உழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்

This entry is part 2 of 3 in the series அரசுக்குக் காப்பீடு

டும் நெருக்கடியில் சிக்கியுள்ள உழவர்களுக்கு ஒரு சொற்ப தொகையை நிவாரணமாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணத்துக்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் போகும்படி அவர்களை தட்டிக் கழித்திருக்கிறது.

ஓ பன்னீர்செல்வம்

தமிழ்நாடு அரசு கூடுதல் நிவாரணத்துக்கு காப்பீட்டு நிறுவனங்களிடம் போகும்படி அவர்களை தட்டிக் கழித்திருக்கிறது

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களை ஏமாற்றுவதற்காக அரசு கொண்டு வந்திருக்கும் திட்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விவசாய நெருக்கடியிலிருந்து உழவர்களை மீட்பதற்கு அரசுக்கு இருக்கும் பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கான காப்பீடாக அந்தத் திட்டம் பயன்படுத்தப்படுகிறது என்று வாதிடுகிறது இந்த RUPE கட்டுரை.

பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மட்டுமின்றி, மருத்துவக் காப்பீட்டு திட்டங்களும் பொருளாதார ரீதியாக முட்டாள்தனமானவை, சமூக ரீதியாக கட்டுப்படியாகாதவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரை 2016-17ம் ஆண்டு மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடன் வெளியிடப்பட்டது.

பகுதி 1-லிருந்து தொடர்ச்சி

உழவர்களிடமிருந்து அரசுக்கு காப்பீடு – 2

பகைநிலை உறவு

“நம்பிக்கை”, “பாதுகாப்பு”, “கூட்டு உறவு” என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் நிதி அடிப்படையிலான காப்பீடு என்பது உண்மையில் ஒரு பகைநிலை உறவாகும். காப்பீட்டு நிறுவனங்களின் லாபம் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது : காப்பீட்டு சந்தா வருமானத்துடன், வருமானத்தை கடன் பத்திரங்கள், பங்குகள் போன்ற பல்வேறு முதலீட்டுக் கருவிகளில் முதலீடு செய்து கிடைக்கும் வருமானத்தை கூட்டி, இழப்புகளுக்கு வழங்கும் காப்பிட்டுத் தொகையையும் நிர்வாக செலவுகளையும் கழிக்க வேண்டும். (அதாவது சந்தா தொகை + முதலீட்டு வருமானம் – கொடுக்கப்பட்ட இழப்பீடுகள் – நிர்வாக செலவுகள்). லாபநோக்கம் கொண்ட எந்த நிறுவனமும் இந்த ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தும்.

 • தனக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில்தான் காப்பீடு செய்யப்படும் நிகழ்வின் நிகழ்தகவை கணக்கிட்டு குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு காப்பீடு வழங்க வேண்டுமா வேண்டாமா, எவ்வளவு சந்தா வசூலிப்பது போன்றவற்றை காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்கிறது.
 • திறமையாக முதலீடு செய்வதன் மூலம் தனது முதலீடுகளில் நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறது.
 • அதே நேரம் நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறது.
 • எல்லாவற்றையும் விட முக்கியமாக இழப்பீடு கோருபவர்களுக்குக் கொடுக்கும் தொகையை முடிந்த அளவு குறைக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

இந்தப் பகைநிலை உறவு தொடர்பான ஆதாரங்கள் நிறைய கொட்டிக் கிடக்கின்றன.

 • காப்பீடு எடுத்த நபருக்கு பொருத்தமில்லாத காப்பீட்டு திட்டங்களை விற்பது;
 • காப்பீடு காலாவதியாகிப் போய் காப்பீடு வாங்கியவருக்கு இழப்பும், நிறுவனத்துக்கு லாபமும் உறுதி செய்யப்படுவது;
 • அதிக அபாயம் கொண்டதாக கணக்கிடும் நபர்களுக்கு காப்பீடு செய்வதை தவிர்ப்பது;
 • உண்மையான தேவை வரும் போது பலன் அளிக்காத காப்பீட்டு திட்டங்களை விற்பது.

