- மின்னணு பணப்பை என்கிற டிஜிட்டல் கொள்ளை
- ஆதார் – விற்பனை பொருளாகும் இந்தியன், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை கருவி
- ஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோ
- டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்
- டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?
- இணையதளத் திருட்டு : முதலாளித்துவத்தின் கள்ளக்குழந்தை
- IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்
மோடி நமது பைகளில், பெட்டிகளில், பணப்பைகளில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகு, முதலில் சொன்ன கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு கண்டுபிடிப்பு, பயங்கரவாத ஒழிப்பு என்ற காரணங்கள் எல்லாம் ஓய்ந்து போய் இப்போது டிஜிட்டல் பொருளாதாரம் அதாவது கணினிவழி பரிவர்த்தனை என்பது முன் நிறுத்தப்படுகிறது. அதை ஒட்டி அடிபடும், பெருத்த பணச் செலவில் அரசாலும், வங்கிகளாலும், தனியார் நிறுவனங்களாலும் மக்கள் மத்தியில் பரப்பப்படும் ஒரு விஷயம் மின்னணு e-பணப்பை.
சாதாரணமாக சம்பாதித்த ரூபாய் நோட்டுகளை செலவழிப்பதற்காக துணிப்பையில் அல்லது தோல்பையில் போட்டு வைத்திருக்கிறோம். அதிலிருக்கும் பணத்தை தேவைப்படும் நேரத்தில் எடுத்துக் கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்கிறோம். சட்டைப்பையில் இருக்கின்ற பணம் கண்ணுக்கும் தெரியாமல், கையில் தொடவும் முடியாமல் மின்னணு பணப்பைக்கு போகின்றபோது என்ன நடக்கும்?
இதை எளிமையாக புரிந்து கொள்ள உலகிலேயே முதல் முறையாக e-பணப்பையின் ஒரு வடிவமான மொபைல் வாலட் (செல்ஃபோன் பணப்பை) முறையை அமல்படுத்திய கென்யாவில், என்ன நடந்தது என்று பார்ப்போம். அங்கு நாட்டின் மக்கள் தொகையில் 83% பேர் (சுமார் 1.9 கோடி பேர்) மின்னணு-பணப்பை பயன்படுத்துகின்றனர். நாட்டின் மொத்த உற்பத்தியில் 24% மின்னணு பரிமாற்றம் வழியாக நடைபெறுகிறது.
சுமார் 4 கோடி மக்கள் தொகை கொண்ட கென்யாவின் வரலாறு காலனிய ஆதிக்கம், அதிகார மாற்றம், ஏகாதிபத்திய நாடுகளின் மறைமுக ஆதிக்கம், உலகவங்கியின் தலையீடு, அரசு பலவீனமாக்கப்பட்டு கார்ப்பரேட் மயமாவது, தரகு வேலை செய்யும் அரசியல்வாதிகள், சுய உதவி குழுக்கள் என்று நமக்கு பழக்கமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது. கூடுதலாக, அந்நாட்டு அரசும் அரசியலும் தோற்றுப் போய், ஆளும் வர்க்கத்தின் எதிரெதிர் தரப்புகள் தத்தமது குண்டர் படைகளை உருவாக்கி தமக்குள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்கின்றனர். போலீசும், நீதித்துறையும் சீர்குலைந்து அரசு திவாலாகிப் போயிருந்த நிலையில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிந்தைய பெருமளவிலான வன்முறையிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிருந்தது. நாட்டின் வங்கிகள் சண்டையிடும் குழுக்களின் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தன.
அங்கு செல்பேசி சேவை வழங்கி வந்த சஃபாரிகாம் (safaricom) என்ற நிறுவனம் 70% சந்தையை கைவசம் வைத்திருந்தது. அது ஒருவரது கணக்கில் இருக்கும் டாக் டைமை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியை அளித்திருந்தது. அதாவது, உங்கள் கணக்கில் 500 ரூபாய்க்கு டாக் டைம் இருந்தால், உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பருக்கு அதிலிருந்து 100 ரூபாய் டாக் டைமை அனுப்பி வைத்து விடலாம். உங்கள் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு அவரது கணக்கில் ஏறி விடும். இந்நிலையில் உழைக்கும் மக்கள் நகரத்தின் மறுபுறம் இருக்கும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தமது உறவினர்கள், நண்பர்களுக்கோ பணம் அனுப்ப டாக் டைமை மாற்றிக் கொடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கவனித்த சஃபாரிகாம் அதை ஒரு பண பரிவர்த்தனை சேவையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் m-pesa (m-பேச). அந்நாட்டு மத்திய வங்கி அதற்கான உரிமத்தை வழங்கி விட்டது. இன்று கென்யாவில் நடக்கும் e-பரிவர்த்தனைகளில் 90% m-பேச மூலமாகத்தான் நடைபெறுகிறது.
