டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

This entry is part 5 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு முதல் செல்லாது அறிவிக்கப்பட்டதை அடுத்து பலவிதமான கருத்துக்கள், வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, குமார் எழுதிய இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.

1. விவசாயிகள், சிறு வணிகர்கள் மீது தாக்குதல் – கருப்புப் பணத்தின் மீது அல்ல

digital-economy-3அ. ரூபாய் நோட்டு ஒழிப்பு கருப்புப் பணத்தை ஒழிக்காது

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, “அந்த நடவடிக்கை உண்மையில் கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா? கருப்புப் பணப் பொருளாதாரத்தில் ரூபாய் நோட்டாக இருப்பது 5% மட்டும்தான், வெளிநாட்டில் புழங்கும், சொத்துக்களாக மாறியிருக்கும் கருப்புப் பொருளாதாரத்தை இது பாதிக்கப் போவதில்லை” என்று ஒரு புறமும், “இந்த நடவடிக்கை கோடிக்கணக்கான ஏழை மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது, ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள், வியாபாரம் முடங்கியிருக்கிறது, வேலை வாய்ப்பு குறைந்திருக்கிறது” என்று இன்னொரு புறமும் விமர்சித்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்கு பதிலாக, “கருப்புப் பணத்தை ஒழிக்க அடுத்தடுத்த நடவடிக்கைகள் காத்திருக்கின்றன, மக்களுக்கு ஆரம்ப கஷ்டங்களை சகித்துக் கொள்ள வேண்டும், நீண்ட கால நோக்கில் பொருளாதாரம் மேம்படும், வாழ்க்கைத்தரம் உயரும் விலைவாசிகள் குறையும்” என்று அரசு பிரச்சாரம் செய்கிறது.

ஆ. ரூபாய் நோட்டு ஒழிப்பின் நோக்கம்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 2 வாரங்கள் முடியப் போகும் தருவாயில், இந்த நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்காது என்றால், இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என்ன, இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதன் நோக்கம் என்ன என்பதை மோடியும் அருண் ஜெட்லியும், முழுப்பக்க நாளிதழ் விளம்பரங்களை வெளியிடும் paytm முதலான நிதிச் சேவை நிறுவனங்களும் சொல்லத்தான் செய்கிறார்கள். “Cashless economy – நோட்டு இல்லா பொருளாதாரம், digital economy – கணினிமய பொருளாதாரம் என்பதை நோக்கிய பயணம், அதற்கேற்ப நாட்டு மக்களின் நடத்தையையும் மனோபாவத்தையும் மாற்றியமைக்கும் நடவடிக்கை” என்கிறார்கள்.

“இந்த நடவடிக்கை திடீரென்று எடுக்கப்பட்டதில்லை, இதை நோக்கிய பயணத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடங்கியிருக்கிறோம். அனைவருக்கும் வங்கிக் கணக்கு (ஜன் தன் யோஜனா), ஆதார் அட்டை வழங்குதல், வங்கிக் கணக்கு, ரேஷன் அட்டை, சமையல் எரிவாயு கணக்கு ஆகியவற்றை ஆதார் எண்ணுடன் இணைப்பது, மானியங்களை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவது, smart cities, digital economy என்று பல நடவடிக்கைகள் நாங்கள் அமல்படுத்தி வருகிறோம், அதன் தொடர்ச்சிதான் இது” என்கிறார்கள். “இதன் மூலம் வரி ஏய்ப்பு, ஊழல், மானியங்கள் திருப்பி விடப்படுவது போன்றவற்றை ஒழித்து விடுவோம்” என்கிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து மட்டுமில்லை, மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தே இந்த நடவடிக்கைகள் வேறு பெயர்களில் – உங்கள் பணம் உங்கள் கையில், financial inclusion – நிதித்துறை பரவலாக்கம் – அல்லது ஆதார் போன்று அதே பெயரில் தொடங்கி அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

“உங்களுக்கு கைச்செலவுக்கு 2,000 – 3,000 தேவைப்படுமா? அதுக்கு மேல் ஏன் ரூபாய் நோட்டாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். பேங்கில் போட்டு வைக்க வேண்டியதுதானே. பேங்க் மூலமாக டிரான்சாக்சன் செய்ய வேண்டியதுதானே, அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று ஒரு வங்கி மேலாளர் கேட்டாராம்.