பேச்சளவில் பார்த்தால், சந்தையில் கெட்ட பெயர் சம்பாதித்த நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்தான். ஆனால் பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடுகளில் கூட பல்வேறு நிறுவனங்களையும் அவற்றின் காப்பீட்டு திட்டங்களையும் முறையாக மதிப்பிட்டு முடிவு எடுக்கத் தேவையான தகவல்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதில்லை. அதன் காரணமாக, இத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு அடிக்கடி இரையாகிறார்கள். காப்பீட்டு பத்திரங்களின் “பொடி எழுத்துக்கள்” பற்றிய கதைகள் ஏராளம் உள்ளன. ஜான் கிரிஷாம் போன்ற நாவலாசிரியர்களின் சட்ட போர் தொடர்பான பல நாவல்களுக்கு அதுதான் அரைபொருள். அத்தகைய முன்னேறிய நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் தமது முதலீட்டு அணுகுமுறைகளிலும் கண்மூடித்தனமாக செயல்படுகின்றன. (முதலீட்டு சூதாட்டத்தில் கடும் சரிவு ஏற்பட்டு நிறுவனம் இழப்பை சந்திக்கும் போது காப்பீடு வாங்கியவர்களுக்கான காப்பீடும் வேட்டு வைக்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 2015-12 காலகட்டத்தில் ஆயுள் காப்பீட்டு பத்திரங்களை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மோசடியாக விற்பனை செய்ததன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான காப்பீட்டு திட்டங்கள் காலாவதியாகிப் போய் வாடிக்கையாளர்களுக்கு ரூ 1.5 முதல் ரூ 1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதே நேரம் காப்பீட்டு நிறுவனங்களின் லாபமும் முகவர்களின் வருமானமும் பெருகியது. இந்த ஊழலைத் தொடர்ந்து காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சில ஒழுங்குவிதிகளை கொண்டு வந்தது. ஆனால் எந்த நிறுவனத்துக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவில்லை.

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் இத்தகைய மோசடி நடத்தைகளால் 2001 வரை வளர்ந்து வந்த ஆயுள் காப்பீடுகளின் வளர்ச்சி வீதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீட்டு சந்தாவின் சதவீதம்) 2001-க்குப் பிறகு கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது 2006 முதல் ஆயுள் காப்பீடு பரவலாக்கம் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இப்போது அது 2002-ல் என்ன அளவில் இருந்ததோ அவ்வளவுதான் உள்ளது.

பொதுக் காப்பீட்டு திட்டங்களும் குறைந்த மட்டத்திலேயே தேங்கியுள்ளன. பயிர்க் காப்பீட்டு திட்டங்களைப் பொறுத்தவரை, வரையறுக்கப்பட்ட ஒரே காப்பீட்டு திட்டம் மட்டுமே விற்கப்படுவதால், அத்தகைய மோசடி விற்பனை பிரச்சனை எழப் போவதில்லை. ஆனால் ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு தொடர்பான மேற்படி அனுபவம், காப்பீட்டு வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையேயான பகை உறவு நிலையையும், காப்பீட்டு நிறுவனங்களின் தந்திரமான செயல்பாடுகளையும் அம்பலப்படுத்துகின்றன.

ஏன் காப்பீடு?

காப்பீட்டு நிறுவனங்களை வைத்து பயிர்க் காப்பீடு வழங்குவதில் அரசுக்கு என்ன அக்கறை? இது ஒரு விசித்திரமான கேள்விதான். ஏனென்றால், அத்தகைய அணுகுமுறை அரசுக்கு நிதி ரீதியாக பாதகமானது என்றுதான் தெரிகிறது.

