போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு

ரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்றிலிருந்து (12/01/18) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டம் நேற்று வரை 8- வது நாளை எட்டியிருந்தது. தினசரியாக தனிப்போக்குவரத்தைப் பயன்படுத்த பொருள்வசதி இல்லாத, பொதுப்போக்குவரத்தையே முழுதும் நம்பியிருக்கின்ற ஊடகங்களால் ‘பொதுமக்கள்’ என்ற பெயரில் அடையாளப் படுத்தப்படும் உழைக்கும் மக்களும், ஏழை எளியவர்களும் தான் இந்த வேலை நிறுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், இந்த அரசு பிரச்சனையை விரைந்து தீர்க்க முயற்சி எடுக்குமா? மேலும், இவர்கள் இனிவரும் தேர்தலில் தங்களுக்கு இருக்கும் வாய்ப்பைப் பற்றி எந்த மயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் இவர்கள் அவ்வளவு எளிதாக அசைந்து கொடுப்பார்கள் என்பதற்கு வாய்ப்பு எதுவுமில்லை.

சக உழைக்கும் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் பொதுவேலைநிறுத்தம் போன்று ஒரு ஆணித்தரமான வழி எதுவும் மேற்குறிப்பிட்ட பொதுமக்களுக்கு இல்லை. ஊடகங்களால் பேட்டி கண்டவர்களில் பலர் அரசு போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இந்த வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள்.

போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராக இருக்கும் எனது அண்ணன் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுருக்கிறார். எனவே நான் பொதுமக்களில் ஒருவன் மட்டுமில்லை. நேரிடையாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் உறவினனும் கூட. ஆகவே, என் பங்கிற்கு எனது ஆதரவை காட்டுவதற்காக பல்லவன் சாலையில் போக்குவரத்து அலுவலகத்தின் முன் நடந்து கொண்டிருந்த போராட்டத்திற்கு நேற்று சென்றிருந்தேன். காலை 11 முதல் மாலை 6 மணி வரை கூட்டத்தில் கலந்து கொண்டேன். போராட்டம் நேற்றிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக வடிவம் எடுத்திருந்தது. அதனால் நானும் மதியம் எதையும் உண்ணவில்லை.

போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் போராட்டப் பந்தலில் அமர்ந்திருந்தார்கள். நான் சென்றிருந்த போது சுமார் நானூறு பேர் திரண்டிருந்தார்கள். நற்பகலுக்கு மேல் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் திரண்டு விட்டார்கள்.

மற்ற தொழிற்சங்களின் அணிகளும், தலைவர்களும் அவ்வப்போது போராட்டப் பந்தலுக்கு வந்து தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். குறிப்பிடும் படியான விதத்தில் இரு குழுக்கள் வந்தன. சுமார் 25 பேர் கொண்ட குழுவாக ரயில்வே ஊழியர்கள் தங்கள் சங்க பதாகையுடனும் அவர்களின் செவ்வர்ணக் கொடிகளுடனும் (DREU) இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தோடு வந்தனர். இன்ஸ்யூரன்ஸ் ஊழியர்கள் சுமார் 15 பேர் தங்கள் சங்கத்தின் செவ்வர்ணக் கொடிகளுடன் (AIIEA) வந்து பந்தலில் நின்று சுமார் பத்து நிமிடம் புரட்சிகர முழக்கங்கள் இட்டு போராட்டக் களத்தை அதிர வைத்தனர். வங்கி, துறைமுக, பிஎஸ்என்எல், ஆந்திரா போக்குவரத்து போன்றவற்றின் ஊழியர் சங்க பிரதிநிதிகள் போராட்டத்தை வாழ்த்தி எழுச்சி உரையாற்றினார்கள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகுவும் வந்திருந்து உரையாற்றினார். ஒரு புரட்சிகர மாணவர் அமைப்பின் சார்பாக ஒரு இளம் கல்லூரி பெண்ணும் சிறப்பாக உரையாற்றினார். மொத்தத்தில் 15 நபர்கள் பேசியிருப்பார்கள்.

