வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

ந்தியாவின் ஆளும் வர்க்கங்களும் ஆளும் சாதிகளும் நாட்டை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கு இப்போது ஜெபிக்கும் புத்தம் புதிய மந்திரம் ‘மின்னணு பொருளாதாரம்’. நம் எல்லோரையும் அத்தகைய “மாய” உலகுக்குள் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதில் அவர்கள் வெற்றியடைந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம், அந்த எதிர்காலம் எப்படி இருக்கும்?

the-modified-digital-india-cartoon-by-nituparna-rajbongshi

டிஜிட்டல் அடிமைத்தனம்? (“குறைவாக … வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு , அதன் எதிர்காலத்தின் பிரதிபிம்பத்தையே அதிகம் … வளர்ச்சி அடைந்த நாடு காட்டுகிறது”)

இந்தக் கேள்விக்கான விடையை நாம் ஒரு முன்னேறிய நாட்டில் தேட வேண்டும். ஏனென்றால்,  “குறைவாக … வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு , அதன் எதிர்காலத்தின் பிரதிபிம்பத்தையே அதிகம் … வளர்ச்சி அடைந்த நாடு காட்டுகிறது” *

“உலக முதலாளித்துவத்துக்கே தலைமையகம், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு, பெருமளவு பரிவர்த்தனைகள் மின்னணு வழியில்” என இவர்கள் சித்தரிக்கும் சொர்க்கத்தை படைத்திருக்கும் அமெரிக்காவில் அந்த வசதிகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றன? வால் ஸ்ட்ரீட் பெரு வங்கிகள் யாருக்கு சேவை செய்கின்றன, யாரை மொட்டை அடிக்கின்றன? 1%-ஐ மேலும் மேலும் பணக்காரர்களாக்குவது, 99% பேரின் இரத்தத்தை மேலும் மேலும் உறிஞ்சுவது என்ற நவீன வங்கி பொருளாதார நடைமுறைக்கு நிதித்துறை மேட்டுக்குடியினர் அவர்களுக்கே வகுத்துக் கொண்ட விதிமுறைகளும், தர்க்கமும் உள்ளன. அந்தத் தர்க்கத்தின் உச்சகட்ட வளர்ச்சியின் ஒரு பகுதிதான் பெறுமதிகள் என்ற நிதிச் சந்தை கருவிகள்.

பெறுமதிகள் (derivatives) சந்தை பற்றி “டிக் பிரையன்” மற்றும் “மைக்கேல் ரெஃப்பெர்ட்டி” ஆகியோரின் ஆய்வுரையின் 2-வது பகுதி கீழே. சோசியலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பையும், அதோடு ஒப்பிட்டுப் பார்க்க வசதியாக ஆங்கில உரையையும் வெளியிடுகிறோம்.

பகுதி 2

எந்த வகையான சொத்துக்களுக்கு பெறுமதிகள் உருவாக்கப்படுகின்றன?

பணத்தால் மதிப்பிடக் கூடிய, அதாவது விலை வைக்கக் கூடிய, பரிவர்த்தனை செய்து கொள்ளக் கூடிய எந்த ஒரு சொத்துக்கும் அல்லது சரக்குக்கும் பெறுமதிகளை உருவாக்கலாம். பெறுமதியின் அடிப்படையாக இருக்கும் சொத்தின் விலை அல்லது குறியீட்டு எண்ணில் ஏற்படும் மாற்றங்கள், அதாவது மாற்றங்கள் ஏற்படுவதற்கான நிகழ்தகவுதான் பெறுமதிகளின் சாராம்சம். விலை ஏறினாலோ, இறங்கினாலோ எந்தத் தரப்பு எதிர் தரப்புக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை பெறுமதியின் வடிவமைப்பு தீர்மானிக்கிறது.

பாரம்பரியமாக வட்டி வீதங்கள், அன்னியச் செலாவணி வீதங்கள், எண்ணெய் விலை ஆகியவை மீதான பெறுமதிகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், சமீபத்தில் கடன் கட்டத் தவறும் அபாயம், வீட்டு விலைகளின் ஏற்ற இறக்கங்கள், வெப்ப நிலை மாற்றங்கள் போன்ற விஷயங்களுக்கும் பெறுமதிகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படுகின்றன.

