சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?
நவீன நிதிசந்தைகள் விவசாயிகளின் உயிர்கள் உட்பட எதை வைத்தும் சூதாடுகின்றன.

நவீன நிதிசந்தைகள் விவசாயிகளின் உயிர்கள் உட்பட எதை வைத்தும் சூதாடுகின்றன.

நாம் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தை மாதம் தோறும் மின்சார வாரியத்துக்கு செலுத்துகிறோம். கடன் அட்டை அல்லது காசு அட்டை மூலம் பணம் செலுத்தும் போது வங்கிக் கட்டணம் தனியாக வசூலிக்கப்படுவதைப் போல, தனியார் மயமாக்கப்பட்டு சர்வதேச நிதிமூலதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சார பயன்பாட்டுக்கு நாம் செலுத்தும் கட்டணத்தில் நிதிச் சந்தை சூதாட்டத்துக்கான கப்பமும் சேர்ந்துள்ளது. நாம் மின்கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்துகிறோமா, நமது மாதக் கட்டணம் எவ்வளவாக இருக்கப் போகிறது என்றெல்லாம் பந்தயம் கட்டி சூதாடும் சூதாடிகளின் லாபமும் நமது பையில் இருந்து எடுக்கப்படுகிறது.

இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே போல வங்கிக் கடனில் வாங்கும் வீட்டுக்கும், உயர்கல்வியை முடிக்க பெறும் வங்கிக் கடனுக்கும், விளைபொருளுக்கு விவசாயி பெறும் விலைக்கும் இன்னும் பல பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கொக்கி போட்டு தனக்கான ஒரு துண்டை வெட்டிக் கொள்கிறது உலகளாவிய நிதி சூதாட்டச் சந்தை.

இவ்வாறு உண்மைப் பொருளாதாரத்தை நிதிச் சந்தையுடன் இணைக்கும் கருவிகளில் ஒன்றான பெறுமதிகள் பற்றி டிக் பிரையன், மைக்கேல் ரெஃப்ரட்டி ஆகியோர் எழுதிய ஆய்வுரையின் மூன்றாவது பகுதி இங்கே தரப்படுகிறது.

இது சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற தளத்தில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு அதன் தமிழாக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஆங்கில மூலத்தையும் தருகிறோம்.

3

பெறுமதிகளின் விலை எப்படி தீர்மானிக்கப்படுகிறது?

அபாயத்தின் பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிப்பதுதான் பெறுமதிகளின் விலையின் அடிப்படை : எந்த விலைக்கு மேல் எதிர்கொள்ளும் ஒரு அபாயத்தை வேறு ஒருவருக்கு விற்பதை விட தானே வைத்துக் கொள்வது லாபமாக இருக்கும்? எந்த விலையில் அந்த அபாயத்தை வாங்குவது மறு தரப்புக்கு லாபமாக இருக்கும்? இந்தப் போட்டி சமநிலையை கணக்கிடுவதுதான் பெறுமதிகளுக்கு விலை வைக்கும் முறை.

ஆரம்ப காலங்களில் இது அனுபவத்தின் அடிப்படையிலும், குத்து மதிப்பான மதிப்பீட்டின் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டது. ஆனால் 1980-களுக்குப் பிறகு இந்த கேள்விக்கான விடை தொழில்நுட்ப ரீதியில் துல்லியமாக தீர்மானிக்கப்பட முடியும் என்று நம்பப்படுகிறது. காப்பீட்டுத் திட்டங்களில் பயன்படுத்தப்படுவது போன்று புள்ளிவிபரங்கள் அடிப்படையில் எதிர்கால செலவை கணிக்கும் முறை, பிளேக்-ஷோல்ஸ் விருப்பத்தேர்வு விலை நிர்ணயிப்பு முறை போன்றவை இதற்கு பயன்படுத்தப்பட்டன.

