விவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3

This entry is part 1 of 3 in the series அரசுக்குக் காப்பீடு

டந்த ஒரு மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், நெஞ்சு வெடித்தும் இறந்த பிறகு 10-01-2017 அன்று தமிழ்நாடு அரசு சில கண் துடைப்பு நடவடிக்கைகளை நிவாரணமாக அறிவித்திருக்கிறது.

… விவசாயிகள் தனித்தனியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்களுக்கான நிவாரணங்கள் பற்றிய பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும்படியும் அரசிடம் நிவாரணம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் தள்ளி விட முடியும்

விவசாயத்துக்கான அரசுத் திட்டங்கள் ஒழிக்கப்படுதல், கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் திறந்து விட மறுப்பு, வடகிழக்கு பருவமழை பொய்ப்பு என அனைத்தும் சேர்ந்து இந்த ஆண்டு விவசாயம் பொய்த்து காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் பஞ்சகால சூழல் உருவாகி உள்ளது.  அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு ஜனவரி 11, 2017 அன்று திருவாரூரிர் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் மாநில அரசின் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

நெற்பயிருக்கும் பிற நன்செய் பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ 5,465, மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 3,000, நீண்ட கால பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 7,287 நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது என்ற அரசின் பொறுப்பை தட்டிக் கழிக்கும் கேலிக்கூத்தாகும். நேற்று (10-01-2017) உயிரிழந்த 70 வயதான சீனிவாசன் என்ற நாகை மாவட்ட விவசாயியை எடுத்துக் கொள்வோம். அவர் உயிர் பிழைத்திருந்திருந்தால், அவரது 2 ஏக்கர் பயிர் இழப்புக்கு ரூ 10,910 நிவாரணமாக பெற்றிருப்பார். அது அவர் இதுவரை இந்த 2 ஏக்கர் பயிரிடுவதற்கு செலவிட்ட தொகையை கூட்ட ஈடு கட்டாது. அவரது கடன்களை அடைக்கவோ, அடுத்த ஆண்டு வரை தாக்குப் பிடித்து மீண்டும் விவசாயதைத் தொடங்கவோ உதவுவது பற்றி சொல்லவே தேவையில்லை.

அரசின் அறிவிப்புகளில் முக்கியமான ஒரு அம்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் காப்பீட்டு நிறுவனங்களில் பங்கு பற்றியதாகும். ஒரு அற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி உழவர்களை விரட்டியிருக்கிறது.

பயிர்க் காப்பீடு என்பது உழவர்களை மோசடி செய்வதற்காக அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம்; உழவர்களின் வாழ்வை உறுதி செய்வதற்கு அரசுக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழித்து, உழவர்களிடமிருந்தும் அவர்களுக்கு ஆதரவான பிற தரப்புகளிலிருந்தும் முன் வைக்கப்படும் கோரிக்கைகளிலிருந்து அரசை காத்துக் கொள்வதற்குத்தான் காப்பீட்டு திட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தெளிவாக ஆதாரங்களுடன் விளக்குகிறது இந்த RUPE கட்டுரை – விவசாய நெருக்கடிக்கு மத்தியில் ஒரு நிதிநிலை அறிக்கை – பகுதி V.

பயிர் காப்பீடு மட்டுமின்றி மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் பொருளாதார ரீதியாக முட்டாள்தனமானவை, சமூக ரீதியாக நடைமுறை சாத்தியமற்றவை என்றும் இந்தக் கட்டுரை நிறுவுகிறது.

விவசாயிகளுக்கு எதிராக அரசுக்கு காப்பீடு

நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மத்திய அரசு “பிரதான் மந்த்ரி ஃபசல் பீமான யோஜனா” (PMSBY – பிரதமர் பயில் பாதுகாப்புத் திட்டம்) என்ற புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது. இது விவசாயத் துறைக்கான மோடி அரசின் முன்னணி திட்டம் என்றும், ‘புரட்டிப் போடும்’ திட்டம் எனவும், விவசாயிகள் தற்கொலைகளுக்கான ஒரு தீர்வாகவும், ‘உழவர்களுக்கு ஆதரவான’ கொள்கைகளை நோக்கிய நகர்வின் ஒரு பகுதி எனவும் இன்னும் பலவும் பீற்றிக் கொள்ளப்பட்டது.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களிடமிருந்து அரசுக்கு அரசியல் ரீதியாக காப்பீடு வழங்குவதற்கானது

உழவர்களுக்கு காப்பீடு வழங்குவதன் நியாயத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது. வாழ்க்கையை நடத்துவதற்கே பெருமளவு பாதுகாப்பற்ற சூழலை உழவர்கள் எதிர்கொள்கின்றனர். உழைக்கும் மக்களின் பிற பகுதியினரை விட அவர்கள் இயற்கை சக்திகளோடு அதிகமாக போராடுவதால், அத்தகைய நிகழ்முறையில் உள்ளார்ந்து நிலவும் பல நிச்சயமின்மைகளால் அவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் சந்தையில் பலம் குறைந்தவர்களாக இருப்பதால் சந்தை ஏற்றத் தாழ்வுகளாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர், அவர்களது சொந்த முயற்சியால் சந்தையை தமக்கு சாதகமாக மாற்றுவதற்கு சக்தியில்லாத பிரிவினராக உள்ளனர். 2012-13 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி பெரும்பான்மை விவசாயிகள், விவசாயத்துக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இல்லா விட்டால் வாழ்க்கை நடத்தவே முடியாத நிலையில் இருக்கிறனர். அனைத்து விதமான இயற்கை மற்றும் சமூகப் பேரிடர்களுக்கு எதிராக அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை எப்படி வழங்குவது என்பதுதான் கேள்வி.

PMFBY-ன் உண்மையான குறிப்பொருள் முந்தைய திட்டங்களுடன் ஒப்பிடும் போது கிடைக்கவிருக்கும் அதிக பலன்கள் பற்றிய விபரங்களிலோ அல்லது அதை எப்படி இன்னும் மேம்படுத்த முடியும் என்பதிலோ இல்லை. புதிய தாராளவாதக் கொள்கைகளின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் விவசாயப் பொருளாதாரம் அடாவடியாக மறுவார்ப்பு செய்யப்படுவதன் தவிர்க்க முடியாத ஒரு பகுதி என்பதில்தான் அதன் உண்மையான குறிப்பொருள் அடங்கியிருக்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயத் துறையில் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாத ‘சீர்திருத்த’ நடவடிக்கைகளுக்குப் பிறகும் இன்றைக்கும் உழவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அரசு பெயரளவிலாவது பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எனவே, அத்தகைய நெருக்கடிகளின் போது உழவர்களின் கூட்டு கோபத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. உழவர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து சில சலுகைகள் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் விளைவாக புதிய தாராளவாத பொருளாதார ‘சீர்திருத்தங்களை’ மேலும் ஆழப்படுத்துவதில் பின்னடைவுகள் ஏற்படுகின்றன.

எனவே, தனக்கும் உழவர்களுக்கும் இடையே நிறுவன ரீதியிலான தடுப்புச் சுவர்களை எழுப்பிக் கொள்ள அரசு விரும்புகிறது[1]. பெரும்பகுதி விவசாய நிலங்களை உள்ளடக்கிய ஒரு பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தி விட்டால், எதிர்காலத்தில் விவசாயிகள் தனித்தனியாக காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்களுக்கான நிவாரணங்கள் பற்றிய பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும்படியும் அரசிடம் நிவாரணம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் தள்ளி விட முடியும். அதாவது, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களிடமிருந்து அரசுக்கு அரசியல் ரீதியாக காப்பீடு வழங்குவதற்கானது. கடந்த 20 ஆண்டுகளில் மேலும் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள, தீவிரமாக அமல்படுத்தப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகளால் மேலும் வறுமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர்களை கைகழுவி விடுவதற்கான திட்டம் இது.

பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றிய விபரங்கள்

விவசாயிகளுக்கு பலனளிக்கிறதோ இல்லையோ, காப்பீட்டு நிறுவனங்களுக்கு முந்தைய திட்டங்களை விட இந்தத் திட்டம் அதிக கவர்ச்சிகரமானது.

முதலில், இந்தத் திட்டம் பற்றிய விபரங்களை பார்ப்போம். 2016-17 வரவு செலவு திட்டத்தில் இந்த திட்டத்துக்கு ரூ 5,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு இணையான தொகையை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் உழவர்களில் 50% பேரை இந்தத் திட்டத்துக்குக் கீழ் கொண்டு வர இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் உழவர்களுக்கு அரசு வழங்கும் லோஹ்ரி/பொங்கல்/பிஹூ “பரிசு” அவர் டுவீட் செய்தார்.

கார்ப்பரேட் ஊடகங்கள் பொதுவாக இந்தத் திட்டத்தை ஆதரித்து வரவேற்றன. ஏற்கனவே இருந்த பயிர் காப்பீட்டுத் திட்டங்களை விட இந்தத் திட்டம் பல அம்சங்களில் மேம்பட்டது என்று சொல்லப்பட்டது. பயிரிடுபவர் கட்ட வேண்டிய சந்தா தொகை காப்பீடு செய்யப்பட்ட தொகையில் கோடைக் கால பயிர்களுக்கு 1.5% ஆகவும் குளிர்கால பயிர்களுக்கு 2 சதவீதம் ஆகவும், வணிக அல்லது தோட்டப் பயிர்களுக்கு 5 சதவீதம் ஆகவும் குறைக்கப்பட்டது. அரசு வழங்கும் மானியத்துக்கு உச்சபட்ச வரம்பு இல்லை, அதாவது, விவசாயி கட்டும் தொகைக்கு மேல் 90% பிரீமியம் அரசு கட்ட வேண்டி வந்தாலும் அரசு அதை ஏற்றுக் கொள்ளும்.

முந்தைய திட்டங்களில் பிரீமியத் தொகைக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. எனவே, பிரீமியம் வழங்குவதில் அரசு வழங்கும் மானியமும் வரம்புக்குட்பட்டிருந்தது. அதன் விளைவாக காப்பீட்டுத் தொகையின் அளவு குறைவாக இருந்தது. இந்த வரம்பு நீக்கப்பட்டு விட்டதால் காப்பீட்டுத் தொகை பயிரின் மொத்த மதிப்பு அளவுக்கு இருக்க முடியும். அதன் மூலம் விவசாயிக்கு முழு காப்பீடு கிடைக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கு புள்ளியியில் கணக்கீட்டின்படியான மொத்த பிரீமியமும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளின் சராசரி விளைச்சலையும் குறிப்பிட்ட பயிரின் குறைந்தபட்ச ஆதரவு விலையையும் கணக்கிட்டு காப்பீட்டுத் தொகை முடிவு செய்யப்படும். விளைச்சல் குறைவது, விதைக்கவே முடியாமல் போவது, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவு காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கு இந்தத் திட்டம் காப்பீடு வழங்கும். “தொழில்நுட்பத்தைப்” பயன்படுத்தி நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அதாவது செல்ஃபோன்களில் புகைப்படம் எடுத்து அனுப்புவது போன்ற வசதிகள் பயன்படுத்தப்படலாம்.