பிணையங்களை (securities) நேரடியாக பெறுமதிகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவை ஒரு முக்கியமான பெறுமதி பரிமாணத்தைக் கொண்டுள்ளன. சொத்துக்களோடு தொடர்புடைய வருமானத்தின் அடிப்படையில் வெளியிடப்படும் பத்திரங்கள் பிணையங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கடன் அடிப்படையிலான பிணைய பத்திரத்தை வாங்குபவர் பல கடன்களை சேர்த்த ஒரு தொகுப்பு ஈட்டும் வருமானத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார். “அவர் குறிப்பிட்ட சொத்து (கடன் திருப்பிக் கொடுத்தல்) வருமானம் ஈட்டுவதன் மீதான கடப்பாட்டைத்தான் வாங்கியிருக்கிறார், அதற்கு அடிப்படையான கடன்கள் அல்லது வீடுகள் அவருக்கு சொந்தமாக இல்லை” என்பது இதன் பெறுமதி பரிமாணம். எனவே, பிணையத்தின் விலை வீட்டின் விலையைப் பொறுத்து இல்லாமல் கடன் திருப்பிக் கட்டப்படுவதைப் பொறுத்து ஏறி இறங்குகிறது.

அதாவது, விலைகள் ஏறுகின்றனவா, இறங்குகின்றனவா, எவ்வளவு ஏறுகின்றன அல்லது இறங்குகின்றன என்பதன் மீது பந்தயம் கட்டுவது என்பதுதான் பெறுமதிகளின் சாராம்சம்.

பொருளாதார வாழ்க்கையோடும், பிற சமூக வாழ்வோடும் தொடர்புடைய பல விஷயங்களில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடக் கூடியதாக இருப்பதால், புதிய புதிய பெறுமதிகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் நிறைய உள்ளன. விலை ஏற்ற இறக்கங்களை சுயேச்சையாக அளவிட முடியுமா, அந்த அளவீட்டை மற்றவர்கள் சரிபார்க்க முடியுமா, அதாவது சந்தையில் மோசடி செய்வதை கண்காணித்து தடுக்க முடியுமா என்பதும், சந்தை லாபகரமாக செயல்படுவதற்கு ஏற்ற அளவு வேண்டல் உள்ளதா என்பதும்தான் ஒரு பெறுமதி உருவாக்கப்படுவதற்கான அடிப்படை.

ஒரு பெறுமதியை சொந்தமாக்கிக் கொள்வது என்றால் என்ன?

பெறுமதியை வாங்குவதன் மூலம்  அந்தப் பெறுமதிக்கு அடிப்படையாக உள்ள சொத்து (உதாரணம் – கடன்) ஈட்டும் வருமானத்தின் மீதான நிதிக் கடப்பாட்டை சொந்தமாக்கிக் கொள்ள முடிகிறது. அதாவது, அந்தச் சொத்தின் விலை அல்லது குறியீட்டு எண் ஏறினாலோ, இறங்கினாலோ அதை வாங்க, விற்க அல்லது குறிப்பிட்ட அளவு பணத்தை பெற்றுக் கொள்ள உரிமை கிடைக்கிறது. இந்த வகையில் பெறுமதி என்பது நிச்சயமில்லாத ஒரு உரிமை, ஏனென்றால் அதன் விலை எதிர்கால, அதாவது நிச்சயமில்லாத நிலைமைகளை  சார்ந்திருக்கிறது. ஆனால், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் பெறுமதியின் விலை அதற்கு அடிப்படையாக இருக்கும் சொத்தை வாங்குவதை சார்ந்திருப்பதில்லை.

ஒருவர் எண்ணெய் மீதான முன்பேரம் (future) அல்லது முன்தேர்வு (option) ஒன்றை வாங்கும்போது ஒரு பீப்பாய் எண்ணெயை அவர் வாங்கவில்லை (அப்படி வாங்குவது அவரது இறுதி நோக்கமாகவோ விளைவாகவோ இருந்தாலும் கூட) என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்தேர்வை வாங்குவதன் நோக்கம் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் என்ற நிச்சயமில்லா நிகழ்வுகள் மீதான கடப்பாட்டை வாங்குவதுதான்.

freemarketcapitalism

“சுதந்திர” சந்தை முதலாளித்துவம் – வீடு இல்லாத மக்களும், மக்கள் இல்லாத வீடுகளும்.

