நவீன உலகின் மையத்தில்

லகளாவிய வங்கி, நிதி, காப்பீடு துறை அல்லது வேகமாக மாறி வரும் இணையவணிகம், இணைய சேவைகள், மொபைல் சேவைகள் அல்லது நானோ தொழில்நுட்பம், இணைக்கப்படும் கருவிகள் என எதை எடுத்துக் கொண்டாலும், இந்த தலை தெறிக்கும் வேகத்திலான மாற்றங்களின் மத்தியில், மாற்றங்களை ஏற்படுத்தி, உருவம் கொடுத்து, கட்டுப்படுத்தி வருபவர்கள் ஐ.டி ஊழியர்கள்.

இந்தியாவில், நாம் சமூகத்தின் மையத்தில் இருக்கிறோம்.

ஒரு புறம் விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், கட்டத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளங்கள் மற்றும் சில்லறை விற்பனை, உணவகம், போக்குவரத்து, தனிநபர் சேவைகள் என்ற சேவைத் துறையில் பணியாற்றி வரும் 100 கோடி மக்கள். அவர்கள் அதிக மணி நேரங்களுக்கு கடினமாக உழைத்தும் நாம் ஈட்டும் வருமானத்தில் ஒரு சிறு பகுதியையே பெறுகின்றனர்.

நமக்கு இன்னொரு புறம் ஒரு சில ஆயிரம் பணக்கார, அதிகாரம் படைத்த கார்ப்பரேட் முதலாளிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள், கிரிக்கெட் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் நம் மீது ஆட்சி செலுத்துகிறார்கள். அவர்கள் நமக்கும் கீழே இருக்கும் 100 கோடி மக்கள் ஆகக் குறைந்த சம்பளத்தில் ஆக அதிகமாக வேலை செய்யுமாறு பார்த்துக் கொண்டு தமது லாபத்தை உறுதி செய்து கொள்கிறார்கள். அவர்கள்தான் நமக்கு படியளக்கிறார்கள் என்றாலும், நம்மை எப்போதுமே தடுமாற்றத்தில் வைத்திருப்பது அவர்களது வாடிக்கை. எந்தக் கேள்விகளும் கேட்காத, அவர்கள் செய்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சேவகர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உலக அளவில் நமது நாடு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் முதலான பணக்கார நாடுகள் ஒரு புறம், நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க வறிய நாடுகள் மறு புறம். இரண்டுக்கும் நடுவில் ஒரு சில டாலர் மில்லியனர்களைக் கொண்ட, பல 10 கோடி வறியவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.

கோடியை எட்டும் எண்ணிக்கையிலான ஐ.டி ஊழியர்களான நமக்கு நமது நாட்டின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் மாற்றியமைப்பதற்கான வலிமையும், ஆற்றலும் உள்ளது.

அதற்கு நாம் தயாரா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/front-page-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: