கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி, சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கினார்கள். தங்களுக்கு ஜீன் மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், சிலருக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறி அதை எதிர்த்து உடனடியாக ஜூன் மாதத்திற்கான தங்களது சம்பளத்தை வழங்கக் கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இறுதியாக அன்று மாலைக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளப் பணம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
அரசியலற்ற வெறும் பொருளாதார நலன் சார்ந்து ஒரு தொழிற்சங்கம் இயங்குமாயின், ஆரம்பத்தில் பெரும் சாதனைகள் ஆற்றி பிரபலம் ஆகலாம் ஆனால் இறுதியில் அது மக்களிடம் செல்வாக்கிழந்து, முட்டு சந்தில் தான் சேரும் என்பதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கமும் அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கமும் ஒரு சிறந்த உதாரணம்.
ஒரு வருடம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியம், போனஸ், பென்சன் சம்பந்தமாக போராடியபோது, அவர்களுக்கு ஆதரவாக புஜதொமு ஐ. டி. பிரசுரம் தயாரித்து மக்களிடம் விநியோகித்தோம்.
பேச்சு வார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, அடுத்த இரண்டு நாட்களில் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இவ்வாறான அநியாய கட்டண உயர்வானது, ஏழை நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருந்தது.
அரசின் அநியாய பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து நமது புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் சார்பாக கீழ்க்கண்டவாறு துண்டு பிரசுரம் தயார் செய்து பொதுமக்களிடமும் போக்குவரத்து ஊழியர்களிடமும் விநியோகித்தோம்…
ஊழியர்களின் நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய தொகை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து அந்த ஊழல் தொகையை மீட்டெடுக்கவும், கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட வேண்டும்!
போன்ற வாக்கியங்கள் கொண்ட துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் நமது பிரசுரம் குற்ற உணர்வு ஏற்படுத்தியதை காணமுடிந்தது. ஆனால் இந்த(நமது பிரசுரத்தில் இருந்த) கண்ணோட்டத்தில் சிந்திக்க அவர்களின் தொழிற்சங்கம் அவர்களை பழக்கப்படுத்தவில்லை, அரசியல் உணர்வை ஏற்படுத்தவில்லை என்பதே எதார்த்தமாக இருந்தது.
புஜதொமு வும் அதன் கிளை சங்கமான புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவும் மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி எண்ணற்ற போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும், தெருமுனை பிரச்சாரங்களையும் நடத்தியுள்ளது; நடத்தி வருகிறது என்பது பலருக்கு தெரியும்.
அதாவது நமது சங்கம் வெறும் பொருளாதார போராட்டம் மட்டும் செய்யாமல், பொருளாதார பிரச்சினைகளுக்கான அரசியல் காரணங்களை முன்வைத்தே போராடி வருகிறது, அவ்வாறே இயங்கியும் வருகிறது.
அரசின் கார்ப்பரேட் நலன் சார்ந்த, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்க கூடிய திட்டங்கள் அமுல்படுத்த முனையும்போது, உதாரணமாக FTE, NEET, NEEM, மற்றும் இது போன்ற பல திட்டங்களுக்கு எதிராக நமது புஜதொமு எண்ணற்ற போராட்டங்கள், ஆலை வாயில் கூட்டங்கள் போன்றவைவகளை நடத்தியுள்ளது.
தோழமை அமைப்புகள் நடத்திய டாஸ்மாக் போராட்டம், விவசாயிகள் போராட்டம், கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்ப்பு ஆகியவைகளிலும் புஜதொமு இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சீரழிந்து நிற்கும் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் எனில், புரட்சிகர கொள்கைகளை உடைய மக்கள் திரள் அமைப்புகளின் கீழ் மக்களை அணிதிரட்டி, அரசியல்படுத்தி, தங்கள் பிரச்சினைகளை தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதே புரட்சிகர தொழிற்சங்கங்களின் கடமை. மிக மிக சிறுபான்மையாக நமது புஜதொமு இருந்தாலும் தமது கொள்கையை செயல்படுத்துவதில் சமரசமின்றி செயல்பட்டு வருகிறது.
மேலே நாம் சொன்ன பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர் சங்கமோ, அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கமோ போராடியிருக்கிறதா என்றால், கண்டிப்பாக இல்லை.
பெரும்பான்மை மக்கள் அரசுப்பள்ளிகளை தவிர்த்து விட்டு தனியார் நோக்கி செல்கையில், அச்சூழலை ஏற்படுத்திய அரசின் கொள்கையை எதிர்த்தோ, மக்களை மீண்டும் அரசுப்பள்ளிகளை நோக்கி திருப்ப வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வித போராட்டமோ இயக்கமோ நடத்தியது கிடையாது, அதனாலயே தான் ஆசிரியர்களின் நியாயமான போராட்டம் கூட மக்களால் இகழ்ச்சி செய்யப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் போராட்டம் எல்லாமே அவர்களின் ஊதியம் சம்பந்தமானதாக இருந்ததே ஒழிய மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி எந்த போராட்டமும் நடத்தியது இல்லை என்பதுதான்.
இந்நிலை என்று மாற்றப்படுகிறதோ அப்போது தான் சமூக மாற்றத்திற்கான அறிகுறி.
1 ping