர்களுக்காகத்தான் இந்த அரசு நடைபெறுகிறது. அவர்கள்தான் மோடிக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் சூட்டு வாங்கிக் கொடுக்கிறார்கள், வெளிநாட்டுக்குப் போவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

மேலும், விவசாயிகள், சிறு வணிகர்களை வங்கிக் கணக்கு திறக்க வைப்பது அவர்களது சொற்ப அளவு சொத்தையும் பெரிய கம்பெனிகள் கைப்பற்றுவதை எளிதாக்கிக் கொள்வார்கள். நம் தெருமுனையில் இருக்கும் மளிகைக் கடை அண்ணாச்சியும், விவசாயம் செய்து நாட்டுக்கே சோறு போடும் விவசாயிகளும் நம்மைப் போல கூலி வேலை நாடி, காண்டிராக்டர் வருகைக்காக நாற்சந்தியில் நிற்கும் நிலை ஏற்படுவதுதான் முன்னேற்றம் என்கிறார்கள், அது யாருக்கு முன்னேற்றம். பெரிய கம்பெனிகளுக்குத்தான் அது முன்னேற்றம்.

உழைக்கும் மக்களான நமது முன்னேற்றம் நமது உள்ளங்கையில்தான் உள்ளது. நமது உழைப்பை நம்பி வாழும் நம் நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பவர்களாக மாறுவதுதான் நமக்கும் நாட்டுக்கும் முன்னேற்றம்.

என்னதான் தீர்வு?

இதை எல்லாம் தொகுத்துப் பார்க்கும் போது தெரிவது என்னவென்றால், இந்த அரசை நம்ப முடியாது! இது வெளியிடும் ரூபாய் நோட்டுகளை நம்ப முடியாது! இது நடத்தும் வங்கிகளை நம்ப முடியாது! இந்த அரசை நம்பி, அதன் ரூபாய் நோட்டுகளை நம்பி, அதன் வங்கிகளை நம்பி நமது உழைப்பின் பலனை பெற்றுக் கொள்ளவோ, எதிர்காலத்துக்கு சேமிக்கவோ முடியாது.

மோடி அரசை எதிர்ப்பதாகச் சொல்லும் எதிர்க்கட்சிகளோ பெரும் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள், அல்லது சொந்த வாழ்க்கையை பார்த்துக் கொள்ளும் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். சாதி, மத, மொழி அடிப்படையில் உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்கிறார்கள். இவர்களை நம்பி 70 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு நம் நாடும், நிலமும், நீரும் கொள்ளை போய்க் கொண்டிருப்பதும், உழைப்பாளர்களின் வாழ்க்கை உத்தரவாதமற்று போயிருப்பதும்தான் மிச்சம்.

எனவே, நம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான் தீர்வு.

கிராமங்களில், பணியிடங்களில், நகர குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் கமிட்டிகள் ஏற்படுத்தி இத்தகைய நிலைமைகள் கூட்டாக எதிர்கொள்வதற்கு தயாராவோம்.

கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், பட்டறை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என உழைத்துப் பிழைக்கும் பிரிவினரால் ஆன, அவர்களால் நிர்வகிக்கப்படும் அத்தகைய கமிட்டிகள் உறுப்பினர்களின் அறிவையும், அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்தி நெருக்கடிகளை சமாளிப்பதற்கு திட்டமிட்டுக் கொள்ளலாம். நேர்மையானவராக, மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவராக இருக்கும் பட்சத்தில் அந்தப் பகுதி வங்கி மேலாளர், அரசு அதிகாரிகளைக் கூட தனிநபர்கள் என்ற அடிப்படையில் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, அப்படி ஒரு கட்டமைப்பு உருவாகியிருக்கும் பட்சத்தில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எப்படி கையாண்டிருக்கலாம்?

ஒவ்வொரு பகுதியிலும் புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வருவது வரை நாம் நமது சக உழைப்பாளர்களுக்கு கூலியை, உணவை, பிற பொருட்களை மறுக்க மாட்டோம். பழைய நோட்டுகளை அல்லது நாமே உருவாக்கிக் கொண்ட வேறு ஏற்படுகளை பயன்படுத்தி நமது பொருளாதார வாழ்வை பாதிப்பின்றி தொடர்வோம். அரசு புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு முடித்த பிறகு அவற்றை பயன்படுத்துவதை பற்றி பரிசீலனை செய்வோம்.

அ. தற்காலிகமாக, உள்ளூர் பரிமாற்றங்களுக்கு பணத்துக்கு மாற்றாக வேறு ஏதாவது சரக்கு அல்லது முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு பற்றுச் சீட்டை பயன்படுத்தலாம்.

ஆ. இதே போன்ற பிற பகுதி கமிட்டிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி அவர்களுடனும் இதே போன்ற முறையை வகுத்துக் கொள்ளலாம்.

அறிமுகம்நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

நிலத்தை கைப்பற்றி ரியல் எஸ்டேட் செய்பவர்கள், தண்ணீரை உறிஞ்சி வியாபாரம் செய்பவர்கள், வட்டிக்குக் கடன் கொடுத்து உழைக்கும் மக்களின் பணத்தை சுரண்டுபவர்கள், தனியார் பள்ளி, கல்லூரி நடத்தி லாபம் குவிப்பவர்கள், சாராய விற்பனை, இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பது, ஆள் சப்ளை செய்வது போன்ற தொழில்களில் பணம் குவிப்பவர்கள் போட்டியிடும் தேர்தல் அரசியல், திருடர்களின் அரசியல். இந்த மக்கள் விரோத தேர்தல் அடிப்படையிலான போலி ஜனநாயகத்துக்கு மாற்றாக புதிய ஜனநாயகத்தை கட்டியமைக்கும் புரட்சிப் பாதை ஒன்றே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான, நல்வாழ்வுக்கான பாதை என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் பணியாற்றி வருபவர்கள்.

நாங்கள் உழைக்கும் மக்களுக்கும் விவசாய பெருமக்களுக்கும் சேவை செய்யும் தொண்டர்கள், மக்களைச் சுரண்டும் கொள்ளையர்களுக்கு பகைவர்கள்.

Series Navigation<< டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetisation-ndlf-it-message-to-working-class/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வட சென்னையில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

முன்னுரை திரைப்படங்களுக்கும் ஒரு ஐ.டி தொழிற்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சமீபத்தில் ஒரு சில வார இடைவெளிக்குள் வெளியான 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டெக்னிகல் தரத்தை உலக...

பா.ஜ.க-வின் வதைமுகாம் திட்டம்

நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ஐ.டி ஊழியர்கள் சென்னையிலும், பெங்களூருவிலும், ஹைதராபாதிலும், புனேவிலும் வேலை செய்கின்றனர். உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் கூட உழைக்கும் மக்களின்...

Close