ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்!

This entry is part 4 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

ணவு, உடை, இருப்பிடம் என வயிற்றுப் பசி தீர்த்த மனித குலத்தின் அடுத்தக்கட்ட நகர்வாக இருத்தப்பட்டிருக்கிறது, மனித வாழ்வின் தலையாய தேவைகளில் ஒன்றாக விளங்கும் ஆடை. அரைமனிதர்களாக காடுகளில், குகைகளில் வாழ்ந்த மனித குலம் கண்ணைக் கவரும் வண்ணங்களில், மனதை மயக்கும் வடிவங்களிலான உடைகளில் தோற்றப்பொலிவு பெற்று உலாவரும் நவநாகரிகக் காலமிது. மானங்காத்து மனிதகுல மாண்பைக் காப்பது, குளிர், வெப்பம் உள்ளிட்ட பருவநிலைத் தாக்குதல்களிலிருந்து உடலைப் பாதுகாப்பது என்பதான ஆடைகளின் பிரதானப் பயன்பாடுகள் புறந்தள்ளப்பட்டு வேளைதோறும் விதவிதமாக உடுத்தி மகிழ்வது என மனித வாழ்வின் விழுமியங்களை வெட்டிக் குறுக்கி , சிதைத்துச் சீரழித்திருக்கிறது முதலாளித்துவச் சந்தையின் நுகர்வுவெறிக் கலாச்சாரம், உலகத் தரத்திலான இந்த ஆடைகளை உற்பத்தி செய்யும் உள்ளூர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையோ உருக்குலைந்து, நைந்துபோன கந்தல் துணியாகக் கிடக்கிறது.

ஆயத்த ஆடை ஏற்றுமதியில், உலகளவில் சீனா மற்றும் அய்ரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்த நிலையில் மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா. ஹரியானா, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்டு நாடெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஜவுளி, பின்னலாடை உற்பத்தி மையங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும சுமார் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணபுரிகின்றனர். பல இலட்சம் தொழிலாளர்களின் கடின உழைப்பில் தமிழகத்தின் பிரதான ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக, பின்னலாடைத் தலைநகரமாக உருவெடுத்துள்ளது திருப்பூர் மாநகரம். தமது வாழ்க்கைக்கு வளம் சேர்க்க பிழைப்பைத் தேடி, உழைப்பை நாடிவந்து, வியர்வைக் கூடங்களில் நவீனக் கொத்தடிமைகளாக இருத்தப்பட்டு, கொடூரமான சூழல்களில் ஒட்டச்சுரண்டப்படுவதால் நிறமிழந்துபோகும் தொழிலாளர்களின் வாழ்கையிலிருந்துதான் – அவர்களின் உதிரத்தில், வியர்வையில்தான் உருவெடுக்கின்றன்- நம் உடம்பை அலங்கரிக்கும் பலவண்ண ஜீன்ஸ், டி- சர்ட்,பனியன் உள்ளிட்ட ஆடை அணிகலன்களும், நவீன ஷாப்பிங் மால்களில் பன்னாட்டு நிறுவனங்களின் பிரபல வணிக முத்திரைகளுடன் தொங்கும் பலவகைத் துணிமணிகளும்.

1980-களில் திருப்பூரில் உருவெடுத்த ஆயத்த ஆடைஏற்றுமதித் தொழில் 1990-களில் புகுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக அதிவேக வளர்ச்சி பெற்று இன்று மிகப் பிரம்மாண்டமாக தொழிற்துறையாக உருவெடுத்துள்ளது. வறண்டுபோன தென்மாவட்டங்களிலிருந்தும், விவசாயம் நசிந்துபோன டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வேலைதேடித் திருப்பூரில் குவிந்த விவசாயக் கூலிகள், ஏழை விவசாயிகள், சாதிய அடிமைத்தனத்தில் சிக்கிக்கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் கடின உழைப்புதான் இந்த அசுர வளர்ச்சியைச் சாத்தியமாக்கியது. மாறாக, சாதியமைப்பை நயவஞ்சமாகத் தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பி – சுதேசி நடிகன் குருமூர்த்தி கூறுவதுபோல கவுண்டர் சமூகத் தொழில் முனைப்பு அல்ல. சிறிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்த சிலநூறு தொழிலதிபர்கள் இன்று பல்லாயிரம் கோடிகளில் புரண்டுகொண்டிருக்க அந்த இலாபத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்த பல இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வோ அதலபாதாளத்தில் அமிழ்த்தப்பட்டுக் கிடக்கிறது.

இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் கணிசமான பங்கையும், முதலாளிகளுக்குக் கொள்ளை இலாபத்தையும், ஈட்டித்தரும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்களில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒப்பந்தமுறை மற்றும் “பீஸ்-ரேட்” அடிப்படையில் பெரும்பான்மை தொழிலாளர்களைப் பணிக்கமர்த்தி குறைவான கூலியில் அவர்களின் வயிற்றுலடித்து, ஒட்டச் சுரண்டுகின்றனர் முதலாளிகள். இதனால், பற்றாகுறையை ஈடுகட்ட ஓவர்டைம், அடுத்தடுத்த ஷிஃப்டுகளில் தொடர்ச்சியாக வேலைசெய்வது என்ற பணிச்சுமை அவலத்தில் தள்ளப்படுகின்றனர் தொழிலாளர்கள். இதுதவிர, 2008-ல் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நீர்க்குமிழியின் பாதகங்களையும் தொழிலாளர்கள் தலையினமீதே சுமத்துகின்றனர், முதலாளிகள். பொருளாதார மந்தத்திலும் கொள்ளை இலாபவெறியைக் கைவிடாத பன்னாட்டு முதலாளிகள் ஆயத்த ஆடைகளின் கொள்முதல் விலையைக் குறைத்தனர். இதையொட்டி தமது இலாபம் குறையாமலிருக்க ஏற்கனவே. தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த அற்பக்கூலியையும், வெட்டிச் சுருக்கி மேலும் கொடூரமாகச் கசக்கிப் பிழிவதன் வாயிலாகவே விலைக்குறைப்பை எதிர்கொண்டனர் உள்ளூர் முதலாளிகள். ‘இப்படிக் கூலியைக் குறைத்துக் கொண்டு வேலைசெய்யாவிட்டால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய ஏற்றுமதி ஆர்டர்களை வங்கதேசம், தாய்லாந்து போன்ற கூலி குறைவான நாடுகளுக்கு கொண்டு போய்விடும்; அதனால் தொழிலாளர்களுக்குத்தான் வேலையிழப்பு ஏற்படும்’ என்ற நயவஞ்சக வாதத்தை முன்னிறுத்தியே இந்த அநீதியை நியாப்படுகின்றனர், முதலாளிகள். பசி, பட்டினியை பகடைக்காய்களாக்கி தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை உற்ஞ்சிக் கொழுக்கிறது பெருநோய் பிடித்துள்ள மூலதனம்; உதிரம் குடித்து உயிரை உடலைச் சிதைத்து உப்பிப் பெருக்கின்றனர் உள்ளூர்த் தரகு முதலாளிகள்.

ஆரம்ப காலந்தொட்டே ஆயத்த ஆடைத் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை என்பது எட்டாக்கனியாவே இருக்கின்றது. 10 அல்லது 12 மணி நேர வேலை என்பதே இங்கு இயல்பாக இருக்கிறது. தொழில் போட்டியால் ஏற்றுமதி ஆர்டர்களை மிக குறுகிய காலத்தில் செய்துமுடிக்க வேண்டியிருப்பதை முன்னிட்டு ஒவர்டைம், தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஷிஃப்டுகளில் பணி புரிய வேண்டிய நிர்ப்பந்தம் தொழிலாளர்களின் மீது ஏவப்படுகிறது. இந்த ஓவர்டைம் பணிக்கு 2 மடங்கு ஊதியம் வழங்க வேண்டுமென்ற சட்டத்தைப் புறங்கையால் ஒதுக்கித்தள்ளி தொழிலாளர்களை வஞ்சிக்கின்றனர், முதலாளிகள். வாட்டி வதைக்கும் கிராமப்புற வறுமையிலிருந்து தப்பிக்க நகரத்தை நாடிவந்து, குடும்பம் நடத்துவதற்குப் போதிய வருமானம் ஈட்டியாகவேண்டிய நிர்ப்பந்தத்லிருக்கும் தொழிலாளர்களோ இத்தகைய கால வரன்முறையற்ற, சட்டத்திற்குப் புறம்பான சுரண்டலை எதிர்க்கும் வழியின்றிக் கையறு நிலையில் இருத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஓய்வுதியம், பணிக்கொடை (P.F., Pension, Gratuity, etc.) உள்ளிட்ட பணிப்பலன்கள் எதையும் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாது.

