பண மதிப்பு அழிப்பு : ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடியின் அட்டகாச லாஜிக்

சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 ரூபாய், 1000 ரூபாய் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அடுத்த நாள், இது “‘துல்லிய தாக்குதல் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம்‘ என்பது போன்ற வெற்றுச் சவடால். மக்கள் போராட்டங்கள் குறித்தோ, பொருளாதாரம் குறித்தோ அடிப்படை புரிதல் இல்லாத, நடைமுறையை கோணலாக புரிந்து கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் மக்கள் மீதான தாக்குதல்” என்று வாதிடும் கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

இதைத் தொடர்ந்து பணம், கருப்புப் பணம், ஊழல் ஒழிப்பு இவை பற்றிய அடிப்படைகளை தொகுத்து வெளியிட்டிருந்தோம்.

இன்று பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையின் விளைவுகள் அனைவராலும் உணரப்படுகின்றன. கார்ப்பரேட்டுகள் முதல், ஆட்டோ ஓட்டுனர்கள் வரை அந்த நடவடிக்கை ஏற்படுத்திய சேதத்தை உணர்கிறார்கள்.

இந்நிலையில் பண மதிப்பு அழிப்பு ஏற்படுத்திய மோசமான சேதங்கள் பற்றிய ஒரு சில கருத்துக்களை பகிர்நது கொள்கிறோம்.

பண மதிப்பு அழிப்பின் விளைவுகள் – 1

மக்கள் போராட்டங்கள் குறித்தோ, பொருளாதாரம் குறித்தோ அடிப்படை புரிதல் இல்லாத, நடைமுறையை கோணலாக புரிந்து கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி

ண மதிப்பு அழிப்பு நடவடிக்கையை அறிவித்த போது மோடியும் அவரது பா.ஜ.க ஆலோசகர்களும் உண்மையிலேயே ‘லஞ்ச ஊழலை ஒழித்துக் கட்ட, கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர, காஷ்மீரிலும், வடகிழக்கிலும் நக்சல் பகுதிகளிலும் பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த, கள்ள நோட்டுகளை பிடிக்க அதுதான் ஒரே வழி’ என்ற முழு நம்பிக்கையுடன் பேசினார்கள், வாதிட்டார்கள்.

அவர்களது தர்க்கம் என்ன? புத்திசாலியான ஒரு 4-ம் வகுப்பு மாணவனின் ‘நாட்டில் வறுமையை ஒழிக்க ஏன் அரசு நிறைய நோட்டுகளை அச்சடித்து தலைக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாது’ என்பது போன்ற தர்க்கம்தான் அவர்களது.

‘லஞ்சம் எப்படி கொடுக்கிறார்கள், கட்டுக் கட்டாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை சூட்கேஸ்களில் அல்லது கோணிப்பையில் வைத்து பரிமாறிக் கொள்கிறார்கள். ரூபாய் நோட்டுகளை தடை செய்து விட்டால் எப்படி லஞ்சம் கொடுப்பார்கள்?’ என்று யோசித்திருக்கிறார்கள்.

அடுத்து, கோணிப்பைகளையும் சூட்கேஸ்களையும் தடை செய்து லஞ்சத்தை ஒழிக்க முயற்சிப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தீவிரவாதம் பற்றிய அவர்களுடைய புரிதலும் ஒரு கொச்சையானதுதான்.

‘பயங்கரவாதிகள் எப்படி தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள்? பாகிஸ்தான் கள்ள நோட்டாக அச்சடித்து அனுப்பிய பணம் கொடுத்து வாங்குகிறார்கள். அந்தப் பணத்தை செல்லாததாக்கி விட்டால் பயங்கரவாதிகள் எல்லாம் திருந்தி விடுவார்கள் அல்லவா?’ என்று சிந்திக்கிறார்கள்.

“மக்கள் ஒரு சில நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டங்களை சகித்துக் கொண்டால் கருப்புப் பண முதலைகளை ஒழித்துக் கட்டி விடலாம்”

அடுத்து, காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கடைகள் இருப்பதால்தானே தீவிரவாதிகள் பொருட்களை வாங்க முடிகிறது என்று கடைகளை எல்லாம் இழுத்து மூடலாம் என்று கூட யோசிப்பார்கள். தம் மீதான அடக்குமுறையை எதிர்த்த மக்கள் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று கொச்சைப்படுத்தி, போராடும்  மக்களை ‘கூலிக்கு போராடுபவர்கள்’ என்று இழிவுபடுத்தும் அவர்களது சிந்தனை இந்த அளவில்தான் இருக்க முடியும்.