மற்ற தொழிற்சங்களின் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட எல்லோரும் தவறாமல் குறிப்பிட்டது மூன்று விசயங்கள்.

  • நீதிமன்ற நாட்டான்மைத் தனத்திற்கு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்வதே தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி.
  • இந்த போராட்டத்திற்கு தமிழகத்தினுடைய மட்டுமல்ல இந்தியாவின் எல்லா உழைக்கும் மக்களின் ஆதரவு இருக்கிறது.
  • போக்குவரத்து ஊழியர்களின் வெற்றியை இந்தியாவின் மற்ற எல்லா உழைக்கும் மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பேசியவர்களில் இருவரின் பேச்சில் மட்டும் அவர்களின் பார்வையில் வர்க்க அடிப்படையிலான குறை இருப்பதை கவனித்தேன். அவர்கள் திமுகவைச் சார்ந்த தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள். ஒருவர் தற்போது அதிகாரத்தில் இருக்கும் ஒருநபர் அந்த அதிகாரத்திற்கு லாயக்கற்றவர் என்ற பொருளில் கசாப்புக் கடைக்காரரைப் போல இருப்பதாக பரிகசித்தார். மற்றொரு பேச்சாளர் ஒருவரை பரிகசிப்பதற்காக அந்த நபர் பலசரக்குக் கடையில் பொட்டலம் கட்டுபவரைப் போன்று இருப்பதாக கூறினார். இந்த பார்வை எதைக் காட்டுகிறது என்றால் தொழிலாளர்களுக்கு இடையிலேயே அமைப்பாக்கப் பட்ட பிரிவில் சிலர் அமைப்புசாரா பிரிவினரை ஏளனமாக பார்க்கின்றனர் என்று காட்டுகிறது. இதுபோன்ற பிரிவினைப் பார்வைகள் உழைக்கும் வர்க்க அணியை பலவீனப் படுத்துகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொகுப்பாக பார்த்தால், பிரிந்து கிடக்கும் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் அவை தங்களுக்குள் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தால் மட்டுமே எஞ்சியிருக்கும் தங்கள் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை புரிந்து கொள்வதற்கு இந்த போராட்டம் உதவும் என்பது உறுதி. ஆனால் அது மட்டும் போதாது. சமூகத்தின் எல்லா உழைக்கும் மக்களுக்குமான மார்க்சிய லெனினிய மாவோயிய அடிப்படையிலான ஒரு பொதுவான அமைப்பு இல்லாமல் சமூகத்தின் இன்றைய மற்றும் வருங்காலத்தைய சவால்களை எதிர் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட அமைப்பு கட்டப்பட வேண்டிய தேவை இப்போது நம் முன்னே இருக்கிறது. இந்த திசையில் நேற்று ஏற்பட்ட தொழிலாளர் அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைவு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் இருக்கிறது.

– நேசன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/from-the-ranks-of-protesting-transport-workers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொழிலாளி வர்க்கத்தின் திருநாள் எது?

சரவணா ஸ்டோர்ஸ் முதலாளிக்கும், கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் தீபாவளி புதிய ஆண்டின் தொடக்கமாக, புதிய லாபத்தின் குவிப்பாக இருக்கலாம். ஆனால், தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் எது உண்மையில்...

கடுவட்டி – கொடூர மிருகம், அனைத்தையும் அழிக்கிறது!

வழிப்பறி கொள்ளையரையும், கொலைகாரர்களையும், வீட்டை உடைத்து திருடுபவர்களையும் வதை சக்கரத்தில் மாட்டுகிற நாம், கடுவட்டிக்காரர் அனைவரையும் சக்கரத்தில் மாட்டி கொல்ல வேண்டும், வேட்டையாட வேண்டும், சபிக்க வேண்டும்,...

Close