கென்யாவைத் தொடர்ந்து இத்தகைய மின்னணு பணப்பை பரவலாக பயன்படுத்தப்படும் நாடுகள் ஆப்கானிஸ்தான், தான்சானியா. இந்த மூன்று நாடுகளிலும் அரசு தோற்றுப்போய், தனியார் வன்முறை கும்பல்களின் ஆட்சி நடக்கிறது என்பது பொதுவான விஷயம். வான்ஹாம் என்ற இணைய பத்திரிகை, ‘m-பேச பணப் பரிவர்த்தனைமுறை தளைப்பதற்கு வளமான மண், மிக மோசமான அரசாட்சி சூழ்நிலை நிலவும் நாடுகள்தான்’ என்று தொகுத்து கூறியிருக்கிறது.
இது முழுமையாக அமலுக்கு வந்து விட்டால் என்ன நடக்கும்? ஒரு தொழிலாளியின் வாரக் கூலியை அல்லது மாதச் சம்பளத்தை நிறுவனம் அவரது செல்பேசி எண்ணுக்கு அனுப்பி வைத்து விடும். அவர் தன்னுடைய செல்பேசி எண்ணிலிருந்து மளிகைக் கடைக்காரரின், பால் காரரின், வீட்டுச் சொந்தக்காரரின் செல்பேசி எண்ணுக்கு பணத்தை அனுப்புவதன் மூலம் செலவழிப்பார்.
கேட்க எளிமையாக இருக்கிறது அல்லவா? இதனால் என்ன விளைவுகள், என்ன பலன்கள், யாருக்கு நன்மை?
முதலாவதாக, அரசுக்கு பதிலாக தனியார் நிறுவனம் ஒன்று நம்முடைய பணத்தை கையாளும் என்பதுதான் இதன் சாராம்சம். ரூபாய் நோட்டுகளின் வடிவத்தில் அவரவர் கட்டுப்பாட்டில் இருக்கும் உழைப்புச் சக்தியின் மதிப்பு வங்கிகளின் அல்லது அதற்கு உரிமம் பெற்றுள்ள கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் போய் விடும்.
‘ரேசன் கடையை ஒழித்து பணத்தை நேரடியாக கணக்கில் போட்டு விடுகிறோம் தனியாரிடம் பொருள் வாங்கிக் கொள்ளுங்கள்’; ‘சமையல் வாயு மானியத்தை ஒழித்து காசை கணக்கில் போட்டு விடுகிறோம்’; ‘தனியார் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு கட்டணத்தை பள்ளிக்கே செலுத்தி விடுகிறோம்’; ‘தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள், கட்டணத்தை அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொடுத்து விடுகிறோம்’, ‘ஓய்வூதியப் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய கொடுக்கிறோம்’ என்று அரசு ஒவ்வொரு துறையிலிருந்தும் விலகிக் கொண்டு, உள்நாட்டு பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுக்கும் தனியார் மய கொள்கையின் உச்சகட்டம் பணம் அச்சடிக்கும் பொறுப்பையும் அரசு கைகழுவி விட்டு, பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பை வங்கிகளிடமும் தனியார் முதலாளிகளிடமும் விடுவது என்பது.
இரண்டாவதாக, தனியார் நிறுவனங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும் போது பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் இந்த நிறுவனங்களால் செயல்படுத்தப்பட வேண்டும். அதற்கான செலவையும் தமது முதலீட்டுக்கான லாபத்தையும் மக்களிடமிருந்து சேவைக் கட்டணமாக வசூலிப்பார்கள். “நோட்டு இல்லாத பொருளாதாரத்தில்” உழைக்கும் மக்கள் மீது மேலும் மேலும் சுமை ஏற்றப்படுவதும், முதலாளிகள் மேலும், மேலும் கொழுப்பதும் நடந்தேறும்.
மூன்றாவதாக, யாரிடமிருந்து யாருக்கு பணம் போகிறது, அந்தப் பணம் அடுத்த கட்டமாக எங்கு நகர்கிறது என்று அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய விபரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு விடும். அதாவது, ஒரு தொழிலாளி சம்பளம் எவ்வளவு வாங்குகிறார், புதிய ஜனநாயகம் பத்திரிகைக்கு எவ்வளவு செலவழித்தார், சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவிடுகிறார், அவரது குழந்தைகள் எங்கெங்கு படிக்கின்றன, அவர் எந்தெந்த ஊருக்கெல்லாம் போய் வருகிறார் போன்ற விபரங்கள் அனைத்தும் கணினிகளில் பதிவு செய்யப்பட்டு விடும்.
