சமையல் தொழிலாளர்கள்

This entry is part 2 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

ணவு, அனைத்து உயிர்களின் இருப்புக்கும், இயக்குத்துக்குமான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. நமது உடலை வளர்த்தெடுத்து, வடிவமைத்து, அன்றாட வாழ்க்கைப் பணிகளில் நாம் ஈடுபடுவதற்கான ஆற்றலை வழங்கும் ஆதாரப் பொருள், உணவு. அதன்பொருட்டே உணவு, உடை, இருப்பிடம் என்றவாறு மனிதகுலத் தேவைகளின் தவிர்க்கவியலா முதன்மைத் தேர்வாக இருத்தப்பட்டுள்ளது. தணிக்கப்படாத பசி மனித இயல்பைச் சீர்குலைத்து மிருக நிலைக்குத் தள்ளுகிறது. அத்தகைய பசிப்பிணி போக்கும் அருமருந்தாக அமைவது உணவாகும்.

food-workersஇடம், பொருள், ஏவல் விதிக்கிணங்க, இரைப்பைக்கு இதமாக, பதமாக, உடலுக்கு ஊட்டமளிக்கும் விதமாக இறைச்சியை, இயற்கையின் கொடையான தானியங்களை புசிப்பதற்கேற்ப பக்குவப்படுத்தித் தருவதே, சமையற்கலை. பச்சை மாமிசம் தின்று பசியாறிக் கிடந்த மனிதர்களுக்குத் தீயில் வாட்டிய இறைச்சியின் வழி சுவைகூட்டிய காலத்தில் வேர்கொண்டு, இன்றைக்கு பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்கிறது சமையற்கலை. அதன் விழுதுகளாக வளர்ந்து, வளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள், சமையல் கலைஞர்கள்.

ஈன்று புறந்தள்ளிய உடலுக்குப் பாலூட்டி, பக்குவமாய்ச் சமைத்த உணவூட்டி வார்த்தெடுப்பவள் தாய். அடிமைச் சமூக ஆணாதிக்கக் காலந்தொட்டு இன்றைய நவநாகரிகக் காலம் வரையிலான மனிதகுலத்திற்கு உணவு தந்து, உரமூட்டி வளர்ப்பவர்கள், பெண்களே. அன்னையரின், பெண்களின் இந்த அங்கீகரிக்கப்படாத அடிமை உழைப்பின் பிரதிபிம்பங்களாக பரந்து, விரிந்த சமூக வெளியெங்கும் விரவிக் கிடக்கின்றனர், சமையல் பணியாளர்கள்.

தள்ளுவண்டி, தெருவோர உணவுக் கடைகள், சிற்றுண்டி, தேநீரகங்கள் முதல் சிறிய, நடுத்தர, சங்கிலித் தொடர் உணவகங்கள், தங்கும் விடுதிகள் வரையிலும், ஆலைகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ள உணவுக் கூடங்களிலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது சமையல் பணியாளர்களது உழைப்பு. பாத்திரங்களைக் கழுவி,  தானியங்களைக் களைந்து, காய்கறி நறுக்கி, உணவோடு தானும் வெந்து, சாப்பாட்டு மேசையில் பரிமாறி, எச்சில் தட்டுக்களைக் கழுவி, உணவுக் கூடத்தைத் துப்புரவு செய்யும் இந்த முகமறியாத் தொழிலாளர்களின் உழைப்பின்றி இன்றைய நமது உயிர்ப்பும், சமூக இயக்கமும் சாத்தியமில்லை.

நமக்கான உணவைச் சமைத்து, நமது பசியாற்றும் பல இலட்சம் தொழிலாளர்களது உழைப்பின் அருமை தெரியாமலே நகர்ந்து கொண்டிருக்கிறது நம்மில் பலரின் வாழ்க்கை. வீட்டிற்கு வெளியே நாம் உண்ணும் ஒவ்வொரு பிடிச் சோற்றிலும் உறைந்திருக்கிறது அவர்களுடைய உழைப்பு. நமது வயிற்றுப் பசிக்கு உணவு பரிமாறும் இவர்களுடைய வாழ்க்கையோ போதிய வருமானமின்றி அரை வயிற்றுக் கஞ்சியுடன் பசியிலும், பட்டினியிலும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

