பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்

 1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
 2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
 3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
 4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
 5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
 6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
 7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
 8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

ம்மை வங்கிக் கணக்கு, மின்னணு பணப்பை, பணமில்லா பொருளாதாரம் என்று அடித்து அடித்து திணித்துக் கொண்டிருக்கிறார், மோடி. அவர்களே சொல்வது போல இந்தத் திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அமல்படுத்தப்பட்டு வருகிறது. “அனைவருக்கும் வங்கிக் கணக்கு” “உங்கள் பணம் உங்கள் கையில்” “ஆதார் அடையாள அட்டை”, “நுண்கடன் திட்டம்”, “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு வங்கிக் கணக்கு” என்று இதற்கான தயாரிப்புகள் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன. இதை இன்னும் முரட்டுத்தனமாக, அடித்து அமல்படுத்துவது மட்டும்தான் மோடியின் சிறப்பு

“வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி வசதி”, “உழைக்கும் மக்களுக்கு நிதித்துறையை திறந்து விடுவது”, “மக்களை நிதித்துறையில் இணைப்பது” என்றும் இன்னும் பல வழிகளிலும் பரந்து பட்ட மக்களை நிதித்துறைக்குள் நுழைத்து அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தி விடப் போவது போல பிரச்சாரம் செய்கின்றனர் நிதித்துறை மேட்டுக்குடியினர். ஆனால், உண்மையில் இன்னும் பல கோடி மக்களை உலகளாவிய வங்கித் துறை, உலகளாவிய நிதிச் சந்தைகள், நிதிக் கருவிகள், மற்றும் ஊக வணிகத்துக்குள் இழுத்து விட்டு தமது நிதித்துறை சூதாட்டத்துக்கான களத்தை விரிவுபடுத்துவதுதான் அவர்களது நோக்கம். ஊக வணிகம் என்று கவுரவமாக அழைக்கப்படும் சூதாட்டத்துக்கு போடுவதற்கான இரையாக இந்தியாவையும் இந்திய மக்களையும் தயாரிக்கிறார்கள்.

dbt

டிஜிட்டல் அடிமைகளாக மாற்றும் மோடியின் முயற்சி

அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய கட்டற்ற சூதாட்டம் 2007-ல் நிதி நெருக்கடியாக வெடித்தது. சூதாடிய முதலீட்டு வங்கிகளும், நிதித்துறை மேட்டுக் குடியினரும் மக்களின் வரிப்பணத்தை எடுத்து தம்மை மீட்டுக் கொண்டனர், அதற்கு அந்த நாடுகளின் அரசுகள் சேவை செய்தன.

நெருக்கடியில் முடிந்த இந்த சூதாட்டத்தில் என்னதான் நடக்கிறது? ஒரு சில கருப்பு ஆடுகளின் சதித்திட்டம் மட்டும்தான் பிரச்சனையா? அல்லது இதற்கு மேலும் மூலதனத் திரட்சி வளர்ந்து செல்லும்போது தவிர்க்க முடியாமல் நெருக்கடிகளும், அழிவுகளும் ஏற்படுகின்றனவா? அது ஏன் நெருக்கடியில் கொண்டு விட வேண்டும்? நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அரசுகளின் கட்டுப்பாடுகள் என்ன ஆகின்றன?

பெறுமதிகள் (derivatives) சந்தை பற்றி “டிக் பிரையன்” மற்றும் “மைக்கேல் ரெஃப்பெர்ட்டி” ஆகியோரின் ஆய்வுரையை படியுங்கள். சோசியலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பையும், அதோடு ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக ஆங்கில உரையையும் வெளியிடுகிறோம்.