ஆனால், இந்த கணக்கீடுகளுக்குள் அடக்க முடியாத இரண்டு பிரச்சனைகள் சமீபத்திய நிதி நெருக்கடியில் துலக்கமாக வெளிப்பட்டன. கணக்கிடப்பட்ட விலையில் அபாயத்தை வாங்கும் ஒருவர், கணக்கிட முடியாத நிச்சயமின்மையையும் இலவச இணைப்பாக பெறுகிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. சந்தைகள் தாறுமாறாக ஏறி இறங்கும்  வழக்கத்துக்கு மாறான குழப்பமான சூழலில் இந்த நிச்சயமின்மைகள் ஒட்டு மொத்த சந்தையையும் கவிழ்த்து விடுகின்றன.

derivatives-beast

“ரொம்ப சாதாரண விஷயம்தான். உலகச் சந்தைகள் சீராவது வரை பெறுமதிகள் மிருகத்துக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்தால் போதும்”

மேலும், சந்தையில் வர்த்தகச் சூதாடிகள் வாங்கி விற்பது தற்போதைய அபாயம் பற்றிய மதிப்பீட்டை மட்டுமில்லை, மாறாக அபாயம் பற்றிய எதிர்கால கணக்கீடுகள் எப்படி மாறும் என்பதை வைத்தும்  அவர்கள் சூதாடுகின்றனர். ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் கணக்கிட்ட விலை வர்த்தகம் ஆரம்பித்த உடனேயே விலை இந்த சூத்திரத்திலிருந்து எவ்வளவு விலகிச் செல்லப் போகிறது என்பதை ஊகிக்கும் போட்டியாக மாறி விடுகிறது என்கிறது மெக்-கின்சி நிறுவனம். இதன் விளைவாக, அபாயத்துக்கு விலை நிர்ணயிப்பதற்கான சூத்திரங்களை உடைத்துக் கொண்டு ஊக வணிக சூதாட்டம் முந்தி செல்கிறது.

பெறுமதிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன, அவை சந்தையில் வாங்கி விற்கப்படுகின்றன என்ற அடிப்படையில் அவற்றை சரக்கு என்று கருத முடியுமா? ஆம் என்றால், பெறுமதிகள் என்ன மாதிரியான சரக்குகள்? *

சரக்காக மாற்றப்பட்ட அபாயம்தான் பெறுமதி. ‘அபாயத்தை’ ஒரு சரக்காக ஆய்வு செய்வதற்கு சரக்கு பற்றி நாம் பொதுவாக புரிந்து வைத்திருப்பதை தாண்டி செல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக, சந்தையில் விற்பதற்காக உற்பத்தி செய்யப்படும் பௌதீக பொருள் [குறிப்பிட்ட பயன்பாட்டுக்கான பொருள் அல்லது சேவை] சரக்காக புரிந்து கொள்ளப்படுகிறது. இந்தப் பார்வையில் பார்க்கும் போது பெறுமதிகள் என்பவை ஏதோ ‘பொய்யான’ அல்லது ‘கற்பனையான’ அம்சத்தைக் கொண்டவை என்று தோன்றலாம்.

இத்தகைய வாதம் தனியார் பங்கு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே அவை குறித்தும் முன் வைக்கப்பட்டு வருகின்றன. பங்கு நிறுவனம் என்ற சட்டத்தால் உருவாக்கப்பட்ட கற்பனை அமைப்பை மூலதனத்தின் உடைமையாளராக கருதுவது இதன் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.*

ஆனால், பெறுமதிகள் ஊக வணிகத்துக்கான கருவிகளாக இருந்தாலும் அவை நவீன பொருளாதாரத்தின் பருண்மையான யதார்த்தத்தின் ஒரு பகுதி என்றும், மூலதனத் திரட்சியின் சுற்றிலிருந்து பிரிக்க முடியாதவை என்றும் நாங்கள் வாதிடுகிறோம். எனவே,தொழில்துறை மூலதனத்தின் சுற்றை உள்ளடக்கிய ஒட்டு மொத்த மூலதனத் திரட்சியை புரிந்து கொள்வதற்கு பெறுமதிகளின் அடிப்படை தர்க்கத்தை புரிந்து கொள்வது அவசியமானதாகிறது.

இங்கு இரண்டு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கோல்ட்மேன் ஆள் விழுங்கி பூதம்

கோல்ட்மேன் ஆள் விழுங்கி பூதம்

முதலாவதாக, தொழில்துறை மூலதனத்தின் சுற்று கடன் அல்லது பங்கு வடிவில் பெறப்பட்ட பண மூலதனத்திலிருந்து தொடங்குகிறது. ஆனால், வாங்கப்பட்ட கடன் மீதான வட்டி வீதமும், வெளியிடப்பட்ட பங்குகளின் விலையும் நாள்தோறும் நிச்சயமில்லாத வகையில் ஏறி இறங்குகின்றன. உற்பத்தியில் உருவாக்கப்படும் உபரி மதிப்பில் முதலீட்டாளருக்கு போக வேண்டிய பங்கு என்ன, கடன் கொடுத்தவருக்கு போக வேண்டிய பங்கு என்ன என்பதை இந்த ஏற்ற இறக்கங்கள் தீர்மானிக்கின்றன.