விவசாயிகளுக்கு பலனளிக்கிறதோ இல்லையோ, காப்பீட்டு நிறுவனங்களுக்கு முந்தைய திட்டங்களை விட இந்தத் திட்டம் அதிக கவர்ச்சிகரமானது. இந்திய விவசாய காப்பீட்டுக் கழகம் என்று பெயரளவுக்கு ஒரு பொதுத்துறை நிறுவனமும் 10 தனியார் நிறுவனங்களும் PMFBY திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய பொது காப்பீட்டு கழகம், நியூ இந்தியா, ஓரியன்டல் போன்ற நாடு முழுவதும் முகவர்களை கொண்ட, பெரும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் தம்மை இணைத்துக் கொள்ளும்படி கோரிய பிறகும் அவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திர சந்தையின் புனிதக் கோட்பாடான போட்டியை ஒழித்துக் கட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரே ஒரு காப்பீடு நிறுவனம்தான் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு மானியம் வழங்கி உத்தரவாதம் செய்யும் லாப வீதத்தை போட்டியின்றி ஈட்டுவதற்கு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஏகபோக உரிமையுடன் ஒரு சந்தை ஒதுக்கப்படுகிறது.

இந்தத் திட்டம் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளை மட்டும் ஈடு செய்கிறது. அதை விட தீவிரமாக விவசாயிகளை பாதிக்கும், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி தொடர்பான சந்தை மாற்றங்களுக்கு நிவாரணம் கிடையாது. உண்மையில், அமோக விளைச்சல் ஆண்டுகளில் விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் பல விவசாய பொருட்களின் சந்தையில் உற்பத்தி குறைந்த நிலையிலும் விலைகள் வீழ்ச்சியடைவது என்ற அதை விட விசித்திரமான ஒரு நிலையை கண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் உணவுப் பொருட்களின் வேண்டல் குறைந்திருப்பது.

மேலும் குத்தகை விவசாயிகளும், பயிர் பங்கீட்டு முறையில் பயிரிடும் உழவர்களும் இந்தத் திட்டத்திலிருந்து எப்படி பலன் பெறுவரா்கள் என்று தெளிவில்லை. பெரும்பான்மையான குத்தகை ஒப்பந்தங்கள் வாய்வழி ஒப்பந்தங்களாக இருப்பதோடு, குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் ஏழை விவசாயிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, குத்தகை விவசாயியிடம் நிவாரணம் பெறுவதற்கு ஆதாரமாக கொடுப்பதற்கு எந்த ஆவணமும் இருக்கப் போவதில்லை. இந்தக் குறைபாடு இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் மற்ற திட்டங்களிலும் இருக்கிறது என்பது உண்மைதான்.

காப்பீட்டுத் திட்டத்தின் விரிவான குறிப்பொருள்

‘காப்பீடு’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வாங்கும் காப்பீடு பத்திரத்தைத்தான் நினைக்கிறோம். ஆனால், காப்பீடு என்பது முழுக்க முழுக்க ஒரு நிதித் துறை பத்திரமாகவே இருக்க வேண்டியதில்லை என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது.

நாம் காப்பீடு என்ற சொல்லை ஒரு தனிநபருக்கும் லாபத்துக்காக இயங்கும் நிறுவனத்துக்கும் இடையேயான நிதி ஒப்பந்தத்தை குறிப்பிடுவதற்கு பயன்படுத்துவது அதன் ஒரு வடிவம் மட்டும்தான், அதுவும் சிறந்த வடிவம் இல்லை

அப்படியானால் உண்மையில் காப்பீடு என்றால் என்ன? காப்பீடு (insure) என்ற சொல் உறுதிப்படுத்தல் “sure” என்று சொல்லுக்கும் பொதுவான வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. “உறுதிப்படுத்துவது அல்லது பாதுகாப்பது; உத்தரவாதப்படுத்துவது”, “இழப்பு, சேதம், சிரமங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது”, “ஒரு காப்பீடு நிறுவனத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கட்டணம் கட்டுவதன் மூலம் சொத்துக்களின் இழப்பு, திருட்டு அல்லது சேதம், ஒரு நபருக்கு ஏற்படும் காயங்கள், இறப்பு போன்ற நிகழ்வுகளின் போது குறிப்பிட்ட தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்தல்” ஆகியவை “insure” என்ற சொல்லுக்கு அகராதிகளில் தரப்பட்டிருக்கும் வரையறைளில் சில.

