IT workers are the ones who create profit and wealth of IT companies
(ஐ.டி நிறுவனங்களின் இலாபத்தையும் செல்வத்தையும் உருவாக்குபவர்கள் ஐ.டி. தொழிலாளர்களே)
பல பெரிய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி), தகவல் தொழில்நுட்ப சேவை (ஐ.டி.ஈ.எஸ்), தகவல் தொழில்நுட்ப ஆலோசனை (ஐ.டி. சார்ந்த கன்சல்டிங்), அயல் பணி நிறுவனங்கள் (பி.பி.ஓ) நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பல்வேறு சாக்குப்போக்குகளை கூறி விரட்டியடித்து வருகின்றன. டெக் மஹிந்திரா, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் டெக்னாலஜிஸ், விப்ரோ, எல்அண்ட்டி இன்ஃபோடெக், கேப்ஜெமினி, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் வழங்குவதாக செய்திகள் வெளிவருகின்றன.
‘திறம்பட வேலை செய்யாதவர்களையும், வாய்ப்பு கொடுத்தும் தமது திறமையை உயர்த்திக் கொள்ளாதவர்களையும் மட்டுமே வேறு வேலை தேடச் சொல்வதாக’ பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன. ‘ஐ.டி. துறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்கள் காரணமாக, நிறுவனங்களின் லாப விகிதத்தில் வீழ்ச்சி ஏற்படுவதாகவும், அதனால் நிறுவனங்களின் போட்டித்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக சரியாக வேலை செய்யாத ஊழியர்களை வெளியேற்றுவதாகவும்’ சில நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
இருப்பினும், அவர்கள் அனைவரும் பெரிய அளவில் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்து வருவதாகவும் வலியுறுத்துகின்றனர்.

‘தற்போது இருக்கும் தொழிலாளர்களைத் வெளியே அனுப்பிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக மலிவான கூலியில் புதிய இளம் வயதினரை வேலைக்கு எடுங்கள்’
ஆனால் முதலாளித்துவ நிறுவனங்களும் அவற்றின் உரிமையாளர்களும் அப்படி நினைப்பதில்லை. ‘தற்போது இருக்கும் தொழிலாளர்களைத் வெளியே அனுப்பிவிட்டு, அவர்களுக்கு மாற்றாக மலிவான கூலியில் புதிய இளம் வயதினரை வேலைக்கு எடுங்கள்’ என்று அவர்கள் கூறுகின்றனர்.
வேலை இழப்பவர்களின் வாழ்வாதாரங்களுக்கு யார் பொறுப்பு?
‘ஓ, அவர்களே தங்களை கவனித்துக் கொள்ள வேண்டும், வேறு வேலைகளை தேடிக் கொள்ள வேண்டும்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்! இப்படித்தான் முதலாளிகள் சிந்திக்கிறார்கள்.
முதலாளித்துவ பங்குதாரர்களுக்கு அதிக இலாபம் ஈட்டித் தருவது மட்டுமே இந்த நிறுவனங்களின் ஒரே குறிக்கோள். எனவே செலவுகளை குறைப்பதற்கான வழிகளையே அவர்கள் எப்போதும் தேடுகிறார்கள். அதற்கு, ஊழியர்களின் சலுகைகளை வெட்டுவது, ஊதிய உயர்வு தராமல் வேலை நேரத்தை அதிகரிப்பது, ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்தல் போன்றவையே அவர்கள் எடுக்கும் முதல் செலவு குறைப்பு நடவடிக்கைகளாகும். அவர்களுடைய இலாப விகிதங்கள் எப்போதெல்லாம் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஊழியர் எண்ணிக்கையை குறைக்கின்றனர்.
பிற நாடுகளின் பொருளாதார கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்களும் தொழில்நுட்ப மாற்றங்களும் ஏற்படுத்தும் சுமைகளை ஏன் ஊழியர்கள் மட்டும் தாங்கிக்கொள்ள வேண்டும்? நிறுவன உரிமையாளர்களும் அதிகாரிகளும் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கும் சிறிது காலத்துக்கு குறைந்த இலாப வரம்பை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? நிறுவனங்களை வளர்ப்பற்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதற்கு பதிலாக, குறுகிய காலத்துக்கு அவர்களின் லாபம் குவிக்கும் இலக்கை ஏன் தளர்த்தக் கூடாது?
