- ஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார்? – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா?
- ஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு?
- ஐஃபோன், சட்டைகள் : அமெரிக்கா, ஜெர்மனிக்கு பணத்தை குவிக்கும் கொத்தடிமை உழைப்பு
- “லாபத்தை உயர்த்த குறைகூலி தொழிலாளர்களிடமிருந்து உற்பத்தியை கறக்கவும்” – மார்கன் ஸ்டேன்லி நிபுணர்
- உலகின் உழைப்பில் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய வாழ்க்கை
- உற்பத்தியா, வட்டி வசூலா எது மதிப்பை உருவாக்குகிறது?
- தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்?
2.
ஐ-பாட்களும், ஐ-ஃபோன்களும்

The Apple iPhone and related products are prototypical “global commodities,” the result of the choreography of an immense diversity of concrete labors of workers on every continent.
ஆப்பிளின் ஐஃபோனும் அதனோடு தொடர்புடைய பொருட்களும் “சர்வதேச விற்பனை பண்டங்களுக்கான” கச்சிதமான பிரதிநிதிகள். உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள தொழிலாளர்களின் பல்வகைபட்ட திறமைகளிலான உழைப்பு வகைகளின் சிக்கலான இணைப்பின் விளைவாக அவை உற்பத்தியாகின்றன. ஒவ்வொரு கையடக்கக் கருவியிலும் தற்கால உலக முதலாளித்துவத்தின் சமூக உறவுகள் அடங்கியிருக்கின்றன. இந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் யார், இவற்றிலிருந்து லாபம் ஈட்டுபவர்கள் யார் என்பது குறித்த ஆய்வு பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது. உற்பத்தி நடைமுறைகள் குறைகூலி நாடுகளுக்கு மாற்றப்படுவதுதான் இதில் மிகவும் கவனத்தைக் கவருவதாகவும், முக்கியமானதாகவும் உள்ளது. வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாட்டு நிறுவனங்களும், அரசுகளும் இந்த குறைகூலி நாடுகளின் உழைப்பிலிருந்து பெறப்படும் அதீத லாபங்களை எவ்வளவு அதிகமாகச் சார்ந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது.
இந்த வகையில் 2007-ம் ஆண்டு கிரேக் லிண்டன், ஜேசன் டீட்ரிக், கென்னத் கிரேமர் ஆகியோர் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்குப் பின்னர் செய்யப்பட்ட பிற ஐஃபோன் ஆய்வுகளில் வெளிப்படாத இரண்டு விஷயங்களை அது வெளிப்படுத்துகிறது. (1) அவர்களது ஆய்வு ஐ-போனின் வடிவமைப்பு, உற்பத்தி, போக்குவரத்து, விற்பனை ஆகியவற்றில் நேரடியாக ஈடுபடும் உழைப்பை அளவீடு செய்கிறது. (2) இந்த வெவ்வேறு பிரிவு தொழிலாளர் குழுக்கள் பெறும் ஏற்றத்தாழ்வான கூலிகள் தொடர்பான விபரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.4
2006-ம் ஆண்டு 30 GB ஆப்பிள் ஐ-பாட் $299 விலைக்கு விற்கப்பட்டது. வெளிநாடுகளிலேயே நடத்தி முடிக்கிப்பட்ட அதன் உற்பத்திக்கான மொத்தச் செலவு $144.40. அதாவது, ஆப்பிள் அறுவடை செய்த மொத்த லாப வீதம் 52 சதவீதம். அதாவது விற்பனை விலையில் உற்பத்திச் செலவு போக எஞ்சிய $154.60 ஆப்பிளுக்கும், அதன் சில்லறை விற்பனையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும், வரிகள் மூலம் அரசுக்கும் சென்று சேர்கிறது.. இந்தத் தொகை அமெரிக்காவிற்குள் சேர்க்கப்பட்ட மதிப்பாக கருதப்பட்டு அமெரிக்காவின் ஜி.டி.பி-க்கு பங்களிக்கிறது. “2006-ம் ஆண்டு ஐ-பாட் மற்றும் அதன் துணை பாகங்கள் உலகம் முழுவதிலும் 41,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கின. அவற்றில் 27,000 பேர் அமெரிக்காவுக்கு வெளியிலும், 14,000 அமெரிக்காவுக்குள்ளும் பணி புரிந்தனர். வெளிநாட்டு வேலைகள் பெரும்பாலும் குறைகூலி அளிக்கும் உற்பத்தித் துறையிலும், அமெரிக்க வேலைகள் உயர் ஊதியம் பெறும் பொறியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற குறைகூலி சில்லறை விற்பனை உள்ளிட்ட தொழில்முறை அல்லாத தொழிலாளர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட சமமாக பிரிக்கப்பட்டிருந்தது.”5
13,920 அமெரிக்க ஊழியர்களில் முப்பது பேர் மட்டுமே உற்பத்தித் தொழிலாளர்கள் (சராசரியாக ஆண்டுக்கு $47,640 ஊதியம் பெறுபவர்கள்); 7,789 பேர் “சில்லறை விற்பனை மற்றும் பிற தொழில்முறை அல்லாத” தொழிலாளர்கள் (அவர்களது சராசரி ஊதியம் ஆண்டுக்கு $25,580); 6,101 பேர் தொழில்முறை ஊழியர்கள் அதாவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேலாளர்களும் பொறியாளர்களும். கடைசி பிரிவினர் மொத்த அமெரிக்க ஊதியச் செலவில் மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றினர்; அவர்கள் சராசரியாக ஆண்டுக்கு $85,000 ஈட்டினர். மறுபக்கத்தில், 12,250 சீன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆண்டுக்கு தலா $1,540 ஊதியம் பெற்றனர், அல்லது வாரத்துக்கு $30 — இது அமெரிக்காவில் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி ஊதியத்தில் 6 சதவீதம், உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஊதியத்தில் 3.2 சதவீதம், தொழில்முறை ஊழியர்களின் சம்பளத்தில் 1.8 சதவீதம்.6 அமெரிக்காவிலும், சீனாவிலும் ஐ-பாட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை (முறையே 13,920 மற்றும் 12,250) சற்றேறக்குறைய சமமானதுதான். ஆனால், அமெரிக்க ஊழியர்கள் பெறும் மொத்த ஊதியத் தொகை $71.9 கோடி. சீனாவில் வழங்கப்படும் மொத்த ஊதியத் தொகை வெறும் $1.9 கோடி. [அமெரிக்க சராசரி சம்பளம் 35 மடங்கு அதிகம்]
ஐ-பாட்-க்கு பின் சந்தைப்படுத்தப்பட்ட ஆப்பிளின் ஐஃபோன் குறித்து 2010-ல் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) வெளியிட்ட ஆய்வறிக்கை இன்னும் பிரமாதமான லாபக் குவிப்பை வெளிப்படுத்துகிறது. “2007-ம் ஆண்டு பெரு் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்கச் சந்தையில் ஐ-போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றின் விற்பனை எண்ணிக்கை 2007-ம் ஆண்டில் 30 லட்சமாகவும், 2008-ல் 53 லட்சமாகவும், 2009-ல் 1.13 கோடியாகவும் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.” ஒவ்வொரு ஐ-ஃபோனின் மொத்த உற்பத்திச் செலவு $178.96, அதன் விற்பனை விலை $500; அதாவது ஆப்பிள் ஈட்டிய மொத்த லாபம் விற்பனை விலையில் 64 சதவீதம்; அந்த மொத்த லாபம் அதன் வினியோகஸ்தர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. பொருளாதாரவியல் தரவுகளில் இவை அனைத்தும் அமெரிக்காவுக்குள் சேர்க்கப்பட்ட “மதிப்புக் கூடுதல்” என்று பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வறிக்கையின் முக்கிய கவனம் அமெரிக்க-சீன வர்த்தகப் பற்றாக்குறையில் ஐ-ஃபோன் செய்யும் பங்களிப்பு பற்றியதாக இருந்தது. “ஐ-ஃபோன் மூலம் சீனாவின் கணக்கில் சேர்க்கப்படும் ஏற்றுமதி மதிப்பும் அதன் விளைவான வர்த்தகப் பற்றாக்குறையும் பெரும்பகுதி மூன்றாம் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாகங்கள் மற்றும் துணைபாகங்களிலிருந்து பெறப்பட்டவை” என்று இந்த ஆய்வு கண்டறிந்தது.

