கருப்புப் பணம் : மலையைக் கெல்லி எலியைக் கூட பிடிக்காத மோடி

பண மதிப்பு அழிப்பின் விளைவுகள் – 2

மோடியின் பண மதிப்பு நீக்க பேரழிவு நடவடிக்கையை தொடர்ந்து, ‘இந்தக் முரட்டுக் கொள்ளையர்களை விட கமுக்கமாக கழுத்தறுத்த கொள்ளையர்களான நாங்களே பரவாயில்லை’ என்று மக்களுக்குக் காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

 • ‘பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் குறைந்து விடும்.
 • இது இந்த அரசின் நிர்வாகத தோல்வியை காட்டுகிறது.
 • இது அமைப்பு ரீதியாக மக்களை கொள்ளையிடும் நடவடிக்கையாக உள்ளது.
 • சட்டரீதியாக பொதுமக்களின் பணம் பறிக்கப்பட்டிருக்கிறது.’ என்று குற்றம் சாட்டினார்.

ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாய்கள் போல நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென் உட்பட பல்வேறு பொருளாதார நிபுணர்கள் பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையின் பொருளாதார விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தார்கள்.

இதைத்தான் ‘ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்தவர்கள் எல்லாம் ஜி.டி.பி வளர்ச்சி குறைந்து விடும் என்றார்கள், இந்த ஏழை மனிதரின் மகன் ஹார்ட் வொர்க் (கடின உழைப்பின்) மூலம் அவர்களை எல்லாம் தோற்கடித்து விட்டேன்’ என்று தனது 56 இஞ்ச் மார்பை தட்டிக் கொண்டார் மோடி. அதாவது, பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்று பீற்றிக் கொண்டார்.

இப்போது ஏப்ரல் – ஜூன் 2017 காலாண்டுக்கான வளர்ச்சி வீதம் 5.7% ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்கின்றன மத்திய அரசின் புள்ளிவிபரங்கள். முதலாளித்துவ ஊடகங்களும், பா.ஜ.க பிரமுகர்களும், காங்கிரஸ் கட்சியினரும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிலாக்கணம் வைக்கின்றனர். பா.ஜ.க அமைச்சர்களும், இந்துத்துவ அமைப்புகளின் தொலைக்காட்சி பேச்சாளர்களுமோ, “[ஹார்ட் வொர்க்] மோடி ஆரம்பத்திலேயே நாட்டு மக்கள் சிறிதளவு சிரமங்களை சகித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்” என்று கூசாமல் அடித்து விடுகிறார்கள்

உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி)-யை கணக்கிடும் போது அமைப்புசாரா துறைகள் தொடர்பான புள்ளிவிபரங்கள் உடனடியாக கிடைப்பதில்லை. அமைப்புசார் துறைகளின் வளர்ச்சி வீதத்தை கணக்கிட்டு ஒப்பீட்டு அடிப்படையில் அமைப்புசாரா துறைகளின் வளர்ச்சி வீதத்தை கணக்கிடுகிறார்கள். ஆனால், பண மதிப்பு அழிப்பு நடவடிக்கை பெரும்பாலும் ரொக்க அடிப்படையில் இயங்கும் கட்டுமானம், மொத்த/சில்லறை விற்பனை, விவசாய பொருட்களின் கொள்முதல் போன்ற அமைப்புசாரா துறை நடவடிக்கைகளை முடக்கி போட்டு விட்டது. அமைப்புசார் கார்ப்பரேட்டுகள் உடனடியாக பெருமளவு பாதிக்கப்படவில்லை. எனவே கார்ப்பரேட் மற்றும் அரசுத் துறை புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அமைப்புசார் துறையிலும் வளர்ச்சியை மதிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும் 5.7% வளர்ச்சி வீதம் என்பதே கூட மிகைப்படுத்தப்பட்டதுதான்.

 1. ரிசர்வ் வங்கியின் ஒரு ஆய்வு ரூ 25 கோடிக்குக் குறைவான விற்பனை மதிப்பை கொண்ட சிறு நிறுவனங்களின் விற்பனை மார்ச் 2017-ல் முடிந்த காலாண்டில் 57.6% வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
 2. அக்டோபர் 2016-ல் வங்கிகளில் கடன் வாங்கும் தொகையின் வளர்ச்சி 5% ஆக இருந்தது, அது 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவானது. நவம்பர் – டிசம்பரில் அது இன்னமும் குறைந்து. 60 ஆண்டு இல்லாத அளவு குறைந்த மட்டத்தை அடைந்தது. கடந்த ஜூலை மாதம் வளர்ச்சி என்ற பேச்சே இல்லாமல் கடன் வாங்குவது முந்தைய ஆண்டை விட குறைந்திருக்கிறது.
 3. இது போன்ற பலவிதமாக புள்ளிவிபரங்களில் வெளிப்படாத, நாடு முழுவதிலும் மண்டிகளிலும், மொத்த விற்பனை மையங்களிலும், உழைப்புச் சந்தைகளிலும் அரங்கேறிய அவலக் கதைகளையும் சேர்த்தால் உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டை விட குறைந்து பொருளாதாரம் சுருங்கியிருப்பதே நிதர்சனம்.

இவ்வாறு மோடி பொறுத்துக் கொள்ளச் சொன்ன ‘தற்காலிக’ சிரமங்கள், பேரழிவாய் கோடிக்கணக்கான மக்களை வதைத்துக் கொண்டிருக்கையில், கருப்புப் பணத்துக்கு எதிராகத் தொடுத்த போரின் லட்சணம் என்னவென்று பார்க்கலாம். (சென்ற நவம்பர் மாதம் வெளியான கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?கட்டுரையைப் படிக்கவும்).

