மீன்பிடித் தொழிலாளர்கள் : துயரக் கடலில் தத்தளிக்கும் வாழ்க்கை

This entry is part 1 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

காடு, மலைகளில் வேட்டையாடித் திரிந்த மனிதகுலம் ஆற்றங்கரை ஒரங்களில் குடியமர்ந்து பயிர்த்தொழில் பழகிய காலந்தொட்டு மீன்பிடித்தொழிலும் இணையாகவே வளர்ந்து வந்துள்ளது. முடிமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திரை கடலோடித் திரவியம் தேடும் வாணிபம் வளரவும், அதன் மூலமாக விவசாயம், கைத்தொழில்களின் வளர்ச்சிக்கும், நாகரிகச் செழுமைக்கும் வழிவகுத்த முன்னோடிக்கள், பரதவர்கள். ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் தமது உயிரைப் பணயம் வைத்து அன்றாடம் சென்று வந்து, நாம் விரும்பி உண்ணும் மீனினங்களை நமக்கு வாரித்தரும் இந்த மீனவர் வாழ்விலோ அவலச்சுவை கடலென மண்டிக்கிடக்கிறது.

fishermen-keralaவெள்ளி முளைக்கும் முன்பே விழித்தெழுந்து கடலுக்குள் செல்லும இவர்களது வாழ்வு விடிவு காணாக் காரிருளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. பொங்கியெழும் அலைகளைப் புறந்தள்ளி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், இடி, மின்னல், புயல் சூறாவளியென இயற்கைச் சீற்றங்களை எதிர் கொண்டு நின்று, வென்று தமது கடின உழைப்பில் காலத்தால் உரம்பெற்று நிற்பவர்கள், மீனவ மக்கள். ஆறுகள், குளங்கள் முதல் ஆழ்கடல்கள் வரை நீண்டு சென்று மனித குலத்துக்கு உணவும், நாட்டுக்கு வளமும் சேர்க்கும் மீன்பிடித் தொழிலும், மீனவர் வாழ்வும் இன்று ஆளும்வர்க்கத் திமிங்கிலங்களால் படிப்படியாக விழுங்கப்பட்டு வருகிறது.

கட்டுமர மீன்பிடித்தொழில் இன்று அதிநவீன விசைப்படகுகள், ஆழ்கடல் மீனபிடிக் கப்பல்களென, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பன்னாட்டு வர்த்தகமாக விரிந்து, வளர்ந்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சியின் பின்னுள்ள இலட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகின்றன. கட்டுமரம் ஏறி, கடலின் மடியில் விளையாடி, இயற்கையுடன் இரண்டறக் கலந்து வளர்ந்த மீனவப் பழங்குடியினரின் வாழ்க்கை இன்று முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கிச் சீரழிந்து வருகிறது. வள்ளத்தில் ஏறிச்சென்று வலைவீசி, அகப்பட்டதைக் கொண்டுவந்து விற்றாலும் அன்றாட வயிற்றுப்பாட்டிற்கே திண்டாடும் நிலையில்தான் இருத்தப்பட்டுள்ளது. பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரியின் கேரள எல்லையான நீரோடி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கடற்கரையோரமாக வாழும் இம்மக்களின் வாழ்வு.

fisher-men-lifeதொடர்ச்சியாகக் கடலுக்குள் கொட்டப்படும் தொழிற்சாலைக் கழிவுகள், கடற்கரையோர நகரங்களின் சாக்கடைக் கழிவுகள், எண்ணெய், எரிவாயுத் துரப்பணப் பணிகள், அணு உலைக்கழிவுகள், செய்ற்கைத் துறைமுகங்கள், நாளுக்குநாள் பெருகிவரும் கப்பல் போக்குவரத்து உருவாக்கும் மாசுகளால் கடல்வளம் அழிந்து வருகிறது.இவற்றின் விளைவாக கடலின் சமநிலை பாதிக்கப்பட்டு, மீன் களுக்கு உணவாகும் பாசி வகைகள், பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல்சார் வளங்கள் அழிக்கப்படுவதால் மீன் வளமும் குறைந்துகொண்டே வருகிறது.

