பண மதிப்பு அழிப்பு : தொடரும் பா.ஜ.க-வின் பொய் பிரச்சாரம்

ண மதிப்பு அழிப்பு ஆகட்டும், ஜி.எஸ்.டி ஆகட்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பேச்சாளர்களை பொறுத்தவரை புளுகுகளை பேச ஆரம்பித்த உடன் அவற்றை அவர்களே அப்படியே நம்பி விடுகிறார்கள். ஒரு புளுகு அம்பலமாகும்போது அதற்கு மேல் இன்னொரு புளுகை போட்டு புதிய புளுகின் மீதான விவாதத்தை கிளப்பி விடுவார்கள். எனவே, அவர்கள் தோற்பதே இல்லை. பா.ஜ.கவுக்கும் ஆர்.எஸ்.எஸ்க்கும் பண மதிப்பு நீக்கம் வெற்றிதான்.

அதன்படி டுவிட்டரில் “பணமதிப்பு நீக்கம் வெற்றி” என்ற ஹேஷ்டேகுடன் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள் அவர்கள்.

கள்ள நோட்டு

“8 மாதங்களாக திரும்பத் திரும்ப எண்ணியும், தடவி தடவி சரிபார்த்தும் சென்ற ஆண்டில் 7.62 லட்சம் போலி நோட்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (மதிப்பு ரூ 41 கோடி). 2015-16ல் பண மதிப்பு நீக்கம் இல்லாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட போலி நோட்டுகளின் எண்ணிக்கை 6.32 லட்சமாக இருந்தது” என்று சொன்னால், “கள்ளப் பணத்தை குவித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அதை வங்கிக்கு கொண்டு வர பயந்து எரித்திருப்பார்கள். அது எத்தனை லட்சம் கோடியோ” என்று ஒரே போடாக போடுகிறார்கள்.

நடைமுறையில் கள்ள நோட்டுகளை யாராவது அச்சடித்தாலும், அதை அச்சடித்து தமது அச்சுக் கூடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்து புரண்டு கொண்டிருக்கப் போவதில்லை, அதை உடனடியாக மக்களிடம் புழக்கத்துக்கு விட்டு விடுவார்கள். அப்படி விடப்பட்ட நோட்டுகள் வங்கிகளுக்கும் போகும், ரிசர்வ் வங்கிக்கும் போயிருக்கும். அப்படி சுற்றில் இருந்து ரிசர்வ் வங்கியிடம் போய்ச் சேர்ந்த நோட்டுகளின் மதிப்புதான் ரூ 41 கோடி. மேலும், மேற்கு வங்காளம், குஜராத், ஹரியானா மற்றும் பிற இடங்களில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை சொல்கிறது.

எனவே, கள்ள நோட்டை ஒழிப்பதிலும் மோடியின் நடவடிக்கை பலன் அளிக்கவில்லை.

கள்ள நோட்டால்தான் காஷ்மீரில் போராட்டங்களே நடக்கின்றன என்று சாதித்துக் கொண்டிருந்த மோடி அரசிடம் இப்போது தினமும் நாளிதழ்களில் காஷ்மீரில் நிகழும் தாக்குதல்கள் பற்றிய செய்திகளுக்கு பதில் இல்லை.

கருப்புப் பணம்

‘உங்களுக்கு கருப்புப் பணத்தை முடக்குவது என்றால் என்ன என்றே புரியவில்லை, அவ்வளவு பணமும் வங்கிக்கு வந்து விட்டதுதான் வெற்றி’ என்கிறார்கள் “ஒவ்வொரு நோட்டும் யாரிடம் இருக்கிறது என்ற தடத்தை உருவாக்கியிருப்பதுதான் வெற்றி” என்று சாதிக்கிறார்கள். அப்படி உருவாக்கிய தடத்தை வைத்து பணமதிப்பு அழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு நடந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்த ரூ 88 கோடி பணம், யாருடைய கணக்கில் இருந்து யாருடைய பெயரில் எடுக்கப்பட்டது? என்று இதுவரை இவர்களால் கண்டுபிடிக்கவில்லை.

மின்னணு பரிமாற்றம்

மின்னணு பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, அரசு அறிமுகப்படுத்திய UPI பரிமாற்ற முறையில் வெறும் ரூ 2241 கோடி மட்டுமே புழங்கியிருக்கிறது. மொத்த பணப் புழக்கத்தில் இது 1% மட்டுமே. இந்தியாவின் 30 கோடி ஸ்மார்ட் தொலைபேசி பயனாளர்களில் 5%-க்கும் குறைவானவர்கள் (1.45 கோடி) மட்டுமே BHIM ஆப்-ஐ டவுன்லோட் செய்திருக்கிறார்கள். மேலும், BHIM மூலமாக ஒரு நாளைக்கு சராசரி பரிமாற்றங்கள் 1.28 லட்சம் மட்டுமே. எனவே இந்த 1.45 கோடி பேரில் கூட 0.88% மட்டுமே அதை பயன்படுத்துகிறார்கள். இது ஒட்டு மொத்த மக்கள்தொகையில் 0.01%.