இன்னொரு உதாரணமாக, காலநிலை பெறுமதிகளை எடுத்துக் கொள்ளலாம். காலநிலை பெறுமதிகளை வாங்கும் போது அவற்றுக்கு அடிப்படையான சொத்தான காலநிலையை வாங்குவது பற்றி எந்தக் குழப்பமும் இல்லை. மழை அளவு அல்லது வெப்பநிலை அல்லது பனிப்பொழிவு தொடர்பான ஒரு குறியீட்டு எண் மாற்றமடைவது தொடர்பான பந்தயத்தை சந்தையில் வாங்கவோ விற்கவோ செய்யும் யாரும் காலநிலையை வாங்கவோ, விற்கவோ முடியாது என்பது தெளிவாக உள்ளது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அடமானங்களைச் (mortage) சார்ந்த பிணையங்களின் (mortage based security) பெறுமதி தன்மையை புரிந்து கொள்ளலாம்.  பிணையத்தை விலைக்கு வாங்கியவர், அடமானங்கள் பலவற்றை சேர்த்து தொகுத்த பத்திரத்துக்கு வரவிருக்கும் வருமானத்தின் மீதான பணக் கடப்பாட்டை தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறார். அதாவது, அடமானங்கள் முறையாக பணத்தை திரும்பக் கட்டி மீட்கப்படுமா இல்லையா என்ற நிகழ்வின் சாத்தியத்தை அவர் தனக்கு சொந்தமாக்கியிருக்கிறார். அந்த அடமானங்களோ, அந்த அடமானங்களுக்கு பாத்திரமான வீடுகளோ அவரது சொத்தாக மாறி விடுவதில்லை.

அடிப்படை சொத்துக்களை வாங்காமல் சொத்துக்களின் வருமானத்தின் மீதான கடப்பாட்டை சொந்தமாக்கிக் கொள்வதில் இரண்டு ஆதாயங்கள் இருக்கின்றன. ஒன்று, அது குறைந்த செலவில் அடிப்படை சொத்து மீதான கடப்பாட்டை பெற்றுக் கொள்ள வழிசெய்கிறது. சொத்தை சொந்தமாக வைத்திருப்பவர் அந்தச் சொத்து மூலம் பெறும் வருமானத்தில் பங்கேற்பதற்கு இது மலிவான ஒரு வழியாகும்.

இரண்டாவதாக, உடைமையை வேறு ஒருவருக்கு கைமாற்றிக் கொடுப்பதை இது எளிதாக்குகிறது. ஒரு எண்ணெய் விலை பெறுமதி ஒப்பந்தத்தை கைமாற்றுவது, ஒரு பீப்பாய் எண்ணெயை கைமாற்றுவதை விட பல மடங்கு எளிதானது. உடைமை கைமாற்றத்தை எளிதாக்குவதன் மூலம், ஒரு அபாயத்தை சிறு சிறு துண்டுகளாக பிரிப்பதையும், அப்படி பிரிக்கப்பட்ட வெவ்வேறு அபாயங்களின் துண்டுகளை கலந்து இணைத்து புதிய ‘செயற்கை’ நிதிக் கருவிகளை உருவாக்குவதையும் இது சாத்தியமாக்குகிறது.

சொத்துக்களை ஒன்றோடு ஒன்று கலப்பதை சாத்தியமாக்கும் இந்தத் தன்மை (மூலதனத்தின் கூறுகளை கலப்பது), பெறுமதி சந்தைகளில் புழக்கத்தை விரிவுபடுத்தியுள்ளன. பெறுமதியை சொந்தமாக்கிக் கொள்வதன் முக்கிய நோக்கம், ஒரு முதலீட்டை பௌதீக அல்லது சட்ட  ரீதியாக சொந்தமாக்கிக் கொள்வதன் சிரமங்களை எடுத்துக் கொள்ளாமல், அது ஈட்டித் தரும் வருமானத்தின் மீது மட்டும் பங்கேற்பதற்கு போட்டி போடுவதாகும்.

பெறுமதி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் யார், யார்?

பொதுவாக, துல்லியமாக முன் ஊகிக்க முடியாத ஆனால், பரவலான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் விலைகள் அல்லது குறியீட்டு எண்களின் மாற்றங்களோடு தொடர்பு உடையவையாக பெறுமதிகள் உள்ளன.

gambling-wall-street

“சூதாட்ட விடுதியில் அனுபவம், முதலீட்டு வங்கியில் உதவும்!”