மறுபுறத்தில், மீன் பிடித் தொழிலில் கால்பதித்துள்ள முதலாளிகளின் பெரிய விசைப்படகுகளும், அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகொண்ட பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களும், பயன்படுத்தும் இரட்டைமடி சுருக்கு வலைகள் குஞ்சுகளைக்கூட விட்டுவைக்காமல் ஒட்டுமொத்தக் கடல்வாழ் உயிரினங்களையும் வாரிச் சுருட்டுக்கொண்டு வந்துவிடுவதால் மீன்களின் இனப்பெருக்கம் தடைபடுகிறது. இவற்றின் விளைவாக, கடற்கரையின் மிக அருகிலேயே மீனபிடித்துத் தமது தேவைகளை நிறைவேற்றிவந்த மீனவர்கள் தற்போது மீன்களைத்தேடி கடலில் வெகுதூரம் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்

fisher-manமீன்களுக்கும், மீனவர்களுக்கும் எல்லைகள் கிடையாது. இருப்பினும், மீன்களைத் தேடி, மீன்வளமுள்ள பகுதிகளை நாடிசெல்லும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்தாகக் கூறி, சிங்களப் படையினர் சுட்டுக்கொல்லும் அவலம் கடந்த கால் நூற்றாண்டாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தன் பிராந்திய மேலாதிக்க நலன்களுக்காக, தமிழக மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது பாசிச இந்திரா அரசு. இதனால் மன்னார் வளைகுடாப் பகுதியில் தமது பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இழந்துநிற்கும் நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழகக் கடற்கரையோர மீனவர்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகி நிற்கின்றனர்.

1983- களில் விடுதலைப் புலிகளைச் சாக்கிட்டு ஆரம்பித்த தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் துப்பாகிகச் சூடுகளும், அத்துமீறல்களும் இன்றளவும் கேட்பாரின்றித் தொடர்கின்றன. எல்லைதாண்டி மீன்பிடித்தாகக் கூறி இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் மீனவர்கள் அடி, உதை உள்ளிட்ட கொடூர சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு, ஊனமாக்கப்பட்டுள்ளனர். பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் கிழித்தெறியப்பட்டு, படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. எல்லை தாண்டியதாகக் கூறிக் கைதுசெய்யப்பட்டு இலங்கைச் சிறையிலடைக்கப்பட்டு வதைக்கப்படுவது இன்றும் தொடர்கதையாக நீள்கிறது. அன்றாடம் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள், இப்பகுதி மீனவர்கள். தொடரும் இப்படுகொலைகளுக்கு தீரவுகாண மறுத்து, கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன மத்திய,மாநில அரசுகள்.

தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் எனும் பெயரில் கடலை நம்பி வாழும் மீனவ மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறது அரசு. ஏற்கனவே மீன்வளம் குன்றிப்போயுள்ள நிலையில், கூடங்குளம் அணு உலைகளால் நேரக்கூடிய பேரபாயங்களை முன்வைத்து அவற்றை எதிர்த்துப் போராடிய தென் தமிழக மீனவர்களைக் கொடூரமாக அடக்கி ஒடுக்கி, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து முடக்கியுள்ளது, பாசிச ஜெயா அரசு. கடற்கரைப் பகுதி மேலாண்மைச் சட்டம் என்ற பெயரில் கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கு பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத் தளங்களை அமைக்கும் நயவஞ்சகத்தில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு.