நவம்பர் 2016-ல் 67.1 கோடியாக இருந்த டிஜிட்டல் பரிமாற்றங்களின் எண்ணிக்கை டிசம்பர் 2016ல் 95.7 கோடியாக அதிகரித்தது. ஆனால், ஜூலை 2017ல் அது 86.2 கோடியாக குறைந்து விட்டது. மேலும், புழக்கத்தில் விடப்பட்டுள்ள கரன்சி நோட்டுகளின் அளவு நவம்பர் 4 2016 அன்று இருந்த அளவில் 85% ஆக அதிகரித்து விட்டது.

எனவே, டிஜிட்டல் பொருளாதாரம் என்பதைப் பொறுத்தவரையில் போதுமான பணம் கிடைக்க ஆரம்பித்தவுடன் மக்கள் பண மதிப்பழிப்புக்கு முந்தைய, இந்தியப் பொருளாதாரத்தின் தன்மைக்கு உகந்த நடைமுறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். மோடி, அருண் ஜெட்லி தர்க்கம் இங்கும் செல்லுபடியாகவில்லை.

வருமான வரி

வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்ற பிரச்சாரத்தில் என்ன உண்மை இருக்கிறது என்று பார்க்கலாம். 2015-16ல் வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை 26% அதிகரித்தது. ஆனால், 2015-16ல் அந்த வளர்ச்சி வீதம் 27.6% ஆக இருந்தது. (5). அதாவது பண மதிப்பு அழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட அதிகரிப்பு முந்தைய ஆண்டுகளில் நிகழ்ந்த அதிகரிப்பை ஒத்தே இருக்கிறது.

பங்குச் சந்தை

இப்படி பண மதிப்பழிப்பின் பலன்கள் பா.ஜ.க-வின் பிரச்சாரம் ஒவ்வொன்றும் மூக்கடிக்க வீழ்ந்து கொண்டிருக்க, செல்லாத ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்த புள்ளிவிபரம் வெளியான அன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்தது; அதற்கடுத்த நாள் நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி வீதம் 5.7% ஆக குறைந்த புள்ளிவிபரம் வெளியான அன்றும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்தது. மின்னணு பண பரிமாற்ற நிறுவனங்களான பே-டிம், மொபி-க்விக், கடன் அட்டை நிறுவனங்கள் வளர்ச்சியடைந்தன.

இந்தியப் பொருளாதாரத்தின் முட்டிகளை உடைத்து படுக்கையில் போடுவது இந்திய பங்குச் சந்தைகளிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் மூலதனத்தை கொட்டியிருக்கும் அன்னிய நிதிமூலதனத்துக்கு தேவையானதாக இருக்கிறது. இந்தியாவில் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும், வட்டி வீதம் உயரக் கூடாது. அப்போதுதான் பங்குச் சந்தையில் வாங்கிய பங்குகளை விற்று பெறும் ரூபாய்களை டாலராக மாற்றும் போது இழப்பு ஏற்படாது.

இந்தியாவின் அமைப்புசாரா துறைக்கு மரண அடியாக விழுந்த பணமதிப்பு நீக்கம், எவ்வளவுக்கெவ்வளவு சிறுவணிகர்கள், சிறு தொழில்கள், அமைப்புசாரா தொழிலாளர்களை பாதித்ததோ, அவ்வளவுக்கவ்வளவு அது நிதிமூலதனத்தின் மதிப்பை மாறாமல் பாதுகாத்தது.

பண மதிப்பு நீக்கம் பா.ஜ.கவுக்கு அரசியல் ரீதியாகவும் பன்னாட்டு நிதி மூலதனத்துக்கு பொருளாதார ரீதியாகவும் வெற்றி. இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு தன்னை தாக்காமல் வேறு நாட்டுக்கு பாய்ந்து ஓடி விடும் இந்த முதலீட்டாளர்களுக்கு ஆதாயம். இந்திய உழைக்கும் மக்களுக்கு அனைத்து வகையிலும் இழப்பு.

– டார்வின்
(நிறைவடைந்தது)

Series Navigation<< கருப்புப் பணம் : மலையைக் கெல்லி எலியைக் கூட பிடிக்காத மோடி

Permanent link to this article: http://new-democrats.com/ta/demonetization-after-math-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது.

பாலியல் தொல்லைக்கு எதிராக பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு

முன்னேறிய நாடுகளில் வேலை போய் விடும் என்ற பயத்தில் புகார்களை தவிர்ப்பது என்ற காரணத்தோடு இந்தியாவில் பிற்போக்கு கலாச்சார பின்னணியும் கூடுதல் சுமையாக பெண்களை அழுத்துகிறது.

Close