விலை அல்லது குறியீட்டு எண் வீழ்ச்சியடைவது குறித்த பயம் சிலருக்கு இருக்கலாம், வேறு சிலருக்கு அது அதிகரிப்பது பற்றிய பயம் இருக்கலாம் **. அவர்களது பயங்கள் குறிப்பிடத்தக்க அளவு பெரிதாக இருக்குமானால், அந்த பயத்தை தணிப்பதற்கான ஒரு நிதிக் கருவியை முதலீட்டு நிறுவனங்கள் உருவாக்கி, வாங்க முன்வருகின்றன. இன்னும் சில ‘முன்பேர வர்த்தகர்கள்’ விலை அல்லது குறியீட்டு எண்ணில் ஏற்படும் மாற்றங்கள் மீது பந்தயம் கட்ட முன் வருகிறார்கள்.

எனவே, பெறுமதிகள் அபாயத்துடனும், நிச்சயமின்மையுடனும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளன. லாபம் சம்பாதிக்க வேண்டுமானால், அபாயங்கள் இருக்க வேண்டும் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், நிறுவனங்களும் தனி மனிதர்களும் *** பலவகையான அபாயங்களை எதிர்கொள்கிறார்கள். நிறுவனங்களின்  தொழில்முனைவு உத்தியுடன் பிணைந்திருக்கும் சிலவற்றை, (தனிமனிதர்களின் வாழ்க்கை அனுபவத்தோடு பிணைந்திருப்பவற்றை) தாமே எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். ஆனால், வேறு சில அபாயங்களை தாமே எதிர்கொள்ளாமல் வேறு யாரிடமாவது தள்ளி விடவும், அதற்காக குறிப்பிட்ட அளவு பணத்தை செலவழிக்கவும் நிறுவனங்களும் தனிநபர்களும் தயாராக இருக்கின்றனர்.

இந்த ஒப்பந்தங்களை வாங்குவதற்கு இன்னொரு தரப்பும் இருக்க வேண்டும். அது இந்த அபாயத்துக்கு நேர் எதிரான பக்கத்தை தவிர்க்க விரும்பும் தரப்பாகவோ, அந்தக் கடப்பாட்டை வாங்குவதன் மூலம் லாபம் ஈட்ட முயற்சிக்கும் முதலீட்டு வங்கி போன்ற நிதி நிறுவனங்களாகவோ இருக்கலாம்.

ஆனால், புழக்கத்தில் இருக்கும் பெறுமதிகளில் பெரும்பாலானவை நிறுவனங்களின் லாபத்தை பெருமளவு பாதிக்கக் கூடிய விலை/குறியீட்டு எண் மாற்றங்களை எதிர்கொள்வதற்கானவை. இந்தக் கருவிகளின் வர்த்தகத்தில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து சர்வதேச கணக்கு தீர்ப்புக்கான வங்கி (Bank for International Settlements – BIS) அன்னியச் செலாவணி மற்றும் பெறுமதிப்பு சந்தைகள் பற்றிய மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் கருத்துக் கணிப்பு ஒரு பறவை பார்வையை தருகிறது. அதன் கணிப்பின்படி பெறுமதிகள் வர்த்தகத்தில் 1998-ல் 60 சதவீதமாக இருந்த பெரிய வங்கிகளின் பங்கு 2007-ல் 38 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது. அதே நேரத்தில் பிற நிதி நிறுவனங்களின் பங்கு 3 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பிற  நிதி நிறுவனங்களில் ஓய்வூதிய நிதியங்களும், வேலியிடப்பட்ட நிதியங்களும். (இவற்றைக் குறித்து பின்னர் விரிவாக பார்க்கப் போகிறோம்) முக்கியமானவையாக உள்ளன.