எனவே, காப்பீடு எடுத்துக் கொள்வது என்பதன் சாராம்சம் ஒரு நபர் அல்லது குழு பாதகமான ஒரு நிகழ்விலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பதுதான். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் பல்வேறு வகைப்பட்டதாக இருக்கலாம்.

குறிப்பிட்ட நிகழ்வு நடக்காமலேயே தடுத்து விடுவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம். உதாரணமாக, வெள்ளப் பெருக்குக்கு எதிரான காப்பீடாக காடுகளை அழிப்பதை தடுப்பது, தீப்பிடிப்பதற்கு எதிரான காப்பீடாக, தீ விபத்து நடப்பதற்கான காரணங்களை தவிர்ப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

காப்பீடு செய்து கொள்வதற்கான இன்னொரு வழிமுறை, அத்தகைய நிகழ்வினால் ஏற்படும் சேதங்களை முடிந்த வரை குறைக்க முயற்சிப்பது : உதாரணமாக, நிலநடுக்கத்தை தாங்கிக் கொள்ளும்படியான கட்டிடங்களை கட்டுவது; ஆற்றின் வடிநிலங்களில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்ப்பது; வறட்சிக்கு எதிரான காப்பீடாக கிராமங்களில் குளங்களை வெட்டி பராமரிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம்.

சேமிப்புகளும் ஒரு வகையான காப்பீட்டு வடிவம்தான். எதிர்பாராத நிகழ்வுகளின் போது பயன்படுத்துவதற்கான காப்பீடாக தமது வருமானத்தின் ஒரு பகுதியை சேமித்து வைத்துக் கொள்வது; கிராமப்புற கூட்டுறவு சங்கம், விளைச்சல் பொய்த்துப் போகும் ஆண்டுகளுக்கான காப்பீடாக ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தானியத்தை ஒதுக்கி வைப்பது; குடியிருப்போர் சங்கம் பல்வேறு எதிர்பாராத தேவைகளுக்காக ஒரு வைப்புத் தொகையை உருவாக்குவது ஆகியவற்றை இந்த வகையில் சேர்க்கலாம்.

குடிமக்களை பல்வேறு பௌதீக தீங்குகளிலிருந்து பாதுகாப்பது அரசின் கடமையாகும். (அரசு பற்றி லோக்கே முன் வைக்கும் முதலாளித்துவ கோட்பாட்டின்படி, சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு காப்பீட்டு வடிவம்தான் அரசு. குடிமக்கள் தமது உரிமைகளின் ஒரு பகுதியை அரசுக்கு விட்டுக் கொடுத்து தம்மை தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் வலிமையை அதற்கு வழங்குகிறார்கள்). மேலும், குடிமக்களுக்கு குறிப்பிட்ட பொருட்களையும் சேவைகளையும் உத்தரவாதம் செய்யும் போது, எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்களிலிருந்து மீட்கவும் அரணு உத்தரவாதம் அளிக்கிறது. அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குவதன் மூலம் பணம் இல்லாததால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் போவதற்கு எதிராக காப்பீடு வழங்குகிறது. கட்டுப்படியாகாத அளவுக்கு விலை வீழ்ச்சியை தடுத்து உழவர்களுக்கு காப்பீடு வழங்குவதற்காக உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. போதுமான ஊட்டச் சத்து பெற முடியாத அளவுக்கு ஏழ்மை நிலையில் இருக்கும் குடிமக்களுக்கான காப்பீடாக பொது வினியோகத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொது வினியோகத் திட்டத்தை உலக வங்கி ஒரு ‘பாதுகாப்பு வலை’ என்று சித்தரிக்கிறது. காப்பீடு என்பதன் துல்லியமான பொருள் ‘பாதுகாப்பு வலை’ என்பதேதான்.