இன்று தொழிற்துறையின் அனைத்துப் பிரிவுகளையும் தனது ஆக்டோபஸ் பிரிவுகளையும் தனது ஆக்டோபஸ் கரங்களால் சுற்றிவளைத்து, தொழிலாளர்களைச் சக்கைளாக மென்று துப்பி வரும் “ஒப்பந்தத் தொழிலாளர் முறை” யின் தாய்வீடு ஆயத்த ஆடை நிறுவனங்கள்தான். பருத்தியின் பருவகால உற்பத்தி நிலை, ஏற்றுமதி ஆர்டர்களின் ஏற்ற இறக்கங்களைச் சாதகமாகச் கொண்டுள்ள முதலாளிகள் நிரந்தர வேலைகளில் தொழிலாளர்களைப் பணிக்கமர்த்த விரும்புவதில்லை; ஒப்பந்த்தாரர்கள் மூலமாகவே பெருமளவு தொழிலாளர்களைப் பணிக்கமர்த்திக் கொள்கின்றனர். இதன் மூலமாக, உற்பத்தி குறையும்போது தொழிலாளர்களை விருப்பம்போல வீதியில் வீசியெறியவும், எவ்வித எதிர்ப்புமின்றி குறைவான கூலியில் அதிக நேரத்திற்கு உற்பத்தியில் ஈடுபடுத்திச் சுரண்டவும் அவர்களால் முடிகிறது. இக் கெடுவாய்ப்பை சாதமாகக் கொண்டு, அண்மைக்காலமாக திருப்பூருக்கு வேலைதேடிவரும் வடமாநிலத் தொழிலாளர்களைவிட மிகக் குறைவான கூலியில், அதிகமான பணிச்சுமையைத் திணித்து ஒட்டச் சுரண்டுகின்றனர் முதலாளிகள். தொழிலாளர்களின் வறுமை, அறியாமை, கையறுநிலையில் வேர்கொண்டு, உழைப்பை உறிஞ்சி உரம்பெற்று நிற்கின்றன ஆயத்த ஆடை நிறுவனங்கள்.