காப்பீட்டுத் துறை நிகழ்தகவு விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது. காப்பீடு எடுத்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமாக காப்பீடு எடுத்த நபருக்கு எதிராக குறிப்பிட்ட நிகழ்வு நிகழ்வதற்கான நிகழ்தகவை கணக்கிட்ட முடியும். அதன் அடிப்படையில், இழப்பீட்டு கோரிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய பணம், நிர்வாகச் செலவுகள் இவற்றை செலவாகக் கொண்டு, அதற்கு மேல் லாபம் சம்பாதிக்க வேண்டுமானால் ஒவ்வொருவரிடமிருந்தும் எவ்வளவு சந்தா வசூலிக்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்கிறது. அப்படி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காப்பீடு எடுக்கும் போது தனிநபர்கள் செலுத்த வேண்டிய சந்தா அளவும் குறையும். இதுதான் கோட்பாடு.

ஆனால், தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் (PMFBY) பொறுத்தவரை இப்படி நடக்கப் போவதில்லை. இங்கு விசித்திரமான நிலைமை என்னவென்றால் 85 முதல் 90 சதவீதம் சந்தாவை அரசு தானே கட்டி விடப் போவதாகக் கூறுகிறது. அதனால், காப்பீடு எடுக்கும் நபருக்கு காப்பீடு செய்து கொள்ளும் தொகையை விட கட்ட வேண்டிய சந்தா தொகை குறைவாக இருக்கும் என்ற ஆதாயம் இல்லாமல் போகிறது. ஏனென்றால், ஒரே தரப்பு – அதாவது அரசு – அனைத்து இழப்பீட்டு கோரிக்கைகளுக்கான பணத்தையும் நிர்வாகச் செலவுகளையும் கொடுக்கப் போகிறது. நாட்டின் நிதிநிலையைப் பொறுத்தவரை இது முட்டாள்தனமானது. (அதாவது எப்படியானாலும், இழப்பீடு வழங்கப்படப் போவது அரசு கொடுக்கும் பணத்திலிருந்து, அப்படி இருக்கும் போது தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் லாபத்தையும் அதன் நிர்வாகச் செலவுகளையும் அரசே ஏன் சுமக்க வேண்டும்?) இந்த வேலையை செய்வதற்கு ஒரு காப்பீட்டு நிறுவனத்தை ஈடுபடுத்துவதில் என்ன ஆதாயம் இருக்கிறது. அரசு தானே இழப்பீடு வழங்க விரும்பா விட்டால் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் இதை அமல்படுத்தலாம்.

தனியார்மய ஆதரவாளர்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அரசு அல்லது பொதுத்துறை ஊழியர்களை விட விரைவாகவும் திறமையாகவும் செயல்படுவார்கள் என்று வாதிடலாம். ஆனால், இழப்பீடு கோரிக்கைகளுக்காக கொடுக்கப்படும் பணத்தின் அளவை முடிந்த அளவு குறைத்துக் கொடுப்பதுதான் காப்பீட்டு நிறுவனங்களின் நோக்கமாக இருக்கும். உண்மையில், பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் காப்பீட்டு நிறுவனங்கள்தான் தம்மிடம் வரும் இழப்பீடு கோரிக்கைகளில் அதிக சதவீதத்தை நிராகரிக்கின்றன. லாபத்தை அதிகமாக்கும் கலாச்சாரத்தை விட பொதுச் சேவை வழங்க வேண்டும் என்ற கலாச்சாரம் பொதுத்துறை நிறுவனங்களிடம் இன்னும் மிச்சமிருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

சுமார் 50 சதவீதம் விவசாய நிலங்களுக்கு காப்பீடு வழங்கி விட்டால் காப்பீட்டு சந்தாவின் அளவு கணிசமாக குறையும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், பயிர் இழப்பு தொடர்பான உயர் அபாயம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிக லாபத்தை உறுதி செய்வது என்ற அரசின் நோக்கம் ஆகிய இரண்டு காரணங்களினால் இது நடக்கப் போவதில்லை.