ஆமாம் என்ன பிரச்சனை?

Large Digital Tabletரூபாய் நோட்டு இல்லாத பரிவர்த்தனை, அனைவரையும் வங்கி அமைப்புக்குள் கொண்டு வருவது என்ற அரசின் நீண்ட கால நோக்கம் உண்மையிலேயே நிறைவேறி விட்டால் விளைவுகள் என்னவாக இருக்கும். அதாவது எல்லா பரிமாற்றங்களும் வங்கிகள் மூலமாக நடைபெற்று, கணக்கு காட்டாமல் நடக்கும் பரிவர்த்தனைகள் ஒழிக்கப்பட்டு விட்டால் என்ன நடக்கும்?

இ. கருப்புப் பண பொருளாதாரமும் உழைக்கும் மக்களின் வாழ்வும்

ஒவ்வொரு பரிமாற்றத்தின் மீதும் அல்லது ஆண்டு வருமானத்தின் மீது வரி விதிப்பது எளிதாகி விடும். வரி ஏய்ப்பு குறைந்து கருப்புப் பணம் ஒழிந்து விடும். நாடு செழிக்கும் மக்கள் வாழ்க்கை முன்னேறும்.

‘இது நடக்காது, கருப்புப் பண பொருளாதாரத்தை ஒழிக்க முடியாது’ என்ற வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அது நடந்து விட்டதாகவே வைத்துக் கொள்வோம். இதனால் 9 கோடி விவசாய குடும்பங்களுக்கும், 92% அமைப்புசார் தொழிலாளர்களுக்கும் என்ன கிடைக்கும்?

அவர்களது குறைந்த பட்ச மாத வருமானம் உயர்ந்து விடுமா? அனைவருக்கும் சமமான, தரமான கல்வி, மருத்துவம் இலவசமாக கிடைத்து விடுமா?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பொருளாதார கொள்கைகள் தொடரும் வரை கருப்புப் பணப் பொருளாதாரமாக இருந்தாலும் சரி, வெள்ளைப் பணப் பொருளாதாரமாக இருந்தாலும் சரி உழைக்கும் மக்களின் வாழ்நிலை மாறப் போவதில்லை. அமைப்பு சாரா தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மாதம் ரூ 10,000 என்று உயர்த்துவதை முதலாளிகள் கடுமையாக எதிர்த்து அது கைவிடப்பட்டது என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். (1)

ஈ. மக்கள் விரோத கிரிமினல் ரொக்கப் பரிவர்த்தனைகள்

ரொக்கமாக பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்துக்கு வருவோம்.

முதலில், தனியார் கல்வி மாஃபியா, ஊழல் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள், சாராய வியாபாரம்/கடத்தல் போன்ற சமூக விரோத செயல்கள் மூலம் கருப்புப் பணம் ஈட்டிய பெருமுதலைகள் ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச் சந்தை, தொழில்கள், வெளிநாட்டு சொத்துக்கள் என்று முதலீடு செய்யப்பட்டது போக ரொக்கப் பணமாக வைத்திருக்கும் பகுதி.

அவர்களது அந்தப் பணம் மட்டுமின்றி, அவர்களது அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உ. விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு நெருக்கடி

digital-economy-2இன்னொரு புறம், ரூபாய் நோட்டாக சேமிக்கப்பட்டிருக்கும் பணத்தில் கணிசமான பகுதி சிறு வணிகர்கள், மொத்த வியாபாரிகள் தமது தொழில் தேவைக்காக பயன்படுத்தும் பணம் அல்லது விவசாயக் குடும்பங்கள், தொழிலாளர்கள், பெண்கள் தமது எதிர்காலத் தேவைகளுக்காக சிறுகச் சிறுக சேமித்து வைத்திருக்கும் பணம். இது ஒவ்வொரு குடும்பத்திலும் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை இருக்கலாம். இந்தப் பணம் இப்போது செல்லாததாகியிருக்கிறது, அல்லது வங்கிக் கணக்கில் போடப்பட வேண்டியதாயிருக்கிறது.

இதன் விளைவாக ஏற்கனவே கடும் நெருக்கடியில் இருக்கும் இந்தப் பிரிவினர் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.