உற்பத்திப் பொருளை விற்பதன் மூலம் நிறுவனம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால், அந்த விற்பனை வருவாய் அன்னியச் செலாவணியாக பெறப்படலாம். அன்னியச் செலாவணி மாற்று வீதம் இடைக்காலத்தில் மாறிவிடலாம். இது போக, உற்பத்தித் துறையிலும், சந்தை விலைகளிலும் மாற்றத்தை சந்திக்க வேண்டிய பல எதிர்பாராத அபாயங்கள் காத்திருக்கின்றன. இவ்வாறு, தொழில்துறை மூலதனத்தின் சுற்றோட்டத்தில் நிச்சயமின்மை பிரிக்க முடியாததாக பிணைந்திருக்கிறது.

இந்நிலையில் தொழில்துறை மூலதனத்தின் சுற்றிலிருந்து நிச்சயமின்மையை விலக்கி வைத்து விட்டு ஆய்வு செய்வது சந்தை நிகழ்முறையை இலட்சிய வாதமாக குறுக்கி விடும். அதாவது, சந்தையில் வேண்டலும், வழங்கலும் சமநிலையை அடைவதன் மூலம் விலை தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்து முதல்வாத சிந்தனையில் கொண்டு விடும்.**

இரண்டாவதாக, தொழில்துறை மூலதனத்தின் சுற்றோட்டத்தில், பரிவர்த்தனை மதிப்பு சந்தையில் விற்பனை செய்வதற்காக உற்பத்தி செய்யப்படும் பொருளில் அடங்கியுள்ளது. அந்த சரக்கு பல கை மாறி இறுதியாக நுகர்வோருக்கு விற்கப்படும் போது அந்த பொருள் சந்தை போட்டி சுற்றோட்டத்திலிருந்து விலகி நுகரப்பட்டு விடுகிறது. ஆனால், பெறுமதிகளின் சாராம்சமே சந்தைப் போட்டிதான். ஒரு பெறுமதியின் செயல்பாட்டையும், அது சார்ந்திருக்கும் அடிப்படை சொத்தின் செயல்பாட்டையும் பொறுத்து அதன் பரிவர்த்தனை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. விலை என்னவாக மாறும் என்பதை கணக்கிடுவதில் பல போட்டியாளர்கள் பந்தயம் வைக்கும் சந்தை நடைமுறையைத்தான் அது குறிக்கிறது.

உழைக்கும் மக்களின் கடைசிச் சொட்டு ரத்தம் வரை உறிஞ்சும் நிதி மூலதனம்

உழைக்கும் மக்களின் கடைசிச் சொட்டு ரத்தம் வரை உறிஞ்சும் நிதி மூலதனம்

உதாரணமாக, வாகனக் காப்பீடு எடுத்தவர் அவர் விரும்பும் போது வாகனத்தை செப்பனிடும் உரிமையை வாங்குகிறார். காப்பீட்டை விற்ற காப்பீடு நிறுவனமோ விபத்தில் சிக்கி வண்டி சேதமடைந்தால் அதை சரி செய்வதற்கான செலவையும், காப்பீடு தொடர்பான நிர்வாகச் செலவுகளையும் தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த செலவு பற்றிய எதிர்கால மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிட்டு, தனது முதலீட்டுக்கான லாபத்தையும் சேர்த்து காப்பீடு பிரீமியம் (பெறுமதியின் விலை) வசூலிக்கிறது.

ஆனால், காப்பீடு வாங்கியவர் குறிப்பிட்ட மதிப்பிலான ரிப்பேர் பணியை மட்டும் வாங்கவில்லை, சேதங்கள் எவ்வளவு ஆனாலும் அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு வாகனம் மீண்டும் பயன்படுத்தும் நிலைக்கு கொண்டு வரப்படுவதை (ஒரு தொழிற்சாலையின் விஷயத்தில் உற்பத்தியை மீண்டும் தொடர்வதை) அவர் கோருகிறார்.