பாதகமான நிகழ்வுகள் அடிக்கடி நடப்பாலும், காப்பீடு வழங்கப்படும் மற்ற நிகழ்வுகளைப் போல அல்லாமல் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஒரே நேரத்தில் கணிசமான இழப்பை எதிர் கொள்வதாலும் பயிர்க் காப்பீடு உயர் அபாயம் கொண்டதாக உள்ளது. தனிப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த பங்கு முதலீட்டையும் துடைத்து அழித்து விடும் அளவுக்கு இழப்புகள் ஏற்படலாம்.

60 சதவீதம் வானம் பார்த்த பூமியாக உள்ள இந்திய விவசாயத்தில் 2000 ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. இது தவிர பல பத்தாயிரம் கோடி ரூபாய்கள் இழப்பை உருவாக்கிய பிற இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

2015-ம் ஆண்டை மட்டும் எடுத்துக் கொண்டால்,

 • ஆண்டின் தொடக்கத்தில் வடமேற்கில் உள்ள 14 மாநிலங்களில் நேரங் கெட்ட நேரத்தில் மழை பெய்தது.
 • ஜூலை மாதம் ராஜஸ்தான், குஜராத் மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது;
 • ஆகஸ்டில் கோமன் புயல் தாக்கி மேற்கு வங்கம், பீகார், அசாம் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
 • ஆண்டு இறுதியில் சென்னை உள்ளிட்டு தென்னிந்தியாவின் பல பகுதிகளில் மழை வெள்ளச் சேதம் ஏற்பட்டது.

இத்தகைய நிலைமையில், அரசு வழங்கும் மானியம் இல்லாமல், காப்பீட்டு சந்தா அளவு குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.

இரண்டாவதாக, உள்கட்டுமானம் முதல் ஆயுத உற்பத்தி வரை மருத்துவ சேவை முதல் கல்வித் துறை வரை அனைத்து துறைகளிலும் தனியார் மூலதனத்துக்கு கவர்ச்சிகரமான லாபத்தை உறுதி செய்வதன் மூலம் லாப வீதத்தையும், வணிக நடவடிக்கையையும் உயிர்ப்பிப்பதாகத்தான் அரசின் கொள்கைகள் உள்ளன. மேலும், 50 சதவீதம் விவசாய நிலங்களை PMFBY-ன் கீழ் கொண்டு வருவதை தனது அரசியல் கௌரவப் பிரச்சனையாக மோடி அரசு அமல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் பொறுப்பில் விடப்பட்டுள்ளதால் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை அவர்களுக்கு ஆதாயமானதாக மாற்றும் அளவுக்கு காப்பீட்டு சந்தா வசூலிப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, பொருளாதார ரீதியாக சிக்கன நோக்கத்தில் அரசு பயிர்க் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கவில்லை. அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

பகுதி 3-ல் தொடர்கிறது

(பகுதி 1)

நன்றி : RUPE

Series Navigation<< விவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3மானியத்தில் மூழ்கடிக்கப்படும் அமெரிக்க விவசாயிகள், கைவிடப்படும் இந்திய விவசாயிகள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/farming-distress-government-washing-off-its-hands-2-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
பா.ஜ.க பினாமி போலீசின் சட்ட விரோத அராஜகம் – தோழர் கோவன் கைது : வீடியோ

பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் தோழர் கோவனை கைது செய்ய வந்திருக்கிறது. அந்த பகுதி மக்கள் போலீசை முழு மூச்சுடன் எதிர்த்து தடுத்திருக்கின்றனர்....

ஆசை காட்டி விரித்த ஆதார் சூழ்ச்சி வலை

"சொன்னது எல்லாம் ஏய்க்கிற பேச்சு ஆதார கழுத்தில கட்டி மேய்க்கிற சூழ்ச்சி"

Close