«

»

Print this Post

உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை

டந்த 200 ஆண்டுகளில் மனிதகுலம் கண்டுள்ள மகத்தான தொழில்நுட்ப முன்னேற்றமும் உற்பத்தித் திறன் வளர்ச்சியும், 20-ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகள் வாக்கில் ஒரு சிலர் கையில் பெருமளவு மூலதனத்தை குவிப்பதில் முடிந்திருக்கிறது. பொருளாதார ஆதாரங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை சந்தைப் போட்டியில் தீர்மானிப்பது என்ற முறை மேலும் மேலும் விசித்திரமான வடிவங்களுக்கு மாறி வருகிறது இப்போது உலக மக்கள் தொகையில் 1% ஆக உள்ள உலகப் பணக்காரர்கள் அனைவரது வாழ்க்கையை மட்டுமின்றி இந்த உலகத்தையே பந்தயம் வைத்து சூதாடுவதாக நடந்து கொண்டிருக்கிறது.

நிதிச் சந்தைகளில் நிகழும் இந்தச் சூதாட்டத்தின் முக்கியமான ஆதாரங்களாக பெறுமதிகள் உள்ளன. இந்த சூதாட்டத்தின் மூலமாக, 1% பணக்கார கும்பல் தேசங்களிடமிருந்தும், மக்களிடமிருந்தும் மேலும் மேலும் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, வீட்டுக் கடன், வட்டி வீதம், பங்கு விலைகள், அன்னியச் செலாவணி மாற்றங்கள் மற்றும் இன்னும் பல நவீன முதலாளித்துவ கூறுகளை இயக்கும் இந்தச் சூதாட்டத்தை புரிந்து கொள்ள பெறுமதிகளின் தர்க்கத்தை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பெறுமதிகள் பற்றி டிக் பிரையன், மைக்கேல் ரெஃப்ரட்டி ஆகியோர் எழுதிய ஆய்வுரையின் நான்காவது பகுதி இங்கே தரப்படுகிறது.

இது சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற தளத்தில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு அதன் தமிழாக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஆங்கில மூலத்தையும் தருகிறோம்.

நிதி பெறுமதிகளின் தோற்றம்

பணத்தின் மீதான பெறுமதிகள்

insurance

“உடல் திறன் இழப்புக்கு எதிரான காப்பீட்டு கட்டணமாக உன்னிடம் ஒரு காலையும், ஒரு கையையும் வசூலித்ததை நாங்கள் வைத்துக் கொண்டு, இப்போது வாழ்நாள் முழுவதற்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பதற்கு உன்னிடம் எந்த பிடியும் இல்லை”

சரக்கு உற்பத்தியோடும் வர்த்தகத்தோடும் தொடர்புடைய பெறுமதிகள் நீண்ட வரலாறு கொண்டவை. ஆனால், நிதித்துறை பெறுமதிகளின் சகாப்தம் 20ம் நூற்றாண்டின் மூன்றாவது பகுதியில்தான் தொடங்கியது. அவற்றுக்கு முன்பு 19-ம் நூற்றாண்டில் பல வகையான காப்பீட்டு பத்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால், தங்கம்/அல்லது வெள்ளியின் வடிவத்தில் இருந்த பணத்தின் செலாவணி மதிப்பு போதுமான அளவு நிலையாக இருந்ததால் செலாவணி மதிப்பு மாறுவதற்கு எதிரான பாதுகாப்பு தேவைப்படவில்லை. அது போலவே, ஒப்பீட்டளவில் குறைந்த அளவு தொழில்துறை கடன்களும், சிறிதளவே மாற்றமடைந்த வட்டி வீதங்களும் நிலவிய சூழலில் வட்டி வீதங்கள் மீதான பெறுமதிகளின் தேவையும் எழவில்லை.