fisher-folk-lifeகொள்ளை இலாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவம் மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது. புவி வெப்பநிலை அதிகரிப்பால் கடலின் சமநிலை பாதிக்கப்பட்டு இயற்கைச் சீற்றங்கள் – சுனாமிகளும், கடற்சீற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடற்சீற்றங்களால் எழும் பேரலைகளால் இயற்கையாக அமைந்த கடற்கரைகள் அரிக்கப்பட்டு, கடற்கரையோரமாக வாழும் மீனவ மக்களின் குடியிருப்புகளும் சேதமடைகின்றன. இத்தகைய இயற்கைச் சீற்றங்களிலிருந்து மீனவர்களைப் பாதுகாக்கும் விதமாக தடுப்புச் சுவர்களைக் கட்டித்தர மறுக்கும் அரசு, இதையே காரணமாகச் காட்டி அம்மக்களை அங்கிருந்து அடித்து விரட்டுகிறது. ஒருபுறம் மீனவ மக்களுக்குத் தேவைப்படும் சிறிய மீன்பிடித் துறைமுகங்களையும், அடிப்படைக் கட்டுமானத் தேவைகளையும் செய்துதர மறுக்கும் அரசு, மறுபுறத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்காக எண்ணூர், குளச்சல் போன்ற செயற்கையான, பெரிய துறைமுகங்களை அமைத்து மீனவர்களைப் படுகுழியில் தள்ளுகிறது.

அனுதினமும் இயற்கையுடன் போராடி வாழ்கையை நகர்த்துகின்ற இந்த மக்களுக்கு எந்தவித சமூகநலப் பாதுகாப்புத் திட்டங்களும் கிடையாது. மீன்வளம் குன்றிப்போய் நாளுக்குநாள் வருமானம் தேய்ந்துவரும் நிலையில் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப்ப பொருட்களின் விலை உயர்வு இவர்களை வாட்டி வதைக்கிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் வீசப்படும் எலும்புத் துண்டுடனும், சிங்களப் படையால் கொல்லப்படும் மீனவனுக்கான வாய்க்கரிசியுடனும் தமது கடமை முடித்துக் கொள்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

கடலும், கடல் சார் வாழ்வுமே மீனவர்களின் உயிர்வாழ்வில் தங்கி நிற்கிறது. மறுகாலனியாக்கத்தின் பெயரால் மீனவப் பழங்குடிகள் இன்று கடற்கரை ஓரங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டு சமவெளிப் பகுதிகளுக்குள் வீசப்படுகிறார்கள். தண்ணீரில் இருந்து எடுத்து வீசப்படும் மீன் குஞ்சுகள் மூச்சுத்திணறிச் சாவதுபோல அவர்கள் வேர்களை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா வளர்ச்சியின் பெயராலும், கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் பெயராலும், பன்னாட்டு ஏகபோக மீன்பிடி உரிமையாலும் அவர்களின் வாழ்வு நாசமாக்கப்படிகிறது.

தமது வாழ்க்கையைச் சீரழிக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு, மறுகாலனியாக்கத்திற்கெதிராக, மீனவ மக்கள் சீறிவரும் கடலலையெனச் சினங்கொண்டெழுந்து, பரந்துபட்ட உழைக்கும் மக்களுடன் ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய தருணமிது.

–  மருதமுத்து

புதிய தொழிலாளி, நவம்பர் 2016 இதழிலிருந்து

கூடுதல் படங்கள் : இணையத்திலிருந்து

Series Navigationசமையல் தொழிலாளர்கள் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/fishermen-life/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்திற்கு 28000 கூடுதல் அடிமைகள்

டாட்டா, பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்றவர்கள் இந்த அடிமைத்தனத்திற்கு உதவியதோடு ஆன்லைன் அடிமைகளுக்கு கங்காணிகளாக இருப்பதன் மூலமும் தங்களை பணக்காரர்களாக்கிக்  கொண்டார்கள்.

வேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு

ஒரு சாதாரண ஐ.டி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய முடியும்? பொதுவாக, ரிசியூமை துடைத்து, மெருகேற்றி புதிய ஒரு வேலை தேடுவதற்கு இறங்க வேண்டியதுதான்....

Close