வால்மார்ட், ரிலையன்ஸ் ஃபிரெஷ் போன்ற கார்ப்பரேட் சில்லறை விற்பனைக்கு சாதகமாக சிறு வணிகர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அரசின் முயற்சிகளுக்கு இது பெரும் ஆதரவாக இருக்கும். வங்கி வலைப்பின்னல் முறைக்குள் வர முடியாமல், இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் கணிசமான சிறு வணிகர்கள் தொழிலை விட்டே துரத்தப்படுவார்கள்.

2. பணம் அற்ற பொருளாதாரமும் முதலாளித்துவ வர்க்க நலனும்

அ. வங்கிகளில் பணம் – முதலாளிகளுக்கு மஞ்சள் குளியல்

பணம் வங்கிக் கணக்கில் கொண்டு வரப்படாமல் அழிக்கப்பட்டு விட்டால், அதை ரிசர்வ் வங்கியின் கணக்கிலிருந்து ரத்து செய்து அதன் மதிப்பை அரசு உயர்த்த முடியும். மாறாக, சேமித்து வைக்கப்பட்ட பணம் வங்கிக் கணக்கில் போடப்பட்டால் அது வங்கிகளின் கையிருப்பு மதிப்பை உயர்த்தும்.

18-ம் தேதி வரை வங்கிகளில் போடப்பட்ட சுமார் 5.11 லட்சம் கோடி ரூபாயில், 1.03 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிகளால் பணமாக வினியோகிக்கப்பட்டிருக்கிறது. இது போக சுமார் ரூ 33,000 கோடி மதிப்பிலான நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, சுமார் 4 லட்சம் கோடி நிகர வைப்புத் தொகைகளாக வங்கிகளின் கணக்கில் சேர்ந்திருக்கிறது. ஏற்கனவே வைப்புகளில் உள்ள பணமும் பயன்படுத்த முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது.

வைப்புத் தொகை அதிகரிப்பைத் தொடர்ந்து வைப்புகளின் வட்டி வீதத்தை குறைப்பதாக ஸ்டேட் வங்கி தொடங்கி பல வங்கிகள் அறிவித்திருக்கின்றன. இனிமேல் கடன்களுக்கான வட்டி வீதமும் குறைக்கப்படலாம். அதே நேரத்தில் சுமார் 7,016 கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளின் வேண்டுமென்றே கட்டப்படாமல் இருக்கும் வாராக் கடன்களை தள்ளுபடி (write off) செய்திருப்பதாக ஸ்டேட் வங்கி அறிவித்திருக்கிறது (2). அதில் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் 1,201 கோடி ரூபாய் கடனும் அடங்கும்.
“இந்தக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை, கணக்கில் இருந்து எடுத்திருக்கிறோம். வசூலிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்வோம்” என்று அருண் ஜெட்லி நியாயப்படுத்தியிருக்கிறார்.

ஆ. வங்கி மூலதனம், வைப்புகள், கடன்கள் – அடிப்படைகள்

ஒரு வங்கியின் மூலதனத்தில் ஒரு பிரிவு வங்கி உரிமையாளரின் சொந்த மூலதனம் – அதாவது பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரை இந்திய அரசு முதலீடு செய்த பணம் – அதுதான் வங்கியின் நிலைத்தன்மைக்கும், நம்பகத்துக்கும் அடித்தளம். இது போக சொநத மூலதனத்தை விட பல மடங்கு அதிகமாக வைப்புத் தொகைகளை பெற்றுக் கொள்கிறது வங்கி. வைப்புகளின் அடிப்படையில் கடன்கள் கொடுக்கிறது.

கடன்களுக்கும் வைப்புகளுக்கும் இடையேயான விகிதம், கடன்களுக்கும் சொந்த மூலதனத்துக்கும் இடையேயான விகிதம் இரண்டுமே முறைப்படுத்தப்பட்டு மத்திய வங்கியால் கண்காணிக்கப்படுகின்றன. இந்த விகிதங்கள் statutory liquidity ratio (23%), cash reserve ratio (4.75%), capital adequacy ratio (9%) குறைந்தபட்ச அளவுக்குக் கீழே போகாமல் பராமரிக்கும்படி கண்காணிக்கப்படுகிறது. (3)
உதாரணமாக, 2015-16 நிதியாண்டின் இறுதியில் ஸ்டேட் வங்கியில் பங்கு மூலதனம் ரூ 776 கோடி. சேமிப்பு ரூ 1.43 லட்சம் கோடி.15atm

அது திரட்டியிருந்த வைப்புகள் ரூ 17.3 லட்சம் கோடி, வாங்கிய கடன்கள் ரூ 2.23 லட்சம் கோடி.

