வாகன ஓட்டுநர்கள்: நகர மறுக்கும் வாழ்க்கை…!

This entry is part 6 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

தேசத்தின் இரத்த நாளங்களென நீண்டு கிடக்கின்றன சாலைகள். கிராமங்களையும், நகரங்களையும் இணைத்தபடி. அவற்றில் இரவும், பகலுமாய் விரைகின்றன வாகனங்கள். மக்களையும், மனித வாழ்க்கை தேவைகளுக்கான பொருட்களையும் சுமந்தபடி. அவற்றை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் பல இலட்சம் தொழிலாளர்கள். கண்களில் கனவுகளையும், உடம்பில் களைப்பையும், மனதில் வலிகளையும், வேதனைகளையும், சுமந்தபடி; உருண்டோடும் வாகனச்சக்கரங்களின் பின்னே தமது வாழ்க்கைச் சக்கரத்தையும் சுழலவிட்டபடி.

தாமாகவே இயங்குவதில்லை தானிகள் – வாகனங்கள் (Automobile); நம்மால் மட்டுமே நகர்த்தப்படுவதல்ல நமது வாழ்க்கையும். நாம் நாள்தோறும் பயணிக்கும் ஆட்டோ, கால்டாக்சி, பேருந்து முதல் அரிசி, பருப்பு, காய்கறிகள், அன்றாட வாழ்க்கைக்கான பொருட்களென சகலத்தையும் அவற்றின் உற்பத்தியிடங்களிலிருந்து உபயோகிப்பாளரின் கரங்களில் கொண்டு சேர்க்கும் லாரிகள் வரை, நமது வாழ்வின் அன்றாட நகர்வில் உறைந்து கிடக்கிறது முகமறியாத தொழிலாளர்களின் வாகன ஓட்டுநர்களின் உழைப்பு, நமது அக்கறையையும், அங்கீகாரத்தையும் கோரியபடி.

கிராமப்புற வறுமை, ஆதிக்க சாதி வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து, பிழைப்பைத் தேடி நகரங்களை நாடும் உழைக்கும் மக்களில் கணிசமானோருக்கு வாழ்வளித்துக் காப்பது ஓட்டுநர் பணிதான்..

அரைகுறை கல்வி பயின்றவர்களின் அரை வயிற்றுக் கஞ்சிக்காவது வழி செய்துகொண்டிருக்கிறது ஆட்டோ ஓட்டும் தொழில். இன்றைய நகர்ப்புற வாழ்வில், நடுத்தட்டு மக்களின் தவிர்க்கவியலாத தேவையென உருவெடுத்துள்ளன ஆட்டோக்கள், அவசர கதியில் பரபரக்கும் நரக வாழ்வில், வாகனப் பெருக்கத்தால் நெரிசலில் சிக்கித் தவிக்கும் சாலைகளில் நமது அவசரத்தை உணர்ந்து குறித்த நேரத்தில் உரிய இடத்திற்குக் கொண்டு சேர்ப்பது, நம் குழந்தைளைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று பாங்குடன் வீடு சேர்ப்பது, முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களின் நிலையுணர்ந்து வீடுதேடி வந்து அவர்களை அழைத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில், நமது அன்றாட வாழ்வில் ஆட்டோ ஓட்டுநர்களின் சேவை மகத்தானது.

