விவசாய நெருக்கடி பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.
- விவசாயிகள் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்;
- தஞ்சை டெல்டாவையே பாலைவனமாக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுவாசல், கதிராமங்கலம் என பல இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
- உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.
இன்னும் பல அடிப்படையான காரணங்கள் இருக்கின்றன.
- விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை
- இடுபொருட்கள் விலை அதிகமாகிக் கொண்டே போகிறது.
- கால்வாய்கள், குளம், ஏரிகள் பராமரிக்கப்படுவதில்லை, ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. கழிவுநீர் நிலத்திலும், நீ்ர் நிலைகளிலும் கொட்டப்படுகிறது.
இவையெல்லாம் சில பத்தாண்டுகளாக தீவிரமடைந்து வரும் பிரச்சனைகள்.
நாம் விடை காண வேண்டிய கேள்விகள் பல உள்ளன.
- விவசாயிகள் ஏன் கடன் வாங்க வேண்டும்? வங்கிக் கடன், கூட்டுறவுக் கடன் தாண்டி நுண்கடன், கந்து வட்டிக் கடனில்தான் ஏழை விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் சிக்கியுள்ளனர். அதற்குக் காரணம் என்ன?
- உரம், பூச்சிக் கொல்லி மருந்து என்று ஆரம்பித்து இன்று விதை கூட கார்ப்பரேட்டுகளிடம் கொள்ளை விலைக்கு வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் எப்படி தள்ளப்பட்டனர்?
- விவசாயிகளுக்கு திட்டம் என்ற பெயரில் ரூ 10 லட்சம் கோடி வங்கிக் கடன் என்று அறிவிக்கிறது மோடி அரசு? கடன் கொடுப்பதுதான் திட்டமா?
விவசாயிகளுக்கு நிவாரணம் என்றால் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் போய் வாங்கிக் கொள்ளச் சொல்கிறது, அரசு. இப்படி அரசு பொறுப்பை கழுவுவதை எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? - நமது பாரம்பரிய, தற்சார்பு, இயற்கை விவசாயம் அழிக்கப்பட்டு உணவையும், நீரையும், நிலத்தையும், சுற்றுச் சூழலையும் நஞ்சாக்கும் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி, மரபணு நீக்கப்பட்ட விதைகள் என்று புகுத்தப்பட்டது எப்படி நடந்தது?
விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால், விவசாயத்தை இளைஞர்களும் விரும்பி ஏற்கும் தொழிலாக வளர்க்க வேண்டுமானால் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை காணப்பட வேண்டும்.
- தேர்தல் அரசியல் கட்சிகள் ஏன் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பேசுவதில்லை? அதே நேரம் கட்சிகளில் கீழ்மட்ட பிரமுகர்களாக இருப்பவர்கள் கூட கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது எப்படி?
- கடந்த 25 ஆண்டுகளில் கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்திலிருந்து பிய்த்து எறியப்பட்டு, கூலித் தொழிலாளர்களாக, பஞ்சை பராரிகளாக மாற்றப்பட்டது குறித்து எந்தக் கட்சியும் பேச மறுப்பது ஏன்?
ஐ.டி துறையில் வேலை செய்யும் நமக்கு இந்தப் பிரச்சனை மீது என்ன அக்கறை?
- நாம் எல்லோரும் விவசாயிகளின் வாரிசுகளாக உள்ளோம்.
- எல்லோரும் இந்த மண்ணில் விளைந்த உணவுப் பொருட்களை சாப்பிடுபவர்களாக இருக்கிறோம்.
- அதற்கும் மேல், சமூகத்தின், நமது நாட்டின் சக மனிதர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது அதை தீர்க்க பாடுபடுவது நமது கடமை என்ற நாட்டுப் பற்றுடன் சிந்திக்கிறோம்.
- ஸ்டீலும், கண்ணாடியும் கொண்டு கட்டப்பட்ட ஐ.டி அலுவலகங்கள் குளத்தில் மீன் பிடிக்க வந்த பறவைகள் போன்றவை. அற்ற குளத்தில் அறுநீர் பறவை போல உறவில்லாத உற்றுளி தீரும் உறவுகள் அவை. அந்தப் பறவைகள் நமது குளத்து மீன்களை பிடித்துச் செல்லத்தான் இங்கு உட்கார்ந்திருக்கின்றன. அவை குளம் வற்றியவுடன் பறந்து போய் விடப் போகின்றன.
- விவசாயமும், சிறு வணிகமும், சிறு தொழிலும் அக்குளத்தில் கொட்டியும், ஆம்பலும், நெய்தலும் போல நம் நாட்டின் வாழ்வோடு ஒட்டி உயிரை விடும் உடன் பிறந்தவர்கள்.
நமது நிலத்தையும், நீரையும், உழவையும், தொழிலையும் பராமரிக்கப் போவது நம் நாட்டு விவசாயப் பெருமக்களும் உழைக்கும் தொழிலாளர்களும்தான். அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டியது நம் கடமை என்று நாம் உணர்ந்திருக்கிறோம்.
விவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார்? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன? அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன?
இது தொடர்பான பெரும் அளவிலான தகவல்களை திரட்டி, அவற்றுக்குள்ளான உறவை புரிந்து கொண்டு இந்தப் பிரச்சனைக்கான தீர்வை முன் வைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. மிக முக்கியமான பணிகளாக இருந்தாலும் சீமைக் கருவேலத்தை வெட்டுவதால் மட்டுமோ, அல்லது ஒரு ஏரி குளத்தை தூர் வாருவதால் மட்டுமே பிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை. இவை அனைத்தையும், இணைத்து செய்வதற்கேற்ப ஒரு முழுமையான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின்படி வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
அதற்கான திறமை நமக்கு இருக்கிறது, இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் தகுதியும் இருக்கிறது. அதற்கான விருப்பத்தை வளர்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது.
நெடுவாசல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு டெல்லியில் அமைச்சரவை செயலர் மட்டத்திலிருந்து கிராமத்தில் வி.ஏ.ஓ வரைக்கும், பிரதமர் – அமைச்சர்கள் ஆரம்பித்து வார்டு கவுன்சிலர் வரைக்கும் ஒரு நிறுவனமாக, கட்டுக் கோப்பாக ஒத்த கருத்துடன் செயல்படுகிறார்கள். அதை நிறுத்த வேண்டும் என்று போராடும் நாம் தனித்தனியாக கிடைக்கும் நேரத்தில் போராடுவது என்று இருந்து விட முடியுமா?
நாம் அனைவரும் ஒரு சங்கமாக அணிதிரண்டு நம்மை பலப்படுத்திக் கொள்வதன் மூலம்தான் நாம் நம் நாட்டையும், நமது விவசாயிகளையும் பாதுகாக்க முடியும்.