1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்

  1. பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்
  2. வீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்
  3. சூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்
  4. உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை
  5. நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!
  6. 1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி? – அமெரிக்க அனுபவம்
  7. முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்
  8. முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி?

டிக் பிரையன், மைக்கேல்ராஃபெர்ட்டி எழுதிய பெறுமதிகள் பற்றிய பகுப்பாய்வின் மொழி பெயர்ப்பின் 6-வது பகுதி. இது Socialist Register (Vol 44, 2011) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

6

1996 முதல் 2010 வரை வெளியிடப்பட்ட முக்கியமான பிணைய பத்திரங்கள் பற்றி மூடிஸ் நிறுவனம் பட்டியலிட்டுள்ள தரவுகளை படம்-3ல் பார்க்கலாம். படத்திலிருந்து 2000-க்கும் 2007-க்கும் இடையே வீட்டு அடமான பிணைய பத்திரங்களின் வெளியீடு பெருமளவு அதிகரித்திருப்பதை தெரிந்து கொள்ளலாம். 2007-ம் ஆண்டில் இவை வெளியிடப்பட்ட எல்லா வகை பிணைய பத்திரங்களில் 65 சதவீதமாக இருந்தன. 2006-ம் ஆண்டில் இருந்த $483 லட்சம் கோடி என்ற அளவிலிருந்த வீட்டு அடமான பிணைய பத்திரம் வெளியீடுகளின் மதிப்பு நிதி நெருக்கடியின் போது, 2009-ல் வெறும் $2 லட்சம் கோடியாக குறைந்தது.33

குடும்பங்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் வருமான ஆதாரங்களின் அடிப்படையிலான பிணையப் பத்திரங்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக இருப்பதைப் படத்தில் பார்க்கலாம். அதாவது, வீட்டு அடமானக் கடன்கள், வாகனக் கடன்கள், கடன் அட்டை கடன்கள், குறிப்பாக 2001-லிருந்து கல்விக் கடன்கள் ஆகியவை பெருமளவு வளர்ந்திருக்கின்றன. சொல்லப் போனால் குடும்பங்களிடமிருந்து ஈட்டப்படும் வருமான ஆதாரங்களை நேரடியாக அடிப்படையாக கொண்டிராத பிணைய பத்திர வெளியீடுகளைக் குறிக்கும் “other (மற்றவை)” வகை இந்த காலகட்டம் முழுவதிலும் சொற்பமானதாகவே இருந்திருக்கிறது.

படம் 3 : அமெரிக்காவில் சொத்துக்கள் அடமானத்தின் பேரிலான பிணையமாக்க நடவடிக்கைகள், சொத்து வகையினத்தின் அடிப்படையில் புதிய வெளியீடுகள், 1996-2010 (US$ மில்லியன்களில்)