இரவு, பகலெனப் பாராமல், மழையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் சமூகப் பங்களிப்பை உணரமறுக்கும் அவல நிலையில் தானிருக்கிறது இன்றைய சமூகம். இவர்கள் அடாவடிக்காரர்கள், அதீதக் கட்டணம் கேட்பவர்கள், இழிபிறவிகள் என்ற மேட்டுக்குடித் திமிர்த்தனமான பார்வையே இன்றைய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்து போயுள்ளது.
போலீசு அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும், பிற அதிகாரிகளுமே இன்று பெரும்பகுதி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களின் உரிமையாளர்கள். ஆகப் பெரும்பான்மையான ஆட்டோ ஓட்டுநர்கள் அவர்களிடம் வாடகைக்கு வண்டியோட்டும் கூலித் தொழிலாளர்களே. வாங்கும் கட்டணத்தில் பாதியைப் பெட்ரோலுக்கு அழுதுவிட்டு, மீதமுள்ளதில் வாடகையையும் கட்டிவிட்டு இருக்கும் சொற்பத் தொகையில் அவர்கள் குடும்பச் செலவுகளைச சமாளித்தாக வேண்டும். போதாக் குறைக்கு, புற்றீசலெனப் பெருகியுள்ள பெருநிறுவனங்களின் கால்டாக்சிகளால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போதிய வருமானமின்மையால் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வறுமையில் கோரப்பிடியிலும்,வகந்துவட்டிக் கொள்ளையர்களின் மீளமுடியாத கடன் வலையிலும் சிக்கித் தவிக்கின்றன. நாள் முழுவதும் மாசடைந்த நச்சுக் காற்றையே சுவாசிக்க நேர்வதால் பல்வேறு நுரையீரல் மற்றும் இதய நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் தொல்லை இரவிலும் கண்விழித்து வண்டியோட்டுவதால் ஏற்படும் உடல் வேதனை ஆகியவற்றால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் குடி நோயாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். இப்படியான சமூகக் கூறுகளின் ஒட்டுமொத்தப் பின்னணியில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வைப் பார்க்கத் தவறும் சமூகத்தில் போலீசு மிருகங்கள் அவர்களை ரவுடிகளாக சித்தரித்துத் துன்புறுத்துவது வியப்புக்குரியதல்ல.

அன்றாடங்காய்ச்சிகளான ஆட்டோ ஓட்டுநர்கள் போக எஞ்சியோர் கால்டாக்சி நிறுவனங்களிலும், கல்விக் கொள்ளையர்களின் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்களிலும், பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தொழிலாளர்களை அழைத்து வரும் காண்ட்ராக்ட் பெற்றுள்ள நிறுவனங்களிலும், தனியார் பேருந்துகளிலும் இன்னுமுள்ள பல்வேறு நிறுவனங்களிலும் ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர்.

பிரபலமான கோடிகளில் புரளும் பெரிய நிறுவனங்களில் வேலைபார்க்கும் இத்தொழிலாளர்களுக்கு வேலைப்பாதுகாப்பு எதுவும் கிடையாது. பல ஆண்டுளாகப் பணி புரிந்தாலும் வேலை நிரந்தரம் செய்யப்படுவதில்லை. குறைவான கூலியில் ஒட்டச்சுரண்டப்படுகின்றனர். இ.எஸ்.ஐ., பி.எஃப் ஓய்வூதியம் உள்ளிட்ட சட்ட பூர்வமான சலுகைகள் எதும் கிடையாது. இவர்கள் முதலாளியை எதிர்த்துக் கேள்வி கேட்டாலோ, தமது உரிமைகளுக்காகச் சங்கம் அமைக்க முயன்றாலோ உடனடியாக வேலையைப் பறித்து வீதிக்குத் துரத்தும் முதலாளிகள், தொழிலாளர் நலச் சட்டங்களையோ, நீதிமன்றத் தீர்ப்புகளையோ மயிரளவுக்கும் மதிப்பதில்லை. தொழிலாளர்களது உரிமைகளை பாதுகாக்க வக்கற்ற போலீசும், அதிகார வர்க்கமும் அவர்கள் வீசும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு விசுவாச வாலாட்டுகின்றன. எனவே எதிர்த்துக் கேள்வி கேட்டால் வேலை போய்விடும் என்ற அச்சத்துடன் கிடைத்த வேலையை, கிடைக்கும் கூலியை வைத்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இந்தத் தொழிலாளர்கள்.

