மேனேஜரின் பேராசைக்கு பலிகொடுக்கப்படும் ஊழியர்கள்

சில மாதங்களுக்கு முன்பு டி.சி.எஸ் நிறுவனத்தில வேலை செய்த இரண்டு பேரை வேலையை விட்டு நிறுத்திவிட்டதாக நண்பர் மூலமாக செய்தி வந்தது. எச்.ஆர் அதிகாரியும் மேனேஜரும் சொன்ன அறிவுரையின் படி இருவரும் வேலையை விட்டு விலகுவதாக எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ‘மறுத்தால் போலீஸ் கோர்ட் என்று அலைய வேண்டியது வரும், வேறு எந்த நிறுவனத்திலும் வாழ்நாள் முழுக்க வேலை கிடைக்காதபடிக்கு ஆகிவிடும்’ என்று மிரட்டப்பட்டதால் வேறு வழியின்றி, தாமாக வெளியேறுவதாக எழுதிக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு என்ன தவறு செய்தார்கள் அவர்கள்?

பாதுகாப்பு காரணமாக சில நிறுவனங்கள் தங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் ஐ.டி, பி.பி.ஓ நிறுவனங்களுக்கு சில வழிமுறைகளை வகுத்துக் கொடுப்பது வழக்கம் அதில் ஒன்றாக, வாடிக்கையாளர் நிறுவனங்களின் கணினிக்குள் நுழைந்து பணியாற்ற பயனர் பெயர் (யூசர் ஐ.டி), கடவுச் சொல் (பாஸ்வேர்ட்) ஒதுக்கிக் கொடுப்பது வழக்கம். அந்த வழிமுறைகளின்படி அந்தப் பெயர் ஒதுக்கப்பட்டவர்தான் அதில் வேலை செய்ய முடியும். வேறு யாரும் அந்த பெயரில் கணினிக்குள் நுழைவது குற்றமாக பார்க்கப்படும்.

அவ்வாறு ஒரு நிறுவனம் டி.சி.எஸ் நிறுவனத்திற்கு சில பயனர் பெயர்களை வழங்கியிருந்தது. அதை ஒதுக்கப்பட்ட நபர் தவிர்த்து வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது. ஆனால் வெளியேறியவர்களில் ஒருவர் தனது பெயரை (ஐ.டி.யை) இன்னொருவருக்கு கொடுத்திருக்கிறார். இதை நிறுவன தணிக்கை (இன்டர்னல் ஆடிட்டிங்) நடந்த சமயத்தில் “கண்டுபிடித்து” விட்டார்கள். இதுதான் அந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட பின்னணி.

உண்மையில், நவீன இணைய குற்றவியல் (சைபர் கிரைம்) சட்டங்களின்படி இது பெரிய குற்றம் தான். நிறுவனம் போலீஸ் வழக்கு போட்டு தண்டனை கூட வாங்கிக் கொடுக்கலாம். எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம். அந்த வகையில் இருவரின் வாழ்க்கையை காப்பாற்றி விட்ட மேனேஜரும் எச்.ஆர்-ம் “போற்றப்பட வேண்டியவர்கள்” தான் என்று தோன்றலாம்

பொதுவாக இதை வாசிப்பவர்கள் நிறுவனம் எடுத்த நடவடிக்கை சரி என்று நினைக்கலாம். ஆனால் ஐ.டி, பி.பி.ஓ போன்ற வேலைகளில் உள்ளவர்கள் சிரிக்கவோ ஆத்திரப்படவோ தான் செய்வார்கள். காரணம், எல்லா நிறுவனங்களிலும் இதுபோன்ற பாதுகாப்பு விசயங்கள் இருக்கின்றன. அவற்றை ஊழியர்கள் தாங்களாக மீறுவதில்லை. மேனேஜரின் அறிவுறுத்தலின் படியே மேலே சொன்னபடி பயனர் பெயரை (ஐ.டி-ஐ) பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தக் கணத்தில் பல்வேறு புராஜக்ட்களில் பலரும் மீறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது அவர்களை வேலை வாங்கும் மேலாளரால் திட்டமிடப்பட்டு அவருக்குத் தெரிந்தே நடப்பது, பணிபுரியும் அனைவருக்கும் இது தெரியும். ஆனால் தெரியாத ஒன்று அதை காரணம் காட்டி வேலையை விட்டு போகச் சொல்வார்கள் என்பதுதான்.