food-workers-2ஹோட்டல்களில் வேலை செய்வோர், தனியார் ஒப்பந்ததாரர்களிடம் பணிபுரிவோர், தனியாகச் செயல்படும் சமையற் கலைஞர்கள் என தமிழகத்தில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அமைப்பு சாராத் தொழிலாளர்களான இவர்களுக்கு எவ்விதமான சட்டபூர்வ, சமூக பாதுகாப்பும் இல்லை. குறிப்பாக, ஹோட்டல்களிலும், பல்வேறு உணவு விடுதிகளிலும் பணியாற்றும் இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் எதுவும் கிடையாது. 8 மணி நேர வேலை என்பதற்குப் பதிலாக நாள்தோறும் சுமார் 12 நேரம் (காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை) வேலையில் ஈடுபடுத்தப்பட்டு, கசக்கிப் பிழியப்படுகின்றனர். காலை, மதியம், இரவு ஆகிய உணவு வேளைகளுக்கு இடைப்பட்ட சிறிய கால அவகாசத்தில்தான் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.

இவர்களுக்கென குறைந்தபட்ச ஊதியச் சட்டம் எதுவும் இல்லாத நிலையில் சொற்பத் தொகையே ஊதியமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக, பசியோடு உணவருந்த வருபவர்கள் வெளிப்படுத்தும் எரிச்சல், கோபங்களை எதிர்கொண்டு அலுப்பூட்டும் ஒரேவிதமான வேலையைச் செய்யும் உணவு பரிமாறுபவர்களுக்கு (சர்வர்கள் – சப்ளையர்கள்), சாப்பிட வருபவர்கள் இனாமாகத் தருவதை (டிப்ஸ்) சாக்கிட்டு அவர்களுடைய சம்பளத்தை வெட்டிச் சுருக்குகின்றனர், ஹோட்டல் முதலாளிகள். தங்குமிடமும், மீந்துபோன உணவும் இலவசம் என்ற அற்பக் காரணத்தைக் காட்டியே இவர்களுடைய ஊதியம் குறைக்கப்படுகிறது.

இவ்வாறு குறைந்த ஊதியத்தில், காலவரம்பின்றிக் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டு ஒட்டச் சுரண்டப்படும் இவர்களுக்குப் பணி நிரந்தரம், இ.எஸ்.ஐ, பி.எஃப், ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்விதமான பணிப் பலன்களும் வழங்கப்படுவதில்லை. கிடைக்கின்ற சொற்பத் தொகையில் வீட்டு வாடகை, நாள்தோறும் ஏறிவரும் விலைவாசியால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைக் கூட ஈடுகட்ட முடியாமல் அல்லல்படுகின்றனர். பல ஹோட்டல் தொழிலாளிகள் திருமணம் செய்துகொண்டு முறையான குடும்ப வாழ்க்கையை வாழ முடியாமல், பல நகரங்களில் சுற்றியலைந்து நாடோடிகளாக வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிழைப்புக்கு வழிதேடி தமிழகத்துக்கு வரும் வடமாநிலத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதும் அதிகரித்து வருகின்றது. அதிலும், 18 வயது கூட நிரம்பியிராத சிறுவர்களே தேநீர்க் கடைகளில் எடுபிடி வேலை செய்வது, ஹோட்டல்களில் எச்சில் தட்டுகளை எடுப்பது, மேஜையை சுத்தம் செய்வது, பாத்திரங்களைக் கழுவுதல், துப்புரவு வேலைகளைச் செய்வது உள்ளிட்ட வேலைகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காலநேரம் பாராமல் கடினமாக உழைத்தாலும் கிடைக்கும் அற்பத் தொகையை எந்த எதிர்ப்பும் காட்டாமல் கூலியாகப் பெற்றுக் கொண்டு (தினசரிக் கூலி ரூ. 150/- என்ற அளவில்) வாழவேண்டிய அவலத்தில்தான் இருத்தப்பட்டுள்ளது அவர்களுடைய வாழ்க்கை. பெரும்பாலும், குழந்தைகள் உள்ளிட்டு ஒட்டுமொத்தக் குடும்பமுமே சேர்ந்து உழைத்தால்தான் வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற தவிர்க்கவியலாத நிலையில்தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய தமது குழந்தைகளை எச்சில் தட்டுகளைக் கழுவும் அவலத்திற்கு ஆட்படுத்துகின்றனர் பெற்றோர்கள்.