இதை அரசும், வங்கிகளும், கார்ப்பரேட்டுகளும் தமது தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் அமல்படுத்தப்படும். இதைப் பயன்படுத்தி அரசுகள் அரசியல் நடவடிக்கைகள் கண்காணித்து, கட்டுப்படுத்தி ஒடுக்கலாம், கார்ப்பரேட்டுகளும், வங்கிகளும் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணித்து, கட்டுப்படுத்தி சந்தைப் படுத்தல் மூலம், கடன் கொடுத்தல் மூலம் மக்களை தமது வலைக்குள் சிக்க வைக்கலாம்.
நான்காவதாக, சின்னச் சின்ன பரிவர்த்தனைகளுக்கெல்லாம் வரி வசூலை அரசு தொடங்கி விடலாம். ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு 15% சேவை வரி, கூடுதலாக கல்வி வரி, தூய்மை இந்தியா வரி என்று வசூலிப்பது போல, ஒவ்வொரு முறை மளிகை வாங்கும் போது, பால் வாங்கும் போதும், எண்ணெய் வாங்கும் போதும் வரி போடுவதற்கான வசதியும், வாய்ப்பும் அரசுக்குக் கிடைக்கும். எனவே, சாதாரண உழைக்கும் மக்கள் மீது வரி விதிப்பது, அதுவும் கண்ணுக்குத் தெரியாத கணக்கிலிருந்து ஒவ்வொரு ரூபாயாக கறப்பது அரசுக்கு எளிதானதாக இருக்கும்.
ஐந்தாவதாக, மக்கள் அனைவரின் சேமிப்பும், செலவழிப்பது வரை பையில் வைத்திருக்கும் பணமும் வங்கிகளின் கைவசம் விடப்படும். 50 கோடி தொழிலாளர்கள் கையில் தலா ரூ 5,000 சேமிப்பும், சம்பளம் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த சம்பளம் வருவது வரையிலான இடைக்கட்டத்தில் சராசரியாக ரூ 5,000 செலவுக்கும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதன் மொத்தக் கூட்டுத் தொகை ரூ 5 லட்சம் கோடி. உண்மையில் புழங்கும் ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் வங்கிக்குள் கொண்டு வந்து விட்டால் வங்கிகளின் அதாவது முதலாளிகளின் கைவசம் இருக்கும் பணத்தின் அளவு 17.4 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்திருக்கும். இதனை தொழில்கடன் என்கிற பெயரில் சுருட்டிக் கொள்வதற்கு கார்ப்பரேட்டுகள் தயாராகி வருகின்றனர்.
தீராத நெருக்கடியில் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் உலக முதலாளித்துவத்துக்கு ஒவ்வொரு துளியும் உயிர்த்துளிதான். 17 லட்சம் கோடி இல்லை, 5 லட்சம் கோடி கையில் கிடைத்தாலும் அதை பிணையாக வைத்து ஒரு சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் வர்த்தக மற்றும் பங்குச் சந்தை சூதாட்டத்தை தொடரலாம், அல்லவா? அதற்கான ஏற்பாடுதான் இது.
ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் காசு அல்லது மாதாந்திர சேவைக்கட்டணம், பரிவர்த்தனைகள் மீது வரிவிதிப்பு, செலவுகளையும், வாழ்க்கை செயல்பாடுகளையும் கண்காணித்தல், அரசியல் ஒடுக்குமுறை, வணிகரீதியான சுரண்டல், நிதிச்சூதாட்டத்திற்குள் வளைதுதப் போடுதல் என்ற அரசு-கார்ப்பரேட் கூட்டு சதிக்குள் இழுத்து விடுகின்ற மோடி கும்பலை விட மோசமான மக்கள் விரோதிகள் யார் இருக்க முடியும்? நூறுக்கும் மேற்பட்டவர்களை வங்கி வாசலில் கொன்றுள்ள மோடியின் வக்கிரத்தை எப்படி சகித்துக் கொள்ள முடியும்? இதனை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று பச்சைப் பொய்யை பரப்பி வருகின்ற கோயபல்சின் வாரிசுகளுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
– குமார்
புதிய தொழிலாளி, டிசம்பர் 2016