மோடி நம்மை இழுத்துச் செல்ல விரும்பும் மின்னணுப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இதுதான். இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி தயாரித்துக் கொள்வதற்கு இந்த சிக்கலான கருவிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மூலதனத்தின் (மற்றும் உழைப்பின்) எதிர்காலம் எங்கு இட்டுச் செலகிறது? – டிக் பிரையன், மைக்கேல் ராஃபர்டி

மீபத்திய [2007-08] நிதி நெருக்கடிக்குக் காரணமான முதன்மை குற்றவாளிகளாக நிதி பெறுமதிகள் (financial derivatives) மீது குற்றம் சாட்டப்படுகின்றது. பெறுமதிகள் துறையில் தொழில்முறையில் பணியாற்றுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவற்றின் வீரியம் பற்றியும், தமக்கு அடிப்படையாக இருக்கும் நிதிக் கடப்பாடுகளை மறைக்கும் அவற்றின் திறமை பற்றியும் நூற்றாண்டின் இறுதியில் லாங் டெர்ம் கேப்பிடல் மேனேஜ்மென்ட், என்ரான், வேர்ல்ட்காம் நெருக்கடிகளின் போது முதலில் தெரிய வந்தது.

அதன் பிறகு 2007-08ல் துணைமுதல் (subprime) கடன் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடி பற்றிய விவாதங்களில் பெறுமதி அடிப்படையிலான பிணையமாக்கல் (securitization) மூலம் துணைமுதல் கடன்கள் வழங்கும் ஆள்தின்னி வழக்கம் அம்பலத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளின் நிதிநிலை மீது பந்தயம் கட்டும் “கடன் கட்டத் தவறுதலுக்கான காப்பு” (Credit Default Swap – CDS) பற்றிய விபரங்கள் வெளியாகின. மற்றவர்களின் துயரத்தின் மீது பந்தயம் கட்டுவதன் மூலம் அத்துயரத்தை பரவலாக்குவது என்பது உண்மையில் எல்லோரின் [அதோடு தொடர்பில்லாதவர்களையும் சேர்த்து] துயரமாக விடிவற்கு பெறுமதிகள் காரணமாக இருப்பது தெரிய வந்தது. எனவே பெறுமதிகள் என்றாலே நெருக்கடியில் கொண்டு விடக் கூடியவை என்ற கருத்து பரவலாக இருப்பதில் ஆச்சரியமில்லை. வாரன் பஃபெட் அவற்றை பேரழிவுக்கான நிதிக் கருவிகள் என்று சொன்னது அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

derivatives

பெறுமதி கருவிகள் – முன்பேரங்கள், ஊக வணிகங்கள், விருப்ப பேரங்கள், மாற்றுகள்.

இந்தப் பட்டமும், இழிபுகழும் அவற்றுக்குப் பொருந்தக் கூடியவைதான் ஆனால், பெறுமதிகள் பற்றிய புரிதலை இத்தோடு நிறுத்திக் கொண்டால், நமது முடிவுகள் அரைகுறையாக நின்று விடுவதோடு பெறுமதிகளின் இன்னும் பல அம்சங்களை அறியாமல் இருந்து விடுவோம். உலகளாவிய நிதி நெருக்கடியை ஏதோ ஒரு பிறழ்ச்சியாகவும், கட்டற்ற ஊக வணிகம்தான் அதற்குக் காரணம் என்றும் சித்தரிப்பதாலும் அதற்கு நிதி பெறுமதிகள் பிரதான கருவியாக பயன்படுத்தப்பட்டன என்று சித்தரிப்பதாலும் எந்தப் பலனும் இல்லை என்பது எங்கள் வாதம்.

“பெறுமதிகள் முதலாளித்துவத்தின் மீது வளர்ந்திருக்கும் நோய்க் கட்டி” என்பதோ, “உண்மையான ஒரு முதலாளித்துவத்துக்கு விரோதமானது” என்பதோ உண்மை அல்ல என்பது எங்கள் வாதம். மாறாக, முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவுதான் அவை என்று கருதுகிறோம். முதலாளித்துவத்தின் அடிப்படை சொத்துடைமை உறவுகளையும், அடுத்தடுத்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அதன் திறமையையும் பெறுமதிகள் வெளிப்படுத்துகின்றன. பெறுமதிகளின் முரண்பாடுகள் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளே என்று வாதிடுகிறோம்.

