என் மகள் இல்லாத தீபாவளி… நான் எங்கே கொண்டாடுவது….

ன் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும். நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது. அதற்காக அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். எனக்கு படிக்க வாய்ப்பு கிடைக்காத பள்ளியில் எப்பாடுபட்டாவது சேர்த்துவிட வேண்டும். அதன் மூலம் நல்ல கல்லூரியில் டாக்டராகவோ, என்ஜினியராகவோ படித்து, கேம்பஸ் இன்டர்வியூவிலேயே நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும். அதற்கு தேவையான அனைத்தையும் எப்பாடுபட்டாவது செய்வதை என் கடமையாகவும் பொறுப்பாகவும் உணர்ந்து செயல்படுகிறேன்.

நான் என் பிள்ளையை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே நன்றாகப் படித்தாள். என்னோட சக்திக்கு மீறி படிப்புக்குத் தேவையான செலவுகளை செய்து வந்தேன். நாங்கள் நல்ல நண்பர்களாகவே வளர்ந்தோம். பத்தாம் வகுப்பிலும், 12-ம் வகுப்பிலும் 80%-க்கு மேல் மதிப்பெண் எடுத்தாள். வெளி மார்க்கெட்டில் டிமாண்டாக இருக்கும் படிப்பை படிக்க எண்ணி, இறுதியில் நல்ல கல்லூரியில், நல்ல பிரிவிலேயே சேர்த்தேன்.

கல்லூரியிலும் படு சுட்டியாக 93% மதிப்பெண்ணுடன், நல்ல மாணவன் விருதையும் , தங்க மெடலையும் பெற்றாள் என் பிள்ளை.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய். என்ற குறள் என்னைத் திக்கு முக்காடச் செய்தது. கூடவே கொஞ்சம் நெருடலும் ஆரம்பித்தது. வேலை இன்னும் கிடைக்கவில்லை.

கல்லூரிப்படிப்பிற்காக வாங்கிய லோன்? அதை நான் கட்டிவிடுவேன் என்றாலும், படித்து முடிக்கும் முன்பே வேலை என்ற நம்பிக்கை, வெறும் கனவாகி நொறுங்கத் தொடங்கியது.

நம்பிக்கையை கைவிடவில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம், என் குழந்தையை மட்டும் கை விட்டுவிடுமா என்ன? லட்சங்களில் புரளும் வேலைக்காரர்களும், வேலை வாய்ப்புகளும் உள்ள சென்னைக்கு மகளை அனுப்பினேன். துறை சார்ந்த எக்ஸ்ட்ரா கோர்ஸ் படிக்கவும், வேலை தேடவும் அனுப்பினேன். சிலமாதங்கள் உருண்டோடின. வேலை கிடைக்கவில்லை.

தொலைபேசியில் என் மகளின் செல்லக் குரல் சிறிது சிறிதாக சற்று கனமான குரலாக உருவெடுத்தது. என்னுடைய குரலும் தழுதழுக்க ஆரம்பித்தது. இதை அவள் புரிந்து கொண்டதாலோ என்னவோ, கிடைக்கும் வேலைக்குச் சென்றுவிடலாம் என்று ஒரு கால் சென்டருக்குச் சென்று விட்டாள். அதுவும் முதல் 3 மாதம் சம்பளமில்லாமல். அதன் பிறகு மாதம் 12 லிருந்து 15 வரை தருவார்களாம்.

இதை கேள்விப்பட்ட நிமிடத்தில், என்னுடைய “வந்தாரை வாழவைக்கும் தமிழகம், என் குழந்தையை மட்டும் விட்டுவிடுமா என்ன? லட்சங்களில் புரளும் வேலைக்காரர்களும் , வேலை வாய்ப்புகளும் உள்ள சென்னை” என்ற நம்பிக்கையும் கனவாக நொறுங்கியது

இப்போது வரும் தீபாவளிக்கு வீட்டுக்கு வரப் போவதில்லை என தெரிவித்து விட்டாள், என் மகள். வேலை இருக்காம். லீவ் கிடைக்காதாம்.

வந்தால் செலவாகும், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு என் பெற்றோரைப் பார்ப்பது என்ற குற்ற உணர்ச்சியில்தான் இப்படி யோசிக்கிறாள் என்று என் மனதில் ஓடுகிறது.

என் மகள் இல்லாத தீபாவளி…
நான் எங்கே கொண்டாடுவது….

நான் எல்லாம் சரியாகத்தான் செய்ததாக நினைக்கிறேன். என் மகளும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் நன்றாகத்தான் படித்தாள்? ஆனால் இன்று, அவள் படிப்புகேற்ற வேலையோ, ஏன் தேவைக் கேற்ற வருமானம் வரும் வேலை கூட கூட கிடைக்கவில்லை.

நாங்கள் வீட்டில் ஏதோ சூனியம் குடிகொண்டது போல உணர்கிறோம்.. இதற்கு யாரைக் குறை சொல்வது? இந்த நிலைமைக்கு யார் காரணம்? நானா, என் மகளா?
என் மகள் படித்த கல்லூரி நிர்வாகமா? வேலை கொடுக்காத நிறுவனங்களா?

என்னவென்று என் அறிவுக்கு புலப்படவில்லை. ஒன்றே ஒன்று மட்டும் மிச்சம் உள்ளது. இன்னொரு நம்பிக்கையை வளர்க்க ஆரம்பித்துள்ளேன். இன்றைய நிலைமையும் மாறும், என் மகளின் எதிர்காலம் சிறக்கும். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. என் குல தெய்வம் கை விடாது.

ஆனால் அதே சமயம் என்னை மீறி ஒரு எண்ண ஓட்டம் ” இந்த நம்பிக்கையும் நொறுங்கும் நாள் என்றோ”…

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அனுபவம் இருக்கலாம் அல்லது இது போன்ற நிலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். என்ன செய்தால் இந்தப் பிரச்சினைத் தீரும்….உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் கூறுங்களேன்!!!

வரும் ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்து, வேலை தேட களத்தில் குதிக்கபோகும் குழந்தைகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் , தன்னுடைய பிள்ளைகளை ஆக மிகச் சிறந்த பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் பெற்றோருக்கும், அது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

– மணிவண்ணன்

எஞ்சினியரிங் முடித்து விட்டு முறையான வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் சமர்ப்பணம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/engineering-jobsearch-deepavali/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட் படுகொலை – கார்ப்பரேட் அரசை தண்டிப்பது யார்?

கார்ப்பரேட் அரசின் ஸ்டெர்லைட் படுகொலை, கொலைகார அரசை தண்டிப்பது யார்? 100 நாள் அமைதிப் போராட்டத்தை கலவரமாக மாற்றிய அரச பயங்கரவாதம்

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான "பெக் பாக்" வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது...

Close