நமக்கு ஏற்படும் இயற்கையான பசியை மையப்படுத்தி, ருசி என்னும் பெயரில் வித விதமான நுகர்வுக்கு அடிமையாக்கும் கலையை கடையாய் விரித்து சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகின்றன ஸ்விக்கி, ஜோமாட்டோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய உணவு வழங்கும் செயலி நிறுவனங்கள்.
‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற பழையமொழி மாறி, இன்று பைக் ஓட்டி ஓட்டி உழைத்து கொண்டிருக்கிறார்கள் நம் தேசத்து இளைஞர்கள். தான் பட்டினி கிடக்காமல், குறைந்தபட்சம் கையேந்திபவன் உணவையாவது பெறுவதற்காக, மாநகரின் பிரதான சாலை முதல் சந்து பொந்து வரை ஆரஞ்சு நிற பனியன் அணிந்த இளைஞர் பட்டாளம், நடுத்தர வர்க்கத்தின் ருசி வேட்கையை தணிக்க அங்குமிங்கும் அலைந்து திரிவதை நாம் அனைவரும் காண முடியும். சென்னை என்று மட்டும் இல்லாமல் திருச்சி, மதுரை, கோவை என இன்று தமிழகம் முழுவதும் இந்த நிறுவனங்கள் கால்பதிக்கத் துவங்கிவிட்டனர்.
அனைத்தும் ஆண்ட்ராய்ட்-ல் அடங்கும் என்பது போல் நம் வாழ்வை இப்போது இயக்க முயற்சிக்கிறது கார்ப்பரேட் உலகம். ஒரு உணவு வழங்கும் செயலியை நிறுவுவதன் மூலம், பல்சுவையும் அறுசுவையும் கொண்டு சேர்க்கும் அட்சய பாத்திரமாக நமது ஸ்மார்ட் போன் மாற்றப்படுகிறது. தொடுதிரையில் பல்சுவை உணவகங்களின் பட்டியல் நிரம்பி வழிவதை காண முடியும். அதில் உள்நுழைந்து ஒன்றுக்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்து கூட விரும்பிய உணவு வகைகளை வேண்டி உத்தரவிட முடியும்.

அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஆரஞ்சு நிற (ஸ்விக்கி-ஆரஞ்சு, ஜோமாட்டோ-சிகப்பு, ஊபர் ஈட்ஸ் – கருப்பு) பனியன் அணிந்த இளைஞர், நீங்கள் உத்தரவிட்ட உணவுகளோடு உங்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்துவார். ஒரு ஆர்டருக்கு ரூ.36; மூன்று கிலோமீட்டருக்கு மேல் ஐந்து கிலோமீட்டருக்குள் இருந்தால் ஐம்பது ரூபாய்; வெள்ளி, சனி, ஞாயிறு விடுப்பு எடுக்க கூடாது; ஆர்டர் எடுத்த அரை மணி நேரத்திற்குள் கொண்டு போய் சேர்க்க வேண்டும்; பின்னிரவில் ஆரம்பித்து அதிகாலை வரையில் சிறப்பு ஊதியம் என்ற விதிமுறைகளுடன் வாகன நெரிசல்களுக்குள் பூந்து புயலென சீறி செல்லும் ‘Delivery Boys’ (வழங்கல் தொழிலாளிகள்) என்று அழைக்கப்படும் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பும், வாழ்வும் இத்தகைய பல்வகை ‘ருசிகொண்ட’ உணவை உண்ணும் நுகர்வு வெறிக்கு இரை போட பயன்படுத்தப்படுகின்றன.
இதன் பின்புலத்தில் இந்தச் செயலியை உருவாக்கியதும் இயக்குவதும் மென்பொருள் வல்லுனர்களும், அதனுடன் கூடிய பிற தொழில் நுட்ப உதவு பொருள்களான இணைய வரைபடங்களும், ஜி.பி.எஸ் நுட்பங்களும் பிணைந்து உள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாகியுள்ள நவீன உழைப்புச் சுரண்டல் வடிவங்களில் ஒன்றாக இதனை பார்க்கலாம்.