உண்மையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருப்புப் பொருளாதாரம் சுமார் 62%, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 120 லட்சம் கோடி எனில் கருப்புப் பொருளாதாரம் ரூ 75 லட்சம் கோடி. கருப்புச் சொத்துக்கள் இதில் 3 மடங்கு அதாவது சுமார் ரூ 225 லட்சம் கோடி. இவை ரியல் எஸ்டேட்டிலும், பங்குச் சந்தையிலும், தங்கத்திலும், வெளிநாட்டு சொத்துக்களிலும் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. சுமார் 5-6% மட்டுமே ரொக்கமாக புழங்குகின்றன. இது வருமான வரித்துறையும் அமலாக்கத் துறையும் கடந்த பல ஆண்டுகளில் நடத்திய தேடுதல்களில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் ரூபாய் நோட்டுகளை முடக்கினால் கருப்புப் பண முதலைகள் எல்லாம் ஓட்டாண்டிகளாகி தெருவுக்கு வந்து விடுவார்கள் என்று நம்பினார்கள் மோடியும் அவரது ஆலோசகர்களும்.

வரிசையில் நின்று, மயங்கி விழுந்து, உயிரை விட்டு, வாழ்வாதாரங்களை இழந்து சாதாரண மக்கள் தங்கள் வசம் இருந்த சில ஆயிரம், அல்லது சில லட்சம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் போட்டு மாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் பல கோடி, சில நூறு கோடி ரூபாய் கருப்புப் பணம் வைத்திருந்த பண முதலைகள் எந்த வரிசையிலும் நிற்காமலேயே அதை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

 • தங்கள் வசம் இருந்த ரொக்கத்தை கொடுத்து தங்கம் வாங்கிக் கொண்டார்கள்,
 • பெட்ரோல் பங்க், அரசு போக்குவரத்து கழகம், சில்லறை வியாபார மையங்கள் வாயிலாக மாற்ற ஏற்பாடு செய்து கொண்டார்கள்.
 • சில முதலாளிகள் ஊழியர்களுக்கு 6-8 மாதம் சம்பளத்தை வங்கிக் கணக்கில் போட்டார்கள்,
 • 1 கோடி வைத்திருப்பவர், அதை 2, 2 லட்சமாக பிரித்து 50 பேர் கணக்கில் போட்டார்.
 • மத்தியிலும், மாநிலத்திலும் அதிகார தொடர்புகள் இருக்கும் சிலருக்கு ரிசர்வ் வங்கியிலிருந்தும், வணிக வங்கிகளிலிருந்தும் நேரடியாக புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டன.

இப்படி டிசம்பர் 2-வது வாரத்திலேயே திரும்பி வரும் நோட்டுகளின் வேகத்தின் அடிப்படையில் பார்த்தால், கிட்டத்தட்ட அனைத்து நோட்டுகளும் வங்கிகளில் போடப்பட்டு விடும் என்று தோன்றியது. இதனால், மோடி அரசால் பதில் சொல்ல முடியாத கேள்விகள் எழுகின்றன என்று திரும்பி வரும் ரூபாய் நோட்டுகள் பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடுவதையே ரிசர்வ் வங்கி நிறுத்திக் கொண்டது.

கடந்த பிப்ரவரி மாதம் “ஒவ்வொரு நோட்டையும் கள்ள நோட்டா இல்லையா என்று கவனமாக சோதித்துக் கொண்டிருப்பதால் எண்ணி முடிப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும், எனவேதான் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படவில்லை” என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார்.

அவர் சொல்வதையே நம்புவோம். அப்படி கிட்டத்தட்ட 8 மாதங்களாக எண்ணி முடித்த பிறகு ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கையில் திரும்பப் பெறப்பட்ட நோட்டுகள் பற்றிய புள்ளிவிபரம் வெளியாகியிருக்கிறது. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளில் 99% ரிசர்வ் வங்கியின் கைக்கு வந்து விட்டது. சுமார் ரூ 16,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் அதாவது வெறும் 1% மட்டும், திரும்பி வரவில்லை.

புதிய நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கியின் செலவு 2015-16ல் ரூ 3,421 கோடி அளவிலிருந்து ரூ 7,965 கோடியாக அதிகரித்திருக்கிறது. இவ்வளவு பணமும் திரும்ப வந்ததால், அதை வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருப்பதால் அதன் மீது வட்டி கொடுத்த செலவையும் சேர்த்து மொத்தம் ரூ 21,000 கோடி செலவு. இப்போது திரும்பி வராத பணத்தின் மதிப்பு வெறும் ரூ 16,000 கோடி. இதனால், ரிசர்வ் வங்கி அரசுக்குக் கொடுத்த லாபப் பங்கு பாதியாகக் குறைந்திருக்கிறது.

“ரூ 21,000 கோடி செலவில் ரூ 16,000 மதிப்பிலான நோட்டுகளை முடக்கியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை பரிந்துரைத்தவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும்” என்று கிண்டல் செய்கிறார் ப. சிதம்பரம்.

மொத்தத்தில், கருப்புப் பண முதலைகள் ரொக்கப் பணத்தை வங்கிகளுக்கு அனுப்பி கருப்பை வெள்ளையாக்குவது என்ற மாய வித்தைக்கு மோடி உதவி செய்திருக்கிறார்.

– டார்வின்

(மூன்றாவது இறுதிப் பகுதியில் தொடரும்)

 

Series Navigation<< பண மதிப்பு அழிப்பு : ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடியின் அட்டகாச லாஜிக்பண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி யூனியன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்

புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கும் விதமாகவும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. தேர்தலில் பங்கெடுத்த அனைவருக்கும் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலில் பங்கெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட...

ஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன?

அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை...

Close