ஆதாரம் : தாம்சன் ராய்ட்டர்ஸ், SIFMA

2007 வரை பிணைய பத்திரங்களின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்த குடும்பங்களின் கடன்களின் அதிகரிப்பு இரண்டு காரணிகளின் சேர்க்கையால் நடந்தது என்பது இப்போது நன்கு புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. முதலாவதாக, விலைவாசி உயர்வுக்கு சரிசெய்யப்பட்ட உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான கூலி தேங்கிப் போனது அல்லது வீழ்ச்சியடைந்தது. வருமானம் குறையும் போது தமது வாழ்நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காக உழைக்கும் வர்க்கத்தின் கடன் வேண்டல் அதிகரித்தது36. இரண்டாவதாக, கடன் கொடுப்பவர்கள் பின்பற்றிய வேட்டையாடும் வகையிலான விற்பனை உத்திகள். இவை குறிப்பாக பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினரிடையே பயன்படுத்தப்பட்டன.36. இந்த இரண்டு காரணிகளும் ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பிணைய பத்திரங்கள் சந்தையில் ஒன்றை ஒன்று வலுப்படுத்துவதாக அமைந்திருந்தன. குடும்பங்களுக்கு கடன் கொடுப்பதில் இருக்கும் முக்கியமான அபாயமான கடன் திருப்பிக் கட்டாமல் போவது. இதனை ‘உருவாக்கி வினியோகித்தல்’ என்ற பிணைய பத்திரத் துறை நிறுவனங்களின் உத்தியின் மூலம் கடனை உருவாக்கியவரிடமிருந்து பிணைய பத்திரத்தை வாங்குபவருக்கு கை மாற்றி விடலாம்: கடனை உருவாக்குபவர் அது தொடர்பான பிணைய பத்திரத்துக்கான சந்தை வேண்டல் இருப்பது வரை, கடன் கொடுப்பதற்கு முந்தைய முறையான சரிபார்த்தல்களை செய்ய வேண்டியதில்லை.37. இந்த பிணையங்களை வாங்குபவர்கள் யார், ஏன் வாங்குகிறார்கள் என்ற விஷயத்தை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மேலே தரப்பட்டுள்ள மூடிஸ் பட்டியல் பிணையமாக்க நடைமுறையின் இலக்காக குடும்பங்கள் மட்டும் இல்லை என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் வருமானத்தை நம்பகமாக உருவாக்கும் பலவகையான பிற சொத்துக்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் (மற்றும் விமானங்கள்), சாலைகள், மின்சாரம், தண்ணீர், தொலைதொடர்பு, மருத்துவத் துறை போன்ற சேவைத் துறைகளும் புதிய நிதித்துறை கணக்கீடுகளின் இலக்காக ஆகியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் நம்பகமான தவணை வருவாயை தருவதாலும், பொருளாதாரத்தின் சுழற்சியால் பாதிப்பு குறைவாகவும் இருப்பதால் இவை ‘உள்கட்டுமான’, ‘பகுதியளவு ஏகபோக’ சொத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன (38). நம்பகமானதாக கருதப்படும் தவணை வருவாய்கள் நிதித்துறை சந்தைகளில் மொத்தத் தொகைக்கு (வட்டியும் சேர்த்து) விற்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்படுகின்றன, அதாவது பிணையமாக்கப்படுகின்றன. ஒரு சுங்கச் சாலையின் உரிமையாளர் சுங்கக் கட்டணத்தின் அடிப்படையில் தவணை வருவாயை ஈட்டும் ஒரு பத்திரத்தை நிதிச் சந்தையில் விற்க முடிந்தது.

பிணைய பத்திரங்களின் பெறுமதி தன்மை, அவை தவணை வருவாயை உருவாக்கும் (அடிப்படையான) சொத்தை விற்காமல், தவணை வருவாயை (அல்லது எதிர்கால நிகழ்வுகளின் அடிப்படையிலான உரிமையை) மட்டும் விற்பதோடு தொடர்பு கொண்டிருப்பது என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும். சுங்கச் சாலை உதாரணத்தை பொறுத்தவரை, அந்த பிணைய பத்திரத்தின் உரிமையாளர் சுங்கச் சாலைகளிலிருந்து வரப் போகும் தவணை வருவாயை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் அந்த சாலையை சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களை பொறுத்தவரை, பிணைய பத்திரத்தை வைத்திருப்பவர், அந்த அடகுக் கடனுக்கான வட்டி தவணை வருவாய்களை சொந்தமாக வாங்கியிருக்கிறார். ஆனால், அந்த அடகுக் கடனையே சொந்தமாக்கிக் கொண்டிருக்கவில்லை. எனவே, அந்த அடகுக் கடனுக்குக் கீழ் இருக்கும் வீட்டின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை.