அது ரூ 14.63 லட்சம் கோடி கடன்கள் வழங்கியிருந்தது. ரூ 4.77 லட்சம் கோடி பிற முதலீடுகளில் பயன்படுத்தியிருந்தது. ரூ 1.29 லட்சம் கோடி

ரிசர்வ் வங்கியிடமும், ரூ 37,838 கோடி பணமாகவும் இருந்தது

அதாவது, Capital Adequacy Ratio – 9.7%

இ. செல்லாத ரூபாய் நோட்டுகளும், வங்கிக் கடன்களும்

இப்போது அவ்வங்கி ரூ 7,016 கோடி கடனை தள்ளுபடி செய்தால், அந்தத் தொகை அதன் சொந்த மூலதனத்திலிருந்து கழித்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு இணையாக அரசு அல்லது மத்திய வங்கி முதலீட்டை வங்கிக்குள் செலுத்த வேண்டும்.
இப்போது வங்கிகளுக்குள் வந்து குவியும் பல இலட்சம் கோடி ரூபாய் வைப்புகளை பயன்படுத்தி வாராக் கடன்களை சமன் செய்து தமது நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ளவும், அதன் அடிப்படையில் கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் கடன்கள் வழங்கவும் சாத்தியமாகிறது.

அனைவரும் ரொக்கப் பணம் பயன்படுத்தாது, வங்கி பரிவர்த்தனைகளையே 100% பயன்படுத்தும் நிலைமை வந்து விட்டால் மக்களின் அனைத்து வகையான சேமிப்புகளும், தற்காலிகமாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பணமும் வங்கிகள் வசம் இருக்கும் அடிப்படையில் கடன்களை வழங்குவது சாத்தியமாகும்.

ஈ. முதலாளித்துவ நெருக்கடிக்கு வாராக் கடன்களும் கூடுதல் வங்கிக் கடன்கள் தீர்வாகுமா?

உழைக்கும் மக்களின் உண்மை ஊதியத்தை உயர்த்தாமல், அதன் மூலம் பொருளாதாரத்தின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட முடியாது, ஆனால் அப்படி உண்மை வருமானத்தை அதிகரித்தால் மூலதனத்தின் லாபவீதம் குறையும் என்பதால் அவ்வாறு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை நிதி மூலதனம் அனுமதிக்காது (1) என்ற முரண்பாட்டுக்கிடையில் உலக முதலாளித்துவம் சிக்கியிருக்கிறது.

எனவே, புதிய கடன்கள், முதலீடுகள் பெருமளவு நிதித்துறை (பங்குச் சந்தை, சரக்குகளின் இணையச் சந்தை, அன்னியச் செலாவணி சந்தை, கடன் சந்தை) சூதாட்டங்களிலும் அல்லது நிச்சயமற்ற உண்மைப் பொருளாதார திட்டங்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றன. எப்படி இருந்தாலும் கார்ப்பரேட்டுகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிக் கட்டாமல் போவது மேலும் மேலும் அதிகரிக்கும். வங்கிகளின் மூலதன இருப்பு மீண்டும் பாதிக்கப்பட்டு அவை திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்படலாம்.

3. முதலாளித்துவத்தின் நெருக்கடி சுமை உழைக்கும் மக்கள் மீது

stuck-with-apartmentகடந்த 10 ஆண்டுகளில் சைப்ரஸ், கிரீஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வங்கிகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது நடந்திருக்கிறது. அதிலிருந்து விடுபட, கோடிக் கணக்கான மக்களின் வங்கி வைப்புகளில் ஒரு பகுதியை ரத்து செய்வது, அல்லது அரசு மூலதனத்தை செலுத்தி வங்கிகளின், கார்ப்பரேட்டுகளின் இழப்பை மக்கள் மீது வரிச் சுமையாக சுமத்துவது என்ற இரண்டு நடவடிக்கைகள் மூலம் வங்கிகள் மீட்கப்படுகின்றன.