தொழிலகப் பாதுகாப்பு இங்கு சிறிதளவும் கிடையாது. உலகுக்கு தரமான ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு உயிரைப் பாதுகாக்கும் கவசங்கள் எதுவும வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியாக நுண்ணிய பஞ்சுத் தூள்கள் நிறைந்த சூழலில் பணியாற்றுவதால் நுரையீரல் பாதிக்கப் பட்டு தொழிலாளர்களின் உயிருக்கே உலை வைக்கிறது. நின்றுகொண்டே பல மணிநேரம் வேலைசெய்வது, இயந்திரங்களின் ஓய்வு, ஒழிச்சலற்ற இரைச்சல், வலிந்து திணிக்கப்படும் அதீத உற்பத்தி இலக்கு, அதனால் ஏற்படும் பணிச்சுமை, சூப்பர்வைசர்களின் வசவுகள், பாலியல் தொல்லைகள், வேலைபறிப்பு அபாயம், கால வரன்முறையின்றி வேலை செய்ய வேண்டிய அவலம், தேநீர் அருந்த, உணவு உண்ணக்கூட போதிய கால அவகாசமின்றி விரட்டப்படுதல் போன்ற பல்வேறு கொடிய அடக்குமுறைக் காரணிகளால் முதுகுவலி, தலைவலி, நரம்புக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரகப் பாதிப்புகள், காது செவிடாதல், கண்பார்வை பாதிப்பு, மன அழுத்தும் போன்ற பல்வேறு நோய்களுக்கு இரையாக்கப்பட்டு துன்ப, துயரங்களுக்கு ஆளாகப்படுகின்றனர், தொழிலாளர்கள். இவற்றாலும், குறைவான வருவாயில் சத்தான உணவுக்கு வழியின்றி வாடும் உடம்பு விரைவில் மூப்படைய நேரிடுவாதலும் குறைந்த வயதிலேயே வேலை செய்ய இயலாமல் போய் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் குடும்பத்தின் மீது பாரமெனச் சுமத்தப்படுகிறார்கள். சாயப்பட்டறைகளில் போதிய பாதுகாப்புக் கவசங்களின்றி வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களோ வெகு விரைவில் கை, கால்கள் பதிப்புற்று வேலைக்கு இலாயக்கற்றவர்களென வீதியில் வீசியெறியப்படுகின்றனர். இவர்களுக்கு முதலாளிகளால் உரிய மருத்துவச் சிகச்சை அளிக்கப்படுவதில்லை எனும் அவலம் ஒருபுறமிருக்கு இ.எஸ்.ஐ பாதுகாப்பும் இல்லாத நிலையில் எந்த நோய் வந்தாலும் அற்ப சேமிப்பிவிருந்தும், கடன்வாங்கியும் மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர்.

ஆயத்த ஆடைத் தொழிலில் பெருமளவில் பெண்களே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், “சுமங்கலி திட்டம்” என்ற பெயரில் பெண் தொழிலாளர்களை இளமையிலேயே கருவறுக்கும் கொடூரத்தை தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றனர் நெசவாலை மற்றும் நூற்பாலை முதலாளிகள். இத்திட்டத்தின்படி, ‘வேலை செய்துகொண்டே படிக்கலாம்; நியாயமான வேலை, உணவு, தங்குமிடம் இலவசம் ; 3 ஆண்டுகால ஒப்பந்த முடிவில் திருமணம் செய்துகொள்ளப் போதுமானதாக கணிமான தொகை தரப்படும்’ போன்ற பொய் வாக்குறுதிகளை அளித்து 18 வயதுகூட நிரம்பியிராத, பள்ளிப்படிப்பை நிறைவுசெய்யாத கிராமப்புற ஏழைக் குடும்பப் பெண்களை ஒப்பந்தப் பணியில் அமர்த்துகின்றனர். இதனை நம்பி ஆலைக்குள் வரும் இளம்பெண்களை கொட்டடிகளில் அடைத்துவைத்து, குறைந்த கூலியில் அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்திக் கொடூரமாகச் சுரண்டுவதோடு, பாலியல் வன்முறைகளையும் ஏவி சித்திரவதை செய்கின்றனர், ஈவிரக்கமற்ற கொடியவர்களான முதலாளிகள். இந்தக் கொடுமைகளையெல்லாம் காணமறுத்து அரசு கண்களை மூடிக் கொண்டுவிட்ட நிலையில், சமீபத்தில் திண்டுக்கல் அருகே, கொடுமை தாங்காமல் ஆலையின் சுற்றுச்சுவேறிக் குதித்துத் தப்பமுயன்று படுகாயமுற்ற இரண்டு இளம்பெண்களால் இந்த அவலம் ஊடகங்களில் நாறியதை அடுத்து வீரவசன, வெற்றுச்சவாடல்களை உதிர்த்துவிட்டு அடங்கிக்கொண்டது உயர்நீதி மன்றமும். வதைக்கப்படும் பல்லாயிரம் இளம் பெண் தொழிலாளர்களின் கதறல்களோ நீண்டுகொண்டே இருக்கின்றன. ஆலைகளின் நீண்ட, நெடிய மதில் சுவர்களில் மோதியபடி.