வேலையை விட்டு துரத்தப்பட்ட அந்த இருவரிடமும் மேனேஜர், எச்.ஆர் அதிகாரிகள் எப்படி பேசினார்கள் என்பது நீங்கள் அறியாத ஒன்றாக இருக்காது. தணிக்கையில் ஐ.டியை விதிமுறைக்கு மாறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, “தம்பி, ‘தெரியாம செய்துட்டேன், இனிமேல் செய்யமாட்டேன்’னு எழுதிக் கொடுங்க, மற்றதை நாங்க பார்த்துக்கிறோம்” என்று இந்த அந்த ஊழியர்களிடம் கூறியுள்ளார்கள். அவர்கள் கொஞ்சம் தயங்கிய போது, “இதைத்தவிர வேறு வழியில்லை. சொல்வது போல எழுதிக் கொடுங்க, வேற எதுவும் பிரச்சன வராம நான் பார்த்துக்கிறேன்” என்றும் உறுதிமொழி கொடுத்திருக்கிறார்கள். அதை நம்பி இவர்களும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். பிறகு இரண்டு மாதம் கழித்து, அவர்கள் எழுதிக்கொடுத்ததையே காட்டி, மிரட்டி வேலையை விட்டு அனுப்பி உள்ளார்கள், அந்த “நாங்க பாத்துக்கிறோம்” என்ற “நல்லவர்கள்”.

அனுபவம் இன்மை, சீனியர் வழிகாட்டுதல்கள், ‘எல்லாரும் இப்படிதானே வேலை செய்கிறார்கள்’, ‘மேனேஜர் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டாருல்ல’ போன்ற காரணங்களால் இருவரின் வேலையும் இன்று பறிபோய்விட்டது. எதிர்காலமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்டது.

நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் தேவைக்காக நம்மை பிணை வைக்கிறார்கள் என்பதே இதில் உள்ள செய்தி. ஆகவே நண்பர்களே மேனேஜரோ யாரோ உங்களிடம் இதுபோன்ற பாதுகாப்பு விதிகளை மீறும்படி வாய்வழியாக கூறும் வார்த்தைகளை நம்பாதீர்கள். எழுத்து வடிவில் அல்லது மின்னஞ்சலில் ஒப்புதலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தற்போது அதுபோல வேலை செய்பவர்களும் மின்னஞ்சலில் உத்தரவாதம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மீறி வேலையை விட்டு போகச்சொன்னால் நமது சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள். அறியாமை, பயம் போன்றவற்றை தவிருங்கள். நாம் பழைய அடிமைகள் இல்லை. கேள்வி கேட்க, துணிவோடு எதிர்க்க நமது சங்கம் உள்ளது.

மேனேஜரே ஏன் இப்படி செய்ய வேண்டும்? நமக்குக் கிடைத்த தகவல்படி இந்த இருவர் மட்டுமில்லை பலபேர் இதுபோல் வேலை இழந்துள்ளார்கள்.

நமது சங்கம் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாம் நிறைய சாதித்துள்ளோம். சமீபத்தில் சி.டி.எஸ் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக  வேலை நேரத்தை அதிகரித்ததை எதிர்த்த வழக்கும், டி.சி.எஸ், சின்டெல் நிறுவனங்களின் ஆட்குறைப்பு சார்ந்த வழக்குகளும் முக்கியமானவை. ஆகவே ஆட்குறைப்பு நடவடிக்கையை புதிய புதிய வழிகளில் இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

ஆகவே மேனேஜர் போன்றோரிடம் நல்ல பெயர் வாங்குகிறேன் என்றோ, அப்ரைசலில் நல்ல ரேட்டிங் வாங்க வேண்டும் என்பதற்காகவோ மேனேஜர்களின் சொல் கேட்டு விதிமீறல்களில் ஈடுபட்டால் பிரச்சனையை நம் மீதே சுமத்தி விட்டு அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பணிவாழ்வில் வரும் சிக்கல்களை எதிர்கொள்ள பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவில் இணைந்து சக ஊழியர்களிடம் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும்படி அறிவுறுத்துகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர்கள் பிரிவு
தொடர்புக்கு : தோழர் கற்பக வினாயகம், அமைப்பாளர்

மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
தொலைபேசி : 9003198576

Series Navigation<< டி.சி.எஸ் வேலை நீக்கங்களுக்கு எதிராகஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/employees-made-scapegoat-for-managers-greed/

1 comment

    • ரகு on January 28, 2017 at 1:58 pm
    • Reply

    வேலையை முடிச்சப் பிறகும் ஆபிஸ்லயே சிலபேர் இருப்பாங்க, மேனேஜர் பாத்தா அதிக நேரம் உழைக்கிறான் என்று நல்ல ரேட்டிங் போடுவாருனு நினைச்சு அப்படி இருக்காங்க. எட்டு மணி நேரத்துக்கு தான் டைம் ஷீட்ல சைன் போட்ருக்க கூடுதல் நேரம் ஒக்காந்து என்ன செஞ்சனு கேட்டுகூட இனிமேல் வேலையை விட்டு போக சொல்லுவாங்க. பாத்துக்கங்க.

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மே தினம்

பிரிட்டிஷ் ஆட்சியின் கங்காணி முறை ஒப்பந்தத் தொழிலாளர் முறை என நவீன வடிவில் புகுத்தப்பட்டுள்ளது, ஏன்?

18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ

இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிசிசிப்பி கம்பெனிதான் உலகின் முதல் பொது பங்கு நிறுவனம். அப்போது பிரான்சுக்கு சொந்தமான மிசிசிப்பி பள்ளத்தாக்கில் மக்களை...

Close