இவ்வறாக, பெறுமதி என்ற சரக்கில் பரிவர்த்தனை செய்யப்படுவது முன்கூட்டியே ஊகிக்க முடியாத ஒரு நிகழ்வு தொடர்பான உரிமை கோரல் மட்டுமே.

இன்னொரு உதாரணமாக, குடும்பங்கள் மின்கட்டணம் செலுத்துவது மீதான பெறுமதியை எடுத்துக் கொள்வோம். இத்தகைய பிணையங்கள் ஒரு குடும்பத்தின் மின் கட்டணத்தை மின்சார உற்பத்தி, வினியோகம், பயன்பாடு வரையிலான செலவுகளையும் தாண்டி நீட்டிக்கின்றன. மின் கட்டணம் செலுத்தும் நிகழ்வை ஒரு சரக்காக மாற்றி அதை சந்தை வர்த்தகத்தில் விடுகின்றன.

இவ்வாறு, பெறுமதிகள் அவற்றுக்கு அடிப்படையான பொருள் நுகரப்பட்ட பிறகும் சந்தையில் சுற்றி வருகின்றன. பயன் மதிப்புடைய ஒரு உற்பத்திப் பொருள் சுற்றோட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சந்தையிலிருந்து வெளியேறி விடுவதிலிருந்து இது இவ்விதம் வேறுபடுகிறது.

முந்தைய எங்கள் ஆய்வுரை ஒன்றில் பெறுமதிகளை “மீ-சரக்குகள்” என்று குறிப்பிட்டிருந்தோம், மூலதனத்தின் சுற்றில் பிரிக்க முடியாமல் பிணைந்திருக்கும் அவற்றை “மீ மூலதனம்” என்று அழைப்பதும் பொருத்தமானதே என்று கருதுகிறோம்.

மூலதனத் திரட்சியை புரிந்து கொள்வதற்கு பெறுமதி பற்றிய புரிதல் ஏன் மையமானதாக உள்ளது?

பெறுமதிகளை தனிச்சிறப்பான சரக்குகளாக பார்த்தால், அவற்றை மைய பொருளாதாரத்துக்கு வெளியில் உள்ள, முக்கியத்துவமற்ற ஒன்றாக கருதி ஆய்வுகளிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சாத்தியம் ஏற்படுகிறது. ஆனால், நாங்கள் மேலே முன்வைக்கும் கண்ணோட்டம் பெறுமதிகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மூலதனத் திரட்சிக்கான புதிய குவிமையங்களை உருவாக்கி, பல்வேறு மூலதனங்களின் சுற்றுக்களை இணைப்பதற்கும், பிரிப்பதற்கும் புதிய வழிமுறைகளை உருவாக்குவதில் பெறுமதிகளின் தனித்தன்மை அடங்கியிருக்கிறது. பல்வேறு அபாயங்களின் துண்டுகளை கலந்து, சந்தையில் வாங்கி விற்பகும்படியான புது வடிவங்களிலான சரக்குகளை உருவாக்குவதை அவை சாத்தியமாக்குகின்றன. நிதிச் சந்தைகளில் இத்தகைய சரக்குகளுக்கான சந்தை வேண்டல் வரம்பற்று இருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த அடிப்படையில், நீண்ட காலமாக, பிரிக்க முடியாத உள்ளார்ந்த இயல்புகளாக  கருதப்பட்ட அபாயங்களின் பல்வேறு பரிமாணங்களை தனித்தனியாக பிரித்து, அவை ஒவ்வொன்றையும் தனித்துண்டான அபாயங்களாக வரையறுத்து, சரக்காக மாற்ற முடிகிறது.

திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு என்ற அளவில் எளிய விஷயமாக இருந்த கடன் இப்போது, வட்டி வீதம் மாறும் அபாயம், அன்னியச் செலாவணி வீதம் மாறும் அபாயம், கடன் கட்டத் தவறுவதற்கான அபாயம் என்று பல்வேறு பரிமாணங்களாக பிரிக்கப்படுகிறது.

