நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

மது கடன்களையும் வருமானத்தையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கைப்பற்றி, கட்டுப்படுத்தி, ஆட்டுவிக்கின்றன வங்கிகளும் நிதி மூலதனமும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது?

student-debt-cartoon-englehartஒரு மாணவருக்கு கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவரின் எதிர்கால வேலை வாய்ப்பு தொடர்பாகவும் மாதா மாதம் அவர் பெறப்போகும் வருமானம் தொடர்பாகவும் நிச்சயமின்மையை வங்கி எதிர் கொள்கிறது. ஒரு தொழிலாளி வீட்டுக் கடன் வாங்குகிறார். அவர் தொடர்ந்து வேலையில் இருப்பாரா இல்லை என்பது பற்றியும், அவர் பெறப்போகும் மாதாந்திர வருமானம் மீதும் பந்தயம் மீதும் ஒரு நிச்சயமின்மை உள்ளது. இந்த அபாயங்களை வங்கி அல்லது நிதி நிறுவனம் பெறுமதிகள் போன்ற சூதாட்ட பத்திரங்களை பயன்படுத்தி மூன்றாவது நபர்களுக்கு கைமாற்றி விடுகின்றன.

கடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தொடர்பில்லாத மூன்றாவது நபர் கடனோடு தொடர்புடைய அபாயங்களின் மீது பந்தயம் கட்டி சூதாடுகிறார். இந்நிலையில் கடன் கொடுப்பவர் தன் பொறுப்பை கைகழுவி விட முடிகிறது. மேலும் மேலும் கடனை அள்ளி விட்டு அவற்றையும் அவ்வாறு மூன்றாவது நபரிடம் தள்ளி விட முடிகிறது. கடன் கொடுப்பதற்கும், கடன் பொறுப்பை கைமாற்றுதலுக்கும் அடிப்படையாக நம்பக மதிப்பீடு (credit rating) வழங்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு பிணைய பத்திரத்துக்கும் கணிதவியல் ரீதியான ஒரு மதிப்பெண்ணை வழங்கி அந்த சேவைக்கான கட்டணத்தை வசூலித்துக் கொள்கின்றன இந்நிறுவனங்கள். இவ்வாறாக கடன் கொடுப்பதற்கும், அந்தப் பொறுப்பை பத்திரங்களாக கைமாற்றுவதற்கும், அத்தகைய பத்திரங்கள் சூதாட்டத்துக்கும் ஒரு ஆதாரச் சட்டம் உருவாக்கப்படுகிறது. சந்தைகளில் பத்திரங்களின் விலைகள் ஊதிப் பெருகிக் கொண்டே போவது வரையில் கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம், மதிப்பீடு நிறுவனம், பெறுமதி பத்திரங்களில் சூதாடும் முதலீட்டாளர்கள் என ஒவ்வொரு தரப்பும் விளையாட்டில் மேலும் மேலும் தீவிரமாக ஈடுபட முடிகிறது.

இவ்வாறாக ஒரு சீட்டுக் கட்டு மாளிகை கட்டி எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும் அடுத்த அடுக்கின் மீது தனது பொறுப்பை இறக்கி வைத்திருக்கின்றது; ஒட்டு மொத்த பொறுப்பு யாருக்கும் இல்லை. இதை கண்காணிக்க வேண்டிய (ஒட்டு மொத்த பொறுப்பை ஏற்க வேண்டிய) அரசு நிறுவனங்கள் “தாராளமயமாக்க”த்தின் மூலம் முடக்கப்பட்டிருக்கின்றன.

student-loan-relationshipசீட்டுக்கட்டு வீடு சரிந்து விழும் போது சுமை முழுவதும் சமூகத்தின் மீது, உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகளும், நம்பக மதிப்பீடு வழங்கிய நிறுவனங்களும், கடன் பெறுமதிகளை வைத்து சூதாடிய முதலீட்டாளர்களும் அரசுடன் தாம் கொண்டிருக்கும் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தங்களது நிதிச்சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டு அடுத்த கட்ட விளையாட்டை ஆரம்பிக்கத் தயாராகிறார்கள். சுமை கோடிக்கணக்கான மக்கள் மீது இறக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை துயரத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.