more than 96 percent of the export value of the iPhone is composed of re-exported components manufactured in third countries
இருப்பினும் சீனத் தொழிலாளர்கள், “ஒவ்வொரு ஐ-போனுக்கும் $6.50 மட்டுமே பங்களிப்பு செய்கின்றனர், அதாவது மொத்த உற்பத்திச் செலவில் 3.6%”7 96 சதவீதத்துக்கும் அதிகமான ஐ-ஃபோனின் ஏற்றுமதி மதிப்பு மூன்றாம் நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட மறு-ஏற்றுமதியான பாகங்களால் ஆனது. அவை அனைத்தும் சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் மதிப்பில் கணக்கிடப்படுகின்றன, ஆனால், அதில் எதுவும் சீனாவின் ஜி.டி.பி.ல் சேர்க்கப்படுவதில்லை. இந்த மொத்த லாபம் ஆப்பிள், சேவை அளிப்பாளர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு இடையே எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது என்பதை ஆய்வாளர்கள் விபரமாக புலனாய்வு செய்யவில்லை. ஆனால், அவற்றின் பிரமிக்கத்தக்க தாக்கம் பற்றி அவர்களால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. “சந்தைப் போட்டி வலுவாக இருந்திருந்தால், எதிர்பார்க்கப்படும் லாபவீதம் பல மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்…. விண்ணை முட்டும் விற்பனையும், உயர் லாபவீதமும் ஆப்பிள் ஒப்பீட்டளவில் ஏகபோக நிலையை பராமரிப்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஐ-ஃபோன்கள் அனைத்தையும் சீனாவில் உற்பத்தி செய்வது என்ற முடிவை ஆப்பிளின் லாப வேட்டைதான் தீர்மானிக்கிறது; சந்தைப் போட்டி அல்ல.”8
இதைத் தொடர்ந்து அந்த ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வாளர்கள் ஆப்பிள் ஐ-போன்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு இடம் மாற்றினால் என்ன நடக்கும் என்று உருவகித்து பார்க்கிறார்கள். அமெரிக்க ஊதியங்கள் சீன ஊதியங்களை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், இந்த உருவகிக்கப்பட்ட அமெரிக்க பொருத்தி தயாரிப்பு தொழிலாளர்கள் ஃபாக்ஸ்கானில் உழைக்கும் இப்போதைய தொழிலாளர்களைப் போலவே தீவிரமான உழைப்பில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர்கள் வைத்துக் கொண்டார்கள். “ஐ-ஃபோன்கள் அமெரிக்காவில் பொருத்தி தயாரிக்கப்பட்டால் அவற்றின் மொத்த பொருத்தி தயாரிக்கும் செலவு $65-ஆக உயர்ந்து விடும் [சீனாவில் அந்தச் செலவு $6.50], அதன் பிறகும் ஆப்பிளுக்கு 50% லாபம் எஞ்சியிருக்கும்”9 என்று அவர்கள் கணக்கிட்டார்கள். “லாபத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்து, தொழில்முறை அல்லாத அமெரிக்கத் தொழிலாளர்களுடன் அதை பகிர்ந்து கொண்டு”, “நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR)” காட்டுமாறு ஆப்பிளுக்கு வேண்டுகோள் விடுத்து அவர்கள் தம் அறிக்கையை முடிக்கிறார்கள்.10 அதை விட, சீனப் பொருளாதாரத்துக்கு அவசரமாக தேவைப்படும் வேண்டல் அதிகரிப்புக்கு உதவும் வகையில் அதன் $11,000 கோடி நிதிக் கையிருப்பை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி ஆப்பிளை அவர்கள் கேட்டிருக்கலாம்.
(தொடரும் …)
ஆங்கில மூலம் : Value Added versus Value Capture by John Smith
நன்றி : Monthly Review
The GDP Illusion
Value Added versus Value Capture
by John Smith
John Smith teaches political economy, human rights, and genocide studies at Kingston University in London. His forthcoming book on imperialism and globalization will be published by Monthly Review Press.