பத்திரிகை செய்தி
உழைக்கும் மக்களின் கல்வி உரிமை மீதான தாக்குதலான “நீட்”டுக்கு எதிரான போராட்டத்தில் அனிதாவை நாம்இ ழந்த ஒரு வாரத்துக்குள் பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் எதிரான போராட்டத்தில் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டிருக்கிறார்.
அனிதாவின் இறப்பைத் தொடர்ந்து தமிழகமெங்கும் பள்ளி/கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் அனிதா மரணத்திற்கு நீதிகேட்டும் “நீட்” டை தடை செய்யக் கோரியும் போராடி வருகின்றனர். இந்தச் சூழலில்தான் கௌரி லங்கேஷ் என்ற கன்னட பத்திரிக்கையாளர் செப்டம்பர் 5 அன்று அவரது இல்லத்தில் வைத்து முகம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்தது. கௌரி லங்கேஷ் மத்திய/மாநில அரசுகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தவர், வலதுசாரி மதவாத அரசியலுக்கு எதிராக தனது குரலை உறுதியாக முன்வைத்தவர். புனேயில் நரேந்திர தபோல்கர்(2013), கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே (2015), தார்வாரில் எம்.எம்.கல்புர்கி (2015) ஆகியோரது வரிசையில் வெறுப்பு அரசியலுக்கும் மதவாதத்துக்கும் சமீபத்திய களப்பலி கௌரி லங்கேஷ்.
கௌரியின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் இந்த அரசின் தோல்வி பற்றி துணிச்சலான விமர்சனங்களையும் ஊடகங்கள் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அச்சுறுத்தல்கள், அவதூறு வழக்குகள், ஏன் அதற்காக நீதிமன்ற காவல் மூலம் மதவாத சக்திகளால் அவரது செயற்பாடுகளை முடக்க இயலவில்லை. எனவே இறுதியாக அவரை திட்டமிட்டு படுகொலை செய்வதன் மூலம் அவரது குரலை மௌனிக்கச் செய்திருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இந்த படுகொலையை அவர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். அதாவது, நடப்பது எதுவாக இருந்தாலும் வாயை மூடிக் கொண்டு நமது சொந்த வேலைகளைப் பார்த்துக்கொண்டு வாழுமாறு நாம் அச்சுறுத்தப்படுகிறோம்.
பன்சாரே கொலையை புலனாய்வு செய்யும் சிறப்பு புலனாய்வுக் குழு, தபோல்கரின் கொலை வழக்கை விசாரிக்கும் மத்திய புலனாய்வுத்துறை, கல்புர்கி வழக்கை விசாரித்து வரும் கர்நாடகாவின் சி.ஐ.டி ஆகியவை கோவாவில் இயங்கும் சனாதன் சன்ஸ்தா என்னும் இந்து வலதுசாரி குழுவே கொலையாளிகள் என்று கண்டறிந்துள்ளன. இதே சக்திகள்தான் கௌரி லங்கேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை.
இந்தக் கொலைகள் நமக்குக் கூறும் மற்றுமொரு முக்கிய செய்தி ஜனநாயக சக்திகளின் செயல்பாட்டுக்கான மதவாத சக்திகளுக்கும், ஜனநாயக முற்போக்கு சக்திகளுகுகம் இடையே தெளிவான ஒரு எல்லைக்கோடு உருவாகி வருகிறது. ஒருவர் மதவாத சக்திகளின் பக்கம் நிற்க வேண்டும் அல்லது அவர்களுக்கு எதிராக அணிவகுக்க வேண்டும். இதில் நடுநிலைமை என்பது இது போன்ற இரத்த தாகம் கொண்ட கொலைகளை ஆதரிக்கும் நிலைப்பாடாகவே அமையும்.
கட்டாயப் பணிநீக்கம், தன்னிச்சையான வேலையிழப்புகள், பணியிடங்களில் நமது உரிமைகள் ஆகியவற்றுக்கா போராட நாம் சங்கமாக அணிதிரண்டிருக்கிறோம். இதே உணர்வோடும், ஒற்றுமையோடும் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்கள் முன்னெடுத்துச் சென்ற சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதிக்கான பணியை நாம் தொடர வேண்டும்.
எத்தனை அதிகமான துப்பாக்கி குண்டுகள் எங்கள் குரல்களை மௌனிக்க முயற்சிக்கின்றனவோ, அவ்வளவு உரக்க நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.