உதாரணமாக, “1 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் அனைவருக்கும் அதில் 30% வெட்டப்படும். இல்லா விட்டால் வங்கி திவாலாகி மொத்தப் பணமும் போய் விடும். தேச நலனுக்காக இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை பணக்காரர்களை மட்டும்தான் பாதிக்கும்” என்று மோடியோ வேறு ஒரு பிரதமரோ ஒரு சில ஆண்டுகளில் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவார். சைப்ரசில் 2013-ல் வங்கி வைப்புத் தொகைகளில் 47.5% இவ்வாறு வெட்டப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (4).

அமெரிக்காவில், $4.6 லட்சம் கோடி (சுமார் ரூ 312 லட்சம் கோடி) வங்கிகளுக்கு அரசால் வழங்கப்பட்டு அந்தச் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டது.(5)

இவ்வாறு அடுத்தடுத்த நெருக்கடிகளில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு முட்டுக் கொடுப்பதற்கு உழைக்கும் மக்கள் வங்கி வலைப்பின்னலில் சிக்க வைக்கப்படுகின்றனர்.

அ. வங்கி வலைப்பின்னலும் தகவல் திரட்டலும் – மக்களை அடிமைச் சங்கிலியில் பிணைப்பதற்காக

பரந்துபட்ட மக்கள் வங்கி வலைப்பின்னலில் சேர்க்கப்படுவதன் இன்னொரு விளைவு, அனைவரின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றிய விபரங்கள் வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும். ஒருவர் என்ன வேலை செய்கிறார், என்ன சம்பாதிக்கிறார், என்னென்ன பொருள் வாங்குகிறார், குழந்தையை எங்கு படிக்க வைக்கிறார், எந்தெந்த இடங்களுக்கு செல்கிறார் என்று அனைத்து விதமான விபரங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். ஆதார் அட்டை, ஸ்மார்ட் ஃபோன், வங்கிக் கணக்கு – இந்த மூன்றும் இணைக்கப்படும் போது சமூக வலைத்தள செயல்பாடுகள், கருத்து சொல்லல்கள் உள்ளிட்டு அனைத்து விபரங்களும் ஒரே இடத்தில் குவிக்கப்படுகின்றன.

இதைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக கண்காணிக்கவும், ஒடுக்கவும் உள்ள சாத்தியங்கள் ஒரு பக்கம் இருக்க இதன் பொருளாதார விளைவுகள் என்ன என்று பார்க்கலாம்.

சிறு வணிகர்கள் என்ன விற்கிறார்கள், என்ன விலைக்கு விற்கிறார்கள், அவர்களது சரக்குக் கையிருப்பு என்ன, பண ஓட்டம் என்ன என்பது போன்ற அனைத்து விபரங்களும் குவிக்கப்பட்டு அவை கார்ப்பரேட்டுகளுக்கு பயன்படும் வகையில் விற்கப்படும். பொருட்களை கொள்முதல் செய்யும் இடங்கள் முதல் அனைத்தையும் கைப்பற்றுவதற்கான முயற்சிக்கு அது உதவி செய்யும். தட்டுத் தடுமாறி வங்கி வலைப் பின்னலுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அட்டை தேய்க்கும் கருவி, பே-டிஎம் கணக்கு என்று உருவாக்கி வணிகத்தைத் தொடர முயலும் சிறு வணிகர்களை பெரு நிறுவனங்களின் போட்டி விரைவில் ஒழித்துக் கட்டி விடும்.

ஆ. கடன் தொழிற்சாலை, நிதி சூதாட்டம் – சேமிப்புகள், சொத்துக்கள், வரிப்பணம் சூறையாடல்

இது ஒருபுறம் இருக்க, உழைக்கும் மக்களையும், விவசாயிகளையும், பிற நடுத்தர வர்க்கத்தினரையும் கடன் பொருளாதாரத்தில் சிக்க வைத்து அவர்களது சேமிப்புகளை பறித்து, ஓட்டாண்டியாக்கவும் இந்த வலைப்பின்னல் பயன்படும்.