கடந்த காலத்தில் முதலாளித்துவ உரிமையாளர்கள் யாருடைய முயற்சிகளினால் லாபம் சம்பாதித்தார்கள்? இலாபம் சம்பாதிப்பதுடன், லாபங்களை தொடர்ந்து உருவாக்குவதும், லட்சக்கணக்கான ஊழியர்களின் வியர்வையாகும். அவர்களது வியர்வைதான், ஐ.டி. நிறுவனங்களின் முதலாளித்துவ பங்குதாரர்களின் செல்வத்தின் மூலமாகும். அவர்கள் இந்த நிறுவனங்களை ஆரம்பித்தபோது மிகச் சிறிய மூலதனத்தை முதலீடு செய்திருந்தார்கள். ஐ.டி தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து அவர்கள் அதை பெரும் செல்வமாக மாற்றியுள்ளனர். அவர்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த சிறிய அளவு மூலதனம் கூட அவர்களின் பிற நிறுவனங்களின் தொழிலாளர்களின் வியர்வையிலிருந்து வந்ததுதான்.
மூலதனம் தானாக எந்தவொரு இலாபத்தையோ அல்லது செல்வத்தையோ உருவாக்காது. மூலதனத்தை வைத்து அவர்கள் கணினிகள் மற்றும் மேசைகளை வாங்க முடியும், அலுவலகத்தை உருவாக்க முடியும், ஆனால் ஊழியர்களின் உழைப்பு இல்லாமல் கணினிகள், மேசைகள், அலுவலகங்கள் இவற்றால் ஏதாவது இலாபத்தையும் செல்வத்தையும் உருவாக்க முடியும்?
இல்லை நண்பர்களே. முதலாளிகளுக்கு இலாபத்தை உருவாக்குவது மனித உழைப்பு மட்டுமே. முதலாளிகளின் கைகளில் இருக்கும் செல்வம் ஊழியர்களின் உழைப்பிலிருந்து திரட்டப்பட்ட இலாபமே.
ஐ.டி. தொழிலாளர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்வதோடு நிறுவனங்களின் ‘போதனை’களால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது. மேற்குறிப்பிட்ட விஷயங்களை மேலும் புரிந்துகொள்ள லோக் ராஜ் சங்கதன் – மகாராஷ்டிரா பிராந்திய கவுன்சிலால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கடந்த சில வருட அதிகாரபூர்வ ஆவணங்கள் பற்றிய ஒரு பகுப்பாய்வை நடத்தியுள்ளது. இந்தத் தொடரின் முதல் கட்டுரையாக டெக் மஹிந்த்ரா பற்றிய ஆய்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய பகுப்பாய்வு – பகுதி 1
டெக் மஹிந்த்ரா (Tech M)
Tech M உலகம் முழுவதும் 170-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட உலகளாவிய நிறுவனம். 1986-ம் ஆண்டு பிரிட்டிஷ் டெலிகாம் உடன் ஒரு கூட்டு முயற்சியாக இது துவங்கப்பட்டதிலிருந்து 2013-ம் ஆண்டு மஹிந்திரா சத்யம் நிறுவனத்துடன் இணையும் வரையிலும் தொலை தொடர்புத் துறையில் மட்டுமே ஈடுபட்டிருந்தது. இன்றும் கூட இதன் வர்த்தகத்தில் தொலை தொடர்புத் துறை பிரதானமாக உள்ளது.
FY16-17-ல், அதன் உலகளாவிய வருவாய் ரூ 29,000 கோடி. அதன் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 1.17 லட்சம். Tech M-ன் மொத்த வருவாயில் 80%-ம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 84%-ம் கொண்டிருக்கும் அதன் இந்தியப் பிரிவு முக்கியப்பங்கு வகிக்கிறது. FY16-17-ல், ஒரு ஊழியரின் மூலம் கிடைத்த வருவாய் தோராயமாக ரூ 24 லட்சம்.
ஊழியர்களுக்கான ஊதிய செலவு ரூ 6,900 (FY13-14) கோடியிலிருந்து ரூ 7,700 கோடியாக (FY16-17) அதாவது 11.5% உயர்ந்த அதே கால கட்டத்தில் வருடாந்தர வருமானம் ரூ 16,300 கோடியிலிருந்து ரூ 23,100 கோடியாக, அதாவது 41% அதிகரித்தது. FY13-14 உடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஊழியரும் கிட்டத்தட்ட 30% அதிக வருவாயை கொடுத்துள்ளனர்! இருப்பினும் அதே காலப்பகுதியில் ஊதிய செலவு 11.5% மட்டுமே அதிகரித்தது.
FY16-17-ம் ஆண்டில், ஒரு ஊழியரின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்த வருமான வரிக்கு முன்னரான இலாபம் (Profit Before Tax) ரூ 3.9 லட்சம், அதே நேரம் ஊழியர் ஒருவரின் சராசரி ஊதியம் ரூ 7.8 லட்சம். இதன் பொருள், சராசரியாக ஒவ்வொரு ஊழியரும் 50% உழைப்பை நிறுவனத்திற்கு இலாபமாக கொடுக்கின்றனர்!