2-ம் உலகப் போருக்குப் பிந்தைய பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்த கால கட்டத்தில் நிலையான அன்னியச் செலாவணி வீதங்களும், மூலதனக் கட்டுப்பாடுகளும் நிதித்துறை பெறுமதிகளின் வளர்ச்சியை தடுத்திருந்தன. அவற்றின் தேவையை இல்லாமல் செய்வதன் மூலமும், சட்டரீதியாக போடப்பட்ட தடைகள் மூலமும் அவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. உண்மையில், இந்தக் கட்டத்தின் இறுதியில் தோன்றிய பெறுமதிகளின் பல வடிவங்கள் தேசிய மூலதனக் கட்டுப்பாடுகளை உடைத்து செல்வதற்கான முயற்சிகளாகவே தோன்றின அல்லது புதுப்பிக்கப்பட்டன. அதன் மூலம் பிரெட்டன் வுட் முறை தகர்ந்து போவதற்கும் அவை பங்களிப்பு செய்தன.

அன்னியச் செலாவணிகள் தொடர்பானதும், வட்டி வீதங்கள் தொடர்பானதுமான பெறுமதிகள் 1970-களில் உருவாக்கப்பட்டன. 1971-ல் பிரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தங்கள் அதிகாரபூர்வமாக கைவிடப்பட்ட பிறகு நாட்டு நாணயங்களின் மதிப்பு சந்தைப் போட்டியில் தீர்மானிக்கும்படி படிப்படியாக விடப்பட்டன; பல தேசிய மூலதனக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன; சர்வதேச விலைக் கட்டுப்பாடுகளுக்கான அமைப்புகள் கலைக்கப்பட்டன.

பிரெட்டன் வுட்ஸ் முறை 1948-1971

பிரெட்டன் வுட்ஸ் முறை 1948-1971, அமெரிக்க டாலருடன் பிற நாணயங்கள் நிலையான விகிதத்தில் இணைக்கப்பட்டு, டாலர் தங்கத்துடன் ஒரு அவுன்சுக்கு $35 என்ற விலையில் இணைக்கப்பட்டிருந்தது.

சந்தைப் போட்டி அடிப்படையிலான அன்னியச் செலாவணி வீதம், தாராளமயமாக்கப்பட்ட மூலதனச் சந்தைகள் ஆகியவற்றுக்கு அறிவுத்துறை அடித்தளத்தை உருவாக்கிய பொருளாதாரவியலாளர்கள், “சந்தையில் தீர்மானிக்கப்படும் அன்னியச் செலாவணி வீதம் அவற்றின் ‘அடிப்படை மதிப்பை’, அதாவது அந்த நாணயத்தை வெளியிடும் நாட்டின் தேசிய பொருளாதாரத்தின் உண்மையான செயல்பாட்டை, பிரதிபலிப்பதால் அது நிலையாக இருக்கும்” என்றும் “நாட்டுப் பொருளாதாரங்களின் வளர்ச்சி மெதுவாகவே மாறுவதால், நாணயங்களின் செலாவணி வீதமும் மெதுவாகவே மாற்றமடையும்” என்றும் வாதிட்டனர். சந்தைகள் பற்றிய இந்தக் கோட்பாடு சித்தாந்த ரீதியாக தவறானது என்பது ஒரு பக்கம் இருக்க, அதை விட முக்கியமாக நடைமுறையும் அதை தவறு என நிரூபித்தது. அன்னியச் செலாவணி சந்தைகள் நிலையற்று இயங்கின, உண்மையில் கணிக்க முடியாத அளவுக்கு ஏறி இறங்குவதாகவும், கொந்தளிப்பானவையாகவும் மாறின.

மேலும், அதே நேரத்தில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நிதிச்சந்தையின் மூலமாக நாடுகளுக்கு இடையே கடன் கொடுப்பதும் வாங்குவதும் வெகு விரைவாக நிகழ ஆரம்பித்தது. அதுவும், ‘அதிகாரபூர்வ’ சந்தையில் நிர்ணயிக்கப்படும் வட்டி வீதங்களிலிருந்தும், அன்னியச் செலாவணி வீதங்களிருந்தும் வேறுபட்ட வீதங்களில் கடன்கள் கொடுக்கப்பட்டன.