அதாவது நாம் காப்பீடு என்ற சொல்லை ஒரு தனிநபருக்கும் லாபத்துக்காக இயங்கும் நிறுவனத்துக்கும் இடையேயான நிதி ஒப்பந்தத்தை குறிப்பிடுவதற்கு பயன்படுத்துவது அதன் ஒரு வடிவம் மட்டும்தான், அதுவும் சிறந்த வடிவம் இல்லை என்பதுதான் விஷயம். அந்த ஒப்பந்தத்தின்படி முதலாளித்துவ முறைப்படி இயங்கும் குறிப்பிட்ட நிறுவனம், குறிப்பிட்ட இழப்பு அல்லது காயம் ஏற்பட்ட பிறகு அந்தத் தனிநபருக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்குவதாக வாக்களிக்கிறது. ஒன்றும் இல்லாமல் போவதற்கு பதிலாக அத்தகைய தொகையாவது கிடைப்பது ஆறுதலளிப்பது என்றாலும், குறிப்பிட்ட நிகழ்வை நிகழாமல் தடுப்பது சாத்தியம் என்றால் அவ்வாறு தடுப்பதுதான் விரும்பத்தக்கது; இழப்பு ஏற்பட்ட பிறகு இழப்பீடு பெறுவது அதை விட மோசமான தீர்வுதான். மேலும் ஒவ்வொரு தனிநபரும் காப்பீடு எடுப்பதற்கான பணமும், தொலைநோக்கும் இருந்து காப்பீடு எடுத்திருக்க வேண்டும் என்பதையும் காப்பீட்டு நிறுவனங்கள் விரைவாகவும், நேர்மையாகவும் பணத்தை கொடுத்து விட வேண்டும் என்பதையும் சார்ந்திராமல் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்படும் நிவாரணங்களை விட நிதி ஒப்பந்தம் ஒரு மோசமான காப்பீடு வடிவம்தான்.

காப்பீடு எடுக்கும் நபருக்கு வேண்டியது ஒரு காப்பீட்டு பத்திரம் அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். காப்பீட்டு பத்திரத்தை சாப்பிடவோ, அதை வைத்து இடிந்து போன கட்டிடத்தை மறுபடியும் கட்டவோ முடியாது. இழப்பு அல்லது காயம் ஏற்படும் போது அதை ஈடுகட்டும் அளவிலான நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் காப்பீடு எடுக்கும் நபரின் தேவை. எனவே, எத்தனை பேர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டார்கள் என்பதே போதுமானது இல்லை. தேவை ஏற்படும் போது எவ்வளவு விரைவாகவும் பொருத்தமாகவும் நிவாரணம் வழங்கப்பட்டது என்பதுதான் அளவீடு.

[1] பல்வேறு மாநிலங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களை அமைப்பதன் மூலம் மின்கட்டணம் உயர்த்தப்படும் போது மக்கள் மாநில அரசுகளை தட்டிக் கேட்பதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதையும் இதற்கு இணையாக சொல்லலாம்.

(பகுதி 2) (பகுதி 3)

நன்றி : RUPE

Series Navigationஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-government-washing-off-its-hands-1-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்

வேட்டையாடும் பூசாரிகள் குழந்தைகளின் சொந்த மத நம்பிக்கையையும், மதத் தலைவர்களாக தம் மீது வைத்திருந்த மதிப்பையும் பயன்படுத்தி அவர்களை சீரழிக்கவும், பின்னர் வெளியில் அதைப் பற்றி பேசவிடாமல்...

பெரியார் வென்றெடுத்த பேச்சுரிமையை பயன்படுத்திய பார்ப்பனப் பெண்

ஒரு அமைப்பு நடத்தும் கூட்டத்தில் உள்ளே நுழைந்து கேள்வி கேட்டு கூச்சல் போடுவது நாகரீகமற்ற செயல். இருப்பினும் அவரை பேசச் சொல்லி பக்குவமாக செயல்பட்ட அந்த மாணவர்களை...

Close