மேலும், மேல்மட்ட மற்றும் உயர்பதவியிலுள்ள நிர்வாகிகளுக்கும் சராசரி ஊழியர்களுக்கும் இடையில் சம்பளத்தில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. சராசரி ஊதியத்தைவிட பல மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கும் மேல்மட்ட நிர்வாகிகளின் ஊதியங்களை தவிர்த்துவிட்டால், மற்ற அனைத்து ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் மிக அதிகமான சதவீதத்தை நிறுவனத்திற்கு இலாபமாகத் தருகின்றனர். உதாரணமாக, Tech M-ன் முதன்மை செயல் அதிகாரி (CEO) மட்டும் 2015-16-ல் ரூ 165 கோடி, 2016-17 ல் ரூ 150 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அவர் ஒருவருக்கு மட்டும் 2000 ஊழியர்களுக்கு சமமான சம்பளம் கிடைத்துள்ளது!
FY16-17 ஆண்டில், பங்குதாரர்கள் தாங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ 5.60, அதாவது 560%-ஐ லாபமாக பெற்றனர்! எனவே இலாபத்தை உருவாக்கிய ஊழியர்கள் 0.36% மட்டுமே ஊதிய உயர்வு பெற்ற 16-17-ம் ஆண்டில் பங்குதாரர்கள் மிக அதிக வருமானம் பெற்றுள்ளனர். மொத்த லாப ஈவுத் தொகையாக ரூ 1,378 கோடி வினியோகிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஊழியர்களின் ஊதியம் வெறும் ரூ 800 கோடி மட்டுமே அதிகரித்துள்ளது!
ஐ.டி. நிறுவனங்கள் பல வரிச் சலுகைகளை அனுபவித்து வருகின்றன. Tech M FY16-17ல் 21.4%-ம் FY15-16ல் 18.1%-ம் வரி செலுத்தி உள்ளது. ஆனால் உண்மையான வரி (வரி + கூடுதல் கட்டணம் + செஸ்) 34.6% ஆகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், Tech M பெற்ற வரிச் சலுகைகள் மட்டும் சுமார் ரூ 1400 கோடி. ஆனால் இந்த வரிச் சலுகைகள் அனைத்தும் நிறுவனத்தின் பங்குதாரர்களை வளப்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்களுக்கு அனைத்து லாபங்களையும் உருவாக்கிய ஊழியர்களுடன் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

இதன் பொருள், Tech M இத்தனை ஆண்டு காலமும், ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இலாபத்தைப் பயன்படுத்தியே வளர்ச்சியடைந்துள்ளது!
கடந்த சில ஆண்டுகளில் ரூ 12,000 கோடிக்கு மேல் லாபம் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது Tech M-ன் கடன் தொகையான ரூ 350 கோடி, மிகவும் சிறியது. இதன் பொருள், Tech M இத்தனை ஆண்டு காலமும், ஊழியர்களால் உருவாக்கப்பட்ட இலாபத்தைப் பயன்படுத்தியே வளர்ச்சியடைந்துள்ளது! கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ 2,000 கோடி புதிய நிலம் மற்றும் கட்டிடங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், 2016-17-ம் நிதியாண்டில் Tech M ஊழியர்களின் பயிற்சிக்காக ரூ 20 கோடி அதாவது ஒரு ஊழியருக்கு கிட்டத்தட்ட ரூ 2,000, மட்டுமே செலவிட்டுள்ளது. எனவே புதிய தொழில்நுட்பத்தில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு Tech M முன்னுரிமை தருவதில்லை என்பது தெளிவாகிறது.
Tech M நிறுவனத்தில் ஏறத்தாழ ரூ 60 கோடி பங்கு முதலீடு செய்து, 26% பங்குகளை வைத்துள்ள மஹிந்திரா குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஊழியர்களைக் கொண்ட, ஆண்டுக்கு ரூ 29,000 கோடி விற்பனை, ரூ 3,400 கோடி (PBT) இலாபம் ஈட்டும் நிறுவனத்தை கட்டுப்படுத்துகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும், Tech M இலாப ஈவுத் தொகையாக ரூ 350 கோடி மஹிந்திரா குடும்பத்திற்கு செலுத்தியுள்ளது!
Tech M முதலாளிகளின் முன்னுரிமைகள் என்னவென்பதை இது தெளிவாக காட்டுகிறது. பங்குதாரகளின் இலாபத்தை அதிகரிப்பதே அவர்களின் முதன்மை இலக்கு. பங்குதாரர்களின் செல்வத்தை அதிகரிப்பதே அவர்களின் ஒரே கவலை. அவர்களுக்கு Tech M ஊழியர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.
மொழிபெயர்ப்பு – மணி
Courtesy : Lok Raj Sangathan
1 ping