இத்தகைய மூன்று சீட்டு விளையாட்டு ஆட்டமுறைதான் பெறுமதிகள் மீதான வர்த்தகங்கள். நிதிச்சொத்து அல்லது தொடர் வருமானங்கள் மீது பெறுமதி பத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. நிறைய படித்த அறிவாளிகள், பெருமளவு சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு நவீன கணினி தொழில்நுட்பத்தையும் உயர் கணிதவியலையும் பயன்படுத்தி அந்தப் பத்திரங்களை வடிவமைக்கின்றனர். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவை சாதிப்பது எல்லாம் மூலதன உடைமையாளர்களுக்கிடையேயான சூதாட்டத்தை ஊதிப் பெருக்குவதுதான். மனிதகுலத்தின் முன்னேற்றமே இந்த சூதாடிகளின் கையில் சிக்கி நிற்கிறது.

இந்த சூதாட்ட களத்தை சார்ந்திராமல் அரசியல் பொருளாதாரத்தை இயக்குவது முதலாளித்துவத்தின் வரம்புக்குள் சாத்தியமற்று போயிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு அழுகிப் போய், மக்களுக்கும் இந்தப் பூமிக்கும் எதிராக போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டும்.

அதற்கு பெறுமதிகள் முதலான நிதிச் சூதாட்ட கருவிகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

பெறுமதிகள் பற்றி டிக் பிரையன், மைக்கேல் ரெஃப்ரட்டி ஆகியோர் எழுதிய ஆய்வுரையின் ஐந்தாவது பகுதி இங்கே தரப்படுகிறது. இது சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற தளத்தில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு அதன் தமிழாக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஆங்கில மூலத்தையும் தருகிறோம்.

5

நிதிச்சொத்து மீதான பெறுமதி

house-mirageநிதிச்சந்தைகளில் தொழில்நுட்பம் வளர வளர புதிய பத்திரங்களை உருவாக்கி சந்தைகளில் வெளியிடுவது எளிதாகிக் கொண்டே போனது. தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சரக்கு முன்பேரங்கள், விருப்பத் தேர்வுகள், பின்னர் உருவாக்கப்பட்ட பணத்தின் மீதான பெறுமதிகள் போன்ற பாரம்பரிய செயல்பாடுகளுக்கு மேலாக, இத்தகைய பாரம்பரிய பத்திர வர்த்தகத்தை நடத்தி வந்த யூரெக்ஸ் (Eurex), சிக்காகோ வணிகச் சந்தை போன்றவை இன்னும் பலவகையான பத்திரங்களை வர்த்தகம் செய்யத் தொடங்கின. பொருளாதார வாழ்வின் அன்றாட செயல்பாடுகள் பலவற்றை வர்த்தகம் செய்யக் கூடிய நிதி பத்திரங்களாக மறுவார்ப்பு செய்வதன் மூலம் இது நடந்தேறியது.

பங்குகள், காலநிலை, உலோக விலைகள், எரிசக்தி விலைகள், ரியல் எஸ்டேட், கூலி ஏற்ற இறக்கம் போன்ற பேரியல் பொருளாதாரவியல் குறியீட்டு எண்கள், இவை ஒவ்வொன்றின் குறிப்பிட்ட அம்சங்களை அளவிடும் பல வகையான குறியீட்டு எண்கள், அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் உருவாக்கப்பட்ட பத்திரங்கள் மீதான பெறுமதி சந்தை வளர்ச்சியடைந்தது. இது போக முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் உடனடி வர்த்தக முகவர்கள் இன்னும் பலவகையான அபாயங்களுக்கான வர்த்தக பத்திரங்களை உருவாக்கினார்கள். அந்த பெறுமதிகள், தனிச்சிறப்பான ஆனால் கைமாற்றி விடக் கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் இரு தரப்புகளுக்கிடையே வர்த்தகத்துக்கு விடப்படுகின்றன.