இது எப்படி நடக்கிறது என்பதற்கு அமெரிக்காவில் நடந்த கடன் குமிழ் மோசடியை பற்றி பார்க்கலாம். அமெரிக்காவில் சப்-பிரைம் நெருக்கடி என்று அழைக்கப்படும் நிதித் துறை குலைவு, அதைத் தொடர்ந்த உலகளாவிய பொருளாதார நெருக்கடி எப்பபடி நடந்தது?
பொதுவாக ஒருவருக்குக் கடன் கொடுக்க வேண்டுமானால் அவர் எப்படிப்பட்டவர், என்ன வேலை செய்கிறார், என்ன வருமானம், கடன் கட்ட முடியுமா, என்ன மாதிரியான பழக்க வழக்கங்கள், கடன் கொடுத்தால் ஒழுங்காக திருப்பிக் கட்டுவாரா என்று பரிசீலித்து கடன் கொடுப்பது நடைமுறை. தனிநபராக இருந்தாலும் சரி, வங்கியாக இருந்தாலும் சரி இதுதான் நடைமுறை. கடன் கொடுத்த வங்கி மேலாளர் மீது அந்தக் கடனுக்கு பொறுப்பு உள்ளது.

ஆனால், அமெரிக்காவில் இந்த நடைமுறையில் தொழில்துறையை போல வேலைப் பிரிவினையை அமல்படுத்தியிருக்கிறார்கள். கடன் கொடுக்கும் வங்கி கடன் வாங்குபவரின் கிரெடிட் ரேட்டிங் (நம்பக மதிப்பெண்) அடிப்படையில் கடன் கொடுக்கும். உதாரணமாக, கிரெடிட் ரேட்டிங் 600-க்கு மேல் இருந்தால் வீடு வாங்க கடன் கொடுக்கலாம் என்று வைத்துக் கொள்வோம். ரேட்டிங் சரியாக இருந்தது கடன் கொடுத்தேன் என்பதோடு வங்கி அதிகாரியின் பொறுப்பு முடிந்து விடுகிறது.

கிரெடிட் ரேட்டிங் வழங்குவதற்கு தனியாக நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை ஒரு நபரை அல்லது நிறுவனத்தைப் பற்றிய விபரங்களின் அடிப்படையில் அவருக்கு கிரெடிட் ரேட்டிங் வழங்குகின்றன. ரேட்டிங் வழங்குவதோடு அவற்றின் பொறுப்பு முடிந்து விடுகிறது.

குடிமக்கள் பற்றிய விபரங்களை திரட்டி விற்பதற்கு தனியாக நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலே சொன்னபடி பணி நிலைமை, வருமானம், செலவு செய்யும் முறைகள், சேமிப்பு, பழக்க வழக்கங்கள் போன்ற தகவல்களை திரட்டி கிரெடிட் ரேட்டிங் நிறுவனங்களுக்கு விற்பதோடு இந்த நிறுவனங்களின் பொறுப்பு முடிந்து விடுகிறது.

இவ்வாறு கடன் கொடுக்கும் தொழிலில் யாருக்கும் முழுப் பொறுப்பு இல்லாதவாறு பகிர்ந்து அளிக்கப்பட்டு விட்டதால் என்ன நடக்கிறது? ஒரு அதீத உதாரணத்தைப் பார்க்கலாம்.

ஒருவர், நிலையான வேலை இல்லாமல், கிடைக்கும் வருமானத்தையும் ஊதாரியாக செலவிட்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கிரெடிட் ரேட்டிங் கடன் கொடுக்கும் அளவுக்கு இருக்காது.

இப்போது வங்கிக் கடன் விற்கும் ஒரு விற்பனையாளர் இவரை அணுகி அவருடைய வீட்டின் பெயரில் கடன் தருவதாகச் சொல்கிறார். முதலில், ஒரு சிறு கடன் கொடுத்து, அதை முறையாக கட்டுவதன் மூலம் கிரெடிட் ரேட்டிங்கை ஏற்றலாம் என்று சொல்கிறார்.