  • வட்டி வீதம் மாறுபடும் அபாயத்தை, வட்டி வீதங்களை கணக்கிடுவதற்கான பல்வேறு அடிப்படை புள்ளிகளிலிருந்து ((உதாரணம் : LIBOR, அமெரிக்க முதன்மை வீதம்) விலகும் சாத்தியங்களாக  கணக்கிடலாம். – இது அடிப்படை அபாயம் என்று அழைக்கப்படுகிறது.
  • கடன் முன்கூட்டியே கட்டப்பட்டு விடும் அபாயத்தை விருப்பத்தேர்வு அபாயம், குறுகிய கால நீண்ட கால வட்டி வீதங்களுக்கு இடையேயான வித்தியாசத்தில் ஏற்படும் வேறுபாட்டு அபாயம் என்று கணக்கிடலாம்.  இது லாபம் மாறுபடும் அபாயம் என்று அழைக்கப்படுகிறது.
canada-equity-assets-derivatives

கனடாவில் பங்கு மூலதனம், உண்மையான சொத்துக்கள் ஆகியவற்றுக்கும் பெறுமதிகளுக்கும் இடையேயான விகிதாச்சார குலைவு.

இவ்வாறு வகை பிரிக்கப்பட்ட ஒவ்வொரு அபாயமும் தனித்துண்டுகளாக பிரித்து விலை வைக்கப்பட்டு அவற்றின் மீதான வர்த்தகம்  ஒரு நாளைக்கு பல நூறு கோடி டாலர்கள் மதிப்பை தாண்டுகிறது. பல்வேறு அபாயங்களின் துண்டுகளை பல்வேறு விகிதங்களில் இணைத்து புதிய விற்பனைச் சரக்குகள் (பெறுமதிகள்) உருவாக்கப்படுகின்றன.

இத்தகைய வகைபிரிப்பு, அளவீடு நிர்ணயித்தல், சரக்காக மாற்றுதல் என்ற நடைமுறை புதிய மதிப்பை உருவாக்குகிறதா, மூலதனத் திரட்சிக்கு புதிதாக பங்களிக்கிறதா அல்லது அது உற்பத்தியில் (உண்மை பொருளாதாரத்தில்) உருவாக்கப்பட்ட உபரி மதிப்பை மறு வினியோகம் செய்வதற்கான இன்னொரு வழிமுறைதானா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. அது பற்றிய முழுமையான விவாதம் இந்த பகுப்பாய்வின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

இருப்பினும் பெறுமதிகளில் இரண்டு அம்சங்களும் கலந்திருக்கின்றன என்று நாங்கள் கருதுகிறோம்.***

உபரி மதிப்பை மறுவினியோகம் செய்வதற்கான ஒரு எளிய வழிமுறை என்ற அளவில் பெறுமதிகளின் வளர்ச்சியை புரிந்து கொண்டால், புதிது புதிதாக பெறுமதிகள் உருவாக்கப்படுவதன் அடிப்படையையும், அவற்றை இயக்கும் தர்க்கங்ளையும் புரிந்து கொள்ளத் தவறுவோம்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பெறுமதிகள் மூலதனத் திரட்சிக்கான எல்லைகளை விரிவாக்குகின்றன. ஏற்கனவே நடக்கும் செயல்பாடுகளை சரக்குகளாக மாற்றி வர்த்தகம் செய்வதை சாத்தியமாக்குகின்றன என்றும் சொல்லலாம்.

கடன் கொடுப்பது காலங்காலமாக இருந்து வரும் ஒன்று, ஆனால் கடன்களை சரக்காக்கப்பட்ட அபாயக் கூறுகளாக பிரிப்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு. கடன்களை கூறுகளாக பிரித்து அபாயத்தை சரக்காக வர்த்தகம் செய்வதைப் போல, பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கையின் பல்வேறு பிற நிகழ்வுகளையும் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுத்த முடியும்.

இத்தகைய நடவடிக்கைகள் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றனவா என்பது விவாதத்துக்குரியது. விளம்பரத் துறையில் செலவிடப்படும் உழைப்பும், சட்டத் துறையின் செயல்பாடுகளும் வாழ்க்கைக்கு என்ன பங்களிக்கின்றன என்பது போன்ற விவாதம் அது.

ஆனால், கணக்கிடுதலை மேலும் மேலும் துல்லியமாக்கும் திசையில் பெறுமதி சந்தை வளர்க்கப்பட்டு வருகிறது. அது மூலதனத்தின் செயல்பாட்டோடு பிரிக்க முடியாது இணைந்திருக்கிறது.