நிதி நெருக்கடி ஏன் ஏற்பட்டது என்று விளக்கும் போது, பெறுமதிகளின் கணித வரம்புகள், வெளிப்படைத்தன்மை இல்லாமை, ‘நச்சுத்தன்மை’ என்று ஒரு சில குறைபாடுகளை மட்டும் ஆய்வு செய்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? அது தடுத்து நிறுத்த முடியாத ஒரு பேரழிவு பற்றிய பகுப்பாய்வு செய்வதிலும், பழைய காலத்தை எண்ணி ஏங்கும் அரசியலை நோக்கியும்தான் நம்மை கொண்டு செல்லும். அதாவது, பெறுமதிகள் உருவாக்கப்படுவதற்கு முந்தைய, நிதி ரீதியில் புனிதமான, பாதுகாப்பான கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கு ஏங்குவதாக முடியும். அந்தத் திசையில் போனால், இப்போதைய நிதி நெருக்கடியிலும், எதிர்காலத்தில் வரப்போகும் நெருக்கடிகளிலும் பெறுமதிகள் உண்மையில் என்ன பங்களிப்பு செய்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.

பெறுமதி வர்த்தகத்தின் வளர்ச்சி நிதி நெருக்கடிக்கு முந்தைய காலத்தில் தலை தெறிக்கும் வேகத்தில் போயக் கொண்டிருந்தது. நெருக்கடி அவற்றின் வளர்ச்சியை பாதித்திருக்கிறதா என்று பார்த்தால் மொத்தத்தில் பெரிதாக பாதிப்பு இல்லை. நிதி நெருக்கடிக்குப் பிந்தைய காலத்திலும் அவற்றின் வளர்ச்சி தொடர்கிறது. இது அடுத்த பொருளாதார வீழ்ச்சிக்கான தயாரிப்பு என்று சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், மார்க்சியம் எதிர்காலத்தை கணிப்பதோடு நின்று விட முடியாது. பெறுமதிகள் முதலாளித்துவத்தின் நிகழ்காலத்தை எப்படி கட்டமைத்து வருகின்றன, எதிர்காலத்தில் அதை எப்படி உருமாற்றப் போகின்றன என்பதை ஆய்வு செய்து, அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இப்போதைய நிதி நெருக்கடியை பொருத்திப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

2007-08 நெருக்கடியை பகுப்பாய்வு செய்வதன் நோக்கம் முதலாளித்துவ வளர்ச்சியின் அழிவுத் தன்மையை, நொறுங்கி விழும் அதன் தன்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துவது மட்டும் இல்லை. மூலதனத் திரட்சிக்கான புதிய நிகழ்முறைகளை உருவாக்கிக் கொள்ளும் முதலாளித்துவத்தின் தகவமைவு திறன் பற்றிய அம்சங்களை வெளிப்படுத்துவது இந்த ஆய்வின் நோக்கம். அதாவது, மார்க்சின் நெருக்கடிகள் பற்றிய கோட்பாடுகளை விட, முதலாளித்துவ வளர்ச்சியின் எல்லைகளையும் அந்த வளர்ச்சியை நடத்திச் செல்லும் சக்திகளையும் பற்றிய மார்க்சின் ஆய்வு இந்த ஆய்வுரைக்கு வழிகாட்டியாக அமைகிறது. அதன் அடிப்படையில், நிதித்துறையிலும் மற்ற துறைகளிலும் உருவாக்கப்பட்ட பெறுமதிகள் வர்த்தகத்துக்கான சந்தைகள் நிகழ்கால முதலாளித்துவத்தின் பிரிக்க முடியாத அங்கமாக ஆகியிருப்பதை விளக்கும் பகுப்பாய்வை முன்வைக்கிறோம். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது சமீபத்திய நிதி நெருக்கடி, சமூக ரீதியாக கடுமையானதாக இருந்தாலும், நீண்ட கால நிகழ்ச்சிப் போக்கின் ஒரு பகுதியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

Global Financial Crisis

உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்ன?