பிணைய பத்திரத்தை வெளியிடுபவருக்கு, எதிர்கால (எனவே, குறிப்பிட்ட அளவுக்கு நிச்சயமில்லாத) வருமானத்தை (சுங்க கட்டணம், மின் கட்டணம், கல்விக் கடன் தவணைகள்) உத்தரவாதமான உடனடி வருவாயாக (பிணைய பத்திரத்தின் விற்பனை விலை) மாற்றிக் கொள்வதிலும், தவணை வருவாயின் அபாயங்களை விற்று விடுவதிலும் பிணையமாக்கலின் பலன்கள் உள்ளது. இதன் மூலம் முழுக் கடனும் திரும்பி அடைக்கப்படுவதை வரை காத்திருப்பதை விட அவர்கள் அதிகமான சுங்கச் சாலைகளை போடலாம், கூடுதல் மின் வினியோகம் செய்யலாம், அதிகமான வீட்டுக் கடன்களை கொடுக்கலாம். பிணைய பத்திரத்தை வாங்குபவருக்கு வங்கி வைப்பு அல்லது அரசு கடன் பத்திரகளை விட மேம்பட்ட வட்டி வீதத்தை தரும் வாங்கி விற்கக் கூடிய ஒரு சொத்தின் மீதான உரிமை கிடைக்கிறது. அடிப்படையான சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்ளாமலேயே அவர்களது அபாயங்களை பன்முகப்படுத்திக் கொள்ள முடிகிறது. இத்தகைய பிணைய பத்திரங்கள் அரசு கடன் பத்திரங்களை வாங்குவதற்கு மாற்றாக உள்ளன. அவற்றில் பல AAA மதிப்பீடு வழங்கப்பட்டிருப்பதால், அவை அரசுக் கடன் பத்திரங்களுக்கு நிகரான (அல்லது கிட்டத்தட்ட சமமான) உத்தரவாதம் கொண்டிருப்பதாக கருதப்பட்டன. ஆனால், அரசு கடன் பத்திரங்களை விட இவை அதிக வருவாய் வீதத்தை அளிக்கின்றன.

இந்தக் கடன் பத்திரங்களில் எவ்வளவு அபாயம் இணைந்துள்ளது என்பதும், அந்த அபாயத்துக்கு ஏற்ற வருவாயை கணக்கிட்டு விலை நிர்ணயிப்பதும் முக்கியமான தொழில்நுட்ப கேள்வியாக அமைகின்றன. அடகுக் கடன் அடிப்படையிலான பிணைய பத்திரங்களின் விரிவாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலிருந்தும் உலக நிதி நெருக்கடி பற்றிய விளக்கங்களிலிருந்தும், இந்த பிணைய பத்திரங்களை வெளியிடுபவர்கள், ‘உண்மையான’ அபாயங்களை உணர்ந்திருக்கவில்லை அல்லது வேண்டுமென்றே மறைத்திருக்கின்றனர் என்று நமக்குத் தெரிய வருகிறது.39 கடன் மதிப்பீட்டு நிறுவனங்களும், இத்தகைய கணக்கீடுகளை செய்யும் நிபுணர்களான பிற சந்தை காவலர்களான தணிக்கை நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் போன்றவர்களும் பேரழிவை ஏற்படுத்தும் தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அபாயத்துக்கு துல்லியமாக விலை நிர்ணயிப்பது என்ற வகையிலும், பத்திரத்தின் தரத்தைப் பற்றியும் கடன் மதிப்பீட்டின் பொருத்தமின்மை பற்றியும் யாருக்கெல்லாம் தெரிந்திருந்தது என்ற வகையிலும் பார்க்கும் போது ஆய்வாளர்கள் தார்மீக ரீதியான தோல்விகள் மீதும், சந்தை தோல்விகள் மீதும் கவனம் செலுத்துகிறார்கள். இதிலிருந்து சந்தைகளை மேலும் வெளிப்படைத்தன்மை உள்ளவையாக மாற்றுவது, விற்கப்படும் பொருள் பற்றிய விபரங்களை வெளியிடுவது, நுகர்வோர் பாதுகாப்பு போன்றவற்றை முன் வைப்பது ஆகியவற்றுக்கான உத்திகள் அடங்கிய கொள்கை சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லப்படுகிறோம்.41 ஆனால், இத்தகைய திட்டங்கள் சந்தைகள் ஏன் இந்த அளவுக்கு, இந்த வகையில் வளர்ந்தன என்பதற்கான காரணங்களை கண்டறிவதை தவிர்க்கின்றன. நிதிச் சந்தைகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகின்றன, உழைப்பாளர்களுக்கு அதில் இருக்கும் சாத்தியங்கள் ஆகிய புரிதலின் அடிப்படையிலான அரசியல், நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவது மட்டும் என்ற அளவிலான (சாராம்சத்தில் ஆளும் வர்க்க) திட்டத்துக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, இந்த காரணங்களை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