beyond-bretton-woodsகொந்தளிப்பான அன்னியச் செலாவணி வீதங்களும், வளர்ந்து கொண்டே சென்ற உலகக் கடன் சந்தைகளும் இணைந்த இந்தச் சூழல், அன்னியச் செலாவணி மற்றும் வட்டி வீதங்கள் தொடர்பான பெறுமதி சந்தைகளை உரம் போட்டு வளர்த்தன. நாணயங்களின் எதிர்கால மதிப்பு நிச்சயமற்ற முறையில் மாறுவதற்கு எதிராக தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவை ஏற்படுத்தின. அவற்றுக்குத் தேவைப்பட்ட, பொதுமைப்படுத்தப்பட்ட துல்லியமான கணக்கீட்டு முறைகள் பல்வேறு நாடுகளில் செயல்படும் சந்தைகளுக்கிடையே தோன்றும் விலை ஏற்றத்தாழ்வை பயன்படுத்தி வர்த்தகம் செய்து லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கின. கணினி தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேறங்களும், பெறுமதி விலை நிர்ணயிப்பு ‘விஞ்ஞான’மும் இந்த விரிவாக்கத்தில் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளன.

இதன்படி, 1980-களின் தொடக்கத்திலிருந்து நிதித்துறை பெறுமதி வர்த்தகத்துக்கான சந்தைகள் வேகமாக வளர்ந்தன. அந்த சந்தைகளில் அன்னியச் செலாவணி வீதம், வட்டி வீதம் மாற்றங்கள் தொடர்பான எதிர்கால அபாயங்களையும், நிச்சயமின்மைகளையும் முதலாளிகள் விற்க முடிந்தது. இந்த மாற்றங்கள் லாபவீதத்தின் மீது பலத்த தாக்கம் செலுத்தக் கூடியவை. அடிப்படைச் சொத்துக்களை அல்லாமல் அவற்றின் விலை மாற்றங்கள் மீதான ஊகங்களை வர்த்தகம் செய்யும் இந்த சந்தைகளில் நிகழும் பெருமளவிலான புழக்கமும் இணைந்து அவை ஊக வணிகத்துக்கான மையங்களாகவும் மாறின. வேலியிடப்பட்ட நிதியங்கள் மட்டுமின்றி தொழில்துறை கழகங்களும், அவற்றின் நிதிப் பிரிவுகளும் மேலும் மேலும் அதிக அளவில் ஊக வணிக (சூதாட்ட) நோக்கத்தில் பெறுமதி வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதில் வெற்றி தோல்வி ஏற்றத் தாழ்வாக இருந்தது. சந்தையில் ஊக வணிகத்தின் பங்கு எவ்வளவு பெரியது என்பதை அளவிடுவது சிரமமான ஒன்று.

ஊக வணிகத்தில் ஈடுபட்டதற்காக வேலியிடப்பட்ட நிதியங்கள் பரவலாக கண்டனத்துக்குள்ளாயின. ஆனால், 2002-ம் ஆண்டு முதல் அவை வேகமாக வளர ஆரம்பித்திருந்தாலும் 2006-ம் ஆண்டில் முதலீடு செய்யப்பட்ட மொத்த நிதியில் அவற்றின் பங்கு சுமார் 2.5% அளவிலேயே இருந்தது என்பதை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் பெறுமதி வர்த்தகத்தில் அவற்றின் பங்கு 2.5 சதவீதத்தை விட பல மடங்கு அதிகமான அளவாக இருந்தது. சில சந்தைகளில் இந்தப் பங்கு பரிவர்த்தனைகளில் 50 சதவீதம் வரை கூட இருந்தது

பெறுமதி சந்தைகளில் 1987 முதல் 2009 வரையிலான வளர்ச்சி படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது. அது பணத்தின் மீதான பெறுமதிகள் (வட்டி வீதம், அன்னியச் செலாவணி), கடன் பெறுமதிகள், பங்கு பெறுமதிகள் ஆகிய மூன்று பெரிய பெறுமதி பத்திரங்கள் தொடர்பான தரவை காட்டுகிறது. ஆண்டு இறுதியில் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களின் மதிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வரைபடத்திலிருந்து 2009-ல் இந்த மதிப்பு $415 டிரில்லியன் ($415 லட்சம் கோடி – ரூபாய் 28,220லட்சம் கோடி)-ஐ எட்டியிருந்ததை பார்க்கலாம். பரவலாக நம்பப்படுவதைப் போல நிதி நெருக்கடியின் போது பெறுமதிகள் நஞ்சுண்டு மரித்துப் போய் விடவில்லை, மாறாக கொஞ்சம் வேகம் குறைந்தாலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தன. கடன் பெறுமதிகள் இதற்குக் குறிப்பிடத்தக்க விதிவிலக்காக உள்ளன. அவை பற்றி பின்னர் பார்ப்போம்.