குறிப்பாக, தனியார் கடன் வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக பிணையங்கள் உருவெடுத்துள்ளன. 1990-க்கும் 2008-க்கும் இடையில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் தனியார் கடனில் பிணையங்களின் பங்கு 43 சதவீதமாகவும், ஆண்டு வளர்ச்சி வீதம் 19 சதவீதமாகவும் இருந்தது. மாறாக, கார்ப்பரேட் கடன் பத்திரங்கள் மொத்த கார்ப்பரேட் கடன்களில் 8% ஆகவும் ஆண்டு வளர்ச்சி வீதம் 6 சதவீதம் ஆகவும் மட்டுமே இருந்தன. எனவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்து லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்கள் கார்ப்பரேட் கடன் பத்திரங்களை வாங்குவதிலிருந்து பிணையங்களை வாங்குவதை நோக்கி நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்னொரு பக்கம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி நிறுவனங்களிலிருந்து கடன் வாங்குவதை விட பிணையங்கள் மூலம் நிதி திரட்டுவதை அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தன. கார்ப்பரேட் பிணையங்களுக்கு அப்பால், சொத்துக்கள் அடிப்படையிலான பிணையங்களும், கடன்களை அடமானமாகக் கொண்ட கடப்பாடுகளும் உள்ளன. இந்தப் பிணையங்களை வாங்குபவர்களில் முதலீட்டு வங்கிகள், ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் வேலியிடப்பட்ட நிதியங்கள் ஒரு பக்கமும் ஆசிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் அரசு சொத்து நிதியங்கள் மறுபக்கமும் என்ற இரு வகையினர் உள்ளனர்.

நாம் விரைவில் பார்க்கப் போவது போல, இந்தப் பொருட்கள் கார்ப்பரேட் மற்றும் நிதி உலகை மட்டும் சார்ந்திருப்பவை அல்ல. பிணையமாக்கல் நிகழ்முறை உழைக்கும் வர்க்க குடும்பங்களையும் தனது சுழற்சியில் இழுத்துப் போட்டிருக்கிறது. பிணையங்களுக்கு அடிப்படையான வருமானத்தை (உதாரணமாக, கடன் கட்டுதல்) ஈட்டுபவர்கள் என்ற வகையில் அவர்கள் இதில் இழுக்கப்பட்டுள்ளனர். இந்தக் கருவிகளை வாங்கி விற்று சம்பாதிப்பவர்கள் என்ற வகையில் இல்லை.

* மூலதனம், கார்ல் மார்க்ஸ், முதல் பாகம், முதல் ஜெர்மன் பதிப்புக்கு முன்னுரை (1867)

** உதாரணமாக, கோதுமை விலை வீழ்ச்சியடைந்து விடக் கூடாது என்று பயம் கோதுமை விவசாயிக்கும், கோதுமை விலை அதிகரித்து விடக் கூடாது என்ற பயம் ரொட்டி செய்து விற்கும் நிறுவனத்துக்கும் இருக்கலாம். அதே போல இந்திய ஏற்றுமதியாளர் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து விடுவதையும், இறக்குமதியாளர் ரூபாய் மதிப்பு அதிகரிப்பதையும் விரும்ப மாட்டார். இவர்களுக்கு  நடுவில் ஊக வணிக மூலதனம் களத்தில் இறங்கினாலும் இதற்கு எதிரெதிரான இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
மாறாக, ஒரு கடன் தவறிப் போகுமா என்பதன் மீது பந்தயம் கட்டுவது முழுக்க முழுக்க சூதாட்ட பரிமாணத்தை மட்டும் கொண்டிருக்கிறது. கடன் தவறிப் போகாது என்று பந்தயம் கட்டும் முதலீட்டாளர் அந்த அபாயத்தை மறுபக்கம் கடன் தவறிப் போகும் என்று பந்தயம் கட்டும் யாருக்கும் விற்பதற்கான வாய்ப்பே இல்லை.

*** தனிமனிதர்களைப் பொறுத்தவரை ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவற்றை அபாயத்தை தவிர்ப்பதற்காக பணம் செலவழிப்பதற்கு உதாரணமாக சொல்லலாம்.

Series Navigation<< பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-2-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
எளிய சோசலிச உண்மைகள் (1903) – பால் லஃபார்கே

உங்கள் உழைப்பில் உண்டான பணத்திலிருந்துதான், முதலாளி புதிய இயந்திரங்களை வாங்குகிறான். அந்தப் பணத்திலிருந்துதான் ஆலைகளைக் கட்டுகிறான். அந்த ஆலைகளிலும் இயந்திரங்களிலும் வேலை செய்வது நீங்கள், உங்களை வேலை...

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Close