இந்த வாதத்தை கட்டமைப்பதற்கு

 • முதலில் பெறுமதிகளின் இயல்பையும், அவற்றின் பங்களிப்பையும் மூலதனக் குவிப்பின் பிரிக்க முடியாத அங்கமாக அவை எப்படி ஆகியிருக்கின என்பதை விளக்குகிறோம்.
 • குறிப்பாக, வழக்கமாக, ‘சுற்றோட்ட’த் துறை என்று கருதப்படும் செயல்பாடுகளில் [உபரி மதிப்பை உருவாக்காத, உருவாக்கப்பட்ட உபரி மதிப்பை கைப்பற்றுகின்ற செயல்பாடுகளில்] பெறுமதிகளின் உருவாக்கம் மூலதனத் திரட்சிக்கான புதிய வடிவங்களை எப்படி உருவாக்கியுள்ளது என்பதை விளக்குகிறோம்.
 • அதைத் தொடர்ந்து பெறுமதிகளின் பரிணாம வளர்ச்சியையும், உலக நிதி நெருக்கடியில் அவை ஆற்றிய பங்கையும் ஆய்வு செய்கிறோம்.
 • நெருக்கடியில் பெறுமதிகளின் பங்களிப்பு குறித்து விளக்கும் போது, இந்த நெருக்கடி பெறுமதிகள் சந்தைகளின் பக்குவமின்மையின் விளைவாலோ, அளவுக்கு மீறிய வளர்ச்சியாலோ ஏற்பட்டது என்ற பரவலான நம்பிக்கை தவறானது என்று வாதிடுகிறோம்.
 • மூலதனத் திரட்சிக்கு புதிய வாய்ப்புகளை பெறுமதிகள் உருவாக்குகின்றன. 2007-08 நெருக்கடியை இந்த இயக்கப்போக்கில் ஏற்பட்ட நெருக்கடியாக பார்ப்பதை விட இந்த இயக்கப் போக்கிற்கு உட்பட்ட ஒரு நெருக்கடியாக பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறோம்.
 • இந்த வேறுபாடு பகுப்பாய்வு ரீதியாக மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் முக்கியமானது. ஏனெனில், நிதித்துறை மீதான அரசுகளின் ஒழுங்குமுறையை சீர்திருத்தும் முயற்சிகளின் திசையை இது தீர்மானிக்கிறது. அது மட்டுமின்றி பாட்டாளி வர்க்கத்தின் அரசியலுக்கு வேறுபட்ட பாதையை சுட்டிக் காட்டுகிறது.

பெறுமதிகள் என்பவை என்ன? அவை ஏன் இவ்வளவு முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன?

பெறுமதிகள் குறித்த எளிமையான, அனைத்தும் தழுவிய வரையறை எதுவும் இல்லை. கடந்த காலத்தில் முன்வைக்கப்பட பல வரையறைகள், நிதிச் சந்தைகளின் வேகமான பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து பொருத்தமற்று போயிருக்கின்றன.

பெறுமதி என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை அடிப்படையாகக் கொண்டு விலை நிர்ணயிக்கப்படும் ஒரு சொத்து அல்லது பிணையம் என்பது அகராதியில் தரப்பட்டுள்ள ஒற்றை வாக்கிய வரையறை. இந்த வரையறை பெறுமதிகள் குறித்த வரலாற்றுரீதியான புரிதலை குறிக்கிறது. ஆனால் அது சமகாலத்துக்கு பொருத்தமானதாக இல்லை. பெறுமதிகளின் தற்போதைய முக்கியத்துவம் குறித்த அவற்றின் விரிந்த சமூக ரீதியிலான செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இந்த வரையறை போதுமானதாக இல்லை. மேலும், இந்த வரையறை பெறுமதியின் விலையைப் பற்றி மட்டுமே பேசுகிறது, பெறுமதி என்ப்து என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி விளக்கவில்லை.

பெறுமதிகள் வழக்கமாக வட்டி வீதங்கள், அன்னியச் செலாவணி வீதங்கள் போன்ற நிதித்துறையோடு தொடர்புடைய செயல்பாடுகள் மீது உருவாக்கப்படுகின்றன. ஆனால் இப்போது மேலும் பிற சமூக செயல்பாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய சில புதிய பெறுமதிகள் ஏற்கனவே நிதிச் சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல சந்தையில் வர்த்தகத்தில் இறக்கி விடப்படக் கூடிய சாத்தியங்களாக காத்திருக்கின்றன.