படம் 1 – உலக நிதி பெறுமதிகள் சந்தை, நிலுவையில் உள்ள பெயரளவு மதிப்பு, 1987 – 2009, பில்லியன் அமெரிக்க டாலர்கள்

derivatives-figure-1மூலதனத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில் மிக முக்கியமான அபாயங்களாக நாடுகளுக்கு இடையேயும், காலப் போக்கிலும் அன்னியச் செலாவணி வீதங்களும் வட்டி வீதங்களும் மாறி விடுவது உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் பணத்தின் மீதான பெறுமதிகளான வட்டி வீத மற்றும் அன்னியச் செலாவணி முன்பேரங்கள், விருப்பத் தேர்வுகள், மற்றும் கைமாற்றங்கள் ஆகியவற்றின் வர்த்தகம் பெருமளவு வளர்ந்தது ஆச்சரியத்துக்குரியதில்லை. பணத்தின் மீதான பெறுமதிகளுக்கு படம்-1ல் பிற பெறுமதிகளை விட வேறுபட்ட அளவுகோலை பயன்படுத்த வேண்டியிருந்தது. உதாரணமாக, 2007-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணத்தின் மீதான பெறுமதிகளின் மதிப்பு (கிட்டத்தட்ட 400 டிரில்லியல் டாலர்கள்) கடன் பெறுமதிகளின் மதிப்பை விட 6 மடங்கும், பங்கு பெறுமதிகளின் மதிப்பை விட 40 மடங்கும் அதிகம். 2009-ம் ஆண்டில் கடன் பெறுமதிகளின் மதிப்பு பாதியாகக் குறைந்து விட பண பெறுமதிகளின் மிகுநிலை இன்னும் அதிகரித்துள்ளது.

பணத்தின் மீதான பெறுமதிகளைப் புரிந்து கொள்வது ஒப்பீட்டளவில் எளிதானது. ஆனால், நாம் பெறுமதிகளை வரையறுத்த முறையின்படி, அவற்றின் தர்க்கம் பரந்து பட்ட சமூக, பொருளாதார வாழ்வின் பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. வட்டி வீத மற்றும் அன்னியச் செலாவணி வீத பெறுமதிகள் அளவுரீதியாக ஆதிக்கம் செலுத்தினாலும் அவற்றுக்கு இணையாக பிற பெறுமதி வடிவங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. நாம் முன்பு குறிப்பிட்ட பகுதி பிரித்தல், அளவீட்டாக்குதல், சரக்காக்குதல் ஆகிய நடவடிக்கைகளை இது குறிக்கிறது. அபாயத்தை அடையாளம் காண்பதிலும், பகுதி பிரிப்பதிலும் செயல்பாடுகள் ஒளிவுமறைவின்றியும், கட்டுப்பாடின்றியும் நிகழ ஆரம்பித்தன. தம்மிடம் குவியும் மூலதனத்துக்கு கூடுதல் வருமானத்தையும், அதை முதலீடு செய்ய புதிய சொத்து வடிவங்களையும் தேடும் நிதி நிறுவனங்களுக்கு பெறுமதிகள் கவர்ச்சிகரமானவையாக மாறின. பண பெறுமதிகள் அல்லாதவற்றை நாம் சொத்துக்களின் மீதான பெறுமதிகள், சீரான வருமானத்தின் மீதான பெறுமதிகள் என்று இரண்டு வகையினங்களாக பிரிக்கலாம். ஆனால், பல பெறுமதி பத்திரங்கள் இந்த இரண்டு கூறுகளையும் வெவ்வேறு விகிதங்களில் கலந்து உருவாக்கப்படுகின்றன.

மூலம்  : சோசலிஸ்ட் ரெஜிஸ்டர்

மொழிபெயர்ப்பு : குமார்

 

Series Navigation<< சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-4-ta/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மலைத் தோட்டங்களில் மக்கி வீழும் கொத்தடிமை வாழ்வு!

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென...

தமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி!

மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளன. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள்...

Close