கணவன் ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகவும், மனைவியும், பிள்ளைகளும் பீஸ் ரேட் அடிப்படையில் வீட்டிலுமாக குடும்பமே பாடுபட்டும் போதிய வருமானமின்றி வறுமையுடன் போராட வேண்டிய அவலநிலையும், கொடிய பணிச்சூழல்களும் ஆடைத் தொழிலாளர்களைக் கடுமையான மன உளைச்சலில் தள்ளுகின்றன.

பணிப்பளுவால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க மதுவை நாடும் தொழிலாளர்கள் நாளடைவில் குடிநோயாளிகளாக மாறுகின்றனர். கிடைக்கும் சொற்ப வருவாயையும் அம்மா டாஸ்மாக்கில் தொலைத்துவிட்டு வாழ்க்கைத் தேவைகளுக்குக் கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்தி நச்சுக் கடன்வலையில் அகப்பட்டுத் தவிக்கின்றனர். இந்த ஒட்டுமொத்தக் காரணிகளின் விளைவாக வாழ வழியற்றுப்போய் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு மடியும் அவலமும் அண்மைகாலமாக திருப்பூரில் அதிகரித்து வருகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்புக்கென முதலாளித்துவ அடிவருடி அரசால் இயற்றப்பட்டுள்ள பல்வேறு பெயரளவுச் சட்டங்கள் அனைத்தையும் மயிரளவும் மதியாமல் குப்பையில் வீசியெறிந்துள்ளனர் முதலாளிகள். இந்நிலையில், இருக்கின்ற இந்தச் சட்டங்களால் பன்னாட்டு முதலாளிகளின் மூலதனச் சூறையாடல் தடைபடுகிறதென ஒப்பாரிவைத்து, தொழிலாளர்கள் போராடிப்பெற்ற கொஞ்ச, நஞ்ச உரிமைகளையும் பறித்து, சட்டங்களைத் திருத்தி, தொழிலுறவு மசோதா எனும் பெயரில் தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றுகிறது மோடி அரசு. வர்க்கப் பார்வை முனைமழுங்கிப்போன போலி கம்யுனிஸடுகளின் தொழிற்சங்களோ முதலாளித்துவத்தின் முடியாமல் வாலைச் சுருட்டிக்கொண்டுவிட்டன. அநாதரவான நிலையில், கொடிய சித்திரவதைக் கூடங்களில் அகப்பட்டுத் தவிக்கிறது ஆயத்த தொழிலாளர்களின் வாழ்க்கை.

பன்னாட்டு முதலாளிகளின், உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் கொள்ளை இலாப வெறியால் தீக்கு இரையாக்கப்பட்டு, கட்டிட இடிபாடுகளில் உயிரோடு புதைக்கப்பட்ட கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கில் பலியிடப்படுகின்றனர் வங்கதேச ஆயத்த ஆடைத்தொழிலாளர்கள்; படிப்படியாக வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு தற்கொலைப் பாதையில் தள்ளப்படுகின்றனர் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களின் விரோத அரசுகளோ முதலாளித்துவ சேவையில் ஊன்றி நிற்கின்றன.

அண்மையில் ஓய்வூதியச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் விரோதத் திருத்தங்களுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடி, துணிச்ச்சலுடன் அரசின் ஏவல்படைகளை எதிர்கொண்டு வெற்றிபெற்ற பெங்களூரூ ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் பாதையை வரித்துக்கொண்டு, தொழிலாளி வர்க்கமாக அணிதிரண்டு, தமது வாழ்க்கையைச் சிதைக்கும் இந்த மக்கள் விரோத அரசமைப்பைத் தகர்க்கும் வகையிலான களப்போரட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவே ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் தமது ஒட்டு மொத்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும்.

– மருதமுத்து

புதிய தொழிலாளி பத்திரிகையிலிருந்து

படங்கள் இணையத்திலிருந்து

Series Navigation<< அடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கைநாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/garment-workers/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
டெல்லியில் ஒரு மாத காலத்தை எட்டும் விவசாயிகள் போராட்டம்

மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாகவும், விவசாயிகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அதை மோடி அரசு இன்னும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

மே 5 : காரல் மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் நிறைவு!

Close