வாட்டும் வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்க வழிதேடி இத்தொழிலில் ஈடுபடும் 90%-த்திற்கும் மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்களே. இவர்களுக்குத் தொடர்ச்சியான வேலை என்பது கிடையாது. ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 100 முதல் 120 நாட்கள் வரைக்கும்தான் வேலை கிடைக்கிறது. இதில் கிடைக்கும் தொகையைக் கொண்டுதான் ஆண்டு முழுவதும் அரை வயிற்றுக் கஞ்சியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்.

இதைப் போல தமிழகம் முழுவதும் 68,000 சத்துணவு மையங்கள்  மற்றும் 35,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 2.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்காக அரசால் நடத்தப்படும் இம்மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சொற்பத் தொகையே ஊதியமாக வழங்கப்படுகிறது. காலிப் பணியிடங்களை நிரப்புவது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர் இந்தப் பணியாளர்கள்.

தனியார் கல்விக் கொள்ளையர்களின் பிடியிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலுள்ள உணவு விடுதிகளிலும் (மெஸ்) ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எவ்வித உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக உழல்கின்றனர். கட்டணம் எனும் பெயரில் கோடிகளில் கொள்ளையடித்துக் கொழுத்துவரும் இந்தப் பண முதலைகள் தமது மெஸ் ஊழியர்களுக்குச் சம்பளமாக சொற்பத் தொகையை வீசியெறிந்து, சட்டரீதியான பணிப் பலன்களை வழங்க மறுத்து ஒட்டச் சுரண்டி வருகின்றனர்.

இரவு பகல் பாராமல் கண்விழித்து, அடுப்புப் புகையைத் தொடர்ச்சியாகச் சுவாசிக்க நேரிடுவதால் பல தொழிலாளர்கள் ஆஸ்துமா போன்ற கொடிய நோய்களுக்கு இரையாகின்றனர். பெரிய பாத்திரங்களைக் கழுவுதல் உள்ளிட்ட கடும் உடல் உழைப்பின் காரணமாக சமையல் தொழிலாளர்கள் பலரது உடல் விரைவிலேயே தளர்ந்து, பலமிழந்து விடுகிறது. இதன் காரணமாகத் தொடர்ச்சியாக இவ்வேலையில் ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது. பணிக்கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்விதமான ஆதாரங்களும் இல்லாத நிலையில் வேலையிழந்து வறுமையின் பிடியில் தள்ளப்படுகிறது இவர்களது வாழ்வு.

நமக்கு அறுசுவை விருந்தாக, பசிப்பிணி தீர்க்கும் மருந்தாக உணவு சமைத்துப் பரிமாறும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் அவலச்சுவை மண்டிக் கிடக்கிறது. தூக்கம் துறந்து, அடுப்படியில் வெந்து உணவு சமைக்கும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை அதே வெப்பத்தோடும், வெக்கையோடும்தான் நீடிக்கிறது. குடிமக்கள் நலம்பேண வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுத்து முதலாளித்துவச் சேவையில் மூழ்கிக் கிடக்கின்றன.

மக்களின் உயிர்வாழும் உரிமையைத் துச்சமாகக் கருதி ஒதுக்கித் தள்ளும் இந்த மக்கள் விரோத அரசமைப்பைத் தூக்கியெறியும் பணியில், தங்களை அமைப்பாக்கிக் கொள்வதோடு இதர ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களோடு இணைந்து களப் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். இதன் வாயிலாகவே, தமது வாழ்க்கைத் துயரங்களைத் துடைத்தெறிந்து, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்குமான பொன்னுலகைச் சமைக்க முடியும்.

– மருதமுத்து

புதிய தொழிலாளி, டிசம்பர் 2016

(படங்கள் – இணையத்திலிருந்து)

Series Navigation<< மீன்பிடித் தொழிலாளர்கள் : துயரக் கடலில் தத்தளிக்கும் வாழ்க்கைஅடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/food-workers/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
வெரிசான்-இன்ஃபோசிஸ் டீல் : ஐ.டி ஊழியர்களை அடிமைகள் என்று சொல்வதில் என்ன தவறு?

நானும் ஐ.டி துறையில் தான் இருக்கிறேன். ஆனால், என்மீது சுமத்தப் படும் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன். என் வேலைக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். ஆனாலும், அடிமைத்தனத்தை...

இந்திய ஆங்கிலேயர்கள் : வேகமாக வளரும் இந்தியாவின் புத்தம் புதிய சாதி

கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை...

Close