இந்த அம்சங்கள் அனைத்தையும் தழுவியதாக பெறுமதிகளை புரிந்து கொள்வது முக்கியமானதாகிறது. அப்படி புரிந்து கொண்டால்தான் அவற்றின் எதிர்கால சாத்தியங்களை பகுப்பாய்வு செய்வதற்கான வழிகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.

சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மேலும் மேலும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட தனித்தனிக் கூறுகளாக பிரிக்கும் ஒரு வழிமுறையை பெறுமதிகள் குறிப்பிடுகின்றன ஒவ்வொரு கூறையும் அளவீடு செய்யக் கூடிய (சில சமயம் சர்ச்சைக்குரிய, பலவீனமான) கருவியாக வடிவமைத்து, அதற்கு ஒரு விலை வைத்து வாங்கி விற்பதாக மாற்ற முடிகிறது. இந்த நடைமுறையை மூன்று பரிமாணங்களில் புரிந்து கொள்ளலாம்:

1. பகுதி பிரிப்பு : சமூக மற்றும் பொருளாதார வாழ்வை மேலும் மேலும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட தனித்தனி பகுதிகளாகவும் கூறுகளாகவும் பிரித்தல். இது படைப்புத் திறன் அடிப்படையிலானது.

2. அளவையாக்கம் : ஒவ்வொரு பகுதியையும் அளவிடக் கூடிய ஒரு சரக்காக, எதிர்கால அபாயத்தை உள்ளடக்கிய கூறுகளாக வடிவமைப்பது. அதன் மூலம் ஒவ்வொரு பகுதியையும் அதே போன்று பிரிக்கப்பட்ட பிற பகுதிகளுடன் ஒப்பிடும்படியாக மாற்றுவது

அதாவது, சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் நிச்சயமின்மை எளிதாக பெயர் சூட்டி அளவிடக் கூடியதாக மாற்றப்பட்டு, அதே போன்று பிரித்து மாற்றப்பட்ட பிற வாழ்வியல் அம்சங்களின் பகுதிகள் அல்லது கூறுகளுடன் ஒப்பிடக் கூடியதாக ஆக்கப்படுகிறது.

எதிர்கால அபாயம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு கணக்கிடப்படுவதால் இதை உற்பத்தி நடவடிக்கையுடன் ஒப்பிடலாம்.

3. சரக்காக்கம் : அபாயத்தின் ஒவ்வொரு கூறையும் பிணையங்கள் சந்தை அல்லது பெறுமதிகள் சந்தை அல்லது காப்பீட்டுச் சந்தையில் வாங்குவது விற்பது. இது ஒரு சுற்றோட்ட நிகழ்முறை.

இந்தச் சந்தைகளில் பெறுமதிகளின் விலை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கிறது. அந்த விலை அதற்கு அடிப்படையாக இருக்கும் சமூக மற்றும் பொருளாதார சொத்துக்களின் விலையை மட்டும் சார்ந்ததாக இல்லை. ‘சந்தை உணர்ச்சி’ அல்லது ‘முன்ஊகங்கள்’ என்று பாமரத்தனமாக அழைக்கப்படுவதையும் சார்ந்துள்ளது.

இந்த மூன்று அம்சங்களையும் இன்னும் தெளிவுபடுத்திக் கொள்ள பெறுமதிகளின் சில பொதுவான தன்மைகளை சில கேள்விகளின் ஊடாக விவாதிக்கலாம்.

(பகுதி 2-ல் தொடரும்)

Series Navigationவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-1-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது

அரசின் பெருந்திரள் கண்காணிப்பு கருத்து சுதந்திரத்தை முடக்கி விடுகிறது என்கிறது ஒரு ஆய்வு. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அனைவரும் தத்தமது கருத்துக்களை வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது என்ற...

அரசியல் சாகசத்துக்கு சேகுவேரா! அதிகாரத் தாகத்துக்கு ஜெயா-சசி!

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தி.மு.க.வை பலவீனப்படுத்துவதாகக் கூறி எம்.ஜி.ஆரை வளர்த்து விட்டார் வலது (போலி) கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.கல்யாணசுந்தரம். தனது பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஒளிவட்டம் போடுகிறது, சி.பி.எம்...

Close