நமக்குத் தேவைப்படும் பொருட்களைச் சுமந்து வரும் லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கையோ இன்னும் படுமோசமான உள்ளது. நவீனத் தொழில் வளர்ச்சியால் இன்று நாட்டின் தொலைதூரங்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இவ்வாறு நீண்ட தூரங்களுக்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்கள் பல்வேறு துன்ப, துயரங்களுக்கு ஆளாகின்றனர். தொடர்ச்சியாக பல நாட்களாக, இரவிலும் கண் விழத்து வண்டியோட்டுவதால் ஏற்படும் களைப்பு, உடற்சோர்வு மற்றும் அழுகும் பொருட்களை உரிய நேரத்துக்குள் கொண்டு சேர்க்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆகியவற்றின் தவிர்க்கவியலாத விளைவாக நடக்கும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் பலர்; கை, கால் இழந்து வாழ்க்கையே முடமாகிப்போனவர்களோ இன்னும் ஏராளம், வாழ்க்கைப் பாரத்தை இறக்கி வைப்பதற்காக வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கும் இந்தக் கூலி தொழிலாளர்கள் இப்படிக் கோர விபத்தில் அகால மரணமடைந்த பிறகு அவர்களுடைய குடும்பங்களுக்குப் போதிய இழப்பீடு, நிவாரணம் தராமல் அவர்களது வாழ்க்கையே இருளில் தள்ளுகின்றனர் முதலாளிகள். வாழ்க்கையே கேள்விக்குறியாகிப்போன நிலையில் முடமாகிவிட்டவர்களையும் பராமரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களின் நிலையோ இதைவிடப் படுமோசம்.

இவைதவிர, வாரக்கணக்கில் குடும்பத்தைப் பிரிய நேர்வதால் ஏற்படும் மன அழுத்தத்தாலும், இரவில் தூக்கத்தை விரட்டுவதற்காக மென்று துப்பும் பான்பராக் போன்ற போதைபொருட்களாலும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். மேலும், குடிநோயாளிகளாக, பால்வினை நோயாளிகளாக மாறி அவதிப்படுபவர்கள் ஏராளம்.

இவை குறித்து போதிய சட்டங்களியற்றி தொழிலாளர்களது வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டிய அரசோ அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொள்கிறது. மாறாக, வாகன இன்சூரன்சு கட்டண உயர்வு, சுங்கச் சாவடிக் கட்டணக் கொள்ளை, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்றெல்லாம் மென்மேலும் நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது. மற்றொருபுறத்தில் இவர்களுடைய வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாக சாலைப் போக்குவரத்துச் சட்டங்களைத் திருத்தி வருகின்றது. பாசிச மோடி அரசு தற்போதுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை கலைத்து விட்டு வாகனப் பதிவு, பர்மிட் வழங்குதல், ஓட்டுநர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பன்னாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் கடுமையான அபாரதம், சிறைத் தண்டனை, தற்போதுள்ள ஓட்டுநர் உரிமங்களை செல்லாததாக்குவது போன்ற பல்வேறு சதித்தனங்களை அரங்கேற்றி வருகிறது.

வாகனம் ஓட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையில்லை; போதிய வருமானமுமில்லை மருத்துவ வசதியில்லை; பணிப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாக்கும் சட்டங்களும் இல்லை, எனவே, எதிர்கால வாழ்க்கைக்கு எந்தவித உத்தரவாதமுமில்லை, இத்தனை இல்லாமைகளும் ஒன்று சேர்ந்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டு சேர்க்கும் முடிவு ஒன்றுதான். நம்மை வாழவைக்க வக்கற்ற நமது வாழ்க்கையை அழித்து வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பு வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் அது,

– மருதமுத்து

புதிய தொழிலாளி, ஏப்ரல் 2016 இதழிலிருந்து

Series Navigation<< நாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு!மலைத் தோட்டங்களில் மக்கி வீழும் கொத்தடிமை வாழ்வு! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/drivers-life-stuck-behind-the-wheels/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா?

உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!  ...

கார்ப்பரேட் தாக்குதலை எதிர்ப்பதில் விவசாயிகளோடு இணையும் ஐ.டி ஊழியர்கள் – வீடியோ

"தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தோடு ஐ.டி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்."

Close