முதலீடுகளை பன்மயமாக்கலும், அதிக லாபத்தை தேடுதலும்

குறிப்பாக 1990-களிலிருந்து புதிய சொத்து வகைகள், தவணை வருவாய் வகைகள் தொடர்பான நிதி பத்திரங்களின் அடிப்படையிலான பெறுமதி வடிவங்களின் வேகமான வளர்ச்சிக்கான காரணம் என்ன? தளர்வான ஒழுங்குமுறை சூழலில் குடும்பக் கடன்களின் வளர்ச்சியையும் அத்தோடு இணைந்த கற்பனைத் திறனும் தொழில்நுட்பமும் சேர்ந்த புதிய செயல்பாடுகளையும் நாம் ஏற்கனவே பார்த்தோம். இவற்றை வழங்கல் பக்கத்திலான காரணிகள் என்று வகைப்படுத்தலாம். ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அரசு சொத்து நிதியங்களில் குவிக்கப்பட்டு வரும் உபரி மதிப்பும், அதிஉயர் பணக்காரர்களாலும், மேலும் மேலும் அதிகமாக ஓய்வூதிய நிதியங்களாலும் பயன்படுத்தப்படும் வேலியிடப்பட்ட நிதியங்களும் வேண்டல் பக்கத்திலான காரணிகள். இவை அனைத்தும் தமது சொத்துக்களை போட்டு வைப்பதற்கான பத்திரங்களை தேடிக் கொண்டே இருக்கின்றனர். குறிப்பாக, இந்த வேண்டல் பக்கத்திலான கவனம், மூலதனம் அதிக லாபத்தை தேடி அலைவதையும் அத்தோடு இணைந்த அபாயத்தை பன்முகப்படுத்தும் உத்தியையும் சுட்டிக் காட்டுகிறது.42

இவற்றுடன் இந்த வளர்ச்சிக்கான தீர்மானகரமான காரணியாக இருந்தது குறை வட்டி வீதங்களும், எனவே அரசு கடன் மீதான குறைந்த வருமானமும் ஆகும். ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி 2004-ல் இவ்வாறு கூறியது :

“பல நாடுகளில் குறைந்த அபாய முதலீடுகளுக்கான வட்டி வீதம் குறைந்த மட்டங்களுக்கு வீழ்ந்து விட்ட நிலையில் முதலீட்டாளர்கள் தமது லாப வருவாயை குறையாமல் பராமரிக்க அதிக அபாய சொத்துக்களான கார்ப்பரேட் கடன்கள், வளர்ந்து வரும் சந்தை கடன் ஆகியவற்றிற்கு தமது பணத்தை நகர்த்தியிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்யும் போது இந்த சொத்துக்கள் மீதான கடன் லாபம் குறைகிறது. அதன் பொருள் என்னவென்றால், முதலீட்டாளர்கள் எடுக்கும் அபாயத்துக்கு குறைந்த அளவு லாபத்தையே பெறுகிறார்கள்.”43

2007-ம் ஆண்டு இங்கிலாந்து வங்கியின் ஆளுனர் இதோ போன்ற கண்ணோட்டத்தை முன் வைத்தார் :
“அதிக லாப வருவாய்க்கான விருப்பத்தை பாரம்பரிய முதலீட்டு வாய்ப்புகளால் நிறைவேற்ற முடியவில்லை. இது புதிதாக உருவாக்கப்பட்ட, தவிர்க்க இயலாமல் அதிக அபாயம் கொண்ட நிதித்துறை கருவிகளுக்கும், அதிகரித்த கடன் வாங்கி முதலீடு செய்வத்தற்கும் இட்டுச் சென்றது. இந்த சவாலுக்கு எதிர்வினையாக நிதித்துறை லாபங்களை அதிகரிப்பதற்கும், மேலும் அதிக அபாயத்தை எடுத்துக் கொள்வதற்கும் மேலும் மேலும் நுணுக்கமான வழிகளை உருவாக்கிக் கொடுத்தது.”44