உழைப்பைச் சுரண்ட பயன்படும் இது போன்ற செயலிகள் இன்னொரு புறம் நுகர்வு வெறியை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. அதாவது வித விதமான உணவகங்களை தேடிச் சென்று வித விதமாக உண்பதைவிட, ஒரே நேரத்தில் வித விதமான உணவகங்களின் சுவைகளை ஆர்டர் செய்வதை இவை சாத்தியமாக்கியிருக்கின்றன.
இதில் உழைக்கும் தொழிலாளர்கள் அடிப்படை கூலி பெறுவது கூட பிரச்சனையாகியிருக்கிறது. அதிக வாடிக்கையாளர்களை பெறுவதற்கும் அவர்களை தொடர்ந்து தக்க வைத்து கொள்வதற்கும், விரைவான சேவை வழங்குவதற்கும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் வழங்கல் தொழிலாளிகளை இணைத்திருக்கின்றன இந்நிறுவனங்கள். இதன் விளைவாக, சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 15-க்கும் மேலான ஆர்டர்களை எடுக்க முடிந்தது. அதனால் ஓரளவுக்கு சமாளிக்கும் அளவு ஊதியம் கிடைத்தது. ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 5 முதல் 7 ஆர்டர் கிடைத்தாலே பெரிசுதான் என்ற வகையில் உள்ளது, அதனால் ஒரு தொழிலாளிக்குக் கிடைக்கக் கூடிய ஊதியமும் குறைந்து விட்டது.
இதற்கு மாறாக, இந்த உணவு வழங்கல் செயலியை கட்டுப்படுத்தும் ஸ்விக்கி முதலான நிறுவனங்கள், ஒவ்வொரு ஆர்டர்க்கும் 20% முதல் 30% வரை தரகு தொகையாக உணவகத்திடமிருந்தும் பெற்றுக்கொள்கின்றன. அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூபாய் ஆயிரத்திற்கு உணவு ஆர்டர் கொடுத்தால் அதில் 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரை சம்பாதிக்கின்றன. ஆனால் இந்த உணவுகளை கொண்டு சேர்க்கும் தொழிலாளிக்கோ, ஆர்டர் தொகை எவ்வளவு பெரிதாக இருந்தாலும், வெறும் 36 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. கல்லூரியில் படிப்பவர்கள், கல்லூரி முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலையை பெற முடியாதவர்களே அதிகமாக இதில் வேலை செய்கிறார்கள்.
எனவே இந்த குறைகூலி தொழிலாளர்களின் வேலை, நடுத்தர வர்க்க நா சுவைக்கு தீனி போடும் பல்வேறு உயர்தர உணவகங்களை சார்ந்து இருந்தாலும், இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமானது ரோட்டோர கையேந்தி பவன்களில் சாப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது என்பது எதார்த்தம்.
ஸ்விக்கி போன்ற நிறுவனங்களால் உணவு சப்ளை செய்யும் உணவகத்தின் தொழிலாளியும், உணவை கொண்டு சேர்க்கும் தொழிலாளியும் சுரண்டப்படுகிறார்கள். சப்ளை செய்யும் உணவகத்தின் முதலாளி தனது உணவக தொழிலாளிகளின் கூலியில் ‘கை’ வைப்பதன் மூலம் ஸ்விக்கியின் லாபப் பசிக்கு தீனி போடுகிறார். அந்த உணவை வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்க்கும் தொழிலாளிக்கோ, தன்னுடைய உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும் தனது பிழைப்பை ஓட்ட வேறு வழியில்லை என்ற நிலையில், தான் சுரண்டப்படுவதை எதிர்த்து வேறு வேறு வேலைக்குப் போகவோ, கேள்வி கேட்கவோ உரிமை இல்லை.