இப்படி பள்ளி மாணவன் மட்டத்திலான கணக்கு போட்டுத்தான், 38 நிமிடங்களுக்கு இந்தியிலும், 24 நிமிடங்கள் ஆங்கிலத்திலும் நேர்மை, வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கருப்புப் பண முதலைகள், பயங்கரவாதம், கள்ள நோட்டு என்று கதை சொல்லி பண மதிப்பு நீக்கத்தை அறிவித்தார், மோடி. ‘நேர்மையான நாட்டு மக்கள் ஒரு சில நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டங்களை சகித்துக் கொண்டால் கருப்புப் பண முதலைகளை ஒழித்துக் கட்டி விடலாம்’ என்று வாக்குறுதி அளித்தார்.

இதற்கான ஆதாரங்கள் என்று சொல்லி பல்வேறு மதிப்பீடுகளை அரசுத் தரப்பு அள்ளி விட்டது. ‘செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 15.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 4-5 லட்சம் கோடி காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தீவிரவாதிகளிடமும் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது’ என்று நவம்பர் 2016-ல் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார் மோடியின் அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி.

அரசிடம் சம்பளம் வாங்கும் தலைமை வழக்கறிஞர் தனது அறிவை வீட்டில் விட்டு விட்டு நீதிமன்றத்துக்கு வந்தார் என்று புரிந்து கொண்டாலும், உலகுக்கே பொருளாதார விளக்கங்களை அளிக்கும் பா.ஜ.க ஆதரவு அறிஞர்களும் அதே பாட்டைத்தான் பாடினார்கள்.

சுவாமிநாதன் அய்யர் என்ற பொருளாதார நிபுணர் ‘தமது மெத்தைகளுக்குக் கீழும், அலமாரிகளுக்குள்ளும் கோடி கோடியாய் பணத்தை கட்டி வைத்திருக்கும் கருப்புப் பண முதலைகள் தமது பணத்தை டெப்பாசிட் செய்ய முடியாமல் போகும். அப்படி சில லட்சம் கோடி ரூபாய் திரும்பி வராமல் போய் விட்டால், ரிசர்வ் வங்கி அதை அரசுக்கு லாபமாக வழங்கலாம். அதை வைத்து 25 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் ஒவ்வொன்றிலும் தலா ரூ 10,000 போடலாம்’ என்று ஆலோசனை வழங்கினார்.

“ஜூம்லா”

இதில் எதுவுமே நடக்கவில்லை. கிட்டத்தட்ட 99% செல்லா நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. எஞ்சிய நோட்டுகளும் நேபாளத்திலும், வெளிநாட்டு இந்தியர்களிடமும், கூட்டுறவு வங்கிகளிடமும் இருக்கின்றன என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

சரி, அது எல்லாம் சும்மா ஒரு “ஜூம்லா”வுக்கு சொன்னது. ‘தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடுவேன்’ என்று மோடி சொன்னது போன்ற சவடால் என்று வைத்துக் கொள்வோம்.

இப்போது அருண் ஜெட்லியும் பா.ஜ.க தொலைக்காட்சி பேச்சாளர்களும் சொல்வது போல ‘நோட்டு புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவது, அதன் மூலம் வரி ஏய்ப்பை தடுப்பது, கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் மோடியின் நோக்கம்’ என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நோக்கத்துக்கும் ரொக்கப் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் சிந்தனையில் அதற்கும் ஒரு தர்க்கம் இருக்கிறது.