மேலும், நிதித் துறையின் கணக்கீடுகளையும், அபாயத்தையும் பரந்து பட்ட சமூக செயல்பாடுகளுக்கும் விரித்துச் செல்வதையும் இது சாத்தியமாக்குகிறது. ‘நிதிமயமாக்கல்’ என்று அழைக்கப்படும் இயக்கப் போக்கை செலுத்தும் காரணி இது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமீப காலங்களில் பெறுமதிகள் எத்தகைய பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும், இந்த கணக்கிடும் தர்க்கத்தின் அடிப்படையில் அவை எவ்வாறெல்லாம்வளர்ந்து செல்ல முடியும் என்பதையும் பார்க்கலாம்.

* பெயரளவு மூலதனம் பற்றியும் கடன் சரக்காக பார்க்கப்படுவதைப் பற்றியும் இங்கு முன் வைக்கப்படும் வாதங்களை மூலதனம் – பாகம் 3-ல் மார்க்ஸ் வைக்கும் விளக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

“இரயில் போக்குவரத்து நிறுமங்கள், சுரங்கங்கள், நீர் வழிப் போக்குவரத்து நிறுமங்கள் போன்றவற்றின் மூலதனப் பங்குகள் உள்ளபடியான மூலதனத்தைக் குறிப்பவை, அதாவது இத்தகைய முனைவுகளில் முதலீடாகி செயல்பட்டுவரும் மூலதனத்தை அல்லது இத்தகைய முனைவுகளில் மூலதனமாகப் பயன்படுத்துவதற்காக வேண்டி மூலதனப் பங்காளர்களால் முன்னீடு செய்யப்படும் பணத்தொகையை குறிப்பவை. இவையெல்லாம் முழு மோசடியாகவே இருந்து விடக்கூடிய சாத்தியப்பாடு இதனால் விலகி விடாது. ஆனால், இந்த மூலதனம் இருமுறை நிலவுவதில்லை – உடைமை உரிமைகளின் (மூலதனப் பங்குகளின்) மூலதன மதிப்பாக ஒரு முறையும், அந்த முனைவுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அல்லது முதலீடு செய்யப்பட வேண்டிய உள்ளபடியான மூலதனமாக ஒரு முறையும் நிலவுவதில்லை. இரண்டவாதாகக் கூறிய வடிவத்தில் மட்டுமே அது நிலவுகிறது; மூலதனப் பங்கு என்பது மூலதனத்தால் ஈடேற்றம் செய்யப்படவுள்ள உபரி-மதிப்பில் உரியதொரு பகுதிக்கான உடைமையுரிமையே தவிர வேறல்ல. A இந்த உரிமையை B-யிடம் விற்கலாம். B அதனை C-யிடம் விற்கலாம். இந்தக் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையின் தன்மை எவ்வகையிலும் மாறி விடாது. முடிவில் A அல்லது B தமது உரிமையை மூலதன வடிவில் பெற்றுள்ளார்; C ஆனவர் தமது மூலதனத்தைப் பங்கு-மூலதனத்திலிருந்து எதிர்நோக்கப்படும் உபரி மதிப்புக்கான வெறும் உடைமையுரிமையாக உருமாற்றியுள்ளார்” – அத்தியாயம் 29, வங்கி மூலதனத்தின் அடக்கக் கூறுகள், பக்கம் 651, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், 1998

** சரக்கு ஒன்றின் மதிப்பைப் பற்றி புரிந்து கொள்வதற்கு மூலதனம் பாகம் 1-ல் முதல் அத்தியாயத்தை பார்க்கவும். இந்த ஆய்வுரையில் சரக்குகளின் தன்மை பற்றி கூறப்படும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.

*** மூலதனச் சுற்றோட்டத்தின் பல்வேறு கட்டங்களில் உபரி மதிப்பின் உருவாக்கம், வினியோகம் பற்றி தெரிந்து கொள்ள மூலதனம் – 3-வது பாகத்தின் பகுதி IV (வணிக மூலதனம்), பகுதி V (வட்டி மூலதனம்) ஆகியவற்றை பார்க்கவும். உபரி மதிப்பு உருவாக்கம் பற்றி இந்த ஆய்வுரையில் சொல்லப்படும் கருத்துக்கள் விவாதத்துக்குரியவை.

Series Navigation<< வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-3-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி...

அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம் !

அன்பார்ந்த ஐ.டி. துறை நண்பர்களே ! டி.சி.எஸ், ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை தகுதியில்லாதவர்கள் என்று ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் நாம் இந்த ஆண்டுக்கான அப்ரைசலை...

Close