போட்டி நிறைந்த வேலைச் சந்தையில் இளம் பட்டதாரிகள் வெறும் பண்டங்களாக பார்க்கப்படும்போது எப்படி சுரண்டலை கண்டு சினம் கொள்ள முடியும், ‘கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு ‘Quick Delivery’ (வேகமான வழங்கல்) ஐ மட்டும் பார்’ என்று கார்ப்பரேட்டுகள் விரட்டுவதை சகித்துக் கொண்டு ஓட வேண்டி இருக்கிறது.

மும்பை மாநகரில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அலுவல் பணியாளர்களுக்கு மதிய உணவை, வீடுகளில் இருந்து அலுவலகங்களுக்கு சுமந்து சென்று பசியை போக்கும் பணியை ‘டப்பா வாலா’ தொழிலாளர்கள்
மும்பை மாநகரில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அலுவல் பணியாளர்களுக்கு மதிய உணவை, வீடுகளில் இருந்து அலுவலகங்களுக்கு சுமந்து சென்று பசியை போக்கும் பணியை ‘டப்பா வாலா’ தொழிலாளர்கள் செய்வது நம்மில் பலருக்குத் தெரியும். அது வீட்டுக்கும், தொழிலாளியின் பணியிடத்துக்கும் இடையேயான தூரத்தை கடக்க உதவும் சேவை. ஸ்விக்கியின் சேவையோ, நுகர்வு வெறிக்கு இரை போட்டு இலாபமீட்டும் வேட்டை. உண்பவருக்கும் உணவகத்துக்கும் நடுவில் இடைத்தரகராக தன்னை அமர்த்திக் கொண்டு, இடைத்தரகு வேலையிலேயே அதிக இலாபமீட்டும் கார்ப்பரேட் வெறிதான் இதில் தெரிகிறது.
ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உணவு பெறும் சேவை, செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சியால் ஓட்டுநர் இல்லாமல் தானாகவே இயங்க கூடிய கார்கள்… இப்படி எண்ணற்ற வளர்ச்சிகள் அறிவியல் துறையில் நடந்த வண்ணம் உள்ளது. ஆனால், இத்தகைய அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சிகள் உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த எந்த விதத்திலும் உதவாமல், தொழிலாளிகளை மேலும் மேலும் புதுப்புது வழிகளில் சுரண்டுவதற்கான வழிகளை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றன; கார்ப்பரேட் மூலதனத்துக்கு மேலும் மேலும் லாபம் சம்பாதிப்பதற்கான வழிகளிலேயே திருப்பி விடப்படுகிறது.
இந்திய இளைஞர்களது கவுரவமான, திறமைக்கேற்ற வேலைக்கான கனவு குப்பைத்தொட்டியில் தூக்கியெறியப்படுகின்ற இந்த அவலமான நிலையில் எழக்கூடிய கோபத்தை திசை மாற்ற மோடி கும்பல் கையாளுகின்ற பல்வேறு உத்திகளில் ஒன்று தான் பக்கோடா விற்பதும் ஒரு இலாபமான சுயதொழில் என்கிற அயோக்கியத்தனம். திறமையும் தகுதியும் கொண்ட இளைஞனுக்கு பக்கோடா விற்பதும், சாப்பாடு சப்ளை செய்வதும் வேலையாக கிடைக்கிறது. ஆனால், அனில் அம்பானி ஆரம்பிக்காத கம்பெனிக்கு போர் விமானத்தயாரிப்புக்கான ஆர்டர் கிடைக்கிறது. முகேஷ் அம்பானி துவங்காத கல்லூரிக்கு ஆயிரம் கோடிகள் அரசு மானியம் கிடைக்கிறது. இது கார்ப்பரேட்டுகளின் அரசு
– ராஜதுரை. R
புதிய தொழிலாளி (அக்டோபர்-நவம்பர்’18)