நண்பர்களே,
நாங்கள் நமது சங்க வழக்கறிஞரிடம் தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக அளவு பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதைப் பற்றி ஒரு முறை விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் இது போன்ற நடவடிக்கைகள் நடப்பதற்கு தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் மத்தியில் சட்டம் பற்றிய புரிதல் குறைபாடே காரணம் என்று கூறினார். ஆலைத் தொழிலாளர்களும், பிற துறைகளில் பணி புரியும் ஊழியர்களும் பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால் அவர்கள் மிகவும் கோபம் கொண்டு தாங்கள் இழந்த வேலையை திரும்பப் பெற போராடுவார்கள். ஆனால், 40 லட்சத்துக்கும் மேல் அதிகமான ஊழியர்கள் பணிபுரியும் தகவல் தொழில் நுட்பத் துறையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பல ஐ.டி ஊழியர்களிடம் பேசி அவர்கள் ஏன் தமது உரிமைகளுக்காக போராடுவதில்லை என்ற உண்மையை கண்டறிய முயன்றோம். அவர்கள் மத்தியில் நிலவும் பின்வரும் கருத்துக்கள் காரணமாகத்தான் சட்ட ரீதியாக தமது உரிமைகளுக்காக போராடுவதில்லை என்று தெரிய வந்தது :
- தங்களது ஆஃபர் லெட்டரில் நிறுவனம் 2 மாத அவகாசம் கொடுத்து வேலையை விட்டு நீக்கலாம் என்று குறிப்பிட்டிருப்பதை தாங்களும் ஒத்துக் கொண்டு கையொப்பம் இட்டிருப்பதால் சட்ட ரீதியாக போராட முடியாது.
- தகவல் தொழில்நுட்ப துறைக்கு இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் பொருந்தாது.
- தொழிற்சங்கம் தகவல் தொழில்நுட்பத் துறையில் அனுமதிக்கப்படுவதில்லை. தொழிற்சங்கம் என்பது ஆலைத் தொழிலாள்களுக்கும் பிற துறை ஊழியர்களுக்குமானது மட்டுமே.
- நிறுவனம் தனது பாலிசியை (கொள்கையை) எப்போது வேண்டுமானாலும் மாற்றி ஊழியரை எந்த நேரத்திலும் வேலையை விட்டு வெளியேற்றலாம்.
- நிறுவனத்திற்கு எதிராக போராடினால் நிறுவனம் பெயரை பிளாக் லிஸ்ட் செய்து விடும். அது வேறு எந்த நிறுவனத்திலும் வேலை தேட முடியாத நிலையை ஏற்படுத்தி விடும்.
- நிறுவனம் பெரிய வழக்கறிஞர் குழுக்களை கொண்டது. அதற்கு எதிரான தனி ஒருவனால் போராட முடியாது.
- நிறுவனத்திற்கு எதிராக போராடினால் ரிலீவிங் லெட்டர் தர மாட்டார்கள். தங்கள் சேமநல நிதி (பி.எஃப்), கிராசுவிட்டி போன்றவை பறிக்கப்படலாம்.
ஐ.டி ஊழியர்களின் ஐயங்களையும், பயத்தையும் போக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே சொன்ன கருத்துக்களின் பின் இருக்கும் உண்மையை தேடிச் சென்றோம். அவற்றை எங்கள் சங்க இணையதளத்தில் (new-democrats.com) ஒரு தொடர்கட்டுரையாக வெளியிட்டோம்.
மேலே சொன்ன தவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி இந்த தொடர்கட்டுரையை ஒரு மின்நூலாக வெளியிடுகிறோம்.
இந்த சிறு நூலை நீங்கள் படித்து பயன் பெறுவதோடு, உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
– சியாம் சுந்தர்