‘மக்களை மின்னணு பரிவர்த்தனைகளை பயன்படுத்த வைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் கூலியாக வாங்கி வைத்திருந்த, சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை பிடுங்கி விட்டால், அவர்கள் எப்படியாவது வங்கியில் கணக்கு ஆரம்பித்து, அந்த அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்க ஆரம்பித்து விடுவார்கள். கடைக்காரர்கள் எப்படியாவது அட்டை தேய்க்கும் கருவி வாங்கி வாடிக்கையாளர்களுக்கு அட்டை தேய்த்து பொருட்களை விற்க ஆரம்பித்து விடுவார்கள். நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் மின்னணு முறையில் நடக்க ஆரம்பித்து விடும்.’ என்பதுதான் அந்த மோடினாமிக்ஸ் தர்க்கம்.

கட்டுமானத் தொழில், விவசாய விளைபொருட்கள் கொள்முதல், அதோடு தொடர்புடைய வேலைகள், சிறுதொழில்கள் போன்றவை முடங்கி போயின

ஆனால், நடைமுறையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து கணிசமாக அதிகரித்த படித்த நடுத்தர வர்க்கத்தின் மின்னணு பரிவர்த்தனைகள், புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்துக்கு வந்த பிறகு மே மாத மின்னணு பரிமாற்றங்களின் மதிப்பு பண நீக்கத்துக்கு முந்தைய நவம்பர் மாத அளவுக்கு போய் விட்டிருக்கிறது.

நிஜ உலகில் என்னதான் நடக்கிறது? கையில் பணம் இல்லை என்றால் வங்கிக் கணக்கின் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என்பது அதற்கான வசதி வாய்ப்பும், அந்த முறையை பயன்படுத்தி பழகி, நம்பிக்கை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் இருக்கும் ஒரு வழி.

அதாவது அது நாட்டின் பொதுவான பொருளாதார வளர்ச்சியை சார்ந்தது; நாட்டு மக்கள் இத்தகைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான அறிவையும் பரிச்சயத்தையும் பெறுவது, இணைய இணைப்பு, கணினி வசதிகள் போன்ற கட்டமைப்புகள் வளர்ந்திருப்பது, எல்லாவற்றுக்கும் மேலாக, அன்றாட கூலிகளாக இல்லாமல், போதுமான ஊதியம், நிரந்தர வேலை என்று எதிர்காலத்துக்கு சேமிக்கும் அளவுக்கு வருமானம் ஈட்டுவது இதற்கு முன்தேவையாக இருக்கிறது.

இதை எல்லாம் புறக்கணித்து விட்டு  மோடி அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததும் 90%-க்கும் அதிகமான பரிமாற்றங்கள் ரொக்கமாக நடக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் புள்ளிகள் ‘எப்போது கையில் பணம் வருகிறதோ அப்போது நமது வேலையை ஆரம்பித்துக் கொள்ளலாம்’ என்று இருந்து விட்டார்கள். கட்டுமானத் தொழில், விவசாய விளைபொருட்கள் கொள்முதல், அதோடு தொடர்புடைய வேலைகள், சிறுதொழில்கள் போன்றவை முடங்கி போயின.

வேலை இல்லை என்றால் சும்மா இருந்து விட முடியாதவர்கள் அன்றாட தினக் கூலிகள், விவசாயிகள். கூலித் தொழிலாளர்களுக்கு அன்றன்று வேலை கிடைத்து உழைத்தால்தான் அன்றன்றைக்கு சாப்பாடு; விவசாயிகள் விளைபொருட்களை உடனடியாக விற்றே தீர வேண்டும்.

பணப் புழக்கம் நெரிக்கப்பட்டு விட்டவுடன், கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல், வேலை கிடைத்தாலும் கூலி தரப்படாமல் பட்டினி கிடக்க வேண்டியது நேர்ந்தது; விவசாயிகள் விளைபொருட்களை வாங்க ஆளில்லாமல் கொட்டி விட்டு போக வேண்டியது ஏற்பட்டது.

இவ்வாறு இந்தியப் பொருளாதாரத்தின் பெரும்பான்மை நடவடிக்கைகள் ஸ்தம்பித்து போய் விட்டன.

– டார்வின்

(அடுத்த பகுதியில் தொடரும்)

Series Navigationகருப்புப் பணம் : மலையைக் கெல்லி எலியைக் கூட பிடிக்காத மோடி >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை? வங்கியில் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்! நமது சேமிப்புப் பணத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க அனுமதியோம்.

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

சென்னையில் நேற்று முன்தினம் (13/2/2018) அதிகாலை 2 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த...

Close