பொருளாதார நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நேரடி அபாயங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளாக இந்த புதிய பத்திரங்கள் முன் வைக்கப்பட்டன. உதாரணமாக, எரிசக்தி (மின்சாரம், எரிவாயு) வினியோக நிறுவனங்கள் வெப்பநிலை திடீரென்று மாறி விடுவது தொடர்பான அபாயங்களை எதிர்கொள்கின்றன; விவசாயிகள் பனிப்பொழிவு அல்லது மழைப் பொழிவு தொடர்பான நிச்சயமற்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்; முதலாளிகள் கூலி உயர்வு தொடர்பான நிச்சயமின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்படும் இந்த பத்திரங்களின் மறுபக்கத்தில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் தொகுப்பை பல்வகைப் படுத்த வகைசெய்வதாக உள்ளன.

mortage-bondageஇந்தக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் கொண்ட கடன் பெறுமதிகள் மீது, குறிப்பாக கடன் பிறழ்வு கைமாற்றுகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடிக்கு முன்பும் நெருக்கடியின் போதும் அவற்றின் அளவும் முக்கியத்துவமும் வேகமாக உயர்ந்தது இதற்குக் காரணமாகும். (படம் 1-ஐ பார்க்கவும்). கடன் தொடர்பாக ஒரு நிகழ்வு நடக்குமா (உதாரணமாக ஒரு கடனை கட்ட முடியாமல் போவது) என்பதன் மீது ஊக வணிகம் செய்வது கடன் பெறுமதிகளின் உள்ளடக்கமாகும். 2001-க்கும் 2007-க்கும் இடையே அவை வெகு வேகமாக வளர்ச்சியடைந்தன. 2008-ல் பல முன்னணி முதலீட்டு வங்கிகள் திவாலானதற்கு முக்கிய காரணமாக கடன் பெறுமதிகளின் மதிப்பு வீழ்ச்சி இருந்தது.

மேலே பட்டியலிடப்பட்ட பிற புதிய பத்திரங்களைப் போல் அல்லாமல், கடன் பெறுமதிகள் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை தவிர்ப்பது என்ற நீண்ட கால நோக்கத்தையும், முதலீட்டு நிறுவனங்களின் நிதிச்சொத்து தொகுப்பை பல்வகைப்படுத்துவது என்ற குறுகிய கால நோக்கத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. கடன் பெறுமதி வர்த்தகத்தில், “பாதுகாப்பை விற்பவர்”, “பாதுகாப்பு வாங்குபவரிடம்” இருந்து தொடர் வருமானம் பெற்றுக் கொள்கிறார். அதற்கு பதிலாக, கடன் பிறழ்வு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வரும் போது முன்கூட்டியே ஒத்துக் கொண்ட ஒரு தொகையை இழப்பீடாக வழங்குவதாக உறுதி அளிக்கிறார்.

இந்த நிகழ்முறைக்குள் உருவாக்கப்பட்ட கடன் பிறழ்வு கைமாற்றுகள் ஆரம்பத்தில் தவிர்ப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன. கடன் சொத்துக்கள் தொடர்பாகவும், பிணையங்கள் தொடர்பாகவும் தொடர்பான தமது கடப்பாடுகளை பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் கடன் பிறழ்வு கைமாற்றுகளை பயன்படுத்தின. கடன் பிறழ்வு அபாயத்தை தவிர்த்துக் கொண்ட வங்கிகள் கடன் கொடுப்பதை, வைப்பு வட்டி வீதத்துக்கும் கடன் வட்டி வீதத்துக்கும் இடையேயான வேறுபாட்டை வைத்து லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக சுருக்கிப் பார்க்கின்றன. இந்த நிதிக் கருவிகள் வணிக நிறுவனங்களுக்கும் அவை வசதியாக இருந்தன. வெவ்வேறு துறைகளில் அபாயங்களை எதிர்கொள்ளும் இரண்டு தொழிற்கழங்கள் (உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்கு விவசாயத் துறையிலும், இன்னொரு நிறுவனத்துக்கு மின்னணு துறையிலும்) தத்தமது அபாயங்களை கைமாற்றிக் கொள்வதன் மூலம் தாம் எதிர்கொள்ளும் அபாயங்களை பல்வகைப்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிறழ்வு கைமாற்று சந்தைகளில் இவை ‘ஒருபடித்தான கருவிகள்’ மூலம் நடைபெறுகின்றன. அவை பல ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தங்களாக உள்ளன.