இந்த உருமாற்றத்தை விளக்குவதில், வேலியிடப்பட்ட நிதியங்களின் பங்கும், அரசு சொத்து நிதியங்களின் பங்கும், வெளிப்படையாக இருந்தன.45 2004-ம் ஆண்டில் “குறை வட்டி வீத சூழல் வேலியிடப்பட்ட நிதியங்களை நோக்கி முதலீடுகள் மாற்றப்படுவதை ஊக்குவித்தது. ஏனென்றால் கடந்த காலத்தில் வேலியிடப்பட்ட நிதியங்கள் பாரம்பரிய முறையில் நிர்வகிக்கப்படும் முதலீடுகளை விட கூடுதல் அபாயத்தை கொண்டிருந்தாலும், உயர்ந்த சராசரி லாபத்தை சாதித்திருக்கின்றன.” என்று ஆர்.பி.ஏ சுட்டிக் காட்டியது. அதிக லாபத்தை நோக்கிய தேடல் பன்முகப்படுத்தலை உருவாக்கியது. ‘அவற்றின் வழக்கமான முதலீட்டு வாய்ப்புகளில் போட்டி அதிகமானதால், வேலியிடப்பட்ட நிதியங்கள் தமது லாப வீதத்தை பராமரிப்பதில் சிக்கலை சந்திப்பதாக தெரிய வந்தது. இதன் விளைவாக சில வேலியிடப்பட்ட நிதியங்கள் மேலும் விரிவான முதலீட்டு வாய்ப்புகளை தேடவும் அதிக அபாயத்தை எடுத்துக் கொள்ளவும் ஆரம்பித்தன.’46 அரசு சொத்து நிதியங்கள், அதிக லாபத்தை தேடும் போக்கில், தமது கையிருப்புகளை வேலியிடப்பட்ட நிதியங்களில் போடுவதாகவும் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அத்தோடு பெறுமதிகளிலும், சொத்துக்களின் அடிப்படையிலான பிணைய பத்திரங்களிலும் கூடுதல் முதலீடு செய்கின்றன.47

கூடுதல் லாபத்த்தை தேடுவது கூடுதல் அபாயத்தை மேற்கொள்வதற்கான முக்கியமான விளக்கத்தை தருகின்றது. ஆனால், அதனளவில் பார்க்கும் போது அது நிதித்துறை புத்தாக்கத்தை மட்டுமே விளக்குகிறது. லாபமீட்டுவதற்கான வேட்கையும், அபாயத்தை மேற்கொள்வதற்கான ஆர்வமும் மூலதனத்துக்கு புதிதானதில்லை. எனவே, பெறுமதிகளின் வேகமான வளர்ச்சிக்கான இந்த விளக்கத்தில் இரண்டு கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டியிருக்கிறது.

(7-வது பகுதியில் தொடர்கிறது.)

டிக் பிரையன், மைக்கேல் ராஃபெர்ட்டி எழுதிய பெறுமதிகள் சந்தை பற்றிய பகுப்பாய்விலிருந்து, Socialist Register (Vol 44, 2011)-ல் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பு : குமார்

Series Navigation<< நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்!முதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-6-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லே ஆஃப், சரியா தவறா? – ஒரு கேள்வி, பல பதில்கள்

ஒரு கேள்வி, பல பதில்கள் - ஐ.டி நிறுவனங்களில் ஏன் ஆட்குறைப்பு நடக்கிறது? அதை பல்வேறு தரப்பினர் எவ்வாறு பார்க்கின்றனர்?

கடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்

முதலீட்டாளர்கள் கடன் தள்ளுபடிகளை நல்ல அறிகுறிகளாக பார்த்து அதன் மூலம் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவார்கள் என்று மட்டும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இருக்கும். வேளாண் கடன் தள்ளுபடி...

Close