உதாரணமாக, ரூ 50,000 கடன் அதற்கு மாதா மாதம் வட்டியை மட்டும் முறையாகக் கட்டினால் போதும். அவர் ஒழுங்காக கடன் கட்டுகிறார் என்ற விபரத்தின் அடிப்படையில் அவரது கிரெடிட் ரேட்டிங் உயர்ந்து விடும். அசல் தொகையில் ஒரு பகுதியையே வட்டியாக கட்டி வந்தால் 6 மாதத்தில் ரேட்டிங் உயர்ந்து விடும் என்று வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவருக்கு 5 லட்சம் கடன் கொடுக்கப்பட்டு விடும்.
கடன் கொடுத்த ஏஜென்டுக்கு கமிஷன், வங்கியைப் பொறுத்தவரை கடன் என்பது ஒரு சொத்து. அந்தச் சொத்தை வங்கிக் கடன்களின் அடிப்படையிலான நிதிக் கருவிகளை (mortage based securities, derivatices) வாங்கி விற்கும் சந்தையில் விற்று விடலாம். அதில் கிடைத்த பணத்தை அடுத்த சுற்று கடன் கொடுக்க பயன்படுத்தலாம். இப்படி அடுத்தடுத்த சுற்றுகளில் வீட்டு மதிப்புகள் ஊதிப் பெருக்கப்பட்டு அதன் அடிப்படையிலான கடன் சந்தையும் வீங்கிக் கொண்டே சென்றது.

வங்கியை பொறுத்த வரையில் கடனை பிற முதலீட்டாளர்களிடம் விற்று 80% வரையிலான கடன் தொகையை பெற்று விடுகிறது. கடன் வராமல் போனால் வங்கியின் இழப்பு 20%தான். இத்தகைய நிதிக்கருவிகளுக்கும் ரேட்டிங் நிறுவனங்கள் ரேட்டிங் வழங்குகின்றன. அதன் அடிப்படையில் பிற முதலீட்டாளர்கள் அவற்றை வாங்குகின்றனர்.

இ. கடன்களே சூதாட்டமாக

இவ்வாறு கடன் கொடுப்பதையே பல கை மாற்றி மாற்றி சூதாட்டமாக மாற்றியிருந்தனர். கடனை வாங்கியவர் கடன் கட்டத் தவறும் போது இந்தக் குமிழி வெடித்து ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் நெருக்கடியில் தள்ளியது. கடன் வாங்கியவரின் வீடு பறிமுதல் செய்யப்பட்டு அவரது குடும்பம் நடுத்தெருவுக்கு வருகிறது. வங்கிகள் இழந்த பணத்தை அரசு வழங்கி காப்பாற்றி விடுகிறது. எல்லா வகையிலும் உழைக்கும் மக்கள் மீது நெருக்கடியும், வாழ்வாதார அழிப்பும், எதிர்கால சுமையும் சுமத்தப்படுகின்றன.

ஈ. இந்திய வங்கித் துறை பாதுகாக்கப்பட்டது

இந்தியாவில் “70% மக்கள் வங்கிக் கணக்குகளை பயன்படுத்துவதில்லை 68% பரிவர்த்தனைகள் ரொக்கப் பணத்தின் மூலம் நடைபெறுகின்றன” (6) என்ற அடிப்படை ஒரு புறமிருக்க, வங்கித் துறையிலும் மேற்கத்திய நிதி நிறுவனங்கள் ஈடுபடும் நிதித்துறை சித்து விளையாட்டுக்களை அனுமதிப்பது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பொதுத்துறை வங்கிகளின் ஊழியர் யூனியன்களின் கடுமையான எதிர்ப்பால் அத்தகைய முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த இரண்டும் சேர்ந்துதான் இந்திய வங்கித் துறை நேரடியாக அமெரிக்கா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, கிரேக்கம், சைப்ரஸ், ஸ்பெயின் உள்ளிட்டு பல மேற்கத்திய நாடுகளை பாதித்த நிதித்துறை நெருக்கடியால் நேரடியாக பீடிக்கப்படவில்லை.
இத்தகைய வங்கித் துறை சூதாட்டத்துக்குள் இழுத்து விடுவதுதான், cashless economy என்பதன் விளைவாக இருக்கும்.

4. உழைப்பு சக்தி – (பணம்) – வாழ்க்கை தேவைகள் எதிர் பணம் – சரக்குகள் – பணம்

பாட்டாளி வர்க்கம் தனது உழைப்பை சரக்காக விற்று, தனக்குத் தேவையான பொருட்களை சரக்காக வாங்கிக் கொள்கிறது. உழைப்பு – பணம் – சரக்கு (C – M – C). இந்த சரக்கு சுற்றோட்டத்தின் நோக்கம் C – C என்பதே, அதில் பணம் என்பது ஒரு இடை ஊடகமாக மட்டுமே உள்ளது.