2004-ம் ஆண்டு வாக்கிலிருந்து கடன் பெறுமதிகளின் பாத்திரம் நேரடியாக தவிர்ப்பு பெறுவது என்பதை விட பெருமளவு விரிவடைந்தன. ஒரு பிறழ்தலை நேரடியாக சொந்தமாக்கிக் கொள்ளும் தேவை (நேரடி கடப்பாடு) இல்லாமல் அதனோடு இணைக்கப்பட்ட விலை மீது மட்டுமான கடப்பாட்டை சாத்தியமாக்குவதால், கடனோடு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு தனது முதலீட்டு சொத்துக்களின் ஒரு பகுதியாக கடன் பெறுமதிகளை வைத்திருக்க முடியும். மூன்றாம் தரப்பினரின் இத்தகைய வேண்டலுக்கு ஏற்ற வகையில் அவர்களது முதலீடுகளில் இடம் பெறுவதற்கு பொருத்தமான வடிவங்களில், கடன் குறிப்புகள், தொகுப்பு இணைப்பு பத்திரங்கள் போன்ற வடிவங்களில் கடன் பெறுமதிகள் உருவாக்கப்பட்டன.

home-mortageஇன்னும் பலவகைப்பட்ட நிகழ்வுகளுக்கும் பிணையமாக்கப்பட்ட கடப்பாடுகளுக்கும் பயன்படுத்தும்படி இந்தப் பத்திரங்கள் வளர்ந்தன. அதற்கு ‘பல்படித்தான கருவிகள்’ பயன்படுகின்றன. அடமானக் கடன் பிணையங்களோடும் பிற கடன் பிறழ்வு கடப்பாடுகளோடும் தொடர்புடைய ‘உருவாக்கி-கைமாற்றி விடும்’ முறையைப் போலவே சாராம்சத்தில் ஒரே மாதிரியான பலவகை அபாயங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, தனிச்சிறப்பான பத்திரங்களாக உருவாக்கப்பட்டு, மதிப்பீட்டு எண் வழங்கப்பட்டு உலக நிதிச் சந்தைகளில் விற்கப்படுவதும், கடன் பிறழ்வு குறியீட்டு எண் மீதான வர்த்தகமும் ‘பல்படித்தான’ கடன் பெறுமதிளோடு தொடர்புடையவை. மொத்தத்தில், இந்த பல்-பெயர் கடன் பெறுமதிகள் பல்வகைப்படுத்தப்பட்ட பத்திர வகைகளில் ஒன்றாக மாறின. பெருமளவு லாபத்தை பெறும் நோக்கத்தில் அவற்றின் விலை பிற பத்திரங்களின் விலைகளை விட பெருமளவு ஏறி இறங்குகிறது. அவை பிற நிதி பத்திரங்களை விட வேறுபட்டதாக இருப்பதும், எனவே நிதி சொத்துக்களின் அபாய வீச்சு பரவலாவதும் முக்கியமானது. அவை எந்த வகையான அபாயத்தோடு தொடர்புடையவை என்பது இரண்டாம் பட்ச முக்கியத்துவம் வாய்ந்ததே.

நிதித்துறை ஊடகங்களில் பெருமளவு கெட்ட பெயர் சம்பாதித்தாலும், நிதிநெருக்கடிக்குப் பிறகும் கடன் பிறழ்வு கைமாற்றுகள் வர்த்தகத்தில் மிதமான வீழ்ச்சியே ஏற்பட்டது. 2009-ம் ஆண்டு கடன் பிறழ்வு கைமாற்றுகளின் நிகர நிதி மதிப்பு 2006-ம் ஆண்டு அளவை விட குறைந்து விடவில்லை. ஒருபடித்தான கருவிகள், பல்படித்தான கருவிகள் இரண்டுக்குமே இது பொருந்தும். எல்லாவகை பெறுமதிகளிலும் உள்ளார்ந்து அடங்கியிருக்கும் அம்சம் கடன் பெறுமதிகளில் அப்பட்டமாக வெளிப்பட்டது என்பதுதான் உண்மை. அபாயத்தை சரக்காக மாற்றுவதன் மூலம் எதிர்கொள்ளும் அபாயங்களை பலவகைப்பட்டவயாக மாற்றுவது; மூலதனத்தின் மீது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கான போட்டி இரண்டும் இவற்றில் அடங்கியுள்ளன. அபாயத்தை பலவகைப்பட்டதாக மாற்றுவது ஒவ்வொரு குறிப்பிட்ட அபாயத்தின் கடப்பாட்டையும் பலபேர் கைக்கு பிரித்துக் கொடுக்கிறது. அபாயங்களின் வர்த்தக விலை யதார்த்தத்துக்கு மாறாக இருக்கும் போது அந்த விலகல் வேகமாக பரவுகிறது. இருப்பினும், மூலதனத்தைப் பொறுத்தவரை அவற்றுக்கு ஒரு பயன்பாடு உள்ளது. எதிர்கொள்ளும் அபாயத்தை தவிர்ப்பதிலும், நிதிச் சொத்துக்களை பலவகைப்படுத்தவும் அவை உதவுகின்றன.

தொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள்

தொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள், சொத்து மதிப்பில் ஏற்படும் மாற்றம் அல்லது நிகழ்வுகள் தொடர்பான பெறுமதிகளிலிருந்து வேறுபட்டவை. பொதுவாக பிணையமாக்கம் என்ற முறை மூலம் அவை பிணையங்களாக உருவாக்கப்படுகின்றன. நிதி பெறுமதிகளை விட அவை நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும் நீண்ட காலம் அவை பெறுமதிகளாக கருதப்படவில்லை. உலகளாவிய நிதி நெருக்கடிதான் அவற்றின் பெறுமதி தன்மையை வெளிப்படுத்தின. அவற்றின் பெறுமதி பரிமாணம்தான் நெருக்கடியின் மையமாக இருந்தது. இது தொடர்பாக கீழே விவாதிக்கலாம்.

புதிதாக உருவாக்கப்பட்ட நிதிச்சொத்துக்களின் மீதான பெறுமதிகளைப் போல தொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள் 1980-களில் வளர ஆரம்பித்தன. முதலில் அரசுகள் வெளியிட்ட பிணையங்களில் ஆரம்பித்து 1990-களில் தனியார் பிணையங்களும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. படம் – 2ல் 2000-ம் ஆண்டுக்கும் 2009-க்கும் இடையில் வெளியிடப்பட்ட தனியார் பிணையங்கள் பற்றிய தரவுகளை பார்க்கலாம் பிணையங்களின் பிரதான வகையினங்களான சொத்து அடிப்படையிலான வணிக பத்திரம் (ABCP) (எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே பெறுவதற்காக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துவது); சொத்து அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (ABS); அடமானக் கடன்கள் அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (MBS) மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDO, CDO2). அவற்றின் மொத்த மதிப்பு 2000-ல் $1.3 டிரில்லியன் ஆகவும், 2006-ல் $4.7 டிரில்லியன் ஆகவும் வளர்ந்தது. 2009-ல் $1 டிரில்லியன் ஆக வீழ்ச்சியடைந்தது. 2000-ம் ஆண்டு முதல் பிணையங்கள் வெளியிடுவதில் பெரும்பகுதி வளர்ச்சியும் அதைத் தொடர்ந்த காலகட்டத்தில் வீழ்ச்சியும் அடமானங்கள் அடிப்படையிலான பிணையங்கள் மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDOs) வடிவத்தில் இருந்தன.

derivatives-figure-2Figure 2:

student-debtஅடமானங்களைத் தவிர, வேறு என்ன வகை தொடர் வருமானங்கள் பிணையங்கள் வெளியிடுவதை சாத்தியமாக்கின? “மூடிஸ்” பின்வரும் நிதிச்சொத்து வகையினங்களை நிதிச்சொத்து அடிப்படையிலான பிணையங்களுக்கான அடிப்படையாக பட்டியலிடுகிறது: ‘விமானக் குத்தகை, வீட்டுப் பங்கு கடன்கள், வாகனக் கடன்கள், குத்தகைகள், கட்டப்படும் வீடுகள், கடன் அட்டை கடன்கள், சிறு வணிகக் கடன்கள், விற்பனைக் கூட கடன்கள், கல்விக் கடன்கள், எந்திரக் கடன்கள், எந்திரக் குத்தகைகள், கிளை வியாபார கடன்கள், மருத்துவக் கடன்கள், புகையிலை இழப்பீடுகள் முதலியன’

மூலம்  : சோசலிஸ்ட் ரெஜிஸ்டர்

மொழிபெயர்ப்பு : குமார்

Series Navigation<< உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-5-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான...

சங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 25, 2018

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் சங்கம் - உறுப்பினர்கள் கூட்டம் நாள்: 25-8-2018, சனிக்கிழமை. நேரம்:  மாலை 4 முதல்  6 வரை இடம்  : பெரும்பாக்கம்

Close