ஆனால், முதலாளித்துவ சுற்றோட்டத்தின் அடிப்படை மூலதனத்துக்கான பொதுச்சூத்திரமான பணம் – சரக்கு – பணம்’ என்பதாக உள்ளது. சரக்கு என்பதில் பொருட்கள், சேவைகள் ஆகியவற்றோடு உழைப்பு சக்தியும் அடங்கும். போட்ட பணத்தை விட அதிக பணத்தை (உபரி மதிப்பை) வெளியில் எடுப்படுதான் இந்த சுற்றோட்டத்தின் நோக்கம்.

முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு முன்பும், அதன் தொடக்கத்திலும் தங்கம், வெள்ளி போன்ற தன்னளவில் மதிப்பை உள்ளடக்கிய (பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட உழைப்பை) உலோகங்கள், நாணயங்கள் பயன்பட்டன. அந்த நிலையில் நாணயங்களில் தங்கத்தின் அளவைக் குறைத்து கலப்படம் செய்வதன் மூலம் மக்களை ஏமாற்றுவது என்பது அரசுகளின், ஆளும் வர்க்கங்களின் ஏமாற்று வழிமுறையாக இருந்தது.

puthiya-thozhilali-october-2016-editorialதங்க நாணயங்கள் பயன்பாடு முதலாளித்துவ விரிவாக்கத்துக்கு வரம்பாக ஆகி விடும் நிலையில் தங்க அடிப்படை கைவிடப்பட்டு வங்கி நோட்டுகள், ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. ரூபாய் நோட்டுகளை வரம்பின்றி அச்சடித்து வெளியிடுவது மூலம் மக்கள் கைவசம் இருக்கும் பணத்தின் மதிப்பை குறைத்து ஏமாற்றுவது அரசுகளின், ஆளும் வர்க்கத்தின் ஏமாற்று வழிமுறையாக இருந்தது.

இப்போது, உழைப்பின் பலனை இன்னும் ஒரு கட்டம் நகர்த்திச் சென்று வங்கிக் கணக்கில், மின் எண்களாக வைத்துக் கொள்கிறோம் என்கின்றது முதலாளித்துவ வர்க்கம். இதன் மூலம் இன்னும் எளிதாகவும், தீவிரமாகவும் உழைப்பின் மதிப்பை கொள்ளை அடிக்க நாம் ஏன் வழி செய்து கொடுக்க வேண்டும்?

“நாங்கள் பணமாக செலவழித்து பழக்கப்பட்டவர்கள், அதைத்தான் விரும்புகிறோம், அதுதான் எங்களுக்கு வசதி, அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று நாம் மேல் சொன்ன வங்கி மேலாளரிடமும், மோடி வகையறாக்களிடமும் திருப்பிக் கேட்க வேண்டும்.
கருப்புப் பணம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தடுப்பதற்கு அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்குத்தான் உங்களை தேர்ந்தெடுக்கிறோம். அதை உருப்படியாகச் செய்யுங்கள். உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள் என்று சொல்ல வேண்டும்.

தகவல் ஆதாரங்கள்

1. Raising minimum wages may cost dear to the economy
Government’s Rs 10K minimum wage plan for contract workers put on hold

2. SBI writes off Rs 7,016 crore loans owed by wilful defaulters, including Vijay Mallya’s defunct airlines

3. http://mrunal.org/2012/08/econ-crr-controversy-between-sbi-rbi.html

4. Final ‘haircut’: Cyprus to levy deposits by 47.5 percent
Greek banks prepare plan to raid deposits to avert collapse – ‘Haircut’ of 30% considered on customers’ funds above €8,000

5. The Big Bank Bailout … the total commitment of government is $16.8 trillion dollars with the $4.6 trillion already paid out.

6. 68% of transactions in India are cash-based: CLSA

நன்றி : குமார்

Series Navigation<< டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-to-serve-whom/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு...

வாட்ஸ்ஆப் குழுவில் அடாவடி செய்பவர்களை எப்படி கையாள்வது? – ஒரு அனுபவம்

நான் பேசுவதற்கு முன்னும் பலரும் அவரது அரசியல் மொக்கையையும், அறுவையையும் கண்டித்த பிறகும், நிராகரித்த பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தனது மேலிடத்